ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
மேஷம்
இந்த மாதம் உங்கள் ராசிக்கு குரு பார்வை இருப்பதால் மாதம் முழுவதும் நன்மையான பலன்கள் நடக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் பிறக்கும். பெற்றோர் சொல்லைக் கேட்டு பிள்ளைகள் நடப்பதால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்பாற்றப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். கணவன்- மனைவி உறவு சுமுகமாக இருக்கும். குடும்ப ஸ்தானத்துக்கு குரு ஆறில் மறைவதால், சில சமயம் உறவினர்களாலும் நண்பர்களாலும் குடும்ப அமைதிக்கும் நிம்மதிக்கும் குந்தகம் ஏற்படலாம். அதற்கு இடம்தராமல் மனம்விட்டுப் பேசி குடும்பத்தார் நடந்துகொண்டால் அல்லது விட்டுக்கொடுத்துப் போனால் எதையும் சாதிக்கலாம். சங்கடங்கள் வராமல், சஞ்சலங்கள் ஏற்படாமல், சந்தோஷம் குறையாமல் வாழலாம். ஜனன ஜாதகத்தில் 3, 6, 11-ஆம் இடங்களில் சுபகிரக அமைப்பிருந்தால் மேற்கண்ட தோஷம் வராது. தேக சுகத்தில் பிரச்சினை இருக்காது. பூரண சௌக்கியமும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் உண்டாகும்.பரிகாரம்: திருவாரூரில் மடப்புரம் என்ற பகுதியில் தட்சிணாமூர்த்தி மடம் உள்ளது. அங்கு வியாழக்கிழமை சென்று குரு தட்சிணாமூர்த்தி ஜீவசமாதியில் பிரார்த்தனை செய்யவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு தற்போது அட்டமச்சனி நடக்கிறது. குரு பகவானும் ஆறில் மறைகிறார். எனவே எந்த ஒரு காரியத்தைத் தொட்டாலும் தொட்டது துலங்காது. தடைகளும் தாமதங்களும் குறுக்கீடுகளும் நிறைய இருக்கும். சில காரியங்கள் பாதிக்கிணறு தாண்டிய மாதிரி அரைகுறையாக இருக்கும். சில காரியங்களில் பாதிவரை நிறைவேறியும் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒருசிலர் அனுபவத்தில் திருமண ஏற்பாடுகள் பேசி முடிக்கப் போகும்போது திடீரென்று தடைப்பட்டு வேறு இடம் பார்க்கும்படி ஆகும். அதேமாதிரி வேலை தேடும்போது உங்களுக்கென்று உறுதி செய்த வேலையை வி.ஐ.பி. சிபாரிசால் வேறு ஒரு நபருக்குக் கொடுத்து உங்களை ஏமாற்றிவிடுவார்கள். சகோதர ஸ்தானமான 3-ல் ராகுவும், 9-ல் கேதுவும் இருப் பதால் உடன்பிறப்புகள் வகையில் சிலருக்கு பிரச்சினைகளும், சிலருக்கு தகப்பனார், பூர்வ புண்ணியச் சொத்துப் பிரச்சினையில் விவகாரங்களும் உருவாகலாம்.பரிகாரம்: அட்டமச்சனியின் பாதிப்பு விலக அவரவர் வயது எண்ணிக்கையுடன் ஒன்றுசேர்த்து, அத்தனை மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபமேற்றவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதனின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு அனுகூலமாக இருப்பதால் உங்களுக்கு எந்தக் கேடுகெடுதியும் இல்லை. 5-ல் குரு திரிகோணபலம் பெற்று ராசியைப் பார்ப்பதால் எந்தத் தீமையும் கேடுகெடுதியும் அணுகாது. 7-ல் சனி அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியக்குறைவும், ஒன்றுமாறி ஒன்று சஞ்சலங்களும் கவலைகளும் ஏற்படுவதால், யாரும் ஏதும் செய்வினை செய்திருப்பார்களோ என்று ஒரு சந்தேகம் ஏற்படலாம். சனிக்கு வீடு கொடுத்த குரு ராசியைப் பார்ப்பதால் அதற்கு இடமில்லை. யானைமீது அம்பாரி போகிறவனைப் பார்த்து தரையில் ஓடும் நாய் குரைப்பதால் எதுவும் கெடுதல் ஏற்படுமா? அதுபோல உங்களுக்கு குருவருளும் திருவருளும் கவசமாக இருந்து காப்பாற்றுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 9-ஆம் பாவ பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சனியே அட்டமாதிபதியாக வருவதால் குலதெய்வக் குற்றமோ, முன்னோர்கள் வகையில் தோஷமோ இருக்கலாம். அதனால் உங்கள் முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீர்போல வீணாகிறது- வளர்ச்சி இல்லாமல் தளர்ச்சியடைகிறது. ஜாதகரீதியாக வேண்டிய பரிகாரங்களைச் செய்யலாம்.
