ண்பரும் எழுத்தாளருமான மலரோன் என்னை சந்தித்து, "அய்யா, உங்க வாழ்க்கை வரலாறையும், மிக நீண்டகால சினிமா அனுபவங்களையும் "நக்கீரன்' இதழ்ல தொடரா எழுதினீங்க. அதுல உங்க ஆன்மிக அனுபவங்கள் பலதையும் அங்கங்க குறிப்பிட்டிருந்தீங்க. அதை விரிவா நம்ம "ஓம் சரவணபவ' இதழ்ல நீங்க எழுதணும்'னு கேட்டுக்கொண்டார்.

சிறுவயதிலிருந்தே எனக்கு முருகன்மீது அளவில்லாத பக்தி. எப்போதும் அவன் பெயரையே உச்சரித்துக்கொண்டிருப்பேன். என் வாழ்வில் மட்டுமல்ல; பலரது வாழ்விலும் முருகன் நிகழ்த்திய அற்புதங்களை அனுபவப்பூர்வமாகக் கண்டிருக்கிறேன்; கேட்டிருக்கிறேன்.

kalaikalaiganamசாண்டோ சின்னப்பா தேவர் முரட்டு முருக பக்தர். அவர் வழிபடுவதே வித்தியாசமாக இருக்கும். முருகனிடம் ஒரு குழந்தைபோல் அழுது அடம்பிடிப்பார். நண்பனைப்போல உரிமையுடன் கேட்பார். கோபித்தும் கொள்வார். குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது முருகனோடு பேசுவார். "தெய்வம்', "திருவருள்' உள்ளிட்ட பல படங்களில் நான் அவரிடம் பணிபுரிந்திருக்கிறேன். எங்கெல்லாம் முருகன் கோவில் இருக்கின்றனவோ அங்கெல்லாம் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆரை எப்போதும் "முருகா' என்றே அழைப்பார் தேவர். எம்.ஜி.ஆர்., தேவருக்கிடையிலான நட்பில், பக்தி சார்ந்த வியப்பூட்டும் நிகழ்ச்சிகளும் உண்டு.

Advertisment

"ஆதிபராசக்தி', "தசாவதாரம்' போன்ற அற்புதமான பக்திப்படங்களை எழுதி இயக்கியவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். அவரோடு ஆறு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன்.

அவர் தமிழகத்தின் எல்லா கோவில்களுக்கும் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது புராணங்கள் பலவற்றையும் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.

Advertisment

அதுபோல, "ஆதிசங்கரர்' படத்திற்காக காஞ்சி மகாபெரியவரை சந்திக்கும் பாக்கியம் கிட்டியது பெரும்பேறு என்றே சொல்லவேண்டும்.

"முருகா...' என்று கே.பி. சுந்தராம்பாள் அழைக்கும் அழகுக்கு, கம்பீரத்துக்கு நிகரேது? அந்த அம்மையார் வீட்டில் குடியிருந்ததோடு, அவருக்கு ஒரு காவல்காறனாகவும் இருந்திருக்கிறேன். அவரிடம் தெரிந்துகொண்டவையும் நிறைய.

இவ்வாறு நான் பார்த்தவை, செவி வழியாகக் கேட்டவை, படித்தவை என பலவற்றையும் உள்ளத்தில் தேக்கி சேமித்து வைத்துள்ளேன். அவற்றுடன் இன்னும் நிறைய படித்து எழுதத் தொடங்குகிறேன்.

இந்த வாய்ப்பை அளித்த ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி.

அண்ட புவனங்களையெல்லாம் மயக்கும் வசீகரச் சிரிப்புடன், "யாமிருக்க பயமேன்?' என்றான் காலண்டரில் இருந்த அந்த கந்தன்.

அந்தப் பேரழகனைப் பார்க்க எனக்குள் கோபம் கொந்தளித்தது. வெறுப்புடன் வெளியேறி நடந்தேன்.

எனக்கு முன்னால் என் அண்ணன்...

எனக்குப் பின்னால் என் மனைவி... நான்கு, இரண்டு வயதிலிருந்த இரு குழந்தைகள்... மனம் அரற்றியது. திரைத்துறையில் சாதிக்க வேண்டுமென்ற தீராத வேட்கையில் சென்னை வந்து 12 ஆண்டுகளைத் தொலைத்துவிட்டேன். இதோ, தோல்வியுடன் சொந்த ஊரை நோக்கிய பயணம்.

