16

இரண்டாம் பாகம்

விசுவாமித்திரர் அரிச்சந்திரனை வாழ்த்திய தைத் தொடர்ந்து, அவ் வேளையில் அங்கு பிரசன்னமான இந்திரனும் அரிச்சந்திரனை வாழ்த்தி னான்.

""அரிச்சந்திரா... உனது வாய்மையால் நீ மறுபிறப் பென்பதே இல்லாத சொர்க்க வாழ்வுக்குரியவனாகி விட்டாய். இப்போது நீ விரும்பினால் நான் எனது இந்திர பதவியைக்கூட உனக் களிக்க சித்தமாக உள்ளேன். ஈரேழு புவனங்களும், அதில் மனிதர்களும் உள்ளவரை உன் புகழும் வாய்மையும் போற்றப்பட்டபடியே இருக் கும்'' என்றான்.

Advertisment

அதன்பின் அரிச்சந்திரன் அயோத்திக்குத் திரும்பி தன் மகன் லோகிதாசனுக்கு முடிசூட்டிவிட்டு மனைவி சந்திரமதியோடு தேவலோகத் துக்குப் புறப்பட்டான். இந்த மண்ணில் பிறந்த ஒருவன் எந்த நிலையிலும் வாய்மையோடு வாழ்ந்தால் சொர்க்கம் அவனைத் தேடிவரும்- அவன் சொர்க்கத்தைத் தேடத் தேவையில்லை என்பதற்கு அரிச்சந்திரனின் வரலாறு ஒரு சான்று!

வியாச மகரிஷி அரிச் சந்திரனின் வரலாற்றைக் கூறிமுடித்த நிலையில் ஜெனமேஜெயனிடம் ஒரு நெடிய பெருமூச்சு!

""என்ன ஜெனமே ஜெயா... இதுவரை நீ அறிந்த சம்பவங்களில் அரிச்சந்திரனின் வரலாறு உன்னை உலுக்கிவிட்டதா?''

Advertisment

""ஆம் மாமுனி... உலுக்கமட்டுமின்றி உருக்கியும்விட்டது.''

""ஆம்... அளவிற்கதிகமான சோதனைகளால் புடம் போடப்பட்டவன் அரிச்சந்திரன்.''

""எனக்கொரு சந்தேகம்?''

""என்ன?''

""அரிச்சந்திரன் வரலாற்றில் தேவியின் மகாத்மியத்துக்கு எங்கும் இடமிருப்பது போல் தெரியவில்லையே?''

""ஏனில்லாமல்... தேவி உபாசனைதான் அவனுக்கு மனவுறுதியையே தந்தது எனலாம்.''

""தாங்கள் அதைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லையே?''

""அரிச்சந்திரன் பிரத்யேகமாக வழிபாடு செய்யவில்லை. ஆனால் சதாசர்வ காலமும் அன்னை பராசக்தியை அவன் சதாக்ஷீ யாக ஜெபித்தான். அவன் தனித்திருந்த போதெல்லாம் "தாயே சதாஷீ' என்று அவன் அவளை நினைக்கத் தவறவேயில்லை.''

""சதாக்ஷீ யா... இந்த பெயரை நான் இதுவரை கேள்விப்படவில்லையே?''

""தேவியின் பாகவதத்தை முழுவதுமாய் அறிந்தவர்களுக்கே இதுபற்றித் தெரியும்.''

""அரிச்சந்திரன் சூரிய குலத்தில் வந்தவன். அப்படியிருக்க அம்பிகையை எப்படி தியானித்தான்?''

""இஷ்டதெய்வம் என்று ஒருவருக்கு யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த தெய்வத்தை நினைத்தாலும் நதிகள் கடலை அடைவதுபோல் இறுதியில் அது அந்த பராசக்தியிடமே சென்று சேர்ந்துவிடும் ஜெனமேஜெயா.''

""சதாக்ஷீ யை அரிச்சந்திரன் தியானிக்க பிரத்யேகமாய் ஏதும் காரணங்கள் உண்டா?''

ஜெனமேஜெயன் கூர்மையாக- அதே சமயம் மிக ஆர்வமாகக் கேட்டான். வியாச ரும் சதாக்ஷீ யின் வரலாறைக் கூறத் தொடங்கினார்.

அசுர குலத்தில் வந்தவன் இரணியாட்சன். ஸ்ரீமன் நாராயணனால் வதம் செய்யப்பட்டவன்! இவனை வதைக்கவே அந்த மகாவிஷ்ணு நரசிம்மமாக அவதார மெடுத்து வந்தார்.