பரிகாரம்: காரைக்குடி நகர சிவன் கோவிலில் அல்லது கும்பகோணம் அருகில் திருபுவனம் சரபேஸ்வரர் சந்நிதியில் பூஜை செய்யலாம். சத்ருஜெயம்!
கடகம்
கடக ராசிக்கு ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் இருப்பதால் ஆன்மிகத்துறையில் உங்களுக்கு அதிக ஈடுபாடும் வழிபாடுகளும் கிடைக்கப்பெறும்! கோட்சார கிரகங்களும் ஜாதக தசாபுக்திகளும் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அல்லது பாதகமாக இருந்தாலும் தெய்வ வழிபாடு உங்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும். அது சத்து ஊசி போடுவது போலவும் சத்து டானிக் சாப்பிடுவதுபோலவும் பரிகாரமாகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் உண்டாகும். கௌரவம் பாதுகாக்கப்படும். ஆனால் சனி 6-ல் இருப்பதால் வேலையில் அலைச்சலும் திரிச்சலும் அளவுக்கு அதிகமாகவே அமையும். பல விஷயங்களை ரிஸ்க்கோடு செய்வீர்கள். ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி! அதில் ஏற்படும் வெற்றி உங்களுக்கு பிளஸ் பாயின்ட் மட்டுமல்ல; சவால்விட்டு சவாலே சமாளி என்று "கோல்' அடிப்பதற்குச் சமம்.
பரிகாரம்: வடக்குப் பார்த்த அம்மனுக்கு ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி அரளிமாலை சாற்றி வழிபடலாம். கும்பகோணம் அருகில் அம்மன்குடி சென்று வழிபடலாம். துர்க்கைக்கு தனிச் சந்நிதி; அடுத்து சுவாமி (சிவன்), அம்பாள் சந்நிதி உள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்கு 12-ல் ராகு, 8-ல் கேது, 5-ல் சனி. ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதிவரை பத்திலும் பிறகு பதினொன்றிலும் சஞ்சாரம். உங்கள் கனவுகளும் திட்டங்களும் முழுமையாக வெற்றி யடையும். குலதெய்வ வழிபாடு பலன் தரும். சித்தர்கள் ஜீவசமாதி சென்று ஆசிபெறலாம். சிலசமயம் மற்றவர்களின் செயல்களும் நடவடிக்கைகளும் பேச்சுகளும் உங்களுக்கு எரிச்சல் மூட்டுவதாக அமையலாம். கோபத்தையும் ஆத்திரத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதி யடைய வேண்டும். அந்தமாதிரி சந்தர்ப்பத்தில் யோகா அல்லது தியானத்தில் கவனத்தைத் திருப்பினால் அமைதியும் ஆனந்தமும் அடையலாம். "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்' என்று ஒரு புலவர் பாடினார். பகவத் கீதையில் "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்று சொல்லப்படுகிறது. ஆகவே எது நடந்தாலும் அதற்கு நீங்களோ மற்றவர்களோ காரணமல்ல- எல்லாம் விதிவழி என்று உணர்ந்தால் யார்மீதும் கோபம் ஏற்படாது. யாரையும் குறைகூறத் தோன்றாது. யார்மீதும் வெறுப்பு ஏற்படாது.
பரிகாரம்: பொள்ளாச்சி அருகில் புரவிபாளைத்தில் கோடிச்சாமியின் ஜீவசமாதி இருக்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம் நடக்கும். அங்கு சென்று வழிபட்டால் அலைபாயும் மனது சாந்தியடையும்.
கன்னி
கன்னி ராசிக்கு 2-ல் குரு, 11-ல் ராகு, 5-ல் கேது, 4-ல் சனி. கோட்சாரம் வலுவாகவும் உங்களுக்கு சாதகமாகவும் திகழ்கிறது. தொழில் மேன்மையடையும். வியாபாரம் விருத்தியடையும். தனவரவு தாராளமாகத் திகழும். வரவேண்டிய பாக்கிசாக்கிகள் வசூலாகும். அதனால் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். கடன்கள் கட்டுக்கடங்கிக் காணப்படும். சிலர் சுபமங்கள காரியங்களுக்காகவும் சுபச் செலவுகளுக்காகவும் சுபக்கடன் வாங்கலாம். ஒருசிலர் இருக்கும் வேலையை உதறித் தள்ளிவிட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்யலாம். அது இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவதற்குச் சமம்! இருக்கும். வேலையிலேயே முன்னேற்றமும் லாபமும் வரும். அதுவரை பொறுமையாக இருக்கவும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். ஒருசிலர் வீடு மாறுவதற்கு விரும்பலாம். அவர்களுக்கு அனுகூலமான அதிர்ஷ்டத் திக்கில், ராசியான திசையில் மாறலாம். வைகாசி மாதம் அக்னி நட்சத்திரம் கழித்து வீடு மாறலாம். அதே போல புதிய தொழில் ஆரம்பமும் செய்யலாம். தேக ஆரோக்கியம் தெளிவாக இருக்கும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடலாம். அதேபோல நாமக்கல் அருகில் (சாமியார் கரடு ஸ்டாப்) சேந்தமங்கலத்திலும் தத்தாத்ரேயர் கோவில் உள்ளது.
