மேஷம்

ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் கடகத் தில் நீசமாகவும், பாக்கியாதி பதி குரு மாதம் முழுவதும் வக்ரமாகவும் இருக்கிறார் கள். அத்துடன் குரு 8-ல் மறைவு. கணவன்- மனைவி உறவுகளில் நீறுபூத்த நெருப் பாக கருத்துவேறுபாடுகளும் மோதல்களும் உருவாக இடமுண்டு. அனுசரித்துப் போக வேண்டும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். "விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை' என்பது சான்றோர் வாக்கு! திருமண முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படலாம். நிச்சயம் செய்த திருமண ஏற்பாடுகள்கூட மாற்றமடையலாம். அதற்குக் காரண காரியங்களை ஆராயாமல், பிராப்தம் இல்லையென்று பெருந் தன்மையோடு மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டும். "இன்னாருக்கு இன்னார் என்பது இறைவன் எழுதி வைத்த கணக்கு' என்றுணர்ந் தால் வருத்தப்படவோ ஆத்திரப்படவோ அவசிய மில்லை. அதேசமயம் ஜனன ஜாதக தசாபுக்திகள் யோக மாக அமைந்துவிட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் கூட இணைந்து பேரானந் தம் பெருக வாழலாம். கொடுக்கல்- வாங்கலில் சேமிப்புக்கு இடமில்லை யென்றாலும், நாணயம் கெடாமல் வரவு- செலவு நடக்கும். ஆரோக்கியமும் தெம்பாக இருக்கும். திடமாக வேலை செய்யலாம். பரிகாரம்: செவ்வாய்க் கிழமைதோறும் துர்க்கை யம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி வழிபடவும். அல்லது வடக்குப் பார்த்த அம்மனையும் வழிபடலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் நிற்க, ராசியை குரு பார்க்கிறார். குரு 8, 11-க்குடையவர் என்றாலும், குருவின் பார்வை கோடி நன்மை உண்டாக்கும். சுக்கிரன் அசுர குரு; குரு (வியாழன்) தேவகுரு. இருவரும் பகையென்று சிலர் சொல்லலாம். அது தவறான கருத்து. சுக்கிரன் அசுரர்களுக்காக வாதாடும் வக்கீல்; குரு தேவர்களுக்காக வாதாடும் வக்கீல். அவ்வளவு தான். அசுரர்களுக்கும் தேவர் களுக்கும்தான் பகையேதவிர, சுக்கிரனுக்கும் குருவுக்கும் பகையில்லை; தனிப்பட்ட விரோதமும் இல்லை. குரு வின் வீடான மீனத்தில்தான் சுக்கிரன் உச்ச கதி அடைவார். வாதிக்கும் பிரதிவாதிக்கும் வக்காலத்து வாங்கி காரசார மாக நீதிமன்றத்திற்குள் வாதிடும் வக்கீல்கள், வெளியில் சேர்ந்து சிரித்துக்கொண்டே காபி சாப்பிடுவார்கள் அல்லவா! ரிஷப ராசிக்கு அட்டமச்சனி நடப்பதால் சிலருக்கு வீடு மாற்றம், சிலருக்கு தொழில் மாற்றம், சிலருக்கு வேலை மாற்றம், சிலருக்கு ஊர் மாற்றம் போன்ற மாற்றங்கள் ஏற்படலாம். ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி என்பதால், எந்த மாற்றமாக இருந்தாலும் அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாகவே அமையும். வேற்றுக்கருத்து இல்லாமல் விரும்பி அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம். பரிகாரம்: சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றவும். அவரவர் வயது எண்ணிக்கையுடன் ஒன்றுசேர்த்து அத்தனை மிளகுகளை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி நெய்யில் நனைத்து ஏற்றவும்.