இரண்யாட்சன் வதம் செய்யப்பட்டாலும் அவன் பிள்ளைகளால் வம்சம் தொடர்ந்தது. இதில் குரு என்பவன் ஒருவன். இவனுக்கு கொடியதான ஒரு காலநேரத்தில்- அதாவது ராசிக்கட்டத்தில் ஒரு வீட்டில் எட்டு கிரகங் கள் இருந்த ஒருசமயத்தில் ஒரு பிள்ளை பிறந்தான். அவனுக்கு துர்முகன் என்று பெயரிட்டு வளர்த்தான் குரு.

துர்முகன் பிள்ளைப் பிராயத்திலேயே பெரும்பிழைகள் செய்பவனாக இருந்தான். விலங்குகளைக் கொன்று அவை துடிப்பதை ரசிப்பது, கன்னிப்பெண்களைக் கற்பழிப்பது, ஆசிரியர்களை எட்டி உதைப்பது என்று அவனிடம் தீய விஷயங்கள் கொடிகட்டிப் பறந்தன.

அவனது தீயசெயல்களைக் கண்டு ஒரு முனிவர் அவனை சபித்தார். அவன் அடுத்து யாருக்கு எந்தவொரு கெடுதல் செய்தாலும் அது அவனுக்கும் நேரும். உதாரணமாக ஒரு மிருகத்தை அவன் கத்தியால் குத்தினால் அந்த கத்தி அவனையும் குத்தும்! இதனால் கைகள் கட்டப்பட்டதுபோலான துர்முகன் தனக்கு சாபமிட்ட முனிவரிடமே சென்று தன்னை மன்னித்து சாபவிமோசனத்துக்கு வழி கேட்டான்.

அவரும் உபவாசமிருந்து கங்கையில் மூழ்கினால் சாபம் நீங்கும் என்றார்.

அதேபோல் உபவாச மிருந்து சாப நிவர்த்தி யடைந்த துர்முகன் அதன்பிறகு மிகமிக மோசமானவனாக ஆனான்.

எப்படித் தெரியுமா?

தன்னை சபித்த முனிவர் மட்டுமல்ல; அவரைப் போன்ற ஒரு முனிவர்கூட இந்த மண்ணில் இனி நிம்மதியாக இருக்கக்கூடாது. முனிவர்கள் சக்தியோடு திகழக் காரணமே வேதமும், அதன்வழி நடப்பதும்தான்.

வேதப்புத்தகத்தையே அழித்துவிட்டால் இவர்கள் அதன்பின் எந்த வழி நடப்பார்கள்? அடுத்து இந்த உலகையே அசுர உலகமாக மாற்றி அசுரர்கள் அல்லாத அவ்வளவுபேரையும் தங்கள் அடிமைகளாக்கி விடவேண்டும் என்றும் முடிவு செய்தான்.

அதற்கு தற்போது தன் வசமிருக்கும் சக்தி போதாது.

எனவே அபரிமிதமான சக்திபெற என்ன வழி என்று அவன் அசுரகுருவான சுக்கிராச் சாரியாரிடம் யோசனை கேட்கவும், அவரும் "கடும் தவம் செய்து உன் பாட்டன்களில் ஒருவனான இரண்யாட்சன்போல் வரம் பெறுவது ஒன்றே வழி' என்றார்.

துர்முகன் அடுத்த நாளே தவத்தில் அமர்ந்துவிட்டான். மிகக் கடினமான தவம்! ஒரு கால் மடக்கி ஒரு காலில் நின்று தலைக்குமேல் இரு கைகளை கூப்பிக்கொண்டு "பிரம்ம தேவாய நமஹ' என்று அவன் புரிந்த கடுந்தவம் கண்டு தேவருலகமே அஞ்சத் தொடங்கியது. குறிப்பாக இந்திரன் மிகவே பயந்தான். இந்திரனுக்கு அசுரர்கள் விஷயத்தில் நல்ல அனுபவங்களே கிடையாது. அவர்களிடம் முன்பே பலபாடுகள் பட்டவன்.

விருத்திகாசுரன் எனும் அசுரன் இந்திரனை பூவுலகுக்கே துரத்தியவன். மகிஷனோ இந்திரன் பதவியைப் பிடுங்கி அவனைத் தனக்குக் கவரி வீசச் செய்தவன். நகுஷன் இந்திரன் மனைவியையே கவரப் பார்த்தவன். எனவே அந்த பழைய அனுபவங் களை எண்ணிய இந்திரன் கலங்கிப்போய் பிரம்மாவை சந்தித்தான்.

""என்ன இந்திரா?''

yy

""துர்முகன் கடுந்தவம் புரியத் தொடங்கிவிட்டான்.''

""அதற்கென்ன?''

""உங்களை எண்ணியே தவம்புரிகிறான். நீங்கள் எக்காரணம் கொண்டும் அவன்முன் பிரசன்னமாகி வரத்தைத் தந்துவிடக்கூடாது.''

""இப்படி ஒரு கருத்தை நீ சொல்லலாமா?''

""நான் தேவர்களின் தலைவன்- தேவர் உலகைக் காப்பாற்றவே இப்படி வேண்டுகிறேன்.''

""இந்திரா, தவம்புரிவோர் வேண்டுவதைத் தருவதே என் கடமை. என் கடமையில் என்னால் தவறமுடியாது.''

""கடமையை நல்லவர்களிடம் செய்யுங்கள். கொடிய அரக்கர்களிடம் எதற்குக் கடமையுணர்வு?''

""நல்லவர்- கெட்டவர் என்பது செயல்பாடுகளாலேயே தீர்மானமாகிறது. தவமென்பது ஒரு நற்செயல். நற்செயல் செய்பவன் நல்லவனே!''

""இது நடிப்பு... வரம்பெற்றபின் ஆட்டம் போட்டால் என்ன செய்வது?''

""அச்சப்படாதே... எந்த அசுரன்தான் பெற்ற வரசித்தியோடு பெருவாழ்வு வாழ்ந்துள்ளான்- இவன் வாழ்வதற்கு?''

""அப்படியானால் துர்முகனுக்கு வரம் தரத்தான் போகிறீர்களா?''

""அவன் என் நாமத்தை கோடிமுறை சொல்லிவிட்டால் நான் பிரசன்னமாகியே தீரவேண்டும். அதுவே ஒன்பது கோடி முறை அவன் ஜெபித்தால் அவன் கேட்கும் வரத்தை அளித்தே ஆகவேண்டும்.''

""வேறுவழியே இல்லையா?''

""நீ எந்த நிலையிலும் நேர்வழியிலிருந்து விலகாதே. நடப்பது நிச்சயம் நலமாகவே முடியும்'' என்றார் பிரம்மா.

அதன்பிறகு அவ்வாறே துர்முகனுக்கு அவன் கோரிய, ""இறவா வரத்தைத் தர இயலாது; அதற்கு இணையாக எந்த வரம் வேண்டுமானாலும் தரத்தயார்'' என்றார்.

""அப்படியானால் வேதங்களை நான் என் வசப்படுத்தி தேவர்கள், முனிவர்களை அடிமைகளாக்கிக்கொள்ள விரும்புகிறேன்'' என்ற வரத்தைக் கேட்டான்.

""அவ்வாறே ஆகட்டும்'' என்றுகூறி மறைந் தார் பிரம்மா!

அதன்பின் இந்திரன் உள்ளிட்ட சகலரும் துர்முகனின் அடிமைகளானார்கள். வேதங்களும் துர்முகன் வசமாயிற்று. அதை யொரு அறையில்போட்டுப் பூட்டிய துர்முகன் முனிவர்களையெல்லாம் தனக்கு சேவகம் செய்யப் பணித்தான்.

இதனால் உலகில் பூஜைகள் நின்றுபோயின. வேதம் சொல்வதும் அறவே இல்லாது போயிற்று. பூஜை நிற்கவும் அசுர சக்திகளுக்கு ஊட்டம் கிடைத்து அவை ஆட்டம்போடத் தொடங்கின. பூவுலகில் சுடுகாட்டுக்குள் அடைபட்டுக்கிடந்த ஆத்மாக்கள் பேயாய், பிசாசாய் ஊருக்குள்ளேயே வலம்வர ஆரம்பித்தன.

இதனால் முதலில் மழை பொய்த்தது. அனல் அதிகமாகி வியாதிகள் அதிக மாகின. இருள்சூழ்ந்து மனித சமூகமே நோய்ப்பட்ட சமூகமாகிற்று. துர்முகன் கடவுளாய் அறிவிக்கப்பட்டு, அவனை ஒப்புக்கொண்டவர்கள் அசுரப்பட்டினத்தில் நலமாய் வாழ்ந்தனர். தாத்தா இரண்யாட்சன் செய்யத் தவறியதையெல்லாம் பேரன் துர்முகன் சாதித்தான்.

