மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ஆமிடத்தில் 3-ஆம் தேதிமுதல் மாறுகிறார். கடகம் அவருக்கு நீச ஸ்தானம். அவரை 10-ஆமிடத்து சனி 10-ல் ஆட்சிபெற்றுப் பார்க்கிறார். பொதுவாக 'மந்தன், சேய் இருவரும் பார்த்திடவும் தீது; சேர்ந்திடவும் தீது' என்பது ஜோதிட மொழி. இங்கு மகரத்தில் இருக்கும் சனி செவ்வாயைப் பார்ப்பது நீசபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தும். மகரம் செவ்வாய்க்கு உச்ச ஸ்தானம். 2-ல் உள்ள ராகு காரியத் தடை, மனக்குழப்பத்தை ஏற்படுத்தலாம். என்றாலும் 11-ல் குரு நின்று 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவார். சனி 7-ஆமிடத்தைப் பார்க்கி றார். சிலருக்குத் திருமணத்தில் தாமதப் பலனை உண்டாக்கலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளலாம். உத்தியோகத்துறையில் உள்ள சிலருக்கு புதிய கூடுதல் பதவிகள் கிடைக்கலாம். 17-ஆம் தேதிமுதல் 11-ல் உள்ள குரு வக்ரம் பெறுகிறார். புதிய ஆர்டருக்கான முயற்சி வெற்றுபெறும். என்றாலும் வீண் அலைச்சலை சந்திக்கநேரும். ஆதாயமும் ஏற்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். அன்யோன்யம் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் புதன் வீட்டில் இருக்கிறார். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த புதன், சுக்கிரன் வீட்டில். ஆக இருவரும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் அவரவர் வீட்டில் ஆட்சியாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். எனவே, உங்கள் திறமை, முயற்சி, செயல்பாடு எல்லாம் சிறப்பாக செயல்படும். 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு- குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள், புதிய மணவாழ்க்கை, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவார். பயணம்மூலம் நன்மை கிடைக்கும். காரிய தாமதங்கள் அவ்வப்போது இருந்தாலும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் பெருமை உண்டாகும். 4-க்குடைய சூரியன் 12-ல் மறைவதால், அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகள், உதவிகளில் தடை காணப்படும். தகப்பனாருக்கு மருத்துவச் செலவுகள், உடல்நலக் குறைவுகள் ஏற்படலாம். 4-ஆம் இடத்தை 10-ல் உள்ள குரு பார்ப்பதால் பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. தாயார் உடல்நலனிலும் மேன்மை உண்டாகும். சிலர் புதியதொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். யாருக்கும் ஜாமின் பொறுப்பு ஏற்கவேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 12-ல் வக்ரமாகவும் மறைவாகவும் இருக்கி றார். மிதுனத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். மற்ற கிரகங்களைப்போல் புதனுக்கு மறைவுதோஷம் பாதிக்காது. புதன் வக்ரமாகவும் இருக்கிறார். ஏற்கெனவே கூறியபடி பரிவர்த்தனை பெறும் கிரகங் கள் அவரவர் வீட்டில் இருப்பதாக அர்த்தம். 15-ஆம் தேதி 12-ல் உள்ள சூரியன் ஜென்மராசிக்கு மாறுகிறார். தந்தைமூலம் நன்மைகள் அமையும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவெடுக்கலாம். அரசாங்கம்மூலம் நடக்கவேண்டிய காரியங்களில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அட்ட மத்துச் சனி அலைக்கழித்தாலும் ஆறுதலையும் தரும். சிலர் உத்தியோக ரீதியாக இடமாற்றத்தைச் சந்திக்க லாம். குடும்பத்தில் சிற்சில குழப்பங் கள் ஏற்படலாம். கணவன்- மனைவிக் கிடையே மனவருத்த நிகழ்வுகளைச் சந்திக்கலாம். 10-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகாமாகும். அவர் 9-ல் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். எனவே தடை தாமதங்கள், முயற்சிகளில் இகழ்ச்சி போன்றவையெல்லாம் மாறும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனமாதிரி சங்கடங்கள் விலகி சந்தோஷங்கள் கூடும். சகோதர சகாயம் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாய் 3-ஆம் தேதிமுதல் 2-ல் சஞ்சாரம். அது அவருக்கு நீச வீடாகும். 