"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. -வள்ளுவர்

சிலர் இப்படிதான் வாழவேண்டு மென்று வாழ்ந்து கொண்டிருப்பர். அது கொள்கைப் பிடிப்போடு வாழும் வாழ்க்கை. சிலர் எப்படியும் வாழலாமென்று வாழ்வர். அது குறிக்கோளில்லாத வாழ்க்கை.

சிலர் "வாய்மையே வெல்லும்' என்று சொல்லிவிட்டுப் பொய் சொல்வதையே மூலதனமாக வைத்திருப்பர். சிலர் "எனக்கு அவரைத் தெரியும்; இவரைத் தெரியும்' என்று பொய் சொல்லி, "உங்களுக்கு இந்தக் காரியத்தை முடித்துத் தருகிறேன். எனக்கு இவ்வளவு தாருங்கள்' என்று பேரம் பேசுவர். பிறகு காரியத்தை முடித்துக் கொடுத்தாலும் பரவாயில்லை! ஆனால், "நாளை பார்க்கிறேன். அடுத்த வாரம் பார்க்கிறேன்' என்று பணத்தை வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பர். இப்படிப்பட்ட வியாபாரமெல்லாம் நாவினால்தான் நடைபெறுகிறது. எனவேதான் "ஜீவனம் செய்ய நாவினை விற்காதே' என்று சொல்லிவைத்தனர்.

Advertisment

வள்ளுவர்கூட "யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று சொல்லிவைத்தார். எனவே யார் எதைச் சொன்னாலும் உடனே நம்பிவிடக்கூடாது. "கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்' என்று சொல்லிவைத்தார்கள்.

சமூகத்தில் எத்தனையோ நன்மைகளும் நடக்கின்றன; அவலங்களும் நடக்கின்றன. செய்யாத குற்றத்திற்கு ஒருசிலர் பழிசுமக்க நேரிடும். இதுபோன்ற சம்பவம் ஒரு கிராமத்தில் நடந்தால் பஞ்சாயத்து வைப்பார்கள். அப்போது, "நீ இந்தச் செயலைச் செய்ததற்கு இவர்தான் சாட்சி. இவர் அதைக் கண்ணால் பார்த்தார்' என்று, பழி கூறியவர்கள் பொய்சொல்லி குற் றத்தை நிரூபிக்கப் பார்ப்பார்கள்.

குற்றம் செய்யாமலேயே குற்றவாளியாக நிற்பவர், "மனசாட்யைத் தவி என்னிடம் வேறு சாட்சியில்லை' என்பார்.

Advertisment

"குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது' என்ற திரைப்படப் பாடலை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தவறு செய்யாத மனிதர்களுமில்லை. திருத்தமுடியாத தவறுகளும் இல்லையென்பது முன்னோர் வாக்கு. எனவே எந்தக் காரியத்தைச் செய்தாலும் நாம் நம் மனசாட்சிக்கு பயந்தே செய்யவேண்டும். அதையும் மீறி தவறு நடந்துவிட்டால் அதைத் திருத்திக்கொண்டு வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

கண்ணாடியின் முன்னால் நின்று நாம் சிரித்தால், அதிலுள்ள பிம்பமும் சிரிக்கும். அழுதால் அதிலுள்ள பிம்பமும் அழும். எனவே, நாம் எதைச்செய்கிறோமோ அதுவே பிரதிபலிக்கும்.

ஆகவே மனசாட்சிப்படி நாம் வாழவேண்டும். மனதாலும் உடலாலும் எந்த உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது என்ற அடிப்படையில்தான் "மனசாட்சியைவிட மறுசாட்சி தேவையில்லை' என்ற பழமொழியைச் சொல்லிவைத்தார்கள்.

swamy

அப்படி மனசாட்சிப்படி வாழ்ந்துகொண்டிருக்கையில் குற்றம் செய்யாமலே குற்றவாளிக்கூண்டில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டால், ஏதாவது ஒரு ரூபத்தில் சாட்சியுடன் நீதியை நிலைநாட்டி, சுற்றத் தார் போற்றும்வகையில் வாழ்க்கையை அமைத்துத்தருகிற தெய்வம் குடிகொண்டுள்ளதொரு உன்னதமான திருத்தலம்தான் திருப்புறம் பியம் சாட்சிநாத சுவாமி திருக்கோவில்.

