உலகப் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்று ஜாக்கோ அனுமன் ஆலயம். இது காஷ்மீர் மாநிலத்தில், சிம்லாவிலிருந்து நான்கரை கிலோமீட்டர் தூரத்திலும், ரிட்ஜ் என்னும் இடத்திலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள சிஞ்சுலி என்னும் ஊரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,455 மீட்டர் உயரத்தில்- அதாவது 8,000 அடி உயரத்தில் சிவலிகா மலைத்தொடரில் கம்பீரமாகக் காணப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
இராமாயண காலத்தோடு தொடர்புடைய ஆலயமிது. இலங்கைப் போரின்போது இந்திரஜித்தின் அம்பால் தாக்கப்பட்டு லட்சுமணன் உயிருக்குப் போராடினான். அவனைக் காக்க சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பொருட்டு அனுமன் வான்வழியாகப் பறந்து சென்றான். அப்போது ஓரிடத்தில் யக்ஷரிஷி என்பவர் தவமிருப்பதைக் கண்டு இறங்கி அவரிடம் சென்றான். தான் ராமகாரியமாக வந்திருப்பதைச் சொல்லி சஞ்சீவி மூலிகை இருக்கும் இடம் பற்றி விசாரித்தான். அதுபற்றிய விவரம் கூறிய ரிஷி, நெடுந்தூரம் வந்த களைப்பு நீங்கவும், தன் அன்பின் பொருட்டும் சற்று இளைப்பாறிச் செல்லுமாறு கூறினார். தான் அவசர காரியமாக வந்திருப்பதால் உடனே செல்லவேண்டும் என்று கூறிய அனுமன், திரும்பி வரும்போது அவரைப் பார்த்துவிட்டுச் செல்வதாகக் கூறிவிட்டு வானில் தாவினான்.
அவ்வாறு செல்லும்போது காலநேமி என்னும் அரக்கன் குறுக்கிட்டு அனுமனின் பயணத்தை தாமதப்படுத்த முயன்றான். சாதுரியமாக அவனை சமாளித்துவிட்டு கடந்து சென்ற அனுமன் சஞ்சீவி மலையுடன் திரும்பினான். அப்போது காலநேமியால் தனது பயணம் தாமதமாக நேரும் எனக் கருதிய அனுமன், அவ்வழியை மாற்றி வேறுவழியாகச் சென்றுவிட்டான். அதனால் யக்ஷரிஷியை அவனால் சந்திக்க முடியவில்லை.
சொன்னபடி அனுமன் வராததால் யக்ஷரிஷி மிகவும் கவலையில் இருந்தார். அப்போது அவர்முன் தோன்றிய அனுமன், "கவலை வேண்டாம். இவ்விடத்தில் நான் உங்களுடன் எப்போதும் இருப்பேன்' என்று சொல்லி மறைந்தான். அப்போது அங்கே ஒரு அனுமன் விக்ரகம் தோன்றியது. அதை வைத்து யக்ஷரிஷி ஒரு ஆலயம் அமைத்தார். அதுதான் இந்த ஜாக்கோ அனுமன் ஆலயம் என்கிறார்கள். யக்ஷ என்ற ரிஷியின் பெயரால் விளங்கிய ஆலயம் காலப்போக்கில் யக்ஷ், யகக், யாகு, ஜாகு என பெயர் மாறிமாறி தற்போது ஜாக்கோ என்றாகிவிட்டது.
இந்த ஆலயத்தைத் தேடிவரும் பக்தர்கள் நினைக்கும் காரியங்கள் ஆஞ்சனேயரின் அருளால் நிச்சயமாக நிறைவேறுகின்றன என்பது நம்பிக்கை. நல்ல மனதுடன் அங்கு யார் வந்து வழிபட்டாலும், அனைத்து வேண்டுகோள்களும் பலிக்கின்றன என்று அங்கு சென்று வந்த பக்தர்கள் கூறுகிறார்கள்.
ஆஞ்சனேயர் அந்த மலைமீது இறங்கும்போது பெரும் பகுதி பூமிக்குள் இறங்கிவிட்டதால் அதன் உயரம் குறைந்து விட்டதாம்.
இந்த ஆலயத்திற்குப் பின்னால் ஆஞ்சனேயரின் பாதம் பளிங்கில் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
ஜாக்கோ ஆஞ்சனேயர் ஆலய வளாகத்தில் இப்போது 108 அடி உயரத்தில் ஒரு பெரிய ஆஞ்சனேயர் சிலை இருக்கிறது.
இந்த ஆஞ்சனேயர் சிலை 2010-ஆம் ஆண்டில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உண்டாக்கப்பட்டது. அந்த சிலை சிம்லாவின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் தெரியும்.
சென்னையிலிருந்து டெல்லி சென்று, அங்கிருந்து 346 கிலோ மீட்டர் தூரம் பேருந்திலும், ஐந்தரை மணிநேரம் ரயிலிலும் பயணித்து கல்கா என்ற இடத்தை அடைய வேண்டும். கல்காவிலிருந்து சிம்லாவிற்கு நான்கரை மணி நேரப் பயணம்மனதில் நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் ஆஞ்சனேயரின் அருளைப் பெற விரும்பும் பக்தர்கள் ஒருமுறை பக்திப்பெருக்குடன் இந்த "ஜாக்கோ அனுமன்' ஆலயத்திற்குப் போய் வரலாம்.