இரண்டாம் பாகம்
5
நாரதர் பெண்ணாக மாறியது ஒரு விந்தை மட்டுமல்ல; அது ஸ்ரீமன் நாராயணனால் கற்பிக்கப்பட்ட ஒரு பாடமும்கூட! பிறப்பும் இறப்பும் உயிர்களின் போக்கு... வாழும் காலத்தில் நாம் செய்யும் செயல்பாடுகளுக்கேற்பவே நம் அடுத்த பிறப்பு அமைகிறது. சொல்லப்போனால் நம்மை உயிர்த்துளியாகத் தோற்றுவிப்பதோடு பரம்பொருளின் பணி முடிந்துவிடுகிறது. அந்த உயிர்த்துளிதான் தன்போக்கில் புல், பூண்டு, மரம், செடி, கொடி, விலங்கு, பூச்சி, பறவை, மிருகம், மனிதன் என்று அசைகின்ற பல வடிவங்களை மறுபிறப்பாகக் கொள்கிறது.
நாம் இப்போது மனிதனாய் இருந்தால், இப்பிறப்பைத் தீர்மானித்தது நம் முன்பிறப்பே!
பிறவிகள் ஒரு தொடர்கதை! ஞான முதிர்ச்சி ஏற்படாவிட்டால், இறை சிந்தனைக்கு ஆட்பட்டு தர்ம நியாயப்படி நடக்காவிட்டால் நாம் பிறவிகளைத் தொடர்ந்து கொண்டேதான் இருப்போம்.
பிறப்புக்குப் பின்னால் உள்ள ஒரு அடிப்படையான உண்மை இது. எனவேதான் பிறப்பை ஒரு பெருங்கடலோடு ஒப்பிட்டனர். இதில் மேலான பிறப்பு மானிடப் பிறப்பே! ஆயினும் மானிடப் பிறப்பெடுத்தும் அதன் மேன்மையை உணராமல் உலகமாயையில் சிக்கிப் பலர் பிறப்பைத் தொடர்ந்தபடியே உள்ளனர்.
பிறப்பு குறித்த இப்படிப்பட்ட சிந்தனைகள் மனிதர்களுக்கு ஏற்பட்டு, அவர்கள் தங்களை அறிந்துகொண்டு பிறவித்தளையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே புராணங்களும் இதிகாசங்களும் அருளப்பட்டன.
அப்படிப்பட்ட புராணங்களில் இதன்பொருட்டே பல திருவிளையாடல் சம்பவங்களும் நிகழ்ந்தன. அதில் ஒன்றே நாரதர் பெண்ணாய் மாறிய வினோதம்!
நாரதர் ஒருமுறை வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனை தரிசனம் செய்யச் சென்ற சமயம், நாராயணனோடு உடனிருந்த மகாலட்சுமி வெட்கத்தோடு வெளியேறினாள். மகாலட்சமியின் செயல் நாரதரை கேள்விக்குள்ளாக்கியது.
""ப்ரபோ... தேவியார் நான் வரவும் இங்கிருக்க விரும்பாமல் ஏன் வெளியேறினார்?'' என்று கேட்டார்.
நாராயணனும் சிரித்துக்கொண்டே, ""ஒரு மூன்றாவது மனிதர் வந்துவிட்டால் கணவன்- மனைவியிடையே நெருக்கம் குறைவதோடு, மனைவியானவள் விலகிக் கொள்வது விவேகம் சார்ந்த செயலல்லவா?'' என்று கேட்டார்.
""ப்ரபோ, நான் மூன்றாவது மனிதனா... என்னை அப்படி எண்ணலாமா?''
""நான் உதாரணத்துக்குச் சொன்னேன். தாயும் பிள்ளையுமே ஆனாலும் வாயும் வயிறும் வெவ்வேறல்லவா?''
""நீங்கள் சொல்வது புரியவில்லையே...''
""மாயை உன்னையும் விடவில்லை என்று பொருள்.''
""மாயையா?''
""ஆம்... நீ இதுகுறித்து நிறையவே கேட்டுவிட்டாய். இருந்தும் இப்போதும் கேட்கிறாய்...''
""அப்படியானால் மாயைதான் நான் வேற்றுமையை உணர, தேவியார் விலகிச் செல்லக் காரணமா?''
""ஆம்; மாயையை வெல்வதும் இயலாத ஒன்று.''
""ஏன் அப்படி?''
