Advertisment

இன்பங்களை அள்ளித் தருவாள் இந்திரப் பிரசாதவல்லி! - பழங்காமூல் மோ.கணேஷ்

/idhalgal/om/indra-prasadavalli-will-give-you-pleasures-palanakaamaula-maokanaesa

வ்வுலகில் வாழ்பவர்களுக்கு தினமும் எண்ணற்ற கவலைகள் வந்து போகின்றன. அவற்றுள் சில நிலையாக இருந்து நம்மை வாட்டுகின்றன. நாம் அனுபவிக்கும் நன்மை- தீமைகள் யாவும் முற்பிறவியில் நாம்செய்த வினைகளின் காரணமாக அமைகின்றன. நமது வினைகளைப் போக்கி கவலையின்றி வாழ்ந்திட இறைவழிபாடே சிறந்த வழியாகிறது.

Advertisment

அவ்விதத்தில் நமது குறைகளைப் போக்கி, சகல சௌபாக்கியங்களையும் அருளும் தலமாகத் திகழ்கிறது மருதாடு திருத்தலம்.

Advertisment

ii

எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் வேண்டுமல்லவா? அவ்வாறு பாக்கியமற்ற நிலை ஒருசமயம் இந்திரனுக்கு உண்டானது. கேட்டதைத் தரும் காமதேனு, கற்பக விருட்சம், அரம்பையர்கள் என அனேக சுகங்களைப் பெற்ற இந்திரனுக்கு திடீரென ஒரு இனம் புரியாத அச்சம் தொற்றிக்கொண்டது. அனைத்து சுகங்களும் அவனைத் தீயாய்ச் சுட்டன. மனம் வாடினான். உடல் மெலிந்தது. இதனால் இந்திரனின் மனைவி இந்திராணி மிகவும் வருந்தினாள்.

காரணம்... தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட போரின்போது, அசுரர் படைத் தலைவனான விருத்திராசுரனை அழிக்க, சிவபெருமானைப் பணிந்து நின்றான் தேவேந்திரன்.

சிவபெருமானின் கட்டளைக்கிணங்க ததீசி முனிவர் தனது உயிரைத் தியாகம் செய்தார். அவரது வஜ்ஜிர தேகத்தின் முதுகெலும்பினை ஆயுதமாக்கிக்கொண்டான் இந்திரன். அதுவே இந்திரனது வஜ்ராயுதமாகும். அந்த ஆயுதத்தால் விருத்திராசுரனை அழித்து, அசுரர் படையினை வென்றான் தேவர் தலைவன். இருப்பினும், ததீசி முனிவரின் இறப்பு பிரம்மஹத்தி தோஷமாக மாறி இந்திரனை வாட்டியது.

மிகுந்த கலக்கமுற்ற இந்திரன் நாரதரின் உதவியை நாடினான். பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட பூவுலகில் சிவபூஜை செய்வதே சிறந்த வழியெனக் கூறினார் நாரத மகரிஷி.

dd

அதன்படி இந்திராணியுடன

அதன்படி இந்திராணியுடன் பூவுலகம் வந்த தேவேந்திரன், கங்கையில் நீராடி முதலில் விஸ்வேஸ்வரரை வணங்கினான். அப்படியே பல சிவ க்ஷேத்திரங்களை வழிபட்டவண்ணம் பாலாற்றங்கரையை வந்தடைந்தான். காஞ்சியில் புதனுடன் சேர்ந்து சிறப்புற சிவபூஜை செய்தான். அங்கிருந்து தெற்குநோக்கி வந்த தேவர்கோன் பெரிய மருதங்காட்டை அடைந்தான். அங்கு தானாக பூமியிலிருந்து தோன்றியப் பெருமானைக் கண்டான். தீர்த்தம் அமைத்து, அந்த லிங்கத்திற்கு நாள்தோறும் நியமத்துடன் பூசனை புரிந்தான். இந்திராணி, வாசனை மலர்களைப் பறித்து மாலையாக்கி, மருதவன ஈசனுக்கு சாற்றி மகிழ்ந்தாள். இவ்வாறு வழிபட்டுவரும் வேளையில் பெருமான் உமையொரு பாகனா கத் தோன்றி, வேண்டும் வரங்களைக் கேட்டார்.

இந்திரன் தனக்கேற்பட்டுள்ள பிரம்மஹத்தி தோஷத்தோடு, தேவையற்ற பயத்தைப் போக்கிடவும் வரம்வேண்டி நின்றான். அதன்படியே அருளினார் பெருமான். அத்துடன், இங்கு அன்னை இந்திரனுக்கு விபூதி பிரசாதமும், தீர்த்தப் பிரசாதமும் வழங்கி அருளினாள்.