இறைவன்: சாட்சிநாத சுவாமி.

இறைவி: கரும்படு சொல்லியம்மை, ஸ்ரீகுகாம்பிகை.

விசேஷ மூர்த்தி: பிரளயம்காத்த விநாயகர், தேனாபிஷேகப் பெருமான்.

ஊர்: திருப்புறம்பியம். (திருப்புறம்பயம்).

தலவிருட்சம்: புன்னை மரம்.

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்.

மதுரை ஆதீனத்தின் நிர்வாகத்தில் முறைப்படி பூஜைகள் நடக்கிற இவ்வாலயம் சுமார் 1,800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங் களில் காவிரி வடகரையில் 46-ஆவது தலமாக விளங்குகிறது. நால்வரால் பாடல் பெற்றது. அகத்தியர், பிரம்மா, துரோணர், சனகாதி நால்வர், விசுவாமித்திரர் ஆகியோர் வழி பட்டுப் பேறு பெற்ற திருத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தமெனும் முப்பெரும் சிறப் புகளைப் பெற்றதோடு இன்னும் பல்வேறு சிறப் பம்சங்களையும் கொண்ட திருத்தலம்தான் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி திருக்கோவில்.

"விடக்கொருவர் நன்றென

விடக்கொருவர் தீதென

உடற்குறை களைத்தவ

ருடம்பினை மறைக்கும்

படக்கர்கள் பிடக்குரை

படுத்துமையோர் பாகம்

அடக்கினை புறம்பயம்

அமர்ந்த உரவோனே.'

-திருஞானசம்பந்தர்.

திருவிளையாடற் புராணத்தின் அறுபத்து நான்காவது திருவிளையாடல் நிகழ்ந்த தலமிது. சோழ வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த வீரத்தின் விளைநிலம் திருப்புறம்பியம்.

பிரும்மாண்ட புராணத்தில் க்ஷேத்திர காண்டத்தில் புன்னாகவன மகாத்மியமாக, நந்திகேஸ்வரரின் திருவாக்காகத் திருப்புறம் பியம் தலபுராணம் எழுதப்பட்டுள்ளது. "புன்னாகவனம்' (புன்னைவனம்) என்று புராண காலத்தில் அழைக்கப்பட்டது.

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பிரளயம் ஏற்படும். அதுபோல் கிருதயுகத்தின் முடிவில் ஒரு பிரளயம் ஏற்பட்டது. நீர்நிலைகள் பொங்கிப் பிரவகித்தன. பேய்க்காற்று பிரபஞ்சத்தை சூழ்ந்தது. அடுத்த சில கணங்களில் உலகமே உருத்தெரியாமல் போய்விடும் என்கிற நிலை. ஆதிநாயகனான சிவபெருமானிடமே அனைவரும் தஞ்சம் புகுந்தனர். உலகைக் காக்கும் பெரும் பொறுப்பை ஈசன் தன் மகனான கணபதியிடம் ஒப்படைத்தார். தந்தையின் வாக்கை செயல்படுத்த புன்னாக வனத் துக்குள் புகுந்து. ஓம்கார மந்திரத்தை சிவசிந்தையுடன் ஜெபிக்க ஆரம்பித் தார். அந்த நேரத்தில் பிரளயத்தின் வேகம் அதிகரித்தது.

ஏழுகடல்கள் ஒன்றாகப் பொங்கி அகிலத்தை சம்ஹாரம் செய்ய பேராசையுடன் வந்தன. பார்த்தார் விநாயகர். தனது மந்திர ஜெபத்தினால் ஒரு கிணற்றை உண்டாக்கினார். ஏழு கடல்களையும் க்ஷண நேரத்தில் அந்த கிணற்றுக்குள் அடக்கினார். வந்த சுவடு தெரியாமல், பிரளய பயம் காணாமல் போயிற்று. தங்களைப் பேரழிவிலிருந்து காத்த நீலகண்டனையும், அதற்கு உறுதுணையாக இருந்த விநாயகரையும் உளம்கனிய அனைவரும் தொழுதனர்.

