காவிஷ்ணுவின் அவதாரங்கள் 22 என ஸ்ரீமத் பாகவதம் சொல்லும். நாம் பரவலாக அறிந்தது தசாவதாரங்கள். அதனுள் கல்கி அவதாரம் கலியுகம் முடியும் சமயமே நிகழும். ராம- கிருஷ்ண அவதாரங்களே அதிகம் வணங்கப்படுபவை.

வால்மீகி ராமாயணம் 24,000 பாடல்கள் கொண்டது. அது பல மொழிகளில் வந்துள் ளது. ராமாவதாரம் இராவண வதத்தின் பொருட்டு மனிதனாகப் பிறந்தது. கிருஷ்ணாவதாரமே பூரண அவதாரமென்பர்.

கம்சன் தனது தங்கை தேவகியை வசுதேவருக்கு மணம்முடித்து, அவர்களை தேரில் அமரவைத்து, பாசத்தின் காரணமாக அவனே தேரைச் செலுத்தி ஊர்வலமாக வந்தான். அப்பொழுது ஓர் அசரீரி, "உன் தங்கையின் எட்டாவது குழந்தையால் உனக்கு மரணம்' என்றது. தன் உயிர் என்றதும், அன்பு, பாசம் குலைந்தது. தங்கையைக் கொலைசெய்ய கத்தியை ஓங்கினான். இவளை இப்போதே கொன்றுவிட்டால் குழந்தை பிறப்பதற்கே வழியில்லை என்று நினைத்தான்.

அப்பொழுது வசுதேவர் சாந்த மனதுடன், ""எட்டாவது குழந்தையால்தானே உனக்கு மரணம்? மணம் நடந்த நாளில் தங்கையைக் கொல்லாதே. குழந்தை(கள்) பிறந் தால் உன்னிடமே ஒப்படைத்துவிடுகிறேன்'' என்றார். அதையேற்று அவர்கள் இருவரை யும் சிறையில் அடைத்தான்.

Advertisment

முதல் குழந்தை பிறந்தது. வசுதேவர் தன் வாக்குப்படி குழந்தையை கம்சனிடம் ஈந்தார். எட்டாவது குழந்தையால்தானே மரணமென்று அவரிடமே திரும்பத் தந்துவிட்டான். இவ்வாறு ஆறு குழந்தைகள். ஏழாவது குழந்தை கரு உருமாறி வசுதேவரின் மறுபத்னி ரோஹிணியிடம் கோகுலத்தில் பலராமனாக வளர்ந்தது.

ஒருசமயம் கலகப்ரியர் நாரதர் கம்சனின் அரண்மனைக்கு வந்தார். ஆறு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. கம்சனிடம், ""யார் இந்தக் குழந்தைகள்?'' என்றார். சம்சனோ ஏளனமாக, ""எனது தங்கை தேவகியின் குழந்தைகள்'' என்றான். ""எட்டாவது குழந்தை யால் உனக்கு மரணமென்று அசரீரி உரைத்தது ஞாபகமுள்ளதா?'' என்று கேட்டார். ""ஆம், எதிர்பார்த்திருக்கிறேன், உடனே கொல்ல'' என்றான். நாரதரோ, ""மூடா'' என்றார். திரிகாலஞானி நாரதர் அசுரர் கள், தேவர்கள், தெய்வங்கள் என்று வித்தியா சம் பாராமல் அனைவரையும் பார்க்கச் செல்வார். பயமில்லாமல் பேசுவார். யாவருக் கும் அவர் வரவில், வாக்கில் மதிப்புண்டு.

""கடைசியிலிருந்து எண்ணினால் முதலே எட்டாவதாகும். அதுபோல, நடுவிலிருந்து எண்ணினால் எந்தக் குழந்தையும் எட்டாகுமே'' என்று சொல்ல, உடனே கம்சன் ஆறு குழந்தைகளையும் கொன்றான்.

Advertisment

நாரதர் ஏன் ஆறு குழந்தைகளைக் கொல்ல காரணமானார் என்று கேள்வி வரும். அவர்கள் விதி, வயது அவ்வளவே!

எட்டாவதாக கண்ணன், வசுதேவர்- தேவகிக்கு நள்ளிரவில் சங்கு, சக்கர கதாதரனாக சிறையில் தரிசனம் ஈந்தார்- அஷ்டமி திதி, ரோஹிணி நட்சத்திரத்தில். பகவானை இருவரும் துதித்தனர்.