இங்குவந்து வழிபடுவோருக்கு சகல சௌபாக்கியங்களையும் அருளவேண்டுமெனவும் வேண்டினான் சுரபதி. "அப்படியே ஆகுக' என வரமருளி னாள் அன்னை பராசக்தி. அதுமுதல் இத்தல ஈசன் புரந்தரீசர் என்றும், இந்திரனுக்கு பிரசாதமளித்ததால் அம்பிகை இங்கு இந்திரப் பிரசாதவல்லி என்றும் அழைக்கப்பெறுகின்றனர். இந்திரன் அமைத்த தீர்த்தம் இந்திர தீர்த்தம் என்றும், இப்பதி புரந்தரபுரி என்றும் போற்றப்பட்டது. மருதங்காடே (மருத வனம்) பின்னாளில் மருதாடு என்றானது.

ஒரு ஆடிமாத வெள்ளிக்கிழமையில் அகத்தியர் தலைமையில் சப்தரிஷிகளும் அண்ணாமலையை வலம்வந்து அண்ணாமலையாரையும் உண்ணா முலை அம்மையையும் வணங்கி நின்றனர்.

அப்போது இறைவனின் ஆணைப்படி புரந்தரபுரி (மருதாடு) வந்து அம்மையப் பரைத் தொழுததாக அகத்தியர் நாடி விவரிக்கிறது.

முதலாம் இராஜேந்திர சோழனின் மனைவியான அவனி முழுதுடைநாயகி என்பவள் தீராத தலைவலியால் வாடினாள். இத்தல ஈசனது மகிமையைக் கேட்டறிந்து, இங்குவந்து தங்கி ஈசனை வழிபட்டுவந்தாள். பின் அந்த தலைவலி படிப்படியாகக் குறைந்து முற்றிலும் நீங்கியது. அதனால் புரந்தரீசர்மீது பெரும் பக்திகொண்டு கற்கோவில் எழுப்பி, தனது பெயரை சூட்டி (அவனி முழுதுடை நாதர்) பல நிவந்தங்களைத் தந்து நெகிழ்ந்தாள்.

yy

ஊரின் கிழக்குப் பகுதியில் பேருந்து சாலையை ஒட்டினாற்போல் அழகிய மூன்றுநிலை மேற்குமுக ராஜகோபுரத்துடன் எழிலுறத் திகழ்கிறது ஆலயம். கோபுர வாயிலினுள்ளே முதலில் வலப்புறம்லி அதாவது தென்மேற்கு திசையில் தல கணபதியின் தனிச்சந்நிதி அமைந்துள்ளது. மேற்கில், சுவாமி சந்நிதியின் பின்புறமாக வள்ளி- தெய்வானை உடனான சுப்பிரமணியரின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

பின், கிழக்கு திசையை அடைந்து கொடிமர தரிசனம் மற்றும் நந்தியெம்பெருமானையும் வணங்குகிறோம். இங்கே தீபஸ்தம்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. நந்திதேவருக்கு வலப்புறமாக அம்பாளின் தனிச்சந்நிதி உள்ளது. கருவறையுள் கருணை பொழிகின்றாள் இந்திரப் பிரசாதவல்லி. அம்பாள் சந்நிதிக்கு எதிர்ப்புறம் சுரங்கப்பாதை ஒன்றும் காணப்படுகிறது.

ஈசான திக்கில் நவநாயகர்களும், உடன் சூரியன் மற்றும் காலபைரவரும் உள்ளனர்.

வடப்புறத்தில் மதில் சுவரின் உட்புறம் 63 நாயன்மார்களுக்கும் சிலா ரூபங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வடக்கு வாசல் ஒன்று இங்கே இருப்பது சிறப்பு. இந்த வாசல்வழியாகச் சென்றிட, ஆலயத் திருக்குளமான இந்திர தீர்த்தம் நாற்புறமும் படிகளுடன் அழகாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நந்திக்கு இடப்புறம் தல விருட்சமான வில்வ மரமும், அதன்கீழே நாகர் சிலைகளும் காணப்படுகின்றன. அதில் ஒரு விசேஷ நாகமாக நாகப்பிணையலும், அதன் நடுவே நாட்டியமாடும் ஸ்ரீ கிருஷ்ணரும் உள்ளனர். இது அரியதொரு நாக யந்திரமாகப் போற்றப் படுகிறது.

பின், தென்முக வாயிலை அடைகிறோம்.

