மிதிலை மன்னருக்கு, ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி, "ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம்' என்றுரைத்தார். திருமால் எடுத்த நரசிம்ம அவதாரத்தை விளக்கியபின், வாமன அவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.
ஓங்கி உலகளந்த உத்தமன்
(வாமன அவதாரம்)
மலையாளும் தேசத்தில், பகலிலும் சூரிய ஒளி விழாத கானுயிர் காக்கும் கானகம். மிருகங்களின் சப்தங்களைவிட சுழன்றடித்த காற்றின் ஒலியே கதிகலங்க வைத்தது. உலகினைத் தூக்கும் வல்லமை படைத்த மகாபலி சக்கரவர்த்தி அந்த வல்லைக் காட்டில் கடுந்தவம் மேற்கொண்டிருந்தான். கடுங்குளிர்க் காட்டில் கரியமான் தோலையும், ஒரு குச்சியையும் கொண்ட புல்லாலான ஆடை அணிந்து, தரையில் உதிர்ந்து விழும் இலைகளை உண்டு வாழும் வைராக்கியம் பூண்டிருந்தான். கரங்களை உயர்த்தி எதன்மீதும் சாயாமல் கால் கட்டைவிரல் நுனியில் நின்று மெய்வருந்தத் தவமிருந்தான்.
திரேதா யுகத்தில், அமிர்தத்தையுண்டு சாகாவரம் பெற்ற தேவர்களை வெல்ல முடியாமல் அசுரர்கள் தவித்துக்கொண்டிருந் தார்கள். தன் தந்தையைக்கொன்ற தேவர் களைப் பழிவாங்கும் எண்ணத்துடன், விரோசனனின் இளைய மகன் மகாபலி அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரை அணுகினான். அவன் இழந்த சக்தியையும் அரசாங்கத்தையும் திரும்பப் பெறுவதற்கு மகாபிஷேக விஸ்வஜித் யாகத்தைச் செய்ய அறிவுறுத்தினார். மன்னன் மகாபலி யாகத்தை நிறைவுசெய்தபின் கடுமையான தவம்செய்தான். இதன்பலனாக காற்றின் வேகத்திற்கு இணையாக ஓடக்கூடிய நான்கு குதிரைகளைக்கொண்டு இழுக்கக்கூடிய தங்கத்தேர் அவனுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஏராளமான அம்புகள், சிங்கத்தலை கொண்ட கொடி மற்றும் கவசங்களும் அவனுக்கு வரமாகக் கிடைத்தன. தனது குருவான சுக்கிரனின் ஆசீர்வாதத்துடன் மகாபலி மன்னன் தேவர்களுக்கு எதிராகப் போரிட்டான். இந்தப் போரில் அசுரர் களின் படையானது தேவருலகை வென்றது.
இந்திரனைப் போர்க்களத்தில் தோல்வியுற்று ஓடச் செய்தான் மகாபலி. அழகு வாசம் செய்யும் அமராவதிப் பட்டினம் அசுரர் வசமானது.
தேவேந்திரன் பிரகஸ்பதியிடம், ""குருபகவானே! மகாபலி முன்பைவிட அதிக பராக்கிரமத்துடன், நம் தேவலோகத்தின் தலைநகரைக் கைப்பற்றி விட்டான். ஆகவே, நான் தங்களிடம் அடைக்கலம் தேடி தேவ சைன்யத்துடன் வந்திருக்கிறேன். இப்போது நாம் என்ன செய்யவேண்டும்? சரியான உபாயம் கூறுங்கள்!'' என்றான். ""தேவேந்திரனே! நீ பலிச் சக்கரவர்த்தியுடன் இந்த நிலையில் சண்டையிடுவது உகந்ததல்ல. நீங்கள் எல்லாரும் சொர்க்கத்தை விட்டுச் சென்றுவிடுங்கள். காலப்போக்கில் அவனே தன்னை அழித்துக்கொள்வான். அதுவரை நீ பொறுமை காக்கவேண்டும். நீயும், உன் பரிவாரங்களும் ஸ்ரீமந் நாராயணனைத் தேடிச் சரணடையுங்கள். அவர்தான் பலிக்கு அழிவைத் தரக்கூடியவர்'' என்று பிரகஸ்பதி அறிவுரை கூறினார்.