7-ல் ஆட்சிபெற்ற சனி ஜென்ம ராசியைப் பார்ப்பதோடு செவ்வாயையும் பார்ப்பதால் செவ்வாய்க்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. உங்கள் புத்தி சாதுர்யத்தால் எந்தக் காரியத்தையும் சந்திக்கும் வல்லமை உண்டாகும். 7-ல் உள்ள சனியை செவ்வாயும் பார்ப்பதால், சிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணத்தை எதிர்கொள்ளலாம். ஜனன ஜாதகரீதியாக ராகு- கேது சம்பந்தம் இருப்பவர்களுக்குத் திருமணத்தில் தடை, தாமதம் ஏற்படும். 11-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைந்தாலும், புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை யோகம் பெறுவதால் மறைவு தோஷம் பாதிக்காது. கணவன்- மனைவியிடையே மனக்கசப்பு மாறி அன்பும் அனுசரணையும் பெருகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பக்குவமும் உண்டாகும். மாதப் பிற்பாதியில் 11-ல் இருக்கும் சூரியன் (15-ஆம் தேதிமுதல்) 12-ல் மறைகிறார். அவர் 2-க்குடையவராவார். எனவே பொருளாதாரம் முதலியவற்றில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வரவேண்டிய பாக்கி சாக்கிகள் தாமதமாக வந்துசேரும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் மாத முற்பகுதியில் 10-ல் இருக்கிறார். அவருடன் 11-க்குடைய புதனும், ராகுவும் சேர்க்கை. இவர்களுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 11-ல் இருக்கிறார். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகள் கைகூடும். பணவரவு அதிகரிக்கும். காரியங்களில் தாமதம் அகலும். துரிதவேகத்தில் காரியங்கள் நிறைவேறும். 15-ஆம் தேதிமுதல் சூரியன் 11-ல் மாறுவார். லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறு விலகும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை வளரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். வேலைப்பளு குறையும். 9-க்குடைய செவ்வாய் 12-ல் மறைந்து நீசம் பெறுகிறார். அது ஒரு வகையில் இழப்பு ஸ்தானம். தந்தைவழி பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக, சகோதர உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். வாக்குவாதம், சச்சரவு ஏற்படவும் இடமுண்டு. 7-ல் குரு நின்று ராசியைப் பார்ப்பதால் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவியும் ஒத்தாசையும் எதிர்பார்க்க லாம். மாதக்கடைசியில் தொழில் சம்பந்தமான நெருக்கடி நிலைமைகளை சந்திக்கவேண்டி வரும். அரசியல் துறையினர் வாக்குவாதங் களைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணம் பெறுவதுடன் வக்ரமாகவும் இருக்கிறார். அத்து டன் 9-க்குடைய சுக்கிரன் 10-ல் புதன் வீட்டில் இருப்பதால், தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்திச் செல்லும். நான் பலமுறை எழுதுவதுபோல், ஒரு ஜாதகத்தில் எத்தனையோ யோகங்கள் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமிருந்தால் அந்த ஜாதகருக்கு எப்போதும் கவலையில்லை. எதையும் சாதிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். 6-ல் நிற்கும் குரு 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். பிள்ளைகள்வகையில் சுபமங்களச் செலவு, திருமணம் போன்ற நிகழ்வுகளால் விரயங்கள் ஏற்படலாம். சிலர் அதை சமாளிக்க கடனும் வாங்கலாம். 8-க்குடைய செவ்வாய் 11-ல் நீசம்பெறுகிறார். மூத்த சகோதரவகையில் மனக் கிலேசம் அல்லது உறவில் பிரிவு போன்றவை நேரலாம். 10-ஆம் தேதிக்குப்பிறகு புதன் வக்ர நிவர்த்தியாகிறார். தாய்- தந்தைவழியில் மனநிறைவு, மகிழ்ச்சி உண்டாகலாம். கணவன்- மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் நீங்கும். எந்தக் காரியத்தையும் திறம்பட செய்ய முனைவீர்கள். எதிர்பாராமல் திடீர்செலவுகள் ஏற்படும். உத்தியோகத் துறையினருக்கு சற்று கடுமையாக உழைக்க நேரிடும். நேரம் கடந்து சில பணிகளை முடிக்கவேண்டிவரும். வியாபாரிகளுக்கு சுமாரான முன்னேற்றமே உண்டாகும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் இம்மாதம் முழுவதும் 9-ல் இருக்கிறார். திரிகோணம் பெறுகிறார். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் சூழல் உருவாகும். அதை முடித்து வெற்றியும் பெறலாம். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக முடியும். எதிர்பார்த்த உதவிகள கிடைக்கும். 2, 7-க்குடையே செவ்வாய் 10-ல் நீசம் பெறுகிறார். என்றாலும் செவ்வாய்க்கு உச்சவீடான மகரத்தில் சனி ஆட்சிபெற்று செவ்வாயைப் பார்ப்பதால், நீசம் தெளிந்து நீசபங்க ராஜயோகமாக மாறும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள்மூலம் நன்மை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர் கள் சிறப்பாகப் பணிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறலாம். 5-ல் உள்ள குரு ஜென்ம ராசியைப் பார்ப்பது மேலும் சிறப்பு, பணவரவு எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நடப்புகள்மூலம் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். உங்கள் செயல்பாடுகளில் வேகமும் விறுவிறுப்பும் உண்டாகும். குடும்பத்திலும் கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். கணவர்வழி உறவினரால் நன்மதிப்பும் நற்பெயரும் ஏற்படும். பொறுப்புகள் கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். அங்கு நீசமும் அடைகிறார். 3-ல் சனி ஆட்சிபெற்று செவ்வா யைப் பார்ப்பதால் நீசதோஷம் பாதிக்காது. தேக ஆரோக்கியம் பாதிக்காது. மாதப் பிற்பகுதியில் 10-க்குடைய சூரியன் 8-ல் மறைவதால் தொழில்துறையில் சற்று மந்தமான போக்கு காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்க நேரிடும். கூட்டாளிகளுக்குள் சற்று கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். 2-க்குடைய குரு 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். செலவுகள் அதிகரிக்கும். அதில் சுபமங்கள விரயங்களும் ஏற்படும். பொருளாதாரப் பற்றாககுறையும் உண்டாகும். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் உருவாகும். கணவன்- மனைவிக்கிடையே வாக்குவாதம், பிடிவாதகுணம் உண்டாகலாம். யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்துச் சென் றால் உறவுகளில் பிரிவு ஏற்படாது. ஜென்ம கேது காரியத்தடைகளை உருவாக்கலாம். முடிந்தவரை அடுத்தவர் செயலுக்கு பொறுப்பேற்காமல் நடந்துகொள்வது நன்மை தரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் அடங்காதது மனதை மிகவும் வேதனைப் படுத்தும். 3-ல் சனி ஆட்சி என்பதால், ஒருவித மனதைரியம் உங்களை வழிநடத்தும். துணிவே துணையாக அமையும்.
தனுசு
தனுசு ராசிக்கு ஏழரைச் சனியின் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. 2-ல் ஆட்சிபெறும் சனி 8-ல் நீசம்பெறும் செவ்வாயைப் பார்க்கிறார். மனசஞ்சலம். சங்கடம், குழப்பம் போன்றவை உருவாகலாம். சிலருக்கு வேலை, உத்தியோகரீதியாக இடமற்றம் ஏற்படலாம். சிலருக்கு குடியிருப்பு ரீதியாக இடமாற்றம் ஏற்படலாம். அவை திருப்தியற்றவையாக நிலவு வதால் சங்கடம், குழப்பம் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக பற்றாக் குறைக்கு இடமில்லை என்றாலும், தேவைகள் பூர்த்தியாவதில் தாமதம் உண்டாகலாம். மாத முற்பகுதிவரை 9-க்குடைய சூரியன் 6-ல் மறைகிறார். அவருடன் ராகு- கேது சம்பந்தம். பூர்வீக சொத்து சம்பந்தமாக வழக்கு, வில்லங்கம், வியாஜ்ஜியங்களை சந்தித்திருப்போருக்கு சாதகமான முடிவுகள் வருவதில் காலதாமதமாகலாம். இழுபறியான நிலை காணப்படும். என்றாலும் 3-ல் உள்ள குரு 9-ஆமிடத்தைப் பார்ப்பதால், தள்ளிப் போகலாமே தவிர தடையாகாது. குரு 7-ஆமிடத்தையும் 7-ல் உள்ள சுக்கிரனையும் பார்ப்பதால், திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமணயோகம் கைகூடும். திருமணமான தம்பதிகளுக்குள் ஒற்றுமை, அன்பு அதிகரிக்கும். 