மன்னன் யுதிஷ்டிரர் பிருகதஸ்வர் எனும் முனிவரிடம், ""என்னைப்போல் சூதாடித் தோற்றவர்கள் எவருமில்லை'' எனக்கூறி மனம் வருந்தினார்.
அதற்கு முனிவர், ""உன்னைவிட சூதாட்டத்தில் தோல்விகண்டு துன்பமடைந்த மன்னன் ஒருவன் உள்ளான். அவன் பெயர் நளன்'' எனச் சொல்லி, அவன் கதையைக் கூறத் தொடங்கினார்.
நிடத நாட்டை நளன் எனும் மன்னன் ஆண்டுவந்தான். மிக அழகுடையவன். அருகிலுள்ள விதர்ப்ப நாட்டில் தமயந்தி எனும் மிக அழகுடைய இளவரசி இருந்தாள். அவர்கள் இருவரும் ஒருவர் பற்றி ஒருவர் கேள்விப்பட்டு, பின் அன்னப் பறவையின்மூலம் தூது பரிமாறிக்கொண்டனர்.
இந்நிலையில் தமயந்தியின் சுயம்வரம் ஏற்பாடாயிற்று. அவளது அழகால் கவரப்பட்ட இந்திரன், அக்னி, வருணன், எமன் ஆகிய நால்வரும். நள மகாராஜனைப் போன்ற தோற்றத் தில் சுயம்வரத்தில் கலந்துகொண்டனர். ஐந்து நளன்களைக் கண்ட தமயந்தி திகைப்படைந்து, தேவர்களை மனதாலும் வாக்காலும் வணங்கினாள். அவளது வேதனைக்கு இரக்கம்கொண்ட தேவர்கள், தங்களை மனிதத் தன்மைகளற்று வேறுபடுத்தினர்.
கண்ணிமையாமை, பூமியைத் தொடாத பாதம், வாடாத மாலை, வியர்வையற்ற தன்மை என வேறுபாடு கண்டுணர்ந்த தமயந்தி யும், இந்தக் குறிப்புகளால் உண்மை யான நளனைக் கண்டறிந்து சுயம்வர மாலையை அணிவித்து மணந்து கொண்டாள்.
தமயந்தியை மணக்கும் எண்ணத்துடன் கலிபுருஷன் தன் நண்பன் துவாபரனுடன் வந்தான். ஆனால் தமயந்தியின் திருமணம் நளனுடன் முடிந்துவிட்டதை அறிந்து, அடங்கா கோபம் கொண்டான். எவ்விதமேனும் நளனைப் பிடித்தே தீர்வதெனக் காத்திருந்தான்.
நளனும் தமயந்தியும் தங்களது இரு குழந்தைகளுடன் பன்னிரண்டு வருடங்கள் நன்கு ஆட்சிபுரிந்து மகிழ்வுடன் வாழ்ந்தனர். ஒருநாள் நளன் கால், கைகளை நன்றாக அலம்பாமல் சந்தியாவந்தனம் செய்தான். இந்த சிறு ஆசாரக் குறைவு காரணமாக, கலிபுருஷன் நளனைப் பிடித்துக்கொண்டான்.
கலிபுருஷன் மாற்றுருவில் அருகிலுள்ள நாட்டு அரசனிடம் சென்று, நளனை சூதாட அழைக்குமாறு கேட்டுக்கொண் டான். கலி, சூதாட்டக் காய் வடிவானான். புட்கரன் எனும் அந்த மன்னனின் அழைப்பையேற்ற நளன், அவனுடன் சூதாட ஆரம்பித்தான். இவர்கள் மாதக் கணக்கில் சூதாடினார்கள். நளன் தன்னிடமிருந்த அனைத் தையும் இழந்தான். கடைசியாக நளனும் தமயந்தியும் ஒற்றை ஆடையுடன் விரட்டப் பட்டனர்.
அவர்கள் இருவரும் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். ஓரிடத்தில் பொன்நிறம் கொண்ட பறவைகள் இருந்தன. நளன் தன் ஒற்றை ஆடையால் அதனை வீசிப்பிடிக்க, அந்தப் பறவைகள் அந்த ஆடையுடன் மேலே பறந்து சென்று, ""மூடனே, நாங்களே சூதுக்காய்கள். உன்னை நிர்வாணமாக்கவே இவ்வாறு வந்தோம்'' எனக் கூறி பறந்துவிட்டன.
ஒரு பாழ்மண்டபத்தில் தமயந்தியைத் தனியே விட்டுவிட்டு, நளன் வேறிடம் சென்றுவிட்டான். பின் தமயந்தி மிக சிரமப்பட்டு இறுதியாகத் தன் தாய்- தந்தையரிடம் சென்று சேர்ந்தாள்.
