"விளையாட்டு வினையாகி விடும்' என்று கூறுவார்கள். அதாவது ஒரு செயலின் பின்விளைவுகளை யோசிக்காமல் செய்துவிட்டு, அதன் பின்னர் வருத்தப்படுவதைத் தவிர்க்கத்தான் பெரியவர் கள் இப்படிக் கூறியுள்ளனர்.

பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடியதன் விளைவாக கயிலையிலிருந்து பூலோகம் வர நேரிட்டது.

ஒரு மாமரத்தின்கீழ் சிவ பெருமாளை நினைத்துத் தவம் செய்து, பங்குனி உத்திரத்திருநாளில் மீண்டும் சிவபெருமானைத் திருமணம் செய்து அவருடன் இணைந்தாள். அந்த இடம்தான் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில். ஐந்து பூதங்களில் (பஞ்சபூதங்கள்) இந்த இடம் நிலத்தைக் குறிக்கிறது. அதாவது இத்தலத்திலுள்ளது பிருத்விலிங்கம். பார்வதிதேவி தம் கையில் ஆற்றுமணலால் உருவாக்கிய புனிதலிங்கம் என்பது மேலுமொரு சிறப்பு! இன்றள வும் மூலவர் ஆவுடையாருக்கு அபிஷேகம் கிடையாது. அன்னை பார்வதிதேவி தவம்புரிந்த அந்த புனித மரமே இக்கோவிலின் தல விருட்சம். நான்குவிதமான சுவையுடைய கனிகளைக்கொண்ட ஒரு அதிசய மாமரமாகும்.

மா, பலா, வாழையை முக்கனிகள் என்று கூறுவது தமிழர்களின் மரபு. இம்மூன்று பழங்களில் உயிர்ச்சத்து அதிகளவு உள்ளது. இவை தமிழகத்தில் விளையக்கூடியவையாகும். மாம்பழத்தில் சர்க்கரைச் சத்து 15 சதவிகித அளவுக்கு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஏ, பி, சி., உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்) உள்ளன. பலாப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஏ.சி, உயிர்ச்சத்துகள் உள்ளன. வாழைப்பழத்தில் நீர்ச்சத்து அதிகளவு உள்ளது. இப்படி மூன்று கனிகளும் சிறுவர்முதல் பெரியவர்வரை அனைவரும் விரும்பி உண்ணும் கனிகளாகும்.

Advertisment

இம்மூன்று கனிகளும் மருத்துவ ரீதியாக வும், ஆன்மிகரீதியாகவும் சிறப்புப் பெற்ற கனிகள். உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்தது மட்டுமின்றி, சுவையான பழங்களும்கூட! ஒரு விருந்து சாப்பாட்டில் முக்கனிகளை வைத்தால் அதற்கு ஒரு சிறப்புண்டு. கம்பராமாயணத்தில், நாட்டுப்படலம் பகுதியில் விருந்தோம்பலைப் பற்றிக் கூறும்போது, "முந்து முக்கனியினானா முதிரையின்...' என கம்பர் பாடியுள்ளார். மா, பலா, வாழை கொண்டு விருந்தளிக்கப் பட்டது எனும் பொருளில் இது குறிப்பிடப் பட்டுள்ளது.

முக்கனிகளில் மாம்பழத்திற்குத் தனிச் சிறப்பே உண்டு. மாவிலைகள் மங்களகரமான சின்னமாகும். மார்ச்முதல் ஜூன்வரை அதிகளவு விளைச்சல் உண்டு. மாமரங்கள் கோடை காலத்தில் வெப்பமண்டலப் பிரதேசங்களில் அதிக விளைச்சலைத் தருகின்றன. இம்மரங்கள் சுமார் 40 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியவை. இதன் ஆயுட்காலம் அதிகளவு 200 முதல் 300 ஆண்டுகள்வரை என்று கூறலாம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் தல விருட்சமான மாமரமோ சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரமென்று கணக்கிடப்பட்டுள்ளது.

கயிலையில் சிவபெருமானும், பார்வதிதேவியும் வீற்றிருக்கும் சமயத்தில், ஒருநாள் பார்வதிதேவி சிவபெருமானின் கண்களை விளையாட்டாகத் தன் இரண்டு கைகளால் மூடினாள். உடனே எல்லா உலகங் களும் இருண்டன. எல்லா ஜீவராசிகளும் செய்வதறியாமல் தவித்தன. சில வினாடிகளில் அனைத்தும் ஸ்தம்பித்தன. தேவியின் செயலால் சற்று கோபமடைந்த சிவபெருமான், தேவி செய்த குற்றத்திற்கு தண்டனையை அனுபவிக்க, தன்னைப் பிரிந்து பூலோகம் செல்லுமாறு கூறினார். விளையாட்டாகச் செய்தது விபரீதமாக மாறி விட்டதால் மனம் கலங்கிய பார்வதிதேவி, கயிலையிலிருந்து காஞ்சிபுரம் வந்தாள். கம்பையாற்றில் மணலாற் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி, அதை நித்தம் ஆகம முறைப்படி பூஜை செய்து, தவமும் செய்துவந்தாள்.