""மாயையாலேயே உலகம் நவரசங்களாடும் சுழல்கிறது. மாயை நீங்கிவிட்டால் வாழ்க்கை என்பதே எதற்கென்று புரியாத ஒன்றாகி விடும்...''
""நானொரு மகரிஷி... தங்கள் நாமத்தைச் சொல்லி வாழ்பவன். என்னையுமா மாயை விடாது?''
""யோனி வழி பிறந்து, மூக்கின் வழி சுவாசிக்கும் எவரையும் மாயை விடாது. விட்டதுமில்லை; விடப்போவதுமில்லை.''
""அப்படியா? ப்ரபோ... தாங்கள் எனக்கு மாயையை உணர்த்துவீர்களா?''
""நாரதா... அதற்கு நீ பல பாடுகள் படவேண்டும். தயாரா?''
""தயாராயிருக்கிறேன். என்னை வைத்து உலகமும் மாயையின் சக்தியை உணரட் டுமே...''
நாரதர் அவ்வாறு சொல்லவுமே விஷ்ணு நாரதரை அழைத்துக்கொண்டு கன்யா குப்ஜபுரி எனும் ஒரு பூலோகப் பட்டினத்திற்கு வந்தார். இப்பட்டினத்தில் ஒரு தடாகம் இருந்தது. ஸ்ரீவிஷ்ணு நாரதரை அதில் இறங்கிக் குளிக்கப்பணித்தார். நாரதரும் தன் மகரயாழ் முதல் சகலத்தையும் கரையில் வைத்துவிட்டு தடாகத்தில் இறங்கி மூழ்கிய நொடியே அவரது உருவம் ஒரு அழகிய பருவப்பெண்ணின் உருவமாக மாறி விட்டது. தடாகக்கரை ஏறவும் தான் நாரதன் என்கிற எண்ணமோ, ஸ்ரீவிஷ்ணுவோடு அங்கு வந்ததோ எதுவுமே நினைவில் இல்லை. அதேசமயம் தான் யார், தன் தாய்- தந்தை, உற்றார்- உறவினர் யார் என்பதும்கூட தெரியவில்லை.
இவ்வேளை பார்த்து அந்த பட்டினத்து அரசனான தாலத்வஜன் அந்த தடாகக்கரைப் பக்கமாய் குதிரைமேல் ஆரோகணித்து வந்தான். அப்படி வந்தவன் நாரதரின் பெண் வடிவைப் பார்த்த மாத்திரத்தில் காதல் வயப்பட்டான். அப்பெண்ணை நெருங்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டு ""யார் நீ'' என்று கேட்டான். நாரதருக்கோ சொல்லத் தெரியவில்லை. அதேவேளையில் பெண் களுக்கே உண்டான வெட்கமும் நாணமும் ஏற்பட்டு, தலைகுனிந்து நின்றாள்.
""பெண்ணே யார் நீ... உன் பெயர் என்ன?''
""அரசே, அதுதான் எனக்கும் தெரிய வில்லை.''
""அது எப்படி தாய்- தந்தையர் யார் என்று தெரியாமல் நீ வளர்ந்து பருவத்தையும் எட்டியிருக்க முடியும்?''
""உண்மைதான்... ஆனால் நான் கூறுவதே உண்மை. ஒருவேளை இந்தக் குளம் என் தாய்- தந்தையாக இருக்கலாம். இதிலிருந்தே நான் வெளிப்பட்டேன்.''
""அப்படியானால் நீ தேவ மாதாகத்தான் இருக்கவேண்டும்.''
""தெரியவில்லை.''
""பரவாயில்லை... உன் பெயராவது நினைவிருக்கிறதா?''
""இல்லை.''
""நல்லது... இந்த நொடி முதல் நீ தேவி! அதாவது உன் பெயர் தேவி. நீ பெயரில் மட்டுமல்ல; என் வரையிலும்கூட தேவியே. என்னை மணக்க உனக்கு சம்மதமா?''
""சம்மதிக்கிறேன் அரசே... எனக்கு ஆதரவு காட்டும் உங்களையடைய நான் புண்ணியமல்லவா செய்திருக்கவேண்டும்?'' என்று நாரதராக இருந்து தேவி எனும் பெண்ணாக மாறிய நிலையில் சம்மதித்தாள். திருமணமும் நடந்தது. காலங்கள் உருண்டதில் பன்னிரண்டு பிள்ளைகளையும் பெற்றாள். அவர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆகினர். அவர்களுக்கும் திருமணம் நடந்து பின் அவர்களும் பிள்ளை களைப் பெற்றனர்.