தமயந்தியைவிட்டுப் பிரிந்த நளன் தனியாகச் செல்லும்போது, ஓரிடத்தில் தீப்பற்றி எரிய, அதன் நடுவில் ஒரு குரலும் கேட்டது. அங்கு ஒரு பாம்பு சுருண்டு படுத்திருந்தது. அது நளனை நோக்கி, ""என் பெயர் கார்க்கோடகன். பிரம்மரிஷியின் சாபத்தால் இங்கு ஒரு தாவரம்போல் அசைவற்றுக் கிடக்கிறேன். நீ வந்து தூக்கினால் என் சாபம் தீர்ந்துவிடும்'' என்று கூற நளனும் அந்தப் பாம்பைத் தீயிலிருந்து மீட்டெடுத்தான். அதனைக் கீழேவிடும் சமயம் அந்தப் பாம்பு நளனை நோக்கி, ""ஒன்று, இரண்டு என் எண்ணி, "தச' என்று சொல்லி என்னைக் கீழே விடு'' என்றது. நளனும் அவ்வாறே சொல்லி, "தச' என்று சொல்லிக் கீழே விடும்போது அது அவனைக் கடித்துவிட்டது. உடனே நளனின் தோற்றம் மிக விகாரமாக, கர்ண கடூரமாகியது.
அந்த பாம்பு சுய வடிவம் கொண்டு, ""நளனே, "தச' என்ற சொல்லுக்கு "பத்து', "கடி' என்று இரு பொருள் உள்ளது. அதனால் உன்னைக் கடித்தேன்'. இந்த உருமாற்றத் தால், உன்னைப் பிடித்துள்ள கலிபுருஷன் மிகவும் துன்பப்படுவான். என்னுடைய விஷம், உன்னைத் துன்புறுத்தாமல் கலி புருஷனையே துன்புறுத்தும். இனி நீ வாருகன் என்னும் பெயருடன், அயோத்தி மன்னனான ருதுபர்ணனிடம் பணியாற்று. அவனுக்கு "எண்ணிக்கைகளின் ரகசியம்' என்னும் வித்தை தெரியும். அதனைக் கற்றுகொண்டு, மீண்டும் சூதாடி வெற்றி கொள். உன்னிடமுள்ள அஸ்வ ரகசிய வித்தையை அவனுக்குக் கற்றுக்கொடு'' என்று அறிவுறுத்தி, இரண்டு தெய்வத்தன்மை வாய்ந்த ஆடைகளைக் கொடுத்து, ""இதனை அணிந்துகொண்டால் பழைய வடிவை அடைவாய்'' எனக்கூறி மறைந்தது. பின் அயோத்தி மன்னனிடம் தேர்ப்பாகனாகப் பணியில் சேர்ந்தான் நளன்.
தமயந்தி பெருமுயற்சி செய்து நளன் இருக்குமிடத்தை அறிந்தாள். எனவே அந்த நாட்டு மன்னனுக்கு மட்டும், "தமயந்திக்கு மறுமணம்' என்று செய்தி சொல்லி வரவழைத்தாள்.
பின் மன்னன், நளனுடன் வந்ததும், தேர்ப்பாகனைப் பற்றி விசாரித்தாள்.
அவனுடைய விசேஷ குறிப்புகளை கவனிக்கச் சொன்னாள்.
அதன்படி நளன் தாழ்வான வாயிலை அடைந்தால், அவன் குனிந்து செல்லாதபடிக்கு வாயில் தானாக உயர்ந்துகொண்டது. நெருக்கமான இடமெனில், அதுவாகவே பெரிதானது.
அவன் சாதாரணமாகப் பார்த்தாலே, குடங்களில் நீர் நிரம்பிவிட்டது. துரும்பை எடுத்து சூரியனுக்கு முன்னால் பிடிக்க, அதில் நெருப்பு மூண்டது. நெருப்பு அவனைச் சுடவே இல்லை. குடத்திலுள்ள தண்ணீர் அவன் விருப்பப்படி பெருகியது. மலர்களைக் கைகளால் கசக்க, அவை கசங்காமல் அதிகமாக மலர்ந்து மணம் வீசின.
இந்த சிறப்புத் தன்மைகளால், வந்திருக்கும் தேரோட்டி நளனே என தமயந்தி முடிவுசெய்தாள்.
பின் இருவரும் சேர்ந்தபின்னர், நளன் புட்கரனுடன் மீண்டும் சூதாடி, ஒரே ஆட்டத்தில் இழந்த அனைத்தையும் மீட்டான்.
இந்த நளனின் கதையைக் கூறிய பிருகத முனிவர், ""இவ்வரலாற்றைக் கேட்டவர்களை கலிபுருஷன் நெருங்க மாட்டான்'' எனக் கூறினார்.
மேலும் அவர் யுதிஷ்டிரருக்கு எண் ரகசியக் கலையையும் கற்றுக்கொடுத்தார்.
மேற்கண்ட நள மன்னன் கதையிலிருந்து கை- கால்களை நன்கு கழுவி தூய்மை செய்யவேண்டும் என்பதும், அந்தக் காலத்தில் நியூமராலஜி எனும் எண்கணிதக் கலை இருந்துள்ளது என்பதும், சூதாடுவது பெரும் துன்பம்தரும் என்பதும், துன்ப நேரத்தில் மனைவியைவிட்டுப் பிரிந்துசெல்லும் கணவர்கள் இருந்துள்ளனர் என்பதும் தெரிகின்றன.
காலங்கள் மாறுகின்றன; பெரும்பாலான காட்சிகள் அப்படியே நிகழ்கின்றன போலும்!