திருத்தோள்களிலுள்ள சுதர்சனாழ்வான் மின்னலை ஏற்படுத்த, பாஞ்சஜன்னியம் அதிர்ந்து இடி இடிக்க, சாரங்கம் சரமழையைப் பொழிவதுபோல் கருணைமழை பொழியும் கார்முகில் வண்ணன் பாற்கடலில் அறி துயில் கொண்டிருந்தார். இந்திரனும், தேவர் களின் அன்னையாகிய அதிதியும் பரந் தாமனைத்தொழுது, தங்களுக்கு உரிமை யுடைய தேவலோகத்தை மகாபலிச் சக்கரவர்த்தியிடமிருந்து மீட்டுத்தரவேண்டு மென்று விண்ணப்பித்தனர்.
""அதிதியே! பங்குனி மாதம், சுக்லபட்சம், பிரதமை திதி வரும் நாளில் ஆரம்பித்து, தொடர்ந்து பன்னி ரண்டு நாட்கள் விரதத்தைக் கடைப் பிடித்து என்னைத் துதித்ததால் உனக்கு அருள்பாலிக்கக் கடமைப்பட்டவனா னேன். தேவேந்திரன் மீண்டும் அமராவதி நகரில் ஆட்சி செய்ய வேண்டுமென நீ ஆசைப்படுகிறாய். ஆனால் தற்சமயம் அது இயலாது.
அசுரர்கள், யாரும் வெல்லமுடியாதபடி பராக்கிரமம் பெற்றி ருக்கிறார்கள். தக்க சமயத்தில், நானே உனக்கு புத்திரனாகப் பிறந்து தேவர்களைக் காப்பாற்றுவேன்'' என்று வரம் கொடுத்தார்.
பிரகலாதனுடைய பேரனாகிய மகாபலி அசுரகுலத்தில் பிறந் திருந்தாலும், அனைவரும் நேசிக்கும் வகையில் தனது ஆட்சியை நடத்தினான்.
அமராவதியிலேயே தங்கி மூன்று உலகங் களையும் கட்டி ஆண்டான். அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவைக் குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழிசெய்து கொடுத்தான். மகாபலி இந்திரப் பதவியிலிருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு அசுவமேத யாகங்களைச் செய்யுமாறு அவனிடம் கூறினார்கள். பலியும் அசுவமேத யாகம் செய்யத்தொடங்கினான்.
வரம் கொடுத்ததுபோல பரந்தாமனும் தேவமாதா அதிதியின் கர்ப்பத்தை அடைந்தார். புரட்டாசி மாதம், சுக்கில பட்சம், திருவோண (சிரவண) நட்சத்திரத்தின் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், சூரியன் நடுப்பகலில் பிரகாசிக்கும் சமயம்- விஜய துவாதசியில், பரந்தாமன் ஆலம் விதைபோலக் குறள் வடிவம் கொண்டவராக, காசிபன்- அதிதிக்கு மகனாகப் பிறந்தார். அப்போது தேவ துந்துபி முழங்கியது. வித்தியாதரர், சித்தர், கிம்புருடர் போன்ற வானவாசிகள் பகவானை மங்களகரமான துதிகளால் போற்றி னர். சியாமளமேனி, சிரசிலே கிரீடம், காதிலே மகர குண்டலங்கள், சங்கு, சக்கரம், கதை, தாமரை தாங்கிய நான்கு கரங்கள், நெஞ்சிலே ஸ்ரீவத்சம், கைவளை, தோள்வளை, இடை யிலே மேகலை, மஞ்சள் பட்டாடை, கழுத்திலே வண்டு சூழ் வனமாலையும் கௌஸ்தூப மணி யும் என திருவலங்கார பூஷிதராகப் பெருமாள் காட்சி கொடுத்தார்.
பெற்றோர்கள் முன்பு ஸ்வரூப லாவன்யத் தைக் காட்டிய பெருமாள், அடுத்த கணமே தன் உருவத்தைக் குட்டையான ஒரு அந்தணச் சிறுவனாக மாற்றிக்கொண்டார். மகரிஷி கள் பெருமாளுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். அச்சமயம் கதிரவனே அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தைக் (பூணூலை) கொடுத்தார். கச்யபர் தர்ப்பையால் செய்த அரைஞாண் கயிறைக் கொடுத்தார். பூமாதேவி கிருஷ்ணாஜனத்தைக் (மான் தோலை) கொடுத்தாள். சந்திரன் தண்டத்தை அளித்தான். அதிதி கௌபீனம் கொடுத்தாள். பிரம்மா கமண்டலம் வழங்கினார். குபேரன் பிட்சா பாத்திரம் கொடுத்தான். பார்வதி தேவி அதில் முதல் பிச்சை இட்டாள். அந்த அந்தணச் சிறுவன் தனது வைதீக கர்மாக் களைத் தவறாது செய்துவந்தான்.