"முருகா முருகான்னு உன்னையே

நம்பியிருந்தேனே... இப்படி அநியாயமா என்னை கைவிட்டுட்டியே! உண்மையிலேயே நீ இருக்கியா... இல்ல எல்லாமே பொய்யா... இனி உன் முகத்துல விழிக்கப்போறதில்ல...' இப்படி என்னென்னவோ சொல்லிப் புலம்பியது என் மனம். காரணம் என்ன?

kalaiganamஅப்போது எனக்கு சுமார் இருபது வயதிருக்கும். மதுரை, உசிலம்பட்டி அருகேயுள்ள ஏழுமலை கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தேன். சினிமாவில் சேர தீவிரமாக முயன்றேன். பிரபலமான பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததேயன்றி சொல்லிக்கொள்ளும்படியாக காலூன்ற முடியவில்லை. வேறு வழியின்றி ஊர் திரும்பினேன். ஆனாலும் என் மனம் முழுக்க நிறைந்திருந்த திரைப்பட ஆர்வத்தை மறைத்துவைக்க முடியவில்லை. முருகனை மனப்பூர்வமாக நம்பி மறுபடி சென்னை வந்தேன். அயராத முயற்சி. சொற்ப வாய்ப்புகளும் அற்ப வருமானமும் கிடைத்தது. இடையில் திருமணமும் நடந்து இரண்டு குழந்தைகளும் பிறந்து விட்டனர்.

சென்னை வானொலி நிலையத்திற்குப் பின்புறமிருந்த காரணீஸ்வரர் கோவில் தெருவில்தான் குடியிருந்தோம். மாதம் பத்து ரூபாய் வாடகை. வருமானப் பற்றாக்குறையால் நான்குமாத வாடகை பாக்கி. வீட்டுக்காரர்கள் காலிசெய்ய சொல்லிவிட்டார்கள். விவரம் தெரிந்ததும் என் அண்ணன் ஊரிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். ஐந்து மாத வாடகைப் பணத்தை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்தார்.

""நீ சினிமாவுக்கு முயற்சித்தது போதும். மனைவி, குழந்தைகளைப் பட்டினிபோட்டு அப்படியொண்ணும் சாதிக்க வேண்டிய தில்லை. புறப்படுங்க எல்லாரும். ஊர்ல ஏதாவது கடைவச்சித் தரேன். அதை வச்சுப் பொழச்சுக்கங்க'' என்றார் அண்ணன்.

என்னால் பதிலெதுவும் சொல்லமுடிய வில்லை. இருந்த சில பொருட்களுடன் அண்ணனுடன் புறப்பட்டோம். எழும்பூர் ரயில் நிலையம். அண்ணன் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார்.

என் மனதில் சொல்ல முடியாத வேதனை. தோற்றுப்போய் ஊர் திரும்புவதென்பது சகிக்க முடியாததாக இருந்தது. மெல்ல அண்ணன் அருகே சென்றேன். ""அண்ணா'' என்றேன் மெல்லிய குரலில். அவர் திரும்பினார். அவர் பார்வையை சந்திக்க இயலாமல் தலையைத் தாழ்த்திக்கொண்டு, ""ரெட்டை டைரக்டருங்க கிருஷ்ணன்- பஞ்சுகிட்ட ஒரு கதை சொல்லியிருக்கேன். அவங்களுக்கு அது பிடிச்சுப் போச்சு. "தயாரிப்பாளரு இன்னும் பத்து நாள்ல வந்துருவாரு; அவர் வந்ததும் பேசிக்கலாம்'னு சொல்லியிருக்காங்க.

அஞ்சு மாச வாடகைப்பணம் குடுத்திருக்கீங்க. அந்தக் கணக்குக்கு இன்னும் பதினஞ்சு நாள் அந்த வீட்ல நான் இருக்கலாம். நீங்க இவங்களை அழைச்சிட்டுப் போங்க. நான் கடைசியா ஒரு முயற்சி செஞ்சிடறேன். அது அமையலன்னா ஊருக்கு வந்திடறேன்'' என்று தயங்கித் தயங்கி சொன்னேன்.

