மகான்கள், ஞானிகள் போன்றோர் வாழ்வில் நடைபெற்ற சில நிகழ்வுகள் ஒன்றுபோல அமைவது இயல்பே. எடுத்துக் காட்டாக, ஒரே சமயத்தில் வெவ்வேறிடங் களில் தோன்றுதல், நீரில் விளக்கெரித்தல், பக்தர்கள் விரும்பும் வடிவில் தோன்றுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இது போன்ற நிகழ்வொன்றைப் பார்க்கலாம்.
அபிராமபட்டரின் வரலாற்றை அறியாதவர் உண்டோ? அமாவாசையைப் பௌர்ணமி என்று கூறி, அன்னை அபிராமியின் அருளால் வானில் நிலவினைக் காட்டினார்.
அவருக்கு அன்னையின் அருள் கிடைத்தது. நமக்கு ஒப்பற்ற செல்வமாக "அபிராமி அந் தாதி' கிடைத்தது. இதுபோன்ற நிகழ்வுகள் ஸ்ரீநிவாச தீட்சிதர் வாழ்விலும் நடைபெற்றது.
சக்கரவர்த்திகள், மன்னர்கள், குறுநில மன்னர்கள் என்று மன்னராட்சி நடைபெற்று வந்த காலத்தில், அன்னை காமாட்சியின் அருளால் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னர் சுப்பர நாயக்கரால் கௌரவிக்கப்பட்டு, அவரது அவையில் ஆஸ்தான வித்வானாகப் பெரும்புகழோடு இருந்தவர் ஸ்ரீநிவாச தீட்சிதர். பிற மன்னர்களின் அவை யிலுள்ள பண்டிதர்களுடன் திறம் பட விவாதங்கள் செய்து வெற்றி பெற்று, தமக்கும் தம்மை ஆதரித்து வரும் மன்னருக்கும் புகழ்சேர்த்து வந்தார்.
ஒருசமயம், பூனா ராஜ்யத்தில், மைதிலோட்ரம் நாட்டு மன்னர் சந்திரசேகர் பூபாலன் அவையில் ஸ்ரீநிவாச தீட்சிதர் இருந்தபோது, தீட்சிதரைப் பார்த்து, ""இன்று என்ன திதி'' என்று கேட்டார். அதற்கு தீட்சிதர் சற்றும் தயங்காமல், ""இன்று முழுமதி. அதாவது பௌர்ணமி'' என்றார். இதைக்கேட்டதும் அவையிலிருந்தவர்கள் கைகொட்டிச் சிரித்த னர். ஒருகணம் மன்னருக்குத் திகைப்பாக இருந்தாலும், மௌனமாக தீட்சிதர் பக்கம் திரும்பினார். அதேசமயம் தீட்சிதரும் மன்னரை
மகான்கள், ஞானிகள் போன்றோர் வாழ்வில் நடைபெற்ற சில நிகழ்வுகள் ஒன்றுபோல அமைவது இயல்பே. எடுத்துக் காட்டாக, ஒரே சமயத்தில் வெவ்வேறிடங் களில் தோன்றுதல், நீரில் விளக்கெரித்தல், பக்தர்கள் விரும்பும் வடிவில் தோன்றுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இது போன்ற நிகழ்வொன்றைப் பார்க்கலாம்.
அபிராமபட்டரின் வரலாற்றை அறியாதவர் உண்டோ? அமாவாசையைப் பௌர்ணமி என்று கூறி, அன்னை அபிராமியின் அருளால் வானில் நிலவினைக் காட்டினார்.
அவருக்கு அன்னையின் அருள் கிடைத்தது. நமக்கு ஒப்பற்ற செல்வமாக "அபிராமி அந் தாதி' கிடைத்தது. இதுபோன்ற நிகழ்வுகள் ஸ்ரீநிவாச தீட்சிதர் வாழ்விலும் நடைபெற்றது.