இங்கே 16 கால் மண்டபமும், அதன் தென்மேற்கில் தர்மசாஸ்தா சந்நிதியும் உள்ளது.

தென்முக வாயிலுக்குள் நுழைந்து ஐயனை தரிசிக்க விழைகிறோம். முதலில் தென் திசை அரசரான தில்லையம்பலவாணரை, அன்னை சிவகாமி மற்றும் மாணிக்கவாசக ருடன் தரிசிக்கிறோம். அனேக உற்சவத் திருமேனிகளும் இங்குள்ளன. சிறிய அளவிலான மகாமண்டபம், அந்தராளம் மற்றும் கருவறை ஆகிய அமைப்புகளைக் கொண்டுள்ளது ஈசனது சந்நிதி.

கருவறையுள் சுமார் நான்கடி உயர லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார் புரந்தரீஸ்வரர். இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய பெருமான் இவரே எனும்போது மெய்சிலிர்க்கிறது. திசை மயக்கம் ஏற்படுத்தும் கோவில்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது.

அருள் நிறைந்த திருத்தலம். அற்புதங்கள் பல நிகழ்ந்த திருத்தலம். இவ்வாலயத்தின் பல கல்வெட்டுகள் 1912-ஆம் ஆண்டு படியெடுக்கப்பட்டுள்ளன.

முதலாம் இராஜேந்திரன் (கி.பி. 1032) மற்றும் முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1102) ஆட்சிக்காலத்தில் இவ்வூர் "மருதாடான விக்கிரம சோழ நல்லூர்' என குறிப்பிடப் பட்டுள்ளது. அத்துடன், முதலாம் இராஜேந்திரனின் சிறப்புப் பெயரில் "விக்கிரம சோழபுரம்' என்றும் அழைக் கப்பட்டுள்ளது. அப்போது இந்தக் கோவில், "பெருந் திருக்கோவில்' என்றே அழைக்கப்பட்டு வந்துள் ளது.

சிவபெருமான் "பெருந்திருக் கோயில் உடையார்' என்று போற்றப்பட்டுள்ளார்.

சோழர் காலத்தில் இவ்வூர், "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு மருதாடு' என வழங்கியுள்ளது.

சோழர்கள் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்தில் இவ்வாலயத்திற்குப் பல கொடைகளையும் நிவந்தங்களையும் அளித்துள்ளனர்.

சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், ஆனித் திருமஞ்சனம் மற்றும் ஆருத்ராவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், திருவீதியுலாவும் நடக்கின்றன.

விநாயகர் சதுர்த்தியில் கணபதிக்கு சிறப்பு அபிஷேக- அலங்கார- ஆராதனைகளோடு திருவீதியுலாவும் நடத்தப்படுகின்றது. கந்த சஷ்டியில் சூரசம்ஹாரமும், முருகனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

சுவாமி- அம்பாளுக்கு பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மாதாமாதம் பௌர்ணமியில் அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. இவைதவிர மற்ற விசேஷங்களும் இங்கு சிறப்புற அனுசரிக் கப்படுகின்றன.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் குங்குமப் பிரசாதமும், தை மாத வெள்ளிக்கிழமைகளில் தீர்த்தப் பிரசாதமும் தருவதாக ஐதீகம். அம்பாளை அடிப் பிரதட்சிணம் செய்பவரின் நல்ல எண்ணங்கள் நிறைவேறும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இத்தலத்தி லுள்ள சூரியன் மற்றும் புரந்தரீசருக்கு கோதுமைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட நோய் நிவர்த்தியாகும்.

ராகு- கேது மற்றும் நாக தோஷத்தினால் துன்பப்படு பவர்கள், நாகப்பிணையலுக் குப் பாலாபிஷேகம் செய்து சிறந்த பலன்களைப் பெற்றிடலாம்.

குழப்பமும் அச்சமும் நீக்கி, சுகமான வாழ்வைத் தருகின்றனர் இந்திரப் பிரசாதவல்லி உடனுறை புரந்தரீஸ் வரர் என்பதில் ஐயமில்லை.

இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயத்தில் தினமும் ஒருகால பூஜைமட்டும் நடக்கிறது. தினசரி காலை 7.00 மணிமுதல் 10.00 மணிவரையும்; மாலை 5.00 மணிமுதல் 8.00 மணிவரையும் ஆலயம் திறந் திருக்கும்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில், வந்தவாசி நகரிலிருந்து மேல் மருவத்தூர் செல்லும் சாலையில் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மருதாடு.

om011221
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe