/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/spsekar.jpg)
பண்பாடு, கலாச்சாரம் என பல நாட்டவரும் பாராட்டும் நாடு நம் நாடு. இதற்கு முக்கியமான காரணம் ஆன்மிகமே. ஞானிகள் நடமாடிய புண்ணியபூமி இது. "தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி' எனும் திருவாக்கிற்கிணங்கத் திகழ்கிறது தமிழ்நாடு. "சோழநாடு சோறுடைத்து' என்பதுபோல, சைவத்தையும் தெய்வத்தமிழையும் வளர்த்தான் ராஜராஜசோழன். திருமுறைகளைத் தொகுத்து சைவத்தைப் பரப்பினான். பண்பாடு, பக்தி, வீரம், மாண்பு ஆகியவற்றை உலகறியச் செய்தவன், எம்பெருமான் ஈசனுக்கு வானளாவிய ஆலயங்கள் அமைத்தான். அத்தகைய ஆலயங்களுள் ஒன்றுதான் விளந்தை- ஆண்டிமடம் என்னும் ஊரின் மையத்திலுள்ள அகத்தீஸ்வரர்- அறம்வளர்த்த நாயகி ஆலயம். சோழநாட்டைச் சேர்ந்த இந்தப் பகுதி மிகப்பெரிய காடாக இருந்துள்ளது. காடுகளைக் குறிக்கும் சொல் குறிச்சி. இந்தப் பெயரில் இப்பகுதியில்- ஆத்துக்குறிச்சி, மருங்காலம் குறிச்சி, கரும்புலிக்குறிச்சி, விழுப்புணங்குறிச்சி, ஆதனங்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, பட்டணம்குறிச்சி, பெரியாக்குறிச்சி, குறிச்சிக்குளம் என பல கிராமங்கள் உள்ளன. காடுகளில் உருவான ஊர்கள் என்பதை இவை பறைசாற்றுகின்றன. இந்த காட்டுப்பகுதியில் வில்வமரங்களே அதிக அளவில் இருந்துள்ளன.
எம்பெருமான் ஈசனுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலையில் திருமணம் நடந்தபோது வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர, அதை சமன்செய்ய அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார். அப்போது பல பகுதிகளிலும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவ்வாறு இங்கும் வந்து, பஞ்சபூதங்களை உணர்த்தும் வண்ணம் ஐந்து சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபட்டார். அவரது பூஜைக்கு மகிழ்ந்த ஈசன் இத்தலத்தில் அகத்தியருக்குக் காட்சி தந்தாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/spsekar1.jpg)
அந்த இடம்தான் இப்போதைய விளந்தை அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம். இவ்வாலய தலவிருட்சமாக இரண்டு வில்வமரங்களும் உள்ளன. ஆலயம் எதிரே அகத்திய தீர்த்தக்குளம் உள்ளது. அகத்தியர் வழிபட்ட ஐந்து லிங்கங்களும் ஐந்து இடங்களில் உள்ளன.
விளந்தையில் உள்ளவர் மேலஅகத்தீஸ்வரர். இவ்வாலயத்தின் கிழக்கே கிழக்கு அகத்தீஸ்வரர் ஆலயமும், தெற்கே கூவத்தூர் என்னும் இடத்தில் ஒரு சிவலிங்கமும், வடக்கே கொளப்பாடி என்னும் இடத்தில் ஒரு லிங்கமும், மேற்கில் சிவலிங்கபுரம் என்ற ஊரில் ஒரு லிங்கமும் என நான்கு திசைகளிலும் லிங்கத்திருமேனியோடு காட்சி தருகிறார் எம்பெருமான்.
அகத்திய மாமுனிவர் இந்த வனப்பகுதியில் தவம்செய்தபோது காட்டு விலங்குகளால் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதைத் தடுக்கும் பொருட்டு சீடர்கள்மூலம் பெரிய குழி ஒன்றை வெட்டி, அதனுள் அமர்ந்து தவம் செய்துள்ளார். இப்போதும் அப்பகுதி "தவசுகுழி' என்று அழைக்கப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/spsekar2.jpg)
பிற்காலத்தில் சோழ மன்னர்களால் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மன்னர்கள் படையெடுப்பால் பல கோவில்கள் இடிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் இக்கோவிலைப் பாதுகாக்க உடல்வலிமை வாய்ந்த வீரர்களை காவலுக்கு நியமித்தார் மன்னர். அந்த வீரர்களைப் பார்த்த மக்கள், "அசுரர்கள்போல் உள்ளனர்' என்று பேசி வியந்தனர். அந்த அசுரவீரர்கள் தங்கிய பகுதி இப்போது சூரப்பள்ளம், சூரக்குழி என அழைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் சோழ மன்னர் ஒருவர் கோட்டை கட்டி வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளன.
இக்கோவிலுக்கு மேற்கே கோட்டக்கரை என்னும் மேடான பகுதி உள்ளது. அதனையொட்டிய பகுதி மேற்கு நெடுவாயில்- கீழநெடுவாயில் என்று அழைக்கப்படுகிறது. இது கோட்டைக்குப் போய்வந்த வழியைக் குறிப்பிடுகிறது. அதேபோல் மன்னரின் படைகள் முகாமிட்டிருந்த பகுதி படைநிலை என்று ஊர்ப்பெயராக விளங்குகிறது. இப்படி சோழ மன்னர்கள் இங்கே தங்கி இவ்வாலய இறைவனை வழிபட்டுள்ளனர் என்பதற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன.