மொத்தத்தில் உலகம் சர்வநாசமடைந்து பக்தி என்பதே இல்லாதுபோய் பிரளயம் ஏற்படும் ஆபத்து உருவானது. இவ்வேளையில் வேதபிராமணர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். இப்படி ஈனப் பிறவியாய் உயிர் வாழ்வதற்கு இமயம் சென்று அங்கு தீ வளர்த்து, அதில் குதித்து உயிரை விட்டுவிடுவதை மேலாகக் கருதினர்.

இதன்பொருட்டு ஆயிரத்துக்கும்மேலான முனிவர்களும், ரிஷிகளும் துர்முகன் அறியாதவண்ணம் இமயத்தில் குவிந்தனர். ஒரு பெரும் அகழியில் தீ வளர்த்து அதில் குதித்து உயிர்விடவும் தயாராயினர். முன்னதாக தேவியைத்தான் அவர்கள் வேண்டித் துதி செய்தனர். வேதம் கூறமுடியாத அளவு அது பலருக்கு மறந்துவிட்டிருந்தது. எனவே தேவியின் நாமத்தையே திரும்பத்திரும்பக் கூறினர்.

""தாயே பராசக்தி... அம்மா... கருணை செய்! இந்த உலகில் ஒரு அசுரனுக்கு அடிமையாகக்கிடந்து வாழ்வதற்கு, இந்த நெருப்பில் குதித்து உயிரை விட்டுவிடுவது மேலானது. இப்படி நினைக்கக்கூட எங்களைப்போல் சிலரால்தான் முடிகிறது. லட்சக்கணக்கான மக்கள் கடவுள் சிந்தனையே இல்லாமல்- அதாவது உன்னையேகூட அறியாதவர்களாய் உள்ளனர்.

எனவே எங்களுக்கு இனியாவது விடுதலை கிடைக்கட்டும்'' என்று ஒருசேர பிரார்த்தனை செய்து தீக்குழிக்குள் விழுந்தனர். ஆனால் அடுத்த நொடியே அங்கு ஒரு அதிசயம் நடந்தது. அந்த தீ அணைந்து நெருப்பு பூவானது. விழுந்த அவ்வளவுபேரும் பூக்களின்மேல் கிடந்தனர். வானில் அம்பிகை தோன்றினாள். அந்தத் தோற்றமும் புதிதாக இருந்தது.

நமக்கெல்லாம் இரண்டு கண்கள்தான்! ஆனால் அவளுக்கு உடலில் அநேகக் கண்கள் இருந்தன. அதோடு பத்து கரங்கள் கொண்டு காட்சி தந்தாள். அந்த கரங்களில் பாணம், வில், தாமரை, தளிர், வேர்; பசி, தாகம், மூப்பு, நரை, திரை, ஊனம் போன்றவற்றை போக்கக்கூடிய மருத்துவ குணமுள்ள மூலிகைக் கொடிகளும் செடிகளும் காய்களும் கனிகளும் இருந்தன. அவை அவ்வளவும் முனிவர்கள்மேல் மழையெனப் பொழியத் தொடங்கின.

அங்கே தொடங்கிய அந்த கருணை மழை அங்கிருந்து பூமி முழுவதுமே பரவத் தொடங்கியது. உலகையே சூழ்ந்திருந்த அஞ்ஞான இருள் விலகி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. தங்களையே அறியாதவர்களாய் இருந்த மக்கள் இந்த மழையில் நனையவும், அவர்களுக்கு இறை சிந்தனையும் பக்தி எண்ணமும் உண்டாயிற்று. துர்முகனுக்கு அஞ்சி மலைக்குகைகளில் பதுங்கியிருந்தவர்கள் எல்லாம் வெளியே வந்தனர்.

விண்ணில் அம்பிகையை அநேகக் கண்கள் மற்றும் கரங்களோடு கண்டு துதிசெய்தனர். அட்சம் என்றால் கண் என்று பொருள். பல கண்களைக் கொண்டு எல்லா பக்கங்களையும் பார்த்து அவள் அருள்புரிந்ததால் முனிவர்கள் அவளை "சதாட்சி' (சதாக்ஷீ ) என்று விளித்தனர். துதிசெய்யத் தொடங்கினர். இத்தனை நல்லது நடக்கும்போது துர்முகன் சும்மா இருப்பானா? அவனும் அம்பிகையைக் காண தன் அசுரக்கோட்டையிலிருந்து வெளியே வந்தான். வந்தவன் ஆவேசமா னான். அம்பிகையின் அருமைபெருமை தெரியாமல், அவளை ஒரு சாமானியமானவளாகக் கருதி அவளை அழிக்க வாளெடுத்தான்.