ஏழுகடல்களையும் விநாயகர் அடக்கிய கிணறு, இன்றைக்கும் சப்த சாகர கூவம் (சப்த சாகரம்- ஏழுகடல்; கூவம்- நீர்நிலை) என்ற பெயரில் திருப்புறம்பியம் ஆலயத் திருக்குளத்திற்கருகே உள்ளது. நீர், உலகை அழிக்காமல் புறம்பாக நின்றதால் ஊரின் பெயர் திருப்புறம்பியம் ஆயிற்று.

swamy

பிரளயம் காத்ததால் வருணன் பெரிதும் மகிழ்ந்து, விநாகரின் திருவுருவை வடித்து புன்னை வனத்தில் பிரதிஷ்டை செய்தான். இவன்வடித்த திருமேனி கல்லாலானதல்ல. கடலையே கட்டுக்குள் கொண்டுவந்த பெருமான் என்பதை உணர்த்தும்வகையில், கடலில் காணப்படும் சங்கு, நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றைக் கொண்டு அமைத்த திருமேனி. இவருக்கு வருடத்திற்கொருமுறை விநாயகர் சதுர்த்தியன்று விடியவிடிய தேனபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அன்றைய ஒருநாள் இரவு முழுவதும் செய்யப்படும் 108 கிலோ தேன் முழுவதையும் விநாயகரின் திருமேனி உறிஞ்சிவிடும். ஒரு ஈ எறும்பும் நெருங்காதென்பது அதிசயமே!

வரலாற்றுப் பெருமை

சோழர்களின் தலைவிதியையே நிர்ணயித்த ஒரு பிரம்மாண்ட போர் கி.பி. 880-ல் திருப்புறம் பியத்தில்தான் நடந்துள்ளது. சொல்லப்போனால் பல்லவ வம்சத்துக் கடைசி அரசனான அபராஜித வர்மனுக்கும், பாண்டிய மன்னனான வீரபாண்டியனுக்கும் நடந்த இந்தப் போரில், பாண்டியர்கள் வெற்றிபெற்றால் சோழ சாம்ராஜ்யமே அடியோடு ஒழிந்துபோகும் நிலை. எனவே தங்களது ஆட்சி எதிர்காலத்தில் நீடித்து நிலைப்பதற்கு பல்லவர்களுடன் தோள் சேர்ந்தனர் சோழர்கள். பல்லவர்களுக்குத் துணையாக கங்க தேசத்து மன்னன் பிரிதிவீபதியும் இருந்தான். அந்தக் காலகட்டத்தில் பாண்டியர்கள், பல்லவர்களுடன் ஒப்பிட்டால் சோழர்களின் படைபலம் வெகு குறைவே! இந்தப் போரில் முதலாம் ஆதித்த சோழன் போர்முனையில் காட்டிய வீரமும் வேகமும்தான் தோல்வியின் விளிம்பிலிருந்த பல்லவர்களுக்கு வெற்றிவாய்ப்பை ஈட்டிக்கொடுத்தன.

யார் இந்த முதலாம் ஆதித்த சோழன் என்றால், தஞ்சைப் பெரியகோவிலை நிர்மாணித்த ராஜராஜ சோழனின் முப்பாட்டனார் என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் வெற்றிபெற்ற திருப்புறம்பியம் மண்ணில் இறைத்திருப்பணி செய்ய விரும்பிய முதலாம் ஆதித்த சோழன் கண்ணில்பட்டது சாட்சிநாத சுவாமி திருக்கோவில். இதற்குமுன் இடைச்சங்க காலத்தில் வரகுண பாண்டியனால் செங்கல் ஆலயமாகக் கட்டப்பட்ட இவ்வாலயத்தை அருமையான கற்றளியாகத் திருத்தியமைத்தான்.