துலாம்
துலா ராசியில் குரு இருக்கிறார். அவர் ராசிக்கு 3, 6-க்குடையவர் என்றாலும் 3-ஆம் இடத்துக்கு பதினொன்றில், 6-க்கு எட்டில் இருப்பதால் உடன்பிறந்தோர், நண்பர்கள் வகையில், கூட்டாளிகள் வகையில் நன்மைகள் உண்டாகும். 6-ஆம் இடம் சத்ரு ஸ்தானம்; நோய், நொடி, பீடை ஸ்தானம். இவற்றுக்கு 8-ல் குரு மறைவதால் 6-ஆம் இடத்துக் கெடுபலன்கள் எல்லாம் ஓடிஒளிந்துபோகும். மைனஸ் ஷ் மைனஸ் = பிளஸ் என்ற மாதிரி, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்பது விதி! உடல்நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரி, போட்டி, பொறாமை ஒழியும். கடன்கள் அழியும். வியாதி, வைத்தியச்செலவு விலகும். குரு பார்வை 5, 7, 9-ஆம் இடங்களுக்குக் கிடைப்பதால் புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். குலதெய்வக் கடாட்சம் பெருகும். குலதெய்வத் திருப்பணிகளில் பங்கு பெறலாம். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். வேலை விஷயமாக சிலர் வெளிநாட்டு முயற்சி செய்து வெற்றிபெறலாம். உள்ளூரில் சொந்தத் தொழில் விருத்தியடையும். லாபம் பெருகும்.பரிகாரம்: 10-ல் ராகு, 4-ல் கேது தோஷம் விலக சின்னமனூர் அருகில் உத்தமபாளையத்திலுள்ள தென்காளஹஸ்தி கோவில் சென்று ஞாயிறுதோறும் ராகுகால பூஜை செய்யலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் உச்சம் பெறுகிறார். 2-ல் சனி. ஏழரைச்சனி, பாதச்சனி அல்லது குடும்பச்சனி எனப்படும். வரவுக்குமீறிய செலவுகளும் அலைச்சல் திரிச்சல்களும் காணப்படலாம். என்றாலும் 25, 27 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இது முதல் சுற்று- ஏழரைச்சனி. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது சுற்று- பொங்கு சனி. 60 வயதைத் தாண்டியவர்களுக்கு மூன்றாம் சுற்று- மரணச்சனி. ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து ஏழரைச்சனி நல்லதோ கெட்டதோ செய்யும். குறிப்பாக சந்திரதசையோ சந்திர புக்தியோ நடப்பவர்களுக்கு ஏழரைச்சனியோ அட்டமச்சனியோ நடந்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் தொடர்ந்து சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் மலையென வரும் துன்பம் பனிபோல விலகியோடிவிடும்.
பரிகாரம்: ஒரு திங்கட்கிழமை சிவன் சந்நிதியில் ருத்ர ஹோமம் வளர்த்து, சிவன், அம்பாளுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யவேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. அத்துடன் 2-ல் கேது, 8-ல் சனி. சிலருக்கு ஆரோக்கியத்தை பாதிக்கலாம். சிலருக்கு தொழில் சுமை ஏற்படலாம். சிலருக்கு குடும்பத்தில் நிம்மதிக்குறைவு உருவாகலாம். சிலருக்கு வரவுக்குமேல் செலவு வரலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் விரலுக்கேற்ற வீக்கம்போல பிரச்சினைகள் வந்துவந்து வேதனை மூட்டும். ஒரு பிரச்சினை முடிந்ததும் ரெடியாக இன்னொரு பிரச்சினைவரக் காத்திருக்கும். தொழில், வருமானம் எல்லாம் இருந்து எந்தப் பிரச்சினைகளுக்கும் ஆளாகாதவர்களுக்கு குடும்பத்தில் மகன்- மகளுக்கு காலாகாலத்தில் திருமணம்- வாரிசு யோகம் போன்ற சுபமங்கள காரியம் தடையாகும்; தாமதமாகும். அவர்களோடு ஒத்த வயதினரெல்லாம் திருமணமாகி அப்பா அம்மாவாகி விடுவார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் நல்ல காரியம் நடக்காமல் கேட்பவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
பரிகாரம்: திருமணத்தடை விலக ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வர கலா ஹோமமும் நடத்தி கலச அபிஷேகம் செய்யலாம். அல்லது திருமணஞ்சேரி, திருவீழிமிழலை சென்று பூஜைகள் செய்யலாம்.