Advertisment

d

பார்வதிதேவியின் அன்பை சோதிக்க சிவபெருமான் ஆற்றில் திடீரென வெள்ளம் வரச்செய்தார். எங்கும் பெரும் வெள்ளம் சூழ, மக்கள் தவித்தனர். தன்னுடைய தவத்திற்கு இந்த வெள்ளம் தடையாக இருந்ததால், தமது தேவியர்களில் ஒருவரிடம் சொல்லி வெள்ளத்தைத் தடுக்குமாறு கட்டளையிட, அந்த தேவி பெரும் வெள்ளத்தைத் தடுத்தாள். இத்தேவி இக்கோவிலின் இரண்டாம் பிராகாரத்தில் பிரளயங்காத்த அம்மன் எனும் பெயரில் தனிச்சந்நிதியில் உள்ளாள். பெரும் வெள்ளம், தான் உருவாக்கிய மணல்லிங்கத்தை சேதப்படுத்திவிடுமோ என அஞ்சிய பார்வதிதேவி, லிங்கத்தைக்கட்டித் தழுவினாள். தேவியின் கரங்கள் பட்ட தழும்பு லிங்கத்தில் பதிந்தது. இதனால் "தழுவக்குழைந்த கம்பன்' எனும் பெயரும் சிவபெருமானுக்கு வந்தது. பார்வதிதேவியின் அன்பை உலகுக்கு வெளிக்காட்ட, மாமரத்திலிருந்து சிவபெருமான் தோன்றி அருள்பாலித்தார். மாவடியில் இறைவன் சிவ பெருமான் தோன்றியதால் ஏகாம்பரன் எனப் பெயர் வந்தது. ("ஏக ஆம்ரன்' என்றால், மாமரத்தின் கீழ் இருப்பவர் என்னும் பொருளுண்டு). புனிதமான இம்மரம் காலப்போக்கில் இருபது ஆண்டு களுக்குமுன்பு பட்டுப் போகத் தொடங்கி யது. இதைத் தடுக்க தமிழக அரசின் அதிகாரிகள் மரத்தின் திசுக்களைக்கொண்டு மரபணுமூலம் புதிய மரக் கன்றுகளை 2004லிஆம் ஆண்டு உருவாக்கினார்கள்.

இன்று மரம் செழுமையாக வளர்ந் துள்ளது. பழைய மரத்தின் ஒரு பகுதி ஏகாம்பரநாதர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் கண்ணாடிச் சட்டத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில், ஐந்து பிராகாரங்கள்கொண்டு கலை அசம்சங்களுடன் அமைந்துள்ளது. பழைமையான இக்கோவிலுக்கு பல்லவ மன்னர்கள், விஜயநகரப் பேரரசு மன்னர்கள் என பலரும் திருப்பணி செய்துள்ளனர்.

திருஞானசம்பந்தர் ஒன்றாம் திருமுறையில், "வெந்தவெண் பொடிப்பூசு' எனத் தொடங்கும் பதிகமும், இரண்டாம் திருமுறையில், "மறையானை மாசிலாப் புண்சடை' எனத் தொடங்கும் பதிகமும், மூன்றாம் திருமுறையில், "கருவார்கச்சித் திருவேகம்ப...' எனத் தொடங்கும் பதிகமும், அதே திருமுறையில் "பாயுமால்விடை மேலொரு பாகனே' எனத் தொடங்கும் பதிகத்தையும் பாடியுள்ளார்.

திருநாவுக்கரசர் நான்காம் திருமுறையில், "கரவாடும் வன்னெஞ்சகர்க் கரியானை' எனத் தொடங்கும் பதிகமும், அதே திருமுறையில், "நம்பனை நகர மூன்றும்' என தொடங்கும் பாடலும் மற்றும் "ஓதுவித் தாய்முன் அறிவுரை' எனத் தொடங்கும் பாடலையும் பாடியுள்ளார். ஐந்தாம் திருமுறையில், "பண்டு செய்த பழவினையின் பயன்' எனத் தொடங்கும் பாடலும், "பூமே லானும் பூமகள் கேள்வனும்' எனத் தொடங்கும் பதிகமும், ஆறாம் திருமுறையில், "கூற்றுவன் காண் கூற்றுவனை' எனத் தொடங்கும் பதிகமும், "உரித்தவன் காண் உரக்களிற்றை உமையாள்' எனத் தொடங்கும் பதிகத்தையும் பாடியுள்ளார். சுந்தரர் ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரையைத் திருமணம் செய்தபோது, "உன்னைப் பிரியேன்' என சிவபெருமான் முன்பு வாக்களித்தார். அந்த வாக்கைத் தவறியதால் அவருடைய இரு கண்களும் பார்வை இழந்தன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வழிபட்டு ஏழாம் திருமுறையில்,

"ஆலந்தானுகந்தமுது செய்தானை

ஆதியை அமரர் தொழுதேத்துஞ்

சீலந்தான் பெரிது முடையானைச்

சிந்திப்பாரவர் சிந்தையுளானை

ஏலவார் குழலாளுமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற

காலகாலனைக் கம்பனெம்மானைக்v காணக்கண் அடியேன் பெற்றவாறே'

எனத் தொடங்கும் 11 பாடல்களைக் கொண்ட பதிகத்தைப்பாட இடக்கண் பார்வையைப் பெற்றார்.

மூவர் தேவாரமும், மாணிக்கவாசகரின் திருவாசகமும் பாடப் பெற்ற அற்புதமான தலம். கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை இந்த தலத்தில்தான் இயற்றினார்.

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி முதல் பிராகாரத்தில் அமைந்துள்ளது.

இந்த பெருமான்மீது திருமங்கையாழ்வார்லி

"நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்

நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி'

எனத் தொடங்கும் பாசுரம் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

"கல்வியைக் கரையிலாத காஞ்சிமாநகர்' என அப்பர் சுவாமிகளால் புகழப்பட்ட காஞ்சிபுரம் நகரிலிலுள்ள ஏழவார்குழலி சமேத ஏகாம்பரநாதரை வழிபட்டு முக்தி பெறுவோமாக!