என் அண்ணன் முகத்தில் கடுமையான கோபம். அவர் எதுவும் பேசாமல் அவர்களுக்கு மட்டும் டிக்கெட் வாங்கினார். எல்லாரும் சென்று ரயிலில் அமர்ந்தார்கள். நான் பிளாட் ஃபாரத்தில் வெறுமையான மனதுடன் நின்றுகொண்டிருந்தேன். அண்ணன் முகத்தைப் பார்க்கிறேன். மனைவி, குழந்தைகளைப் பார்க்கிறேன்... கைகாட்டி இறக்கப்பட்டது. மணி ஒலித்தது. ரயில் ஊ... ஊ... ஊ... என்ற பெருத்த ஊளையுடன் மெல்ல நகரத்தொடங்கியது. சட்டென்று அண்ணன், ""டேய், சாப்பிட பணம் வச்சிருக்கியாடா?'' என்றார். எதுவும் இல்லை. ஆனால் ""இருக்கு'' என்றேன். மெல்லமெல்ல விலகிச் சென்றது ரயில். ஆனால் அதன் ஊளைச்சத்தம் மட்டும் மனதுக்குள் புயல்சீற்றமாய் வீசிக்கொண்டிருந்தது.

kalaiganam

மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஒரு இயந்திரம்போல வீடுநோக்கி நடந்தேன். எழும்பூர் ரயில் நிலையத் திலிருந்து மயிலை காரணீஸ்வரர் கோவில் தெருவிலுள்ள வீடு வரை அழுதுகொண்டே நடந்து வந்தேன். நள்ளிரவு பன்னிரண்டு மணி.

அந்த இரவின் இருள் முழுவதும் என் இதயத்துக்குள் இறங்கிவிட்டதுபோல உணர்ந்தேன். பூட்டப்படாத கதவைத் திறந்தேன். விளக்கைப் போட்டேன். வெளிச்சம் குறைவான குமிழ்விளக்கு மந்தமாய் கண் திறந்தது. எதிரே இருந்த சுவரில், மாறாத அந்த மந்தகாசப் புன்னகையுடன் "யாமிருக்க பயமேன்?' என்றான் முருகன்.

அந்த சிரிப்பு எனக்குள் தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்தியது. ""அடே பாவி... எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து எந்த நேரமும் முருகா முருகான்னு உன்னையே நம்பியிருந்த என்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்திட்டியேடா... இப்படி அனாதையா நிக்கிறேனேடா... நீ நல்லாயிருப்பியா'' என்று சொல்லி முருகன் படத்தை ஓங்கி ஓங்கி அடித்தேன். அப்படியே துவண்டு சரிந்தேன்.

மனபாரம்... பசி மயக்கம். எப்படித் தூங்கினேன் என்று தெரியாது. யாரோ என்னை அழைக்கும் குரல் கேட்டு கண் திறந்தேன். திறந்திருந்த ஜன்னல் வழியே விடியலுக்கான வெளிச்சம் உள்ளே வந்தது. சுவரில் முருகனின் அதே சிரிப்பு. எழுந்து சென்று கதவைத் திறந்தேன். என் நண்பர் ஏ.எஸ். முத்து நின்றிருந்தார். அவர்மூலம் என் வாழ்க்கையை சில மணி நேரத்திலேயே மாற்றினான் முருகன். இப்போது நினைத்தாலும் சிலிர்க்கவைக்கும் அந்த அதிசயம்?

கலைஞானம்...

திரைப்பட எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலதுறை வல்லுனர். எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பிரபலங்கள் பலருடனும் பரிச்சயமானவர். சாண்டோ சின்னப்பா தேவருடன் மிக நெருங்கிய பழக்கமுடையவர். பக்திப்பட இயக்குனர்கள் கே. சங்கர், கே.எஸ் கோபாலகிருஷ்ணன் போன்றோருடன் பணியாற்றியவர். கே.பி. சுந்தராம்பாளை ஒரு மகன்போல பார்த்துக்கொண்டவர். ரஜினிகாந்தை திரையுலகில் நாயகனாக அறிமுகம் செய்தவர். பி.யு. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் என அன்றைய தலைமுறையினர் பலருடனும் பழகியுள்ள இவர், பாக்யராஜ், பாலா உட்பட இன்றைய இயக்குநர் களுடனும் கதை விவாதங்களில் பங்களிப்பு செய்துவருபவர். இப்படி இன்னும் ஏராளமான பெருமை களுக்குச் சொந்தக்காரர் கலைஞானம்.

தேவரின் முரட்டுத்தனமான முருகபக்தி முதல் இன்னும் பலரது ஆன்மிக அனுபவங்களை நேரில் கண்டவர். இவரும் ஒரு முருகபக்தர். தான் கண்டு, கேட்டு மெய்சிலிர்த்த அந்த சம்பவங்களை இத்தொடரில் உணர்வுப்பூர்வமாக எழுதவுள்ளார். தெய்வம் உண்டென்று உணர இவையெல்லாம் உயிருள்ள காட்சிகள்... சாட்சிகள்! "நம்பினார் கெடுவதில்லை' என்பதை நிரூபிக்கும் தொடர் இது...