சக்கரவர்த்திகள், மன்னர்கள், குறுநில மன்னர்கள் என்று மன்னராட்சி நடைபெற்று வந்த காலத்தில், அன்னை காமாட்சியின் அருளால் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னர் சுப்பர நாயக்கரால் கௌரவிக்கப்பட்டு, அவரது அவையில் ஆஸ்தான வித்வானாகப் பெரும்புகழோடு இருந்தவர் ஸ்ரீநிவாச தீட்சிதர். பிற மன்னர்களின் அவை யிலுள்ள பண்டிதர்களுடன் திறம் பட விவாதங்கள் செய்து வெற்றி பெற்று, தமக்கும் தம்மை ஆதரித்து வரும் மன்னருக்கும் புகழ்சேர்த்து வந்தார்.
ஒருசமயம், பூனா ராஜ்யத்தில், மைதிலோட்ரம் நாட்டு மன்னர் சந்திரசேகர் பூபாலன் அவையில் ஸ்ரீநிவாச தீட்சிதர் இருந்தபோது, தீட்சிதரைப் பார்த்து, ""இன்று என்ன திதி'' என்று கேட்டார். அதற்கு தீட்சிதர் சற்றும் தயங்காமல், ""இன்று முழுமதி. அதாவது பௌர்ணமி'' என்றார். இதைக்கேட்டதும் அவையிலிருந்தவர்கள் கைகொட்டிச் சிரித்த னர். ஒருகணம் மன்னருக்குத் திகைப்பாக இருந்தாலும், மௌனமாக தீட்சிதர் பக்கம் திரும்பினார். அதேசமயம் தீட்சிதரும் மன்னரைப் பார்க்க, மன்னரின் மனதில் ஓடும் எண்ண அலைகளைப் புரிந்தவராய், ""மன்னரே, எவ்வித ஐயப்பாடும் வேண்டாம். இன்று முழுநிலவு நாள்தான்'' என்றார் அழுத்தம் திருத்தமாக. இதைக்கேட்டு முன்பு சிரித்தவர் கள் திகைத்துநிற்க, மன்னர் தீட்சிதரை நோக்கி, ""இன்று அமாவாசையா, பௌர்ணமியா என்பது எப்போது உறுதியாகும்?'' என்று கேட்டார். தீட்சிதரும் உடனடியாக, ""இன்று ஆதவன் மறைந்து இருள் கௌவும் நேரத்தில் உறுதியாகும்'' என்றார். பின்னர் மன்னரும் மற்றவர்களும் அவரவர் இருப்பிடம் சென்றனர்.
தீட்சிதர் மாலையில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றிய பின்னர், காமாட்சியம்மனைப் பலவாறு துதித்து அர்க் கியமும் விட்டார். அன்னை காமாட்சி காட்சி யளித்து, ""குழந்தாய், உன் வாக்கு பொய்க்காது. இதோ, என் தாடங்கத்தை வானில் வீசு'' என்ற கூறி தாடங்கத்தையும் கொடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்ட தீட்சிதர் மீண்டும் அன்னை யைத் துதித்து, அவள் கூறியவாறு தாடங் கத்தை வானில் வீசினார்.
ஒரே நேரத்தில் ஆயிரம் சந்திரன் வானில் தோன்றினால் எத்தகைய ஒளி வெள்ளம் உண்டாகுமோ, அந்த அளவுக்கு வானம் ஒளிர்ந்தது. அதைக்கண்டு தேவர்களே ஆச்ச ரியப்பட்டார்கள் என்றால், சாதாரண மானிடர்களைப் பற்றி என்ன சொல்வது! மன்னரும் மற்றவர்களும் வியந்து, "இது தீட்சிதரின் பராக்கிரமம்' என்றனர். ஆனால் தீட்சிதரோ, ""இது அன்னை காமாட்சியின் அருட்செயலே'' என்றார். தீட்சிதரை நல்லமுறையில் கௌரவிக்கவேண்டுமென்று எண்ணிய மன்னர், அதற்கேற்ப அவரை ரத்ன சிம்மா சனத்தில் அமர்த்தி, கணக்கிலடங்கா நவரத்தி னங்களை சம்பாவனை செய்து, ரத்னகேடம் என்ற ஆபரணத்தையும் சூட்டி, கனகாபிஷேக மும் செய்தார். அன்றுமுதல் ஸ்ரீநிவாச தீட்சிதர், "ரத்தனகேட ஸ்ரீநிவாச தீட்சிதர்' ஆனார். அவரது புகழ் மேன்மேலும் பரவலாயிற்று.
ஒருசமயம், காசியிலிருந்து பண்டிதர் குழாம் ஒன்று ரத்னகேட தீட்சிதரை வாதில் வெற்றிபெற எண்ணி, அவர் இருப்பிடத்திற்கு வந்தது. அது விடியற்காலை சமயம். தீட்சித ரின் மனைவி, வீட்டுவாசலில் சாணமிட்டுத் தூய்மை செய்து கோலமிட்டுக்கொண்டி ருந்தார். காசி பண்டிதர்கள், ""தீட்சிதர் அவர் கள் வீட்டில் உள்ளாரா?'' என வினவினர். சிறந்த விவேகியான தீட்சிதரின் மனைவி, வந்துள்ள பண்டிதர்கள் தன் கணவருடன் வாதாட வந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, கணவரின் பெருமையை அவர் களுக்குத் தெரியப்படுத்தும் கவிதை ஒன்றைக் கூறினார்.
அந்தக் கவிதையின் பொருள்:
ரத்னகேட தீட்சிதர் பண்டிதர்களுள் சிறந்தவர். வாத விளையாட்டில் அனைவரையும் எளிதில் வென்றிடுவார். பிரகஸ்பதி உளறுவார். ஆயிரம் நாக்கு படைத்த ஆதிசேஷன் நழுவுவார். ஆறுமுகன் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்வார். நான்முகன் அவமானமடைகிறார்.
கவிதையில் மிகைபடக் கூறுவது மரபு என்பர் சிலர். மிகையை விலக்கிப்பார்த்தால் தீட்சிதர் வாதத்தில் வல்லவர் என்பது தெளிவாகும். கவிதையைக் கேட்ட காசி பண்டி தர்கள், தீட்சிதரின் மனைவியே இவ்விதம் கவிதை புனைந்தால், அவர் மிகவும் புலமை வாய்ந்தவராகத்தான் இருப்பாரென்று எண்ணி, அவரிடம் வாதிட்டுத் தோற்க வேண்டாமென தீர்மானித்துத் திரும்பிச் சென்றனர். இதுவும் அன்னை காமாட்சியின் திருவிளையாடல் அன்றோ!
ரத்னகேட தீட்சிதர் யாருக்கு உறவு? இவரைத் தெரியாதவர்கள் இருக்கலாம். இவருடைய மாப்பிள்ளையின் பெயரைக் கூறி நிகழ்வைத் தொடரலாம்.
ஆம்; இவருடைய மாப்பிள்ளை மிகச் சிறந்த பண்டிதரான அடையப்பலம் ஸ்ரீமத் அப்பய்ய தீட்சிதர். இவர் பெருமையை வேறொரு சமயத்தில் பார்க்கலாம். மன்னர் பூபாலன் ரத்னகேடரிடம், ""உமக்கு ஸ்ரீமத் அப்பய்ய தீட்சிதரைத் தெரியுமா?''
என்றார். ""சில ஆண்டுகளுக்கு முன்பே அவரைப்பற்றி அறிவேன். சிறுவயதிலேயே சிறந்த பண்டிதராகி, வாலிப வயதிலேயே புகழ் பெற்றவர். வாய்ப்பு கிடைத்தால் அவருடன் வாதாடவும் விருப்பமுள்ளது'' என்று தன் உள்ளக்கிடக்கையும் தெரிவித்தார் ரத்னகேடர். மன்னரும் மனம் மகிழ்ந்து, ""நன்று. என் விருப்பமும் அதுதான். தாங்கள் காஞ்சிபுரம் சென்று அவரிடம் வாதிட்டு வெற்றிவாகை சூடிவாருங்கள்'' என்றார். இவ்வாறு இவர்கள் திட்டமிட, அன்னை காமாட்சியோ வேறொருவிதமாக முடிவு செய்தாள்.
காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமத்தில் வசித்துவந்த ரத்னகேடர், அப்பய்யரின் வருகைக்காகக் காத்திருந்தார். அது நவராத்திரி காலம். ரத்னகேடர், காமாட்சியம்மனை சிறப் பாகப் பூஜித்து வந்தார். அன்னை காமாட்சி நேரில் தோன்றி, ""ரத்னகேடா, வேண்டும் வரம்கேள்'' என்றாள். ""அன்னையே, உன் அருளால் பெயர், புகழ் பெற்று நலமுடன் உள்ளேன். என்னுடைய இப்போதைய கோரிக்கை, அப்பய்யரை வாதில் வென்று மன்னர் பூபாலனை மகிழ்விக்க வேண்டும்'' என்றார். காமாட்சியன்னை இதைக்கேட்டுச் சிரித்தாள். பின்னர், ""அப்பய்யரை யாரென்று நினைத்தாய்? அவர் பரமேஸ்வரனின் அம்சம். அவருடன் வாதம்புரிவது தேவையற்றது. சொல்வதைக்கேள். உன்னுடைய மகளை அவருக்கு கன்னிகாதானம் செய்துவை. உன்னுடைய வயது, அனுபவம், புலமை, செல்வாக்கு ஆகியவற்றால் நீ அப்பய்யருக்கு குருவும் ஆவாய்'' என்று கூறி மறைந்தான்.
ரத்னகேடர் தன் மகள் மங்களாம்பிகையை அழைத்துக்கொண்டு காஞ்சி செல்லத் தீர்மானித்தார்.
இதேசமயத்தில், காஞ்சி ஏகாம்பரநாதரும் அருளாடல் செய்தார். அப்பய்யரின் கனவில் தோன்றி, ""அப்பய்யா, நீ காஞ்சி செல். அங்கு மிகச்சிறந்த பண்டிதரான ரத்னகேடர் உன்னைத் தேடிவந்து, தன் மகள் மங்களாபிகையை உனக்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பார். ஏற்றுக்கொள்'' என்று கூறி மறைந்தார். ஈசனின் ஆணையை ஏற்ற அப்பய்யரும் காஞ்சி சென்றார்.
மாமனாரும் மாப்பிள்ளையும் சந்திக்க நல்ல நாளும் வந்தது. ரத்னகேடர் தன் மகள் மங்களாம்பிகையை அழைத்துக்கொண்டு அப்பய்யரின் இருப்பிடம் சென்றார். ரத்னகேடரை மிக்க மரியாதையுடன் வரவேற்று நலம் விசாரித்தார் அப்பய்யர். மாமனார் மாப்பிள்ளையைப் பார்த்து, ""ஏகாம்பரநாதரின் அருளாசி பெற்றுள்ள உன்னைக்கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஈஸ்வர பக்தியை மக்களிடம் சொல்லி புகழ்பெற்று வளர்ந்துவரும் உன்னைக்கண்ட இந்நாள் இனிய நாள்'' என்றார். மாப்பிள்ளை மட்டும் இளைத்தவரா? அவரும் ரத்னகேடரை வணங்கி, ""நீங்களும் புகழ்பெற்றவர் தாமே! தவறுதலாக அமாவாசையைப் பௌர்ணமி என்றாலும், அன்னை காமாட்சி அற்புதம் செய்து, உலகத்தார் அமாவாசையன்று பௌர்ணமியைப் பார்த்தார்கள் அல்லவா'' என்றார். ரத்னகேடர் மாப்பிள்ளையின் புகழுரையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, ""அப்பய்யா, என் மகளை கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன். மேன்மேலும் புகழ்பெற்று வாழ்க. இது அன்னை காமாட்சியின் அருளாணை'' என்றார். அப்பய்யரும், ""ஏகாம்பரநாதரின் அன்புக்கட்டளைக்கேற்பவே இங்கு வந்தேன். மங்களாம்பிகையை மணக்க எனக்கு சம்மதம்'' என்றார். திருமணம் மிகச்சிறப்பாக நடந்தேறியது. மன்னர் பூபாலனுக்கும் எல்லா விவரங்களும் தெரிவிக்கப்பட்டன. அவரும் மகிழ்ந்தார்.
அன்னையின் அருளின்றி அணுவும் அசையாதல்லவா!