வரகுண பாண்டியன் சோழர் பிரதேசத்தில் ஏன் கோவில் கட்டினான்? திருவிளையாடற்புராணம் இதற்கு பதில் சொல்கிறது.

மதுரையைச் சேர்ந்த மாபெரும் வணிகன் அரதனகுப்தன் தன் மனைவியுடன் சிறப் பான இல்லறம் நடத்திவந்தான். அவனது தாய்மாமன் காவிரிப்பூம்பட்டினத்தில் மிகுந்த செல்வச்செழிப்புடன் வசித்துவந்தார். அவருக்கு ஒரேயொரு மகள் ரத்னாவளி. அவளைத் தன் மருமகனான அரதனகுப்தனுக்கே திருமணம் செய்துவைக்க விரும்பினார் தாய்மாமன்.

இந்நிலையில் விதிவசத்தால் தாய்மாமன் பூம்புகாரில் இறந்து விட்டார். இந்த சோகச் செய்திகேட்ட அவரது மனைவியும் மூச்சடைத்து சடலமாகக் கீழே விழுந்தாள். ஒரே நேரத்தில் தந்தையையும் தாயையும் பறிகொடுத்து ஆதரவற்று நின்ற ரத்னாவளியைப் பார்த்து வேதனைப் பட்ட பூம்புகார் வாசிகள், ""இனி உனக்கிருக்கும் ஒரே ஆதரவு உன் முறைப்பையன் அரதனகுப்தன்தான். மதுரைக்கு இப்போதே தகவல் கொடுத்து அவனை வரவழைக்கிறோம்.

அவனோடு சென்று திருமணம் புரிந்து வாழ்க்கை நடத்து'' என்றார்கள். மதுரைக்கு ஓலை அனுப்பினார்கள்.

துக்கச் செய்தியைக் கண்டதும் துவண்டுபோன மருமகன் அரதனகுப்தன் தன் மனைவியிடம் விஷயம் சொல்லி, தன் காவலர்களுடனும் முக்கியமான சுற்றத்தாருடனும் புறப் பட்டுப் பூம்புகாரை அடைந்தான்.

அங்கே நிராதரவாக நின்ற ரத்னா வளியைப் பார்த்து மனம் துவண்டான். ""உனக்கென்று உரியவளை உன்னிடமே ஒப்படைக்கிறோம். இவளை இங்கேயே திருமணம் செய்து அழைத்துச்செல்'' என்றனர் ஊர்மக்கள். அரதனகுப்தனோ, ""ஊருக்குச் சென்று என் சொந்தபந்தங்கள் அனைவரும் இருக்க இவளை மனைவியாக்கிக் கொள்கிறேன்'' என்றான்.

பிறகு தாய்மாமனின் செல்வங்களுடன் மதுரை புறப்பட்டான். வழியில் ஆங்காங்கே கோவில்களில் தங்கினான். ஒருநாள் மாலை வேளையில் திருப்புறம்பியம் திருத்தலத்தை அடைந்தான். அன்றைய பொழுதை அங்கேயே கழித்துவிட்டு விடிந்ததும் பயணத்தைத் தொடரலாம் என்று, உணவு தயாரித்து அனைவரும் சாப்பிட்டுவிட்டுத் தங்கினர்.

ஆலயத்திலிருந்த வன்னி மரத்தடியில் ஒரு விரிப்பை விரித்துப் படுத்தான் அரதனகுப்தன்.

இறைவனது திருவிளை யாடல் இங்கேதான் அரங் கேறியது. கொடிய விஷமுள்ள ஒரு நாகம் அந்த நள்ளிரவில் அரதனகுப்தனைத் தீண்டியது. அங்கேயே அப்போதே இறந்துவிட்டான். ரத்னாவளி உட்பட அனைவரும் புலம்பித் தீர்த்தனர். சீர்காழியில் அவதரித்த ஞானச்செல்வரான திருஞானசம்பந்தர் அப்போது திருப்புறம்பியம் தலத்தில் ஒரு திருமடத்தில் தங்கியிருந்தார். இவளது புலம்பல் ஒலிகேட்டு, என்னவென்று விசாரிக்க கோவிலுக்கு வந்தார். தனது திருவருளால் அரதனகுப்தனை உயிர்ப்பித்தார்.