நர்மதா நதியின் வடகரையில் பலிச் சக்கரவர்த்தி ஒரு பெரிய யாகசாலை அமைத்தான். அந்த வேள்விக்கு மகரிஷிகளை வரவழைத்திருந்தான். வாமனர் தன் பெற்றோரிடம் அந்த யாக சாலைக்குத் தான் போகவேண்டும் என்று அனுமதி கேட்டார். அவர்கள் அனுமதிதந்து ஆசிகூறி வழியனுப்பி வைத்தனர்.
யாக சாலைக்குள் இவர் நுழைந்ததும் இவருடைய அரும்பெரும் ஜோதியால் மற்ற இடங்களெல்லாம் ஒளிமயமாகிவிட்டன. இவர் என்ன கதிரவனோ, அக்கினி பகவானோ என்று அநேகரும் சந்தேகித்தனர். அவரை பலிச்சக்கரவர்த்தி அன்புடன் வரவேற்றான்.
அவர் திருப்பாதக் கமலங்களைக் கழுவி அந்நீரைத் தன் தலையில் தெளித்துக்கொண்ட மகாபலி, ""தங்களுக்கு ஏதாவது தேவை என்றால் அதை அடியேன் தர சித்தமாக இருக்கிறேன்'' என்று பணிவு காட்டினான்.
மகாபலியின் பிரார்த்தனையைக் கேட்ட பகவான், ""அசுரேந்திரா! நீ கூறிய வார்த்தைகளைக் கேட்டு நான் உண்மையில் புளகாங்கிதம் அடைகிறேன். யாசிப்பவர்கள் எது கேட்டாலும் இல்லையென்னாது கொடுக்கக்கூடியவன் என்பதை நான் அறிவேன். நான் உன்னிடம் கேட்க விரும்புவதெல்லாம் எனது காலடியினால் மூன்றடி நிலமே. எனக்குத் தேவையான அந்த மூன்றடி நிலத்தைப் பெற்றுப்போகவே வந்திருக்கிறேன்'' என்றார்.
பலிச்சக்கரவர்த்தி அவரை வணங்கி, ""தங்கள் விருப்பப்படியே தருகிறேன்'' என்று சொல்லிவிட்டு, வாமனருக்கு தானம் செய்வதற்கு நீர் நிறைந்திருக்கும் கிண்டியைக் கையில் எடுத்தான். இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சுக்கிராச்சாரியார், பலியைத் தனியே அழைத்தார். ""பலியே! கொண்டல் நிறக் குறள் வடிவம் கொண்டவனை சிறுவன் என்று எண்ணாதே. அவன் அண்டமும் மற்றும் அகண்டமும் உண்டவன் என்பதை உணர்ந்துகொள். இங்கேவந்து நிற்பவர் வேறு யாருமல்ல; ஸ்ரீமந் நாராயணனே.
அவர் தேவர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறார். நீ செய்யப் போகும் காரியத்தால் உனக்கு மட்டுமல்ல; அசுரர்கள் அனைவருக்கும் அழிவு ஏற்படும் என்பதை மறந்துவிடாதே. உன் வாக்குறுதியை மறுத்துவிடுவாயாக'' என்று சுக்கிராச்சாரியார் எடுத்துரைத்தார்.
மகாபலி தன் குருவின் கருத்தை ஏற்க மறுத்து, ""கொடுக்க நிமிர்ந்த கை தாழாது. கொடுப்பதைவிட எனக்கு என்ன நன்மை இருக்கிறது? என்னினும் உயர்ந்தவர் ஒருவர் என்னிடம் தானம் பெறுவாராயின் என்னைக் காட்டிலும் உயர்ந்தவர் யார்? உயிரைக் கேட்டாலும் கொடுப்பது நன்று; கொள்வதுதான் தீது. ஈந்தவரே மேலானவர். தானம் கேட்டு வருபவர் பழி உண்டாக்குபவர் அல்லர். கொடுப்பவரைத் தடுப்பவரே பகைவர்'' என்றான்.
மகாபலி, தன் மனைவியை அழைத்து வாமனருக்கு நீர் வார்த்துக்கொடுக்கத் தயாரானான். பலி அவருடைய பாதங்களைக் கழுவினான். அந்த நீரைத் தன் சிரசிலும், உடலிலும் தெளித்துக்கொண்டான். அவருக்கு செய்யவேண்டிய பூஜைகளைச் செய்தான். நிலத்தை தானம் செய்யும் பொருட்டு தாரைவார்த்துக் கொடுப்பதற்காக கிண்டிச்செம்பை எடுத்தான். தன் அறிவுரையை ஏற்காமல் பலி தாரை வார்த்துக்கொடுத்து ஏமாந்துவிடப் போகிறானே என்று எண்ணிய சுக்கிராச்சாரியார், வண்டு உருவெடுத்து செம்பினுள் நுழைந்து நீர்த்துவாரத்தை அடைத்துக்கொண்டார். செம்பிலிருந்து நீர் வரவில்லை. இதையுணர்ந்த பகவான் அறுகம்புல் ஒன்றினால் துவாரத்தில் குத்தி னார். சுக்கிராச்சாரியாரின் கண்களில் ஒன்று பழுதானது. கிண்டிச் செம்பிலிருந்து நீர் வெளிவந்தது. மனைவி நீர் வார்க்க, மகாபலி தாரை வார்த்தான்.