அப்போது பகவான், ""நான் இப்போது குழந்தையாய் மாறிவிடுவேன். என்னை கோகுலத்தில் நந்தகோபன்- யசோதை வீட்டில் விடவும். யசோதைக்குப் பிறந்த குழந்தையை எடுத்துவரவும் '' என்றார்.

பிறந்த குழந்தையை வசுதேவர் கூடையில் ஏந்த, சிறைச்சாலைக் கதவுகள் தாமாகத் திறந்தன. காவலாளிகள் அயர்ந்து உறங்கினர்.

அவர் யமுனை நதியில் நடக்க நதி வழி விட்டது. மழைபொழிய, ஆதிசேஷன் குடையாக வந்து குழந்தை நனையாமல் இருக்கச் செய்தார். கோகுலத்தில் நிசப்தம். பிறந்த குழந்தையுடன் யசோதை ஆழ்ந்த உறக்கத்திலிருக்க, கண்ணனை அங்கு விட்டுவிட்டு, அங்கிருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வசுதேவர் திரும்பினார்.

சிறைக்கதவுகள் தானாக மூடின. குழந்தை அழுதது. காவலாளிகள் விழித்தனர். கம்சனுக்குத் தகவல் சொல்ல, அவன் விரைந்து அங்குவந்து குழந்தையின் கால்களைப் பிடித்துத் தூக்கி மேலே எறிந்து, குழந்தை கீழேவிழும்போது கத்தியால் வெட்ட நினைத்தான். குழந்தை ஆகாயத்தில் துர்க்கையாக தரிசனம் தந்து, ""மூடா, உன்னைக் கொல்ல வந்தவன் கோகுலத்தில் வளர்கிறான்'' என்றுகூறி மறைந்தது.

அஷ்டமி, நவமியில் புதிய செயல்களைத் தொடங்கக்கூடாது என்பர். நவமியில் உதித்தவர் ராமர். கீதை தோன்றியதும் நவமி திதியே. அஷ்டமியில் உதித்தவர் கண்ணன், துர்க்கை.

நவராத்திரியில் சுக்லபட்ச துர்க்காஷ்டமி மிக விசேஷம். வங்காளத்தில் "துர்க்கா பூஜை' என்றே பிரசித்தம். இக்காலங்களில் கிருஷ்ண பட்ச அஷ்டமி "பைரவாஷ்டமி' என்று அபிஷேக ஆராதனைகளுடன் மிகச்சிறப் பாக நடக்கிறது. ராதை உதித்ததும் சுக்ல அஷ்ட மியே. கேரளாவில் வைக்கத்து அஷ்டமி என்று மிகப்பிரபலம்- சிவனுக்கு.

ஆக, அஷ்டமியில் கண்ணன், ராதை, துர்க்கை, பைரவர், சிவனை வழிபட்டு மங்கள நலன்கள் பெறலாம் என்றுணர வேண்டும்.

கண்ணன் லீலைகளை அனுபவித்தவர்கள் நந்தகோபன்- யசோதை, கோப- கோபியர் கள். தேவகியும் வசுதேவரும் கண்ணன் குழந்தையாகப் பிறக்கவேண்டும் என்று வேண்டினர். வரத்திற்கேற்ற பலன். ஆண்டாள் பாடுவாள் - "ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர' என்று.

கண்ணன் லீலைகளைப் பாடியவர்கள், அனுபவித்தவர்கள் அநேகம். ஆழ்வார்கள், ஜெயதேவர், சண்டிதாசர், ஸுர்தாசர், மீரா, ஏகநாதர், போதனர், ரயதாசர், நிம்மார்க்கர், வல்லமாசார்யர், கிருஷ்ணசைதன்யர், நாராயண தீர்த்தர், ஸ்ரீராகவேந்திரர், நாராயண பட்டத்ரி என்று பலரும் பாடியுள்ளனர்.

சுகப்பிரம்மம் 18,000 துதிகளுடன் ஸ்ரீமத் பாகவதத்தை பரீட்சித்து மன்னனுக்குக் கூறி னார் என்றால், "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்' என்று 326 துதிகள் மூன்று பாகங்களில் துதித்தவர் "லீலா சுகர்' என்ற பில்வ மங்களர். கேரளத்தில் பிறந்து பிருந்தாவனத்தில் அமிழ்ந்தவர் அவர். அவரது காலம் கி.பி. 1220- 1300 என்பர்.

கேரள நாராயண பட்டத்ரிக்கு வாதநோய் வந்தது. அதனால் நமக்குக் கிடைத்த பொக்கிஷம் "நாராயணீயம்' எனும் ஸ்ரீமத் பாகவத சுருக்கம். இதனைத் துதியாத ஆன்மிக கேரளர்களைக் காணமுடியாது. குருவாயூரப்பன் ஸ்வீகரித்த துதிகள்.

ஆந்திர, காஸாவில் பிறந்த கோவிந்த சாஸ்திரிக்கு வயிற்று வலி வந்ததால் அவர் சந்நியாசியாகி நாராயண தீர்த்தர் என்று பெயர் பெற்று, வரகூர் வேங்கடேசன் அருளால் "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கம்' என்று பாடினார். ஸ்ரீமத் பாகவத தசமஸ்கந்தம் சுருக்கம். சத்ய பத்ய பாக்கள்; நடனத்துக் குரியது. 12 தரங்கங்களாக 153 கீர்த்தனங்களில் உள்ளது. குச்சிப்புடி நடனத்திலும் பஜனை சம்பிரதாயங்களிலும் பார்க்கலாம்; கேட்க லாம்.

அருணகிரிநாதர் முருகனால் ஆட் கொள்ளப்பட்டு "திருப்புகழ்' பாடியதுபோல, அதேபாணியில் நமக்குக் கிடைத்த பொக்கி ஷமே நமது மனதுக்கும் காதுகளுக்கும் இனியதான "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்.' கேரளாவில் பாரதப்புழா நதிக்கரையில் மரூருக்கு அருகிலுள்ள திருநாவையில் நாமதாசர் என்ற ஆன்மிகருக்கு 1220-ல் பிறந்தவர் பில்வமங்கள். வேதம், சாஸ்திரம், புராணம், நாடகம், அலங்காரம் யாவும் ஆழ்ந்து கற்றறிந்தவர். சிறுவயதில் (அருண கிரியைப்போல்) தாய்- தந்தையை இழந்தார். சகவாச தோஷம்; வாலிப மிடுக்கு; தனவான்.

எனவே, காம மயக்கத்தில் உழன்றார். இந்திர னுக்கு தேவலோகத்தில் கிடைக்காத அப்சர தேவ மாதர்களா? ஆனாலும் ரிஷி பத்தினி அகலிகைமீது மோகம்கொண்டானே! அதற்குப் பெயரே விதி! "காமத்துக்குக் கண்ணில்லை' என்பர். அவருக்கு சிந்தாமணி என்ற நாட்டிப் பெண்மீது மோகம் ஏற்பட்டது.

krishnar

ஒருசமயம் அவரது தகப்பனாருக்கு திவச நாள். அன்றிரவு அவருக்கு காம இச்சை அதிகமானது. படித்தவர் என்றாலும் விவேகமிழந்தார். நதியைக் கடக்கவேண்டிய தானது. மிதந்து வந்த ஏதேவொன்றைப் பிடித்து நீந்தியபடி கடந்தார். அவள் மாடி யில் படுத்திருந்தாள். அவர் ஏதேவொன்றைப் பற்றி ஏறிக்குதித்து, கதவைத் தட்டினார்.

நடுநிசி. மழைவேறு. ஆழ்ந்து தூங்கிக்கொண்டி ருந்தவள் எழுந்து கதவைத் திறந்தாள். பில்வ மங்களைக் கண்டு கோபமுற்றாள்.

எவ்வாறு மேலே வந்தார் என்று பார்த் தாள். அவர் பிடித்து ஏறிவந்தது கயிறல்ல; மலைப் பாம்பு. (நதியைக் கடக்க உதவியது மரமல்ல; பிணம்). அவள் வெகுண்டு, ""படித்த ஞானிக்கு இவ்வளவு மதியீன காம மயக்கமா? இந்தக் காமத்தைக் கடவுள்மீது வைத்தால் உமது ஜென்மம் சாபல்யமாகுமே! மனம் மாறித் திருந்தினால் அனுபூதி பெறலாமே'' என்று மனம் வெதும்பிக் கூறினாள்.

கோவிந்த சாஸ்திரியார் நாராயண தீர்த்த ரானதற்கும், காமுக துளஸி ராமதாசரானதற்கும் இதுபோன்ற சம்பவம் கூறுவர். (அவர் களின் அதீத காமம் மனைவிமீது).

வெளிச்சம் வந்ததும் இருள் மறைவதுபோல, அவர் தன் தவறை உணர்ந்தார். ஞானம் பெருகியது. தன் ஈனச் செயலுக்கு நொந்தார். "சோமகிரி ' என்ற ஞானசீலரை குருவாக ஏற்று "ஓம் நமோ பகவதே வாசு தேவாய' என்னும் துவாதசாக்ஷர உபதேசம் பெற்று அதனில் ஆழ்ந்தார்.