2-ல் சனி இருப்பதால் உங்கள் பேச்சுகளில் நிதானத் தையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிப்பது அவசியம். வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும் என்பதால் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மருத்துவச்செலவுகள் வந்துவிலகும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி ஆட்சி. மகரத்திற்கு உச்சநாதனான செவ்வாய் 7-ல் நீசம்பெற்று சனியால் பார்க்கப்படுகிறார். சனியையும் செவ்வாய் பார்க்கிறார். 'மந்தன் சேய் இருவரும் பார்த்திடவும் தீது; சேர்ந்திடவும் தீது' என்பது ஜோதிட மொழி. எனவே மகர ராசிக்கு நடக்கும் ஏழரைச்சனி முழுமையான கெடுதலைத் தராது என்று நம்பலாம். இதில் ஜனன ஜாதகரீதியாக சந்திர தசை சந்திரபுக்தியை சந்திப்பவர்களுக்கு மட்டும் பொருட்சேதம், இழப்பு, ஏமாற்றம் போன்ற பலன்கள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவ-லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யவும். 5-க்குடைய சுக்கிரன் 6-லும், 6-க்குடைய புதன் 5-லும் பரிவர்த்தனை யோகம் அடைகிறார்கள். உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் செயலாக்கம் செய்வதில் சற்று அதிகம் முயற்சிக்க நேரும். நீண்டநாள் இழுபறியாக இருந்த பிரச்சினை முடிவுக்கு வராமல் திணறவேண்டிய நிலையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரவேண்டிய ஊதிய உயர்வும் அல்லது பதவி உயர்வும் தள்ளிபபோகலாம். சகோதரவழியில் சகாயமும் நன்மையும் உதவியும் உண்டாகும். நண்பர்களால் ஒத்துழைப்பும் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைவு மற்றும் ஆட்சியாக இருக்கிறார். சனி 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். 2-க்குடைய குரு ஜென்மராசியில் இருக்கிறார். விரும்பிய காரியங்கள் நடைபெறும். ஏழரைச்சனி நடப்பதால் சில காரியங்கள் மந்தமாகவும் தாமதமாகவும் செயல்படும். சிலருக்கு பணிகளில் தடை, சிலருக்கு தொழில் அல்லது வியாபாரத்தில் முட்டுக்கட்டைபோல தெரியும். ஜென்மத்தில் உள்ள குரு 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். ஆகவே, உங்களது எண்ணங்கள், திட்டங்கள் ஆகியவற்றில் முன்னேற்றகரமான சிந்தனை தென்படும். 7-ஆமிடத்தையும் பார்க்கிறார். கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பர். இழுபறியாக இருந்த தந்தைவழி சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வரவேண்டிய தொகைகளும் வந்துசேரும். 3-க்குடைய செவ்வாய் 6-ல் மறைகிறார். நீசம்பெறுகிறார். வங்கிமூலமாக எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். அது வீட்டுக் கடனாகவோ அல்லது வாகனக் கடனாகவோ அமையலாம். சகோதரவழியில் சகாயம் உண்டாகும் 4-ல் உள்ள ராகு தேகநலனில் சிறிது ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தலாம். பாதிப்புகளுக்கு இடம் உண்டாகாது.
மீனம்
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த சனி குருவுக்கு 12-ல் மறைகிறார். 10-க்குடையவர் 12-ல் மறைவதால் தொழில்வகையில் செலவுகளையும், தொழில் தடைகளையும் ஏற்படுத்தலாம். சனி 11-ல் ராசியைப் பார்க்கும் காரணத்தால் சிந்தனைகள், கற்பனைகள் பெரிதாக உருவானா லும், அதை செயல்படுத்துவதில் தயக்கம் காணப்படும். 2-க்குடைய செவ்வாய் 5-ல் நீசம் பெற்று குருவைப் பார்க்கிறார். பயன்தராத முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. அலைச்சலைக் குறைத்துக்கொள்வதும் நன்மை தரும். ஆதாயமும் குறைவாகத்தான் இருக்கும். என்றாலும் 3-ல் உள்ள ராகு இவற்றையெல்லாம் சமாளிக்கும் தைரியத்தையும் தன்னம் பிக்கையையும் வளர்க்கும். 4-ல் சுக்கிரன், 3-ல் புதன் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். உடல்நலத்தில் ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். அவ்வப்போது சில குழப்பமான மனநிலையும் வந்து விலகும். 6-ஆமிடத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் போட்டி பொறாமைகள் வலுக்கலாம். மாதபிற்பகுதியில் 3-ல் உள்ள சூரியன் 4-ல் மாறியபிறகு குருவின் பார்வையைப் பெறுவதால் அவற்றை எதிர்க்கவும் முடியும். தொழில் கடனும் இருக்கத்தான் செய்யும்.