இத்தல ஈசனின் புகழை உலகறியச் செய்த சம்பவம் ஒன்று 2-9-2001 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இவ்வாலயத்திற்குப் பின்புறத்தில் இரவு ஏழு மணியளவில், வெடிகள் நிரப்பப்பட்ட லாரி நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்து வெடிகளை இறக்கும்போது திடீரென்று வெடித்துச் சிதறின. அதன் தீப்பிழம்பு வானுயர எரிந்தது. ஊர் மக்களே பயத்தில் அலறினர். மணிக்கணக்கில் எரிந்து அணைந்தது தீ. என்னே அதிசயம்! கோவிலுக் கும், அதன் அருகே இருந்த கூரை வீடுகளுக்கும், அங்கே இருந்தவர் களுக்கும் ஒரு சிறு காயமோ சேதமோ ஏற்படவில்லை. அன்றைய நாள் ஈசனின் அடியார்களான அப்பர் உட்பட ஐந்து நாயன்மார்கள் முக்தியடைந்த சதய நட்சத்திர நாள். அதை உணர்த்தவே அந்த வெடிமூலம் தீபஒளியை ஜோதியாகக் காட்டியுள்ளார் எம்பெருமான் என்று அனைவரும் வியந்தனர். இந்த சம்பவத்தையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடிப்பேசி, சிதிலமடைந்து கொண்டிருந்த ஆலயத்தைப் புனரமைப்பு செய்ய முடிவு செய்து, அதன்படியே பணிகள் முடித்து 6-2-2003-ல் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். இதிலிருந்து இத்தல இறைவனின் புகழ் திக்கெட்டும் பரவியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/spsekar3.jpg)
""அப்போதுமுதல் கிரிவலம், நால்வர் குருபூஜை ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அதேபோல் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, பைரவர் பூஜை, துர்க்கை பூஜை, கந்தசஷ்டி, ஆனித்திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம், ஆதிபராசக்தி மன்றத்தினரின் விளக்குப் பூஜை, சனிப்பிரதோஷம், பிரதோஷம் உட்பட ஆண்டு முழுவதும் வழிபாடு கள் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன. சமீபத்தில் நடந்த சனிப்பிரதோஷத்தன்று 6000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது'' என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
இவ்வாலய இறைவனை வழிபட்டால் கல்வி சிறப்பு கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். வேலைவாய்ப்பு கிட்டும். குழந்தைப்பேறு கிட்டும். வியாபாரப் பிரமுகர்கள் சிறந்து விளங்குவார்கள்.
ஆலயத்தை ஒட்டியபகுதி ஆண்டிமடம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கும் காரணம் உள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இறையருள் பெற்ற வேட்டந்தி மகரிஷியின் வம்சத்தைச் சேர்ந்த சமயக் குரவர் ஒருவர் உமா மகேஸ்வரன் என்ற பெயரோடு இப்பகுதியில் வாழ்ந்துள் ளார்.
இறந்துபோன ஆட்டை உயிர் பிழைக்கச் செய்தவர். உயிருள்ள மனிதனை இறக்கவைத்து பிறகு உயிர் கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட மகாஞானியை மக்கள் ஆண்டவர் என்றே அழைத்துள்ளனர். அவரது மறைவுக்குப்பிறகு அவரது ஜீவசமாதி அருகே மடம் ஒன்று கட்டப்பட்டது. இவ்வழியே யாத்திரை செல்லும் சிவனடியார்கள் இந்த மடத்தில் தங்கிச் செல்வது வழக்கம். சிவனடியார்களை சிவனாண்டிகள் என்று அழைப்பது வழக்கம். அப்படிப்பட்ட ஆண்டிகள் தங்கிச் சென்றதால் சிவனாண்டிகள் மடம் என்று பெயர் உருவாகி, அதுவே காலப்போக்கில் மருவி ஆண்டிமடம் என நிலைத்துள்ளது என்கிறார்கள்-
செவிவழித் தகவலாக அப்பகுதி மக்கள்.
இப்படி இறைவனின் புராணத்தோடும், வரலாற்றோடும் புகழ்பெற்று விளங்கும் விளந்தை, ஆண்டிமடம் பகுதியில் செல்வ விநாயகர், கற்பக விநாயகர், அங்காள பரமேஸ்வரி, பழனி ஆண்டவர், மாரியம்மன், திரௌபதையம்மன், பச்சையம்மன், சாமுண்டீஸ்வரி, சஞ்சீவிராயர் ஆகிய தெய்வங்களின் சந்நிதிகள் அகத்தீஸ்வரர் ஆலயத்தினைச் சுற்றி அமைந்துள்ளன. சிறப் பான பூஜைகளும் நடைபெறுகின்றன.
கோவில் நகரமான விளந்தை- ஆண்டி மடம், விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில், விருத்தாசலத்திலிருந்து 20 கிலோமீட்டர் தெற்கிலும், ஜெயங்கொண்டத்திலிருந்து 15 கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது.
இவ்வாலய கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டபடியால், கோவிலைப் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்துவருகிறார்கள்- ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ஆர். திருநாவுக்கரசு, எம். ராதாகிருஷ்ணன், கே. கண்ணையன், எஸ். கருணாநிதி, நியூஸ் ஏஜென்ட் செல்வராசு, என். ஜெயராமன், ஏ.வி. சம்பத், திருப்பதி, ஜெயச்சந்திரன், ராஜா, சி. செல்வகுமார், எஸ். முருகேசன், இ. தண்டபாணி, "ரீட்' செல்வம், ஆசிரியர்கள் தனசேகரன், பாரதி உள்ளிட்டோர். தொடர்புக்கு: அலைபேசி: 98427 60487, 98654 95626.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02/spsekar1.jpg)