சாமுண்டாதேவி மந்திர்...

இந்த ஆலயம் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள கங்காரா என்னும் இடத்தில் இருக்கிறது. இதைக் "கடவுளின் வீடு' என்று குறிப்பிடுகிறார்கள். இமாச்சலப் பிரதேசத்தில் 2,000-க்கும் அதிகமான ஆலயங்கள் உள்ளன.

அனைத்து ஆலயங்களும் மக்களை ஈர்க்கக்கூடியன. அவற்றுள் முக்கியமானது சாமுண்டாதேவி ஆலயம். இது 51 சக்தி பீடங்களுள் ஒன்று.

gg

Advertisment

இங்குவரும் பக்தர்கள் தங்கள் மனக்குறைகளை அன்னையிடம் முறையிடுவார்கள். அந்தத் துன்பங்களை நீக்கி, அன்னை அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை யைத் தருகிறாள். அதன்காரணமாக பாரதத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் இந்த ஆலயத்தைத்தேடி பக்தர்கள் வருகிறார்கள்.

இது கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இயற்கையன்னை ஆட்சிசெய்யுமிடம் என்று சொல்லுமளவுக்கு இப்பகுதி மிக எழிலுடன் விளங்கு கிறது. இவ்வாலயத்தின் அருகே பங்கர் என்னும் நதி ஓடுகிறது. அருகே சுற்றுலாத் தலமும் உண்டு. ஏராளமான மக்கள் அங்கு வருகிறார்கள்.

Advertisment

இந்த ஆலயத்தில் இருக்கும் அன்னையான காளி, மோசமான குணம்கொண்ட மனிதர்களை உறுதியாக அழிப்பாள் என்பது பொதுவான நம்பிக்கை. பூவுலகில் துன்பங்கள் அதிகரித்தால் அவற்றைப் போக்குவதற்கும், அவற்றை உண்டாக்கும் அரக்கர்களை அழிப்பதற்கும் காளி தேவி கட்டாயம் வருவாள் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ஆதிகாலத்தில் சண்ட, முண்டன் என்ற இரு அரக்கர்கள் மக்களுக்குப் பல சிரமங்களைத் தந்திருக் கின்றனர். அவர்களை இந்த சாமுண்டாதேவி வதம் செய்திருக்கிறாள்.

"துர்க்கா சப்தசதி', "தேவி மகாத்தியம்' ஆகிய பண்டைய நூல்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கு மிடையே 100 வருடங்கள் போர் நடைபெற்றதாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த போரில் அசுரர்கள் வெற்றி பெற்றனர். அரக்கர்களின் அரசனான மகிஷாசுரன் சொர்க்கத்தின் மன்னனாகிவிட்டான். அதைத் தொடர்ந்து தேவர்கள் பூலோகத்தில் சாதாரண மனிதர் களாக நடமாடினர். அசுரர்கள் தேவர்களுக்கு பலவித இன்னல்களைத் தந்து கொடுமைப்படுத்தினர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட தேவர்கள், மகாவிஷ்ணு விடம் சென்று தங்களின் கஷ்டங்களைக்கூறி முறையிட, அவர் காளியன்னையை வழிபடும்படி கூறினார். "எந்த அன்னையை வணங்குவது?' என்று அவர்கள் கேட்க, "சிவன், பிரம்மா, விஷ்ணுவாகிய நான் மூவரும் சேர்ந்து ஒரு சக்தியைப் படைத்தோம். அந்த சக்தி, ஒளி வடிவத்தில் தோன்ற, அதிலிருந்து அன்னை காளி வெளிப்பட்டாள். சிவபெருமான் அன்னைக்கு சிங்கத்தைத் தந்தார். நான் தாமரையைத் தந்தேன். இந்திரன், ஓசை உண்டாக்கும் மணியைத் தந்தான். கடலுக்கு அரசனான சமுத்திரராஜன், மாலையைத் தந்தான். இதுபோல இன்னும் பல தேவர் களும் தங்கள் சக்திகளைத் தந்தனர். அந்த தேவியிடம் சென்று முறையிடுங்கள்' என்றார்.

அதைத் தொடர்ந்து தேவர்கள் அனைவரும் ஒன்றாகவந்து, தங்களின் துன்பங்களை நீக்கும்படி அன்னையிடம் வேண்டினர். அவர்களுக்கு அபய மளித்த அன்னை, "நான் உங்களை நிச்சயம் காப்பாற்று வேன்' என்று உறுதி கூறினாள்.

தேவர்களை சிரமத்திற்குள்ளாக்கிய மகிஷா சுரனை அன்னை காளி அழித்தாள். அதனால் அன்னைக்கு மகிஷாசுரமர்த்தினி என்னும் பெயர் உண்டாயிற்று. ஒளி வடிவத்தில் காளி தோன்றிய அந்த இடத்தில்தான் இப்போதைய ஆலயம் உள்ளது. அன்னையின் கட்டளைப்படி தேவர்கள் எழுப்பிய ஆலயம் இதுவென்கிறார்கள்.

மகிஷாசுரமர்த்தினி, காளி, சாமுண்டாதேவி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த அன்னையை வழிபடுவதற் காக வரும் பக்தர்கள், அங்கிருக் கும் "பாணகங்கா' என்னுமிடத்தில் நீராடுகிறார்கள். அங்கு குளித்தால், நல்ல காரியங்கள் நடக்குமென்பது பொதுவான நம்பிக்கை. அப்போது அங்கிருக்கும் சிவனையும் வழிபடுவார்கள்.

இந்த ஆலயத்திற்குப் பின்னாலிருக்கும் குகைக்குள் சிவனின் திருவுருவச் சிலை இருக்கி றது. இந்த கோவிலின் பிரதான வாயிலுக்குள் நுழைந்த வுடன் ஆஞ்சனேயர், பைரவர் ஆகியோரின் சிலைகள் இருக்கின்றன.

"சாமுண்டாதேவி மந்திர்' சேத்ரி நவராத்திரி (சித்திரை நவராத்திரி), சாரதா நவராத்திரி (தீபாவளிக்கு முன்னர் வருவது) ஆகிய காலங் களில் திருவிழாக்கோலம் பூணும். அங்கு எப்போதும் சப்த சண்டியை வாசித்துக் கொண்டிருப்பார்கள். நவராத்திரியன்று விசேஷ பூஜைகள் நடக்கும்.

ககல் என்னும் இடத்திலிலிருந்து இந்த ஆலயம் 28 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்கிருந்து பேருந்து அல்லது காரில் பயணிக்கலாம். இமாச் சலப் பிரதேச அரசாங்கத்தின் சுற்றுலாப் பேருந்து களும் உள்ளன.

இந்த ஆலயத்திலிருந்து ஜுவாலாமுகி ஆலயம் 55 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

பஞ்சாபிலிருக்கும் பதான்கோட்டிலிருந்து மலை ரயில் இருக்கிறது. அதில் ஏறி மராண்டா என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து 30 கிலோ மீட்டர் பயணித்தால், சாமுண்டாதேவி ஆலயத்தை அடையலாம்.

குளிர்காலத்தில் தாங்கமுடியாத அளவுக்கு குளிர் இருக்கும். ஏப்ரலிருந்து அக்டோபர்வரை ஆலயத்திற்குச் செல்வது சிறப்பானது.

சென்னையிலிருந்து பதான்கோட்டிற்கு 2,700 கிலோமீட்டர் தூரம் பயணித்து, அங்கிருந்து மலை ரயிலில் பயணித்து ஆலயத்திற்குச் செல்லலாம்.

நீங்களும் ஒருமுறை அங்குசென்று அன்னை யின் பேரருளைப் பெறலாமே!