மொத்தத்தில் நாரதர் பெண்ணாக மாறி ஒரு பெரும் குடும்பஸ்தராகி பேரன், பேத்தி எடுத்து வாழ்வாங்கு வாழ்ந்துவிட்டார் என்றே கூறவேண்டும்.
இருப்பினும் இப்படி எந்த சிக்கலுமின்றி வாழ்க்கை இன்பமாகவே அமைந்துவிடுமா என்ன? அண்டை நாட்டு அரசன் ஒருவனுக்கும் தாலத்வஜனுக்கும் யுத்தம் ஏற்பட்டது. இந்த யுத்தத்தில் தாலத்வஜனுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று சகலரும் இறந்து போயினர்.
ஒருசில நாட்களிலேயே யுத்தத்தால் தலைகீழ் நிலை உருவாகிவிட்டது. தேவி கண்ணீர்விட்டுக் கதறத் தொடங்கினாள்.
""யாருக்கு நான் தீங்கு செய்தேன்? எல்லாரும் என்னைவிட்டுப் போய்விட்டார்களே...'' என்று புலம்பினாள். இவ்வேளையில் காத்திருந்தது போல மகாவிஷ்ணு ஒரு கிழவர் வேடத்தில் வந்து தேவியை சந்தித்தார்.
""அம்மா, ஏன் அழுகிறாய்?''
""என்னையொத்த எல்லாருமே இறந்து விட்டனர் பெரியவரே...''
""பிறந்தவர் ஒருநாள் இறந்துதானே தீரவேண்டும்?''
""அது எனக்கும் தெரியும். இறப்பதற்கும் ஒரு வயது இருக்கிறதல்லவா? என் பேரன் பேத்திகளுக்கு இன்னமும் மணம்கூட முடிய வில்லை. அவர்கள் முழு வாழ்வு வாழாமலே இறந்துவிட்டனர்.''
""அது அவர்கள் வாங்கிவந்த வரம். உன்னால் என்ன செய்யமுடியும்?''
""ஏதும் செய்ய இயலாததால்தான் வருந்துகிறேன்.''
""வருந்துவதாலும் ஒரு பயனுமில்லையே...?''
""ஆனால் வருந்தாமல் இருக்கமுடிய வில்லையே...?''
""சரி; அதற்காக எவ்வளவு தூரம் வருந்து வாய்? நீ சில நாட்கள் வருந்தினாலே பெரிய விஷயம்...''
""அதுவும் உண்மைதான்... இந்த வாழ்வே எனக்குப் புரிய மறுக்கிறது. இன்பமோ துன்பமோ- அது நிரந்தரமாய் ஒருவரிடம் இருப்பதில்லை.''
""அப்படி இருந்தால்தான் வாழ்வும் சுவையாக இருக்கும். உண்மையில் உன் பிள்ளைகள் உன் பிள்ளைகளேயல்ல. அவர்கள் உன் வழியாக இவ்வுலகுக்கு வந்தவர்கள். நீயும் அப்படித்தான்.''
""இப்படி தாங்கள் உபதேசிப்பதால் எனக்கு எதுவும் பெரிதாகப் புரிந்துவிடப் போவதில்லை... நீங்கள் யார்?''
தேவி கேட்ட மாத்திரத்தில் விஷ்ணு பிரசன்னமானார். தேவியும் நாரதராக மாறினார்.
மாறிய நொடியே அவரது மகர யாழும் சப்ளாக் கட்டைகளும் அவர்வசம் வந்து சேர்ந்து விட்டன.
நாரதருக்கும் அப்போதுதான் அதுவரை நடந்த எல்லாமே இறைவன் திருவிளையாடல் என்கிற உண்மை புரிந்தது. மகாவிஷ்ணுவும் புன்னகை புரிந்தவராக ""என்ன நாரதா, எப்படி இருந்தது உனது பெண் பிறப்பும் வாழ்வும்?'' என்று கேட்க, நாரதருக்கு எல்லாம் கனவுபோல் இருந்தது.
""ப்ரபு... நான் தூங்கி எழுந்தவன்போல் உணர்கிறேன்.''
""உண்மையில் நீ பெண்ணாக மாறி ஒரு அரசனை மணந்து 12 பிள்ளைகளைப் பெற்றுவிட்டாய். அவர்களும் விருத்தியாகி பேரன், பேத்தி என்று சகலத்தையும் அடைந்தாய்.
ஆனாலும் அவர்கள் இப்போது அவரவர் கர்மப்படி வாழ்வு முடிந்து அடுத்தடுத்த பிறப் பையும் எடுத்துவிட்டனர். நீ கலங்கி நின்ற நிலையில்தான் நான் உன்னைத் திரும்ப வந்து ஆட்கொண்டேன். இப்போது இத்தனை நெடிய வாழ்வையே கனவு என்கிறாய்... இதைத்தான் மாயை என்பர். இப்போது புரிந்ததா?'' என்ற கேட்க, நாரதரும் ""நன்றா கப் புரிந்தது'' என்றார். அப்போது விஷ்ணு முடிவாகச் சொன்ன கருத்துதான் உச்சம்.
""மாயையின் குணங்களையும் செயல் களையும் திரிமூர்த்திகளாகிய நாங்களேகூட முற்றாய் அறிந்திருக்கவில்லை. இன்னும் அறியவேண்டியது உள்ளது'' என்ற கருத்து நாரதரையே ஆச்சரியப்பட வைத்தது.
""ப்ரபோ... இந்த பிரபஞ்சத்தையே சிருஷ்டி செய்து அதில் மாயையையும் படைத்தது தாங்களல்லவா? தங்கள் படைப்பைத் தங்களால் புரியமுடியவில்லயா?'' என்று திருப்பிக்கேட்டார்.
""எனக்கே அது அடங்காத அளவு வல்லமை உடையது என்பதற்காகவே அப்படிச் சொன்னேன். மாயையை அதன்போக்கில் போயே வெல்ல இயலும்'' எனும் விஷ்ணுவின் பதில் நாரதருக்கு திருப்தி தரவில்லை.
""ப்ரபோ... நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என் தந்தையாகிய பிரம்மதேவர்கூட மாயையை வெல்ல முடியாதவர் என்றாகிறதே...''
""உன் தந்தையிடமே சென்று இந்த மாயவிலாசம் பற்றிக் கேள் நாரதா... உனக்கு பிரம்மன்மூலம் மாறுபட்ட விடைகள் கிடைக்கும்'' என்ற ஸ்ரீமகாவிஷ்ணுவை வணங்கிவிட்டுப் புறப்பட்ட நாரதர், அடுத்து வந்து நின்றது சத்யலோகத்தில் இருக்கும் பிரம்மன் முன்தான்! பிரம்மனைச் சந்தித்த மாத்திரத்தில் தான் பெண்ணாகப் பிறந்து பெருவாழ்வு வாழ்ந்து, திரும்ப நாரதனாக மாறித் திரும்பியிருப்பதைக் கூறினார்.
பிரம்மனும் சரஸ்வதியும் புன்னகையோடு, ""மாயை உனக்கு இப்போது தெளிந்து விட்டதா?'' என்று கேட்டனர்.
""அதன் சக்தி மற்றும் குணம் தெரிந்தது. அதை வெல்லவே முடியாது என்பதே நெருடலைத் தருகிறது. உங்களாலும் அதை வெல்ல முடியாது என்றார் ஸ்ரீஸ்ரீவிஷ்ணு. இதுகுறித்து உங்கள் பதிலென்ன?'' என்று கேட்டார் நாரதர்.
""எது நடந்தாலும் வியப்படையாதே! அறிவைக்கொண்டு அதை அணுகவும் செய்யாதே... இந்த இரண்டை நீ செய்தால் போதும். மாயையை நீ வென்றுவிடலாம். மாயை இந்த இரண்டின் வழியாகவே இவ்வுலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது'' எனும் பிரம்மனின் பதில் நாரதருக்கு சற்று திருப்தியை அளித்தது.
நாம் ஒன்றைப் பெரிதாகக் கருதும்போதே வியப்படைகிறோம். வியப்படையக்கூடாது என்றால் எதுவும் பெரிதில்லை என்று கருத வேண்டும். பெரிதேயில்லை என்னும்போது சிறிது மட்டும் எங்கிருந்து வரும்?
அடுத்து அறிவு! இதுதான் சகலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும். தான் அறிந்து வைத்திருப்பது குறைவென்றால் வருந்தும்; கூடுதல் என்றால் அகங்காரம் கொள்ளும். மொத்தத்தில் மனிதனை இது உணர்ச்சிகளில் தாலாட்டும். எனவே அறிவைக்கொண்டு அணுகாமல் இருப்பதே சிறந்தது!
(தொடரும்)