தாய்மையின் பெருமையைப்பற்றி திருவள்ளுவர்,

"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு'

என கூறியுள்ளார். அதாவது பிள்ளைபெற்ற மயக்கம், வலி இருந்தபோதிலும், கண்திறந்து தாய் தன் சேயைத் தீண்டியபடி அச்சேயின் குரலைக் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணை எதுவுமில்லை என்னும் பொருளில் கூறியுள்ளார்.

Advertisment

கருக்காலத்தில், கருவுற்ற பன்னிரண்டாவது வாரத்திற்குள் சேயின் மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஒரு குழந்தை முழுமையாக ஏறத்தாழ மூன்று கிலோ எடை இருக்கும். அதிலும் பனிக்குடம் சேர்த்தால் ஏறத்தாழ மூன்றரை கிலோ எடை வரலாம். மருத்துவக் கணக்குப்படி இந்தியக் குழந்தையின் எடை 2.7 கிலோகிராம். இந்த எடையை ஒரு தாய் தன் வயிற்றில் சுமார் பத்துமாத காலங்கள் (குறைந்தது 280 நாட்கள்) சுமக்கிறாள். இந்த தியாகத்தைப் போற்றவே உலக தாய் தினம்- சர்வதேச அன்னையர் தினம் (International mother's day)மே மாதம் 10-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

sankarar

தன்னைப் பெற்ற தாயின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் ஆதிசங்கரர் "மாத்ரு பஞ்சகம்' என்னும் சுலோகங்களைப் பாடியுள்ளார். வேதமும் "மாத்ரு தேவோ பவ' (தாயே தெய்வம்) எனப் போற்றுகிறது.

இந்து மதத்தில் ஞானமார்க்கத்தை நிலைநிறுத்த 8-ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலம் காலடி எனும் கிராமத்தில், சிவகுரு- ஆரியாம்பாள் தம்பதிக்கு மகளாக சங்கரர் பிறந்தார். அவர்களுக்கு நீண்டநாட்களாகப் பிள்ளை பாக்கியம் இல்லாததால் மிகுந்த மனவேதனை அடைந்திருந்தனர். சிவபெருமான் ஆசியால் குழந்தை பாக்கியம் கிடைத்தது.

ஒருநாள் சிறுவன் சங்கரன் பூர்ணா நதிக்கரையில் குளித்துக்கொண்டிருக்கும் வேளையில், நதியிலிருந்த ஒரு முதலை சிறுவனின் காலைப் பற்றி இழுத்தது. அப்போது சங்கரன் கரையி-ருந்த தன் தாயாரிடம், தான் சந்நியாசம் பெற சம்மதித்தால் முதலை விட்டுவிடும் எனக் கூறினார். எப்படியோ தவப்புதல்வன் உயிருடன் வாழ்ந்தால் போதுமென்ற எண்ணத்தில் தாயார் சந்நியாசம் பெற சம்மதிக்கவே, முதலை விலகியது. தன்னுடைய இறுதிக் காலகட்டத்தில் தன்னருகில் இருக்கவேண்டுமென ஆரியாம்பாள் சங்கரனிடம் கேட்டுக்கொள்ள, சங்கரர் சம்மதித்தார்.

சங்கரர் தனது சீடர் களுடன் விஜய யாத்திரையில் இருந்தசமயத்தில், ஒருநாள் தனது தாயாரின் அந்திமக் காலம் நெருங்குவதை யோகசக்தியால் அறிந்து காலடிக்கு வருகை தந்தார். மரண வேதனையி-ருந்த தாயாருக்கு நல்ல உபதேசங்களைச் செய்தார். தாயார் இறந்ததும் ஆதிசங்கரர் உத்தரகிரியை சடங்குகளைச் செய்தார்.

தன் மகன் சந்நியாசம் பெற்றதால் தனக்கு செய்யவேண்டிய ஈமச்சடங்குகளை செய்யமுடியாமல் போய்விடுமோ என கவலைப்பட்ட தாய்க்கு, தானே அனைத் தையும் செய்வேன் என உறுதியளித்த ஆதிசங்கரர் அதை செவ்வனே நிறைவேற்றினார். தன் தாயின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் அவர் பாடிய ஐந்து சுலோகங்கள், சில வரிகளைத் தவிர அனைத் தும் அனைவருக்கும் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளன. இதைப் பொருளுணர்ந்து படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் தன் தாயை நினைத்து கண்ணீரே வரும்!

"ஆஸ்தாம் தாவதியம்ப்ரஸூதி ஸமயே துர்வார சூலவ்யதா

நைருச்யம் தனுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ

ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரண க்லேசஸ்ய யஸ்யாக்ஷம

தாதும் நிஷ்க்ருதி முன்னதோபி தனய: தஸ்யை ஜனன்யை நம: '(1).

"பொறுக்கமுடியாத பிரசவ வேதனை இருந்த சமயத்தில், எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிடமும் பாதுகாத்ததற்கு நான் என்ன பிரதியுபகாரம் (கைம்மாறு) செய்தேன்? எனக்காக சூலைவலியைப் பொறுத்து, என்னைக் காக்கவேண்டும் என்பதற்காக ருசியில்லாத பண்டங்களை உண்டு வாழ்ந்து, பல நாட்கள் தூக்கமின்றி, எனது மல மூத்திரம் என தூர்நாற்றம் நிறைந்த படுக்கையில் படுத்து தன்னை வருத்திக்கொண்டு என்னைக் காப்பாற்றிய தாயாருக்கு யாராலும் பிரதியுபகாரம் செய்யமுடியாது. எனவே தாயே உனக்கு நமஸ்காரம் செய்கிறேன்.'

"குருகுல முபஸ்ருத்ய ஸ்வப்ன காலேது த்ருஷ்ட்வா

யதி ஸமுசித வேஷம் ப்ராவ்ருதோமாம் த்வமுச்சை

குருகுல மத ஸர்வம் ப்ராரு தத்தே ஸமக்ஷம்

ஸபதி சரண யோஸ்தே மாதரஸ்து ப்ரணாம:' (2).

"நான் குருகுலத்தில் படிக்கச்சென்ற காலத்தில், ஒருநாள் நான் சந்நியாசி ஆனதுபோல கனவுகண்டு, அதேவண்ணம் குருகுலத்திற்கு வந்தீர்கள். உங்களைப் பார்த்து மற்ற குருகுலவாசிகளும் அழுதனர்.

உங்களின் தாய்மை குணத்திற்கு எனது நமஸ்காரம்.'

"ந கஸ்தம் மாகஸ்தே மரண மையே தோயமபி வா

ஸ்வதாவா நோ தத்தா மரண திவஸே ச்ராத்த விதினா

ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரக மனு

அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம்:' (3).

"தாயே! நீ முக்தியடையும் சமயத்தில் உனது வாயில் தண்ணீரை விட்டேனா?

ஈமச்சடங்குகளை வைதீக முறைப்படி செய்தேனா? உன் காதில் தாரக மந்திரத்தை ஓதினேனா? இதுபோன்று எதுவும் செய்வதற்கு எனக்கு சந்நியாசி ஆனதால் அதிகாரமில்லாமல் போயிற்று! இதனால் எனது மனம் தவிக்கிறது. உன் மகனான என்னிடம் கருணை காட்டவும். இதற்காக உனக்கு என் நமஸ்காரம்!'

"முக்தாமணிஸ்த்வம் நயனம் மமேதி

ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வாம்

இக்யுக்தவ த்யாஸ்தவ வாசி மாதர்

ததாம்யஹம் தண்டுல மேவசுஷ்கம்:' (4).

"தாயே! என்னைத் தாங்கள் முத்தே, கண்ணே, ராஜா என செல்லமாகக் கொஞ்சுவீர்கள். மேலும் நான் சிரஞ்சீவியாக இருக்கவேண்டுமென எப்பொழுதும் வாழ்த்துவீர்கள். அன்புடனும் கருனையுடனும் என்னை நன்றாக வளர்த்தீர்கள். அப்படிப்பட்ட தாயே, உனது வாயில் வேகாத அரிசியைப் போட்டேன். இந்தக் கொடுமையை என்னால் பொறுக்கமுடியவில்லையே! உன்னை சரணடைகிறேன் தாயே!'

"அம்பேதி தாதேதி சிவேதி தஸ்மின்

ப்ரஸூதி காலே யதவோச உச்சை

க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தேத்

யஹோ ஜனன்யை ரசிதோய மஞ்ஜ-:' (5).

"தாயே! என்னைப் பெற்றெடுக்கும் வேளையில் பிரசவ வலி பொறுக்கமுடியாமல் அம்மா, அப்பா, சிவனே, கிருஷ்ணா, முகுந்தா என பக்தியுடன் அழைத்த அந்த வாக்கோடு கூடிய என்னுடைய அன்பு தெய்வமே, என் இரு கைகளையும் உயர்த்தி, உங்களுக்கு என் மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். உன்னைச் சரணடைகிறேன் தாயே!'

இவ்வாறு தன் தாயைப் போற்றி வணங்குகிறார். பெற்ற தாயை தெய்வமாக மதிக்கும் பண்பாடு, கலாச்சாரம் நம்முடைய பாரதத் திருநாட்டில்தான் உண்டு.

இந்து மதத்தில் நதி தேவதைகளான (ஜல தேவதை) கங்கை, யமுனை, காவேரி போன்ற நதிகளை கங்காதேவி, யமுனா தேவி, காவிரித்தாய் என தாயோடு ஒப்பிட்டு வணங்குகிறோம். அதேபோல் பூமியை பூமாதேவி என்றும், பசுவை கோமாதா என்றும் அழைக்கிறோம். இவற்றுக்கெல்லாம் சிகரமாக நமது புனித வேதத்தை "வேதமாதா' என பக்தியுடன் அழைக்கிறோம். பாரத நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நம்முடைய நாட்டின் அன்னையை "பாரதமாதா' என்றே அழைக்கிறோம்.

இதற்கு ஆதிசங்கரரின் மாத்ருகா பஞ்சக தோத்திரப்பாடலே சாட்சி என பெருமையாகச் சொல்லலாம். ஆதிசங்கரரின் அவதார தினத்தில் (வைசாக சுக்ல பஞ்சமி- இவ்வருடம் 17-5-2021) அவரை வணங்கி, நமது தாயைப் போற்றிக் கொண்டாடுவோம்!

ஸ்ரீ குருப்யோ நமஹ:

Advertisment

சத்குரு சரணாரவிந்தாப்யாம் நமஹ!