Advertisment

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் தன் ராசியில் ஆட்சி பலமாக இருக்கிறார். அதனால் உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் சீரும்சிறப்புமாக விளங்கும். செயல்பாடுகளும் செம்மை யாகத் திகழும். கருதிய காரியங் கள் கைகூடும். நினைத்தவை நிறைவேறும். அதேசமயம் 7, 10-க்குடைய குரு 6-ல் மறைவதாலும், 7-ல் சனி, கேது நிற்பதாலும் வாழ்க்கைத்துணையிடம் (கணவன் அல்லது மனைவி) அர்த்தமற்ற பூசல்களும், வாக்குவாத தர்க்கங்களும் உருவாக இடமுண்டு. களஸ்திரகாரகன் சுக்கிரனும், பர்துரு காரகன் (மாங்கல்ய காரகன்) குருவும் சமசப்தமாகப் பார்த்துக்கொள்வதால் பிரிவு, பிளவுக்கு இடமில்லை. பள்ளி, மருத்துவமனை, வளைவான ரோடுகளில் வேகத்தடை (ஸ்பீடு பிரேக்கர்) இருப்பதுபோல சிறு தடைகள்தான். ஜென்ம ராகு குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். அதற்கு இடம்தராமல் நடந்துகொள்ளவேண்டும். பொறாமையாளர்கள் உங்கள் ஆனந்த வாழ்வைக் கண்டு அவதூறுகளைக் கிளப்ப லாம். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். பொதுவாக திருஷ்டியும் பொறா மை யும் நம் வளர்ச்சியைத் தளர்ச்சியடையச் செய்யும். பரிகாரம்: சூலினி துர்க்கா, திருஷ்டி துர்க்கா மந்திர ஜெபம் செய்யலாம். திருஷ்டி சுற்றிப்போடலாம்.

கடகம்

Advertisment

கடக ராசிக்கு 12-ல் சூரியன், புதன், ராகுவும்; 6-ல் சனி, கேதுவும் மறைகிறார்கள். இவர்களில் சனி, கேது, ராகு தவிர, மற்ற இருவரும் முக்கியமான கிரகங்கள். அத்துடன் தொழில், ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய் ஜென்மத்தில் நீசம்! ஆகவே உங்கள் எண்ணம், திட்டம், செயல்கள் எல்லாம் கல்லிலே நார் உரிப்பதுபோல கடினமாகத் தெரிந்தாலும், 9-க்குடைய குரு 5-ல் திரிகோணம் பெற்று கடக ராசியைப் பார்ப்பதால், எல்லாவற்றுக் கும் சாபவிமோசனமும் பரிகாரமும் செய்தது போல நிவர்த்தியாகும். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். திரிகோணத்தின் பலன் தெய்வானு கூலமாக- அதிர்ஷ்டவசமாக- காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தமாதிரி குருவரு ளாலும் திருவருளாலும் நிறைவேறும். கேந்திரத்தின் பலன் விசுவாமித்திரர் மீண்டும் மீண்டும் தவம்செய்து செய்து வலிமை பெற்றமாதிரி கடும் முயற்சிகளுக்குப்பிறகு முன்னேற்ற மும் வெற்றியும் அடையவேண்டும். இதை வள்ளுவப் பெருந்தகை, "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்மெய் வருத்தக்கூலி தரும்' என்றார். அதாவது அவரவர் முயற்சிக் கேற்ற பலன் என்று அர்த்தம். ஆகவே நீங்கள் எப்போதோ செய்த முயற்சிக்கும் உழைப்புக் கும் இப்போது பலன் கிடைக்கும். பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடவும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதி வரை 11-ல் இருக்கிறார். 