கேரளாவைவிட்டு மதுரா பிருந்தாவனம் சென்று யமுனையில் நீராடி, கண்ணன் லீலா ஸ்தானங்களை தரிசித்து இன்புற்றார். கண்ணன் தரிசனமும் கிடைக்க, கண்ணன் லீலைகளை அவ்வப்போது துதியாகச் செய்தார். நாராயணப் பட்டத்ரியின் நாராயணீயம்போல், நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கம்போல் கோர்வையாக இருக்காது. அவ்வப்போது மனதில் தான் ரசித்ததை துதியாகச் செய்தார். முதல் துதியே குருத் துதியாக, இவ்வாறு செய்தார்:

"சிந்தாமணி: ஜயதி ஸோமகிரீர் மே

கிக்ஷாகுருஸ் ச பகவான் சிகிபிஞ்ச மௌனி:

யத் பாத கல்பதரு பல்லவ சேகரேஷ‚

லீலா ஸ்வயம்வர ரஸம் லபதே ஜயஸ்ரீ:'

"தாசி சிந்தாமணியும் சோமகிரியும் குரு வாக இருந்து, விரல் காட்டி கண்ணனை ஜகத்

குருவாக ஏற்கச் செய்தனர். அவனது பாதங்

கள் கல்பதரு போன்று என் மனதில் லீலா

ரஸத்தை வெற்றியுடன் பிரகாசிக்கச் செய்கிறது.'

மூன்று ஆஸ்வாசங்கள், 109+ 109+ 108=326 துதிகள். கண்ணன் பக்தர்களின் மனதைக் கவரும் ஆனந்த ரசம் பெருக்கும் துதிகள். ராதாகிருஷ்ண நூதன அவதாரமான கிருஷ்ணசைதன்ய மகாபிரபு இவரது துதிகளைப் பருகி மகிழ்ந்தார். பஜனை சம்பிரதாயத்திலும் பாகவதர்கள் பாடியாடி அனுபவிப்பார்கள். சில துதிகளின் உரை யாக்கத்தைக் காண்போம்.

= கோபியர்களின் மனதைக் கவர்ந்தவன். ஸ்ருங்கார ஸ்ரேஷ்ட உத்தமன். அவன் என் இதயத்திலும் பிரகாசமாகட்டும்.

= மணிகள் கட்டிய அவன் பாதங்கள் ஒலியுடன் விரஜ பூமியில் பதிந்தன. அத்தகைய அனுக்கிரக பாதங்களை வணங்குகிறேன்.

= கண்ணனின் இளமை அழகு, தாமரை முகம், கருணையுள்ளம், கடைக்கண் பார்வை, வடிவழகு, புன்னகை ஆகியவற்றை வேறெந்த தெய்வத்திடமும் காணமுடியாது.

= அவன் உடல் இனிமை; திருமுகம் மதுரம்; புன்முறுவல் தேனைவிட இனிமை. இனிமையே இனிமை.

= தன் வீட்டில் திருடும் கண்ணனைக் கண்டு ஒரு கோபிகை தாளிட்டுவிட்டு யசோதையிடம் புகார் செய்ய வந்தாள்.

அங்கோ கிருஷ்ணன் உரலில் கட்டப்பட்டி ருந்ததைக் கண்டு வியந்தாள்.

அவர் கூறுவார்-

"அந்த: சாக்தோ பஷி சைவோ

வ்யவஹாரேஷ‚ வைஷ்ணவ.'

நான் உள்ளே சக்தியை வழிபடுபவன்; வெளியே சிவ வேடம் (விபூதி, ருத்ராட்சம்); காரியங்களில் வைஷ்ணவன்.

அவர் கண்ணன் துதிகள் மட்டுமல்லாமல், கணபதி துதிகள், மஹாகாலாஷ்டகம், துர்க்கா ஸ்துதி, சங்கர ஹ்ருதயங்கம், ராம சந்த்ராஷ்டகம் என பல துதி நூல்களை எழுதியதாகத் தெரிகிறது. பிருந்தாவனத்தில் அவர் பெயர் "லீலாசுகர்' ஆனது.

வெண்ணெய், தயிர், பால் விற்கும் ஒரு கோபிகை கண்ணனிடம் மனம் பறி கொடுத்து, "கோவிந்தா, தாமோதரா, மாதவா வாங்கலையா' என்று கூவினாளாம். இவ்வாறே 72 துதிகள் செய்துள்ளார்.

கண்ண பக்தர்கள் லீலாசுகரின் கிருஷ்ண கர்ணாம்ருத துதிகள் துதித்து நெகிழலாம்; மகிழலாம். அவனருள் பெறலாம்.