பிறகு ஞானசம்பந்தர், ""வணிகரே! உமக்கென்றே உரிய உன் மாமன்மகளை இக்கணமே திருமணம் புரிந்துகொள்ளும். இவள் திருமகளைப் போன்றவள்'' என்றார். அதற்கு அரதனகுப்தன், ""ஐயா, என் குலத்தினரும், திருமணத்துக்குரிய சான்றுகளும் இல்லாமல் எப்படி திருமணம் புரிந்துகொள்வேன்?'' என்று கேட்டான். ""இதோ, இந்த ஆலயத்திலுள்ள வன்னிமரமும், கிணறும், சிவலிங்கமுமே சாட்சிகளாகும்'' என்றார் ஞானசம்பந்தர். அதன்பின் ரத்னா வளியை அங்கேயே மணம் புரிந்துகொண்டான்.

தம்பதி சமேதராக மதுரைக்கு வந்தனர். வந்த புதிதில் மூத்த மனைவிக்கும் புதிதாக வந்த ரத்னாவளிக்கும் ஒத்துப்போயிற்று. ஆனால் நாளடைவில் இருவருக்கும் மனவேற்றுமை உண்டாயிற்று. ஒரு நாள் கோபம்கொண்ட மூத்த மனைவி, ரத்னாவளியைப் பார்த்து, ""என் கணவன் என் கணவன் என்று என்னவரை உரிமை கொண்டாடுகிறாயே... உனக்கும் அவருக் கும் திருமணம் நடந்ததற்கு என்ன சாட்சி?'' என்று கேட்டாள். திருப்புறம்பியம் ஆலயத்திலுள்ள வன்னிமரம், கிணறு, சிவலிங்கமே சாட்சி'' என்றாள் ரத்னாவளி.

""அவை மூன்றும் மதுரைக்கு வந்து சாட்சி சொல்லுமா?'' என்று ஏளனமாகக் கேட்டாள் மூத்தவள். இந்த மனஉளைச்சலோடு மறுநாள் காலை சோமசுந்தரப் பெருமான் ஆலயத்துக்குச் சென்ற ரத்னாவளி, ""என் திருமணத்துக்கு சாட்சியாக இருந்த வன்னிமரம், கிணறு, சிவலிங்கம் ஆகிய மூன்றும் இங்கே சாட்சியாக வரவேண்டும்'' என்று ஈசனிடம் கதறினாள். இதற்கிடையில் இந்த விஷயம் அரசின் விசாரணைக்கு வந்தது.

மதுரை ஆலய மண்டபத்தில் வைத்து விசாரிக்கப்பட்டது. அப்போது அங்கே ஓர் அசரீரி எழுந்தது. ""ரத்னாவளி உத்தமி. அவளுக்கும் அரதனகுப்தனுக்கும் என் முன்னிலையில், வன்னிமரமும் கிணறும் சாட்சியாக இருக்கத் திருப்புறம்பியத் திருத்தலத்தில் திருமணம் நடந்தது. அவளுக்கு சாட்சியாக இருந்தவை அனைத்தும் இந்த ஆலயத்தில் வடகீழ்திசையில் தங்கும்.''

அவ்வளவுதான். அனைவரும் ஈசன் சொன்ன திசைக்கு ஓடினார்கள்.

அங்கே கருங்கல்லாலான வன்னி மரம், கிணறு, லிங்கம் ஆகிய மூன்றும் காணப்பட்டன. தன் பக்தைக்கு சாட்சி சொல்ல திருப்புறம்பியத்திலிருந்து மதுரைக்கு வந்ததால் "புறம்பியநாதர்' என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஈசன் சாட்சிநாதரானார்.

சிறப்பம்சங்கள்

* இறைவனின் திருநாமம் புன்னைவனநாதர், புறம்பியநாதர் என்றிருந்தாலும், வணிகப் பெண்ணுக்காக சாட்சியளித்ததால் சாட்சிநாத சுவாமி என்றே அழைக்கப்படுகி றார்.