11-ஆம் இடம் சூரியனுக்கு 100-க்கு 100 நற்பலன் தரும். சொல்லப்போனால் நூற்றுக்கு நூற்றைம்பது என்றுகூட சிறப்பாகக் கூறலாம். எந்த ஒரு லக்னத்துக்கும் 11-ல் சூரியன் இருக்கும்படி லக்னம் அமைத்து ஒரு காரியம் செய்தால்- கிரகப் பிரவேசம், தொழில் ஆரம்பம், திருமணம், புதுமுயற்சி, வேலையில் சேர்வது போன்ற செயல்களைச் செய்தால் அது சிரஞ்சீவித் தன்மையாக- நிரந்தரமாக நிலைத்துநிற்கும். அனுமன், கிருபாச்சாரியார், மகாபலி, அஸ்வத்தாமன், பரசுராமர், வியாசர், விபீஷணர் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் (ஏழுபேர்) என்று புராணத்தில் கூறப்படும். ஆனால் 11-ல் சூரியன் தனித்து நிற்க வேண்டும். இங்கு புதனும் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் மார்க் குறைந்து விடும். அதாவது தேர்ச்சியடையலாம். முதலிடம் பெறமுடியாது. (ஸ்டேட் பர்ஸ்ட் அல்லது டிஸ்டிங்ஷன் கிடைக்காது.) 4, 9-க்குடைய செவ்வாய் 12-ல் நீசம் என்பதால், தாய் அல்லது தகப்பனார் வகையில் ஆரோக்கியக் குறைவும் வைத்தியச் செலவும் ஏற்பட்டாலும், குரு பார்வையால் பாதிப்புக்கு இடமிருக்காது. அல்லது முன்னோர் சொத்துவகையில் பிரச்சினைகள் உண்டாகலாம். வழக்கு விவகாரம், பங்காளிப் பிரச்சினைகளைச் சந்தித்தாலும், குரு பார்வை இருப்பதால், எந்த பாதிப்புக்கும் இடமில்லாமல் வெற்றிபெறலாம். பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாடும், நவகிரகத்தில் சூரியனுக்கு அர்ச் சனையும் செய்யலாம். கும்பகோணம்- ஆடுதுறை அருகில் சூரியனார்கோவில் சென்றும் வழிபடலாம்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 9-க்குடைய சுக்கிரனும் 10-ல் இருக்கிறார். (ஜூலை 24 வரை). அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அத்துடன் 9-ஆம் இடத்தை குருவும் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகத்துக்குத் துணைபுரிகிறது. 10-ஆம் இடத்துக்கு 6-ல் குரு மறைய, அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 11-ல் நீசம் பெற்று நீசபங்கம் அடைகிறார். 3, 8-க்குடையவர் நீசம் பெறுவது நல்லது என்றாலும், அவர் சகோதரகாரகன் என்பதால், உடன்பிறப்புகள் வகையில் உடன்படாத பிரச்சினை களைச் சந்திக்கவேண்டும். தொல்லைகளில் இரண்டு விதம் உண்டு. அன்புத் தொல்லை; வம்புத்தொல்லை. உங்களுக்கு 2-ஆவது வம்புத்தொல்லை என்பதுதான் எல்லா வகையிலும் ஏற்படும். அதற்குக் காரணம் ராகு- கேது, சனி சம்பந்தம். ஆகவே வாழ்க்கை யிலும், தொழில்துறையிலும், வேலையிலும் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலை உண்டாகும். 4-ல் சனி, கேது இருப்பதால் தேக ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட இடமுண்டு. நரம்புத் தளர்ச்சி, மருத்துவர் களால் தீர்க்கமுடியாத மர்ம நோய், அஜீரணத் தொல்லை, ஃபுட் அலர்ஜி (உணவு ஒவ்வாமை) போன்றவற்றால் சங்கடங்கள் உருவாகலாம். பரிகாரம்: தன்வந்திரி பகவானை வழிபடலாம். தன்வந்திரி மந்திரத்தை தினமும் ஜெபிக்கலாம்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 9-ல் திரிகோணம்! மாதக்கடைசியில் 24-ஆம் தேதி கடகத்துக்கு மாறுவார். கடகச் சுக்கிரனை 2-ஆம் இடத்து குரு பார்ப்பார். தொழில்துறை அல்லது பணியில் (வேலையில்) சில மாற்றங் கள் உண்டாகும். 