மகரம்
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. 10-ல் குரு பலம். ஆனால் ஜென்ம கேது, சப்தமத்தில் ராகு. அத்துடன் விரயச்சனி. எனவே பொருளாதாரம், ஆரோக்கியம் எல்லாவற்றிலும் பிரச்சினை. குடும்பத்திலும் ஒருநேரம் மகிழ்ச்சி, மறுநேரம் வருத்தம். ஒருநேரம் வெற்றி, மறுநேரம் தோல்வி. இப்படி ஏற்றமும் இறக்கமுமாக மாறிமாறி வெற்றி தோல்வியாக வந்து உங்களை வேதனைப்படுத்தும். சிலருக்கு "சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' என்று புலம்ப வைக்கும். இருந்தாலும் வாழ்க்கை, வேலை, தொழில், வருமானம் இவற்றில் தேக்கமில்லாமல் இயக்கம் இருக்கும். ஒருசிலருக்கு தொழில்மாற்றமோ, ஒருசிலருக்கு வீடு மாற்றமோ, ஒருசிலருக்கு ஊர் மாற்றமோ ஏற்படலாம். யாருக்கு எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாகவும் நல்ல திருப்பமாகவும் அமையும்.
பரிகாரம்: மதுரை அருகில் திருவாதவூரில் திருமுறைநாதர் கோவிலில் சனி பகவானும் அவர் குருநாதர் பைரவரும் ஒரே சந்நிதியில் இருக்கிறார்கள். அங்கு சனிக்கிழமை சென்று பரிகாரம் செய்யலாம்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருப்பதால் உங்களுக்கு வெற்றியும் லாபமும் உண்டாகும். அத்துடன் 2, 11-க்குடைய குருவும் உங்கள் ராசியை 9-ல் நின்று பார்ப்பது சிறப்பு. தொழில் முன்னேற்றம், குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள், திருமணம், வாரிசு யோகம், புதிய தொழில் வாய்ப்பு, புதிய மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், கார்- டூவீலர் போன்ற வாகன யோகம் ஆகிய எல்லா திட்டங்களும் தடையின்றி நிறைவேறும். பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க கடன் வாங்கலாம். கடன் கிடைக்கும். அப்படிக் கடன் வாங்கும்போது தரமானவர்களிடம் வாங்கவேண்டும். தரங்கெட்டவர்களிடமும், அடாவடி கந்துவட்டிக்காரர்களிடமும் கண்டிப்பாக கடன் வாங்கக்கூடாது.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று 11 திங்கட்கிழமை பூஜைக்கும் பணம் கட்டவும். அது கடன் நிவர்த்தி ஸ்தலம்.
மீனம்
மீன ராசிக்கு குரு 8-ல் மறைவது குற்றம். அத்துடன் 5-ல் ராகு இருப்பதும் குற்றம். 11-ல் கேது, 10-ல் சனி இருப்பது பரவாயில்லை. வசதி வாய்ப்பு, தொழில், வருமானம் இவற்றில் பிரச்சினைக்கு இடமில்லை. ஆனால் மனதில் ஏதோ ஒரு சுமை, வருத்தம், மனக்குறை இருக்கும். முன்பின் தெரியாத- அறிமுகமில்லாத- சம்பந்தமில்லாத அனாமதேயங்கள் போனில் அழைத்து திட்டலாம்; வசை பாடலாம்; விமர்சனம் செய்யலாம். அவர் நேரில் வந்தாலோ தெரிந்தாலோ பதிலடி கொடுக்கலாம். இப்போது என்ன செய்வது? சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதாக நினைத்துக்கொள்ளவும். நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயைத் திருப்பிக்கடிக்க முடியுமா?
பரிகாரம்: தேவகோட்டை அவுட்டரில் பிரத்தியங்கரா கோவில் இருக்கிறது. மானாமதுரை அருகில் வேதியரேந்தல் விலக்கு, கும்பகோணம் அருகில் அய்யாவாடியில் பிரத்தியங்கராதேவி கோவில் உள்ளது. அங்கு சென்று பூஜை செய்யலாம்.