* இறைவியின் திருநாமம் கரும்படு சொல்லியம்மை. கடுஞ்சொற்களைப் பேசுவோர் இவ்வம்மையை வழிபட இனிமையான சொற்களைப் பெறுவர். வாக்கு வண்மைபெறும். குழறிப்பேசும் குழந்தைகள் இவ்வம்மைக்கு அபிஷேகம் செய்த தேனை நாக்கில் தடவிவர, சொல்லாற்றல் பெறுவர். வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள் வழிபடவேண்டிய அம்பிகை.

* முருகனைத் தன் இடையில் தாங்கி காட்சியளிக்கும் அம்பிக்கைக்கு சாம்பிராணி தைலம் சாற்றி வழிபட திருமணம் கைகூடும். சுகப்பிரசவம் நடக்கும்.

* நால்வரால் பாடப்பட்ட இத்தலத்திலுள்ள சுப்பிரமணிய மூர்த்தம் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றது.

* சிவாலயத்திற்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடக்கின்றன. குறிப்பாக மாசிமாத பத்துநாள் பிரம் மோற்சவம், ஆவணிமாத விநாயகர் சதுர்த்தி விழாக்கள் வெகுவிமரிசையாக இருக்கும்.

கிழக்கு நோக்கிய 81 அடி உயர ஐந்துநிலை ராஜகோபுரம் கொண்ட ஆலயம்.

திருக்கோவில் கீழ்மேலாக 391 அடி நீளமும், தென்வடலாக 232 அடி அகலமும் கொண்டது. மொத்தப்பரப்பு 90,712 சதுர அடி கொண்ட கோவிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. சிவாலயத்துக்குரிய அனைத்து பரிவார மூர்த்திகளின் சந்நிதி களும் சிறப்பாக அமைந்துள்ளன.

மதுரை ஆதீனம் 292-ஆவது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் 18-3-2016 அன்று குடமுழுக்கு கண்டு பொலிவு டன் காட்சியளிக்கின்ற திருத்தலமாம்- நியாயம் தன்பக்கம் இருக்க, நீதிமன்ற வழக்கில் சிக்கியிருந்தால் செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேக வழிபாடு செய்தால் வெற்றியைத் தேடித்தருகின்ற திருத்தலமாம்- "திருவிளையாடல்' படத்தில் இடம்பெற்ற "சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ- மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ' என்ற பாடல் வரிகளுக்கு சம்பந்தப்பட்ட தலமாம்- ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்குப் பரிகாரத் தலமாம்- பன்னிரு ராசி நேயரும் பயன்பெறும் வகையில் தேனினும் இனிய வாழ்வருளும் தேனபிஷேகப் பெருமான் அருளும் தலமாம் திருப்புறம்பியத்தில் அருளும் ஈசனைத் தொழுவோம்.

"சிவசிந்தனையோடு வாழ்பவர்களுக்கு தேடிவந்து அருள்புரியும் தெய்வம் என்றால் அது சாட்சாத் சாட்சிநாதர்தான்' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான ராஜசேகர சிவாச்சாரியார். அவர் கூறியபடி மனசாட்சியுடன் வழிபடுவோம்; மறுமலர்ச்சி கண்டு பொலிவு டன் வாழ்வோம் ஆலயத் தொடர்புக்கு: பரம்பரை அறங் காவலர் மதுரை ஆதீனகர்த்தர்.

கண்காணிப்பாளர்கள்: கே.வி. ராஜா ராமன், அலைபேசி: 94446 26632. எஸ். இளங்கோவன், அலைபேசி: 99523 23429. எஸ். தட்சிணாமூர்த்தி, அலைபேசி: 94423 91710. செயல் அலுவலர்: எஸ். சரண்யா. அ/மி சாட்சிநாத சுவாமி திருக்கோவில், திருப்புறம்பியம் (அஞ்சல்), கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்- 612 303.தினமும் காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்தி ருக்கும்.

அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் வரும் புளியஞ்சேரியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நகரப்பேருந்து வசதி உண்டு.

படங்கள்: போட்டோ கருணா