2017-க்கு முன் ஏழரைச் சனியில் கண்ட வெளிநாட்டுக் கனவுகள் அப்போது நிறைவேறாமல் இருந்திருக்கலாம். இப்போது அந்தக் கனவுகள் நிறைவேறும். ஆங்கிலத்தில் "டெபுடேஷன்' என்று சொல்வதுபோல, மாற்றுப்பணியிடத் திட்டங்கள் ஈடேறும். அதனால் நன்மைகளும் உண்டு; லாபங்களும் உண்டு; பிரச்சினைகளும் உண்டு. உதாரணமாக, ஒரு தாசில்தார் லீவில் போனதும் அந்த இடத்திற்கு வேறு ஒரு தாசில்தார் வந்தார். அந்த சீட் (இலாகா) பென்ஷன் கொடுக்கும் பணி. ஒவ்வொரு பென்ஷன்தாரரும் தாசில்தாருக்கு 100 ரூபாய் இனாம் கொடுப்பதுண்டு. 10 பேர் என்றால் 1,000 ரூபாய் ஆகுமல்லவா! அந்தத் தொகை தனக்கு வரவேண்டுமென்று ஒரிஜினல் தாசில்தார் உரிமை கொண்டாட, நடப்பு தாசில்தார் "என் பீரியர்டில் கொடுக்கப்படுவதால் எனக்கே சேரும்' என்று இருவரும் சண்டை போட்டுக்கொண்டு, தாசில்தார் ஆபீசே கேவலமாகிவிட்டது. இது பல வருடங்களுக்குமுன்பு நடந்த சம்பவம். இப்படி பல கௌரவப் பிரச்சினைகளையும் போராட்டங்களையும் சந்திக்கும் நிலை. பரிகாரம்: மானாமதுரை அருகில் வேதியரேந்தல் விலக்கு, தேவகோட்டை, கும்பகோணம் அய்யாவாடி போன்ற இடங்களில் பிரத்தியங்கராதேவிக்கு தனி ஆலயம் உண்டு. அங்கு அமாவாசையன்று மிளகாய் வற்றல் ஹோமம் செய்யலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் கடகத்தில் நீசம். அவரை ஜென்ம குரு பார்க்கிறார். நீசபங்கத்துக்கு உள்ள பல விதிகளில், திரிகோணாதிபதியோடு சேர்ந்தாலும், பார்க்கப்பட்டாலும் நீசபங்கம் அடையும் என்பதும் ஒரு விதி! ஏழரைச்சனி கடைசிக்கட்டம்! முக்கியமான கிரகங்கள் எல்லாம் 8-ல் மறைவு. வரவுக்குமேல் செலவு; பற்றாக்குறை பட்ஜெட். வெளிவிவகாரங்களை எல்லாம் பஞ்சாயத்து செய்து தீர்வு காணலாம். ஆனால் சொந்தக் குடும்பத்தில் ஆண் மக்கள்- பெண் மக்களிடையே ஒன்றுமில்லாத சமாசாரத்துக்கெல்லாம் கிணறுவெட்ட பூதம்புறப்பட்ட மாதிரி பிரச்சினைகள் வெடிக்கும். "ஈகோ' உண்டாகும். சிலருடைய அனுபவத்தில் "பழிவாங்கும்' நிகழ்ச்சி களும் இடம்பிடிக்கும். நண்பர்களிடையே அல்லது உறவினர்களிடையே நடந் தால்கூட பரவாயில்லை. சொந்தக் குடும்பத்தில் மனைவி, மக்களிடையேகூட "கோட்டைக்குள்ளேயே குத்துவெட்டு' என்றமாதிரி சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புண்டு. ஆக, எதை, எப்படி பக்குவமாகச் செய்யவேண்டுமோ அப்படிச் செய்யவேண்டும். அதாவது முள்ளில் விழுந்த ஆடையைக் கிழிக்காமல் எடுக்கப் பார்க்கவேண்டும். பரிகாரம்: காரைக்குடி, திருப்புவனம் முதலிய இடங்களில் சரபேஸ்வரர் சந்நிதி உண்டு. அங்குசென்று ஞாயிறு ராகுகால பூஜை செய்யவேண்டும்.