""அந்தணர்குலத் திலகமே! உம் காலடி அளவில் மூன்றடி நிலத்தை உமக்குத் தானம் செய்கிறேன்!'' என்று தெரிவித்தான். வாமன மூர்த்தியாகிய பகவான் முகம் மலர்ந்தபடி தன் இருக்கையிலிருந்து எழுந்தார்.
அப்போது அவருடைய உருவம் வானளாவி நின்றது. அவருடைய திருமேனி எங்கும் நீக்கமற நிறைந்தது. விண்ணும், மண்ணும், திசைகளும், மற்ற உலகங்களும் எழுகடலும் அத்தனையும் அவரிடம் அடங்கியிருந்தன. மகாபலி தாரை வார்த்த நீர் கையில் பட்டதும் வாமணர் வியப்பும் அச்சமும் கொள்ளுமாறு உயர்ந்தார். உயர்ந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாவதுபோல உயர்ந்தார்.
ஸ்ரீஹரியாகிய வாமனரின் ஒரு கையில் சுதர்சனச் சக்கரம் சுழன்றது. மற்றொரு கையில் சாரங்கம் என்ற வில்லும், இன்னொரு கையில் கௌமோதகி என்ற கதையும், வேறொரு கையில் வித்யாதரம் என்ற வாளும் பிடித்து நின்றிருந்தார். வானளாவ நின்ற வாமனர் ஒரு காலால் பூமியை அளந்தார். மற்றொரு காலால் வானத்தை அளந்தார். ""மூன்றாவது அடி வைக்க இடம் ஏது? மூன்றாம் அடிக்கு இடமில்லையே. ஆக, நீ அதற்காக என்ன தரப் போகிறாய்?'' என்று திரிவிக்ரமன் ஐய வினா எழுப்பினார்.
""மகாப்பிரபோ! நான் கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டேன். மூன்றாம் அடிக்கு என் சிரசின்மீது தாங்கள் காலடியை வைக்கலாம். அதனால் ஏற்படும் எல்லா விளைவுகளையும் நான் ஏற்றுக்கொள்ள சித்தமாகவே இருக்கிறேன்'' என்று வாமனரை வணங்கினான்.
அப்போது பகவான் திருவாய் மலர்ந்து, ""பிரம்மதேவனே! நான் யாருக்கு என் அருளை அளிக்க விரும்புகிறேனோ அவனுடைய செல்வத்தைப் பறிப்பேன். அப்படிச் செய்யாவிட்டால் அவன் செருக்குற்று என்னைச் சிந்திக்காமல் போய்விடக்கூடும். எனினும் என்னைச் சரணடைந்தவர்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். இங்கே பலி தான் செய்யப்போகும் தான தர்மத்தால் தனக்குப் பதவி பறிபோகும்; துன்பம் வருமென்று அவனுடைய குலகுரு சொல்லியும், தடுத்து நிறுத்த முயன்றும் தன் உறுதியைக் கைவிடவில்லை. தேவர்களும், முனிவர்களும் அடைய முடியாத சிரேயஸ்ஸை மகாபலி அடைந்துவிட்டான். அடுத்துவரும் சாவர்ணி மனுவந்திரத்தில் பலியே இந்திரனாக விளங்கப் போகிறான். அதுவரை சுதல லோகத் தில் சகல சம்பத்துகளுடனும் வாழ்வான் என்றருளினார்.
அடுத்து சுக்கிராச்சாரியாரை அழைத்த பகவான், ""ஆச்சாரியாரே! யாகத்தைப் பூர்த்தி செய்யாதவன் பாவத்தை அடைவான் என்பதை நீர் அறிவீர். ஆகவே, பலியின் யாகத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்'' என ஆணையிட்டார். பகவானுடைய ஆணைப்படி சுக்கிராச்சாரியாரும் யாகத் தைப் பூர்த்திசெய்தார். தன் உற்றார்- உறவினரோடு, மகாபலி சுதல லோகம் சென்றான்.
பகவான் விரிதிரைப் பாற்கடல் பள்ளி மேவினார்.
(அமுதம் பெருகும்)