தனுசு

தனுசு ராசியில் ஜென்மச்சனியும், ஜென்ம கேதுவும் இருக்க, ஏழில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு இருப்பது ஒருவகையில் சுபப்பலன். இன்னொருவகையில் அசுபப் பலன். ராசிநாதன் குரு 12-ல் மறைவு. பொதுவாக பொருளாதாரத்திலும் வசதி வாய்ப்புகளிலும் "குறையொன்றுமில்லை; மறைமூர்த்தி கண்ணா' என்று பாடலாம். ஆனாலும் ஏதோ ஒரு உறுத்தல் மனதை வாட்டும். அது என்னவென்று தெரிந்தால் அதைக்கண்டுபிடித்து அதற்குப் பரிகாரம் தேடலாம்; நிவர்த்தி செய்யலாம். அது எதுவென்று தெளிவாகத் தெரியாது. கூட்டத்திலே கல்லை விட்டெறிந்தவனைக் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு குழப்பம்! சிலருக்கு சுபக்கடன் சுமையாகத் தோன்றும். அதாவது வீடு வாங்கியது, வாகனம் வாங்கியது, பிளாட் வாங்கியது, பிள்ளைகளின் உயர்கல்விக்காக செலவு செய்வது போன்ற சுபச்செலவுகள் அல்லது அதற்காக வாங்கிய கடன் கவலை. சிலருக்கு நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம் இருந்தும் உற்சாகமில்லாமல் எந்திரம்போல- பேட்டரி இருக்கும்வரை ஓடும் கடிகாரம்போல வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கும். மொழி புரியாத திரைப்படங்களைப் பார்ப்பதுபோல சுவாரசியமில்லாமல் பொழுது போகும். பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சனேயரையும், ஞாயிற்றுக்கிழமை விநாயகரையும் நெய்தீபமேற்றி வழிபடலாம்.

மகரம்

மகர ராசிநாதன் சனி மாதம் முழுவதும் 12-ல் மறைவு என்பதோடு வக்ரமாகவும் இருக்கிறார். 12-ல் சனியும் கேதுவும் மறைவு. 6-ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகு மறைவு. 11-ல் குரு இருப்பதும், அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் 7-ல் நீசபங்கம் என்பதும்தான் உங்களுக்கு அனுகூலமான- ஆதாரமான கிரக அமைப்பு! அதனால் அன்பானவன்- அசராதவன் என்ற மாதிரிதான்! 6-ஆம் இடம்தான்- 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு பாக்கிய ஸ்தானமாகும். ஜோதிடத்தில் எந்த ஒரு பாவகமும் முழுமை யாக நல்லதென்று ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு பாவகமும் கெட்டதென்று முழு மையாக ஒதுக்கித்தள்ள முடியாது. உதாரண மாக சிம்ம ராசிக்கு 5-க்குடைய குரு நல்லவர் என்றாலும், அவர் 8-க்கும் உடையவர். மிதுனம், கன்னிக்கு குரு 7, 10; 4, 7-க்குடையவர் என்றாலும், இரண்டு உபய ராசிகளுக்கும் சப்தமாதிபதி, பாதகாதிபதியாவார். இப்படி எல்லா கிரகத்துக்கும் நல்ல ஆதிபத்தியமும் கெட்ட ஆதிபத்தியமும் உண்டு. தசாபுக்திக் காலத்தில் இரண்டு பலன்களையும் செய்யும். அதில் எதை முதலில் செய்யும்; எதை அடுத்து செய்யும் என்பதுதான் ஜோதிடநுட்பம், அனுப வம்! பரிகாரம்: ஏழரைச்சனியோடு முக்கிய மான கிரகங்கள் மறைவதால், கும்பகோணம்- ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் (நவகிரகத்துக்கும் தனித்தனி சந்நிதி உண்டு.) சென்று வழிபடலாம். வீட்டில் கோளறு பதிகம் பாராயணம் செய்யலாம்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருப்பது சிறப்பு. அவருடன் கேது சேர்வதும் சிறப்பு. ராகு- கேது, சனி, செவ்வாய்க்கு 3, 6, 11-ஆம் இடம் சிறப்பான இடம். ஆனால் 6-ல் மறைவு பெற்ற சூரியன், புதன், சுக்கிரன், ராகு நால்வரின் பார்வையைப் பெறுவது சிறப்பல்ல. ஒரு கிரகத்துக்கு ஷட்பலம் என்று உண்டு. (ஆறுவிதமான பலம்). ஆட்சி, நீசம், உச்சம், சேர்க்கை, பார்வை, சாரம் என்று ஆறுவகையான பலம் உண்டு. இதுதவிர கேந்திரம், திரிகோணம், நட்பு, பகை ஆகியவற்றையும் சேர்த்தால் பத்துவகை பலம் உண்டு. இதை விரிவாக ஆய்வுசெய்வது தசவர்க்கம் எனப் படும். முதலில் எழுதியது ஸ்தூலமானது- பின்னர் குறிப்பிட்டுள்ளது சூட்சுமமானது. ஜோதிடம் என்பது ஒரு பெரிய கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பதென்பது சாமர்த்தியம்! அப்படி எடுக்கும் முத்தும் நல்முத்தாக இருக்கவேண்டும். சொத்தைமுத்தாக இருக்கக்கூடாது. அது அதிர்ஷ்டம். குரு 3-ஆம் இடம், 5-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்ப்பதால் சகோதர சகாயம், நண்பர்களின் ஆதரவு, உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை, உதவி, மக்கள் யோகம், மனமகிழ்ச்சி, திருமண யோகம், நல்ல கணவன், நல்ல மனைவி, நல்ல மணவாழ்க்கை ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். பரிகாரம்: ராகு- கேதுவால் நன்மையடைய காளஹஸ்தி, தேனி அருகில் உத்தமபாளையம், கோவை சோமனூர் அருகில் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில், திருநாகேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபடலாம்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் உத்தமமான நற்பலன் தரும் இடங்கள். குரு மேற்படி இடங்களில் இருந்தாலும், மேற்படி இடங்களைப் பார்த்தாலும் யோகமான பலன்கள் நடக்கும். இதில் 6, 8, 12-க்குடையவர்கள் சம்பந்தப்பட்டால் யோக பலனை அனுபவிப்பதில் சிறுசிறு தடைகளும் பிரச்சினைகளும் உருவாகலாம். ஏற்கெனவே எழுதியுள்ளபடி எந்த ஒரு நல்லதும், எந்த ஒரு கெட்டதும் தனித்து நடக்காது! நல்லதில் கெட்டதும், கெட்டதில் நல்லதும் கலந்திருக்கும். உதாரணமாக, பாகற்காய் சுகருக்கு (சர்க்கரை நோய் உடையவர்களுக்கு) சிறந்த உணவாக இருந்தாலும், அது பிளட் பிரஷருக்கு (இரத்தக் கொதிப்புக்கு) ஆகாது. தீக்குச்சி தீபமேற்றவும் பயன்படும்; குடிசை வீட்டைக் கொளுத்தவும் பயன்படும். அந்தக் காலத்தில் அன்னப்பட்சி என்று ஒன்று இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலில் தண்ணீரை விலக்கிவிட்டு தனிப்பாலை மட்டும் பருகும் என்றும் சொல்வார்கள். இப்போது அந்த இனமே இல்லை. யானையை மிஞ்சிய பலமுடைய யாழி என்று ஒரு மிருகம் இருந்ததாம். கோவில் சிற்பங்களில் காணப்படும். இப்போது அந்த வர்க்கமே இல்லை. பரிகாரம்: ராஜபாளையம் வழி தாருகாபுரம் மத்தியஸ்தநாதர் கோவிலில் நவகிரக தட்சிணாமூர்த்தியும், சென்னை பெரியபாளையம்- ஊத்துக்கோட்டை- சுருட்டப்பள்ளியில் பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் தாம்பத்திய தட்சிணாமூர்த்தியும் இருப்பதுபோல, சிறப்பான தட்சிணாமூர்த்தி கோவில் சென்று வழிபடலாம்.