டந்த இதழில், மருதமலையில் நடந்த படப்பிடிப்பின் போது சாண்டோ சின்னப்பா தேவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லியிருந்தேன். தேவர் ஒரு முரட்டு பக்தர். ஆரம்ப காலத்தில் அவர் கோவையில் இருந்தார். பொருளாதார ரீதியாக சிரமப்பட்ட காலமது. ஒரு நபரிடம் பத்து ரூபாய் கடன் வாங்கியிருந்தார். குறிப்பிட்ட நாளுக்குள் அவரால் அதை திரும்பச் செலுத்த முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவர் கடைவீதியில் வைத்து தேவரை மிக அவமானப்படுத்திவிட்டார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தேவர், "முருகா முருகான்னு உன்னையே எந்நேரமும் நினைச்சிக்கிட்டிருக்கிற என்னை இப்படி அவமானப்படுத்திட்டியேடா...' என்று, ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு முருகன் சிலையை உடைப்பதற்காக கோபமாக மலையேறினார். கரடுமுரடான அந்தப் பாதையில் ஒரு காலி சிகரெட் பாக்கெட் கிடக்க, அதன் வாய்ப்பகுதியில் சற்று வெளியே நீட்டிக்கொண்டிருந்த ரூபாய் நோட்டு தென்பட்டது. ஆவலோடு அதை எடுத்துப் பார்த்தார் தேவர். பத்து ரூபாய்! சுற்றிலும் பார்த்தார். எவருமே இல்லை.

அந்த நொடியே அவர் கண்கள் நிரம்பிவிட்டன. தன் கையிலிருந்த கட்டையால் தன்னையே அடித்துக்கொண்டு, "என்னை மன்னிச்சிடு முருகா' என்று தேம்பி அழுதார். பின்னர் மலையேறிச் சென்று முருகனை வணங்கிவிட்டு திரும்ப வந்து பத்து ரூபாய் கடனை அடைத்தார்.

kalaiyanam

Advertisment

பிற்காலத்தில் திரைப்படத் தயாரிப்பாளராகி வசதிகள் சேர்ந்தவுடன் மருதமலை முருகன் கோவில் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டார். 1960-களில் மலைக்கு சரியான பாதை இல்லை. பக்தர்கள் சிரமப்பட்டே ஏறவேண்டியிருந்தது. இதைக்கண்ட தேவர் தன் சொந்த செலவில் நல்ல பாதை அமைத்தார். அதன்பின் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

அப்போதும் ஒரு குறை. மின் இணைப்பு இல்லாத காரணத்தால் பக்தர்கள் இருட்டுவதற்கு முன்பாகவே மலையைவிட்டு இறங்கிவிடுவார்கள். கோவிலும் இருண்டு கிடந்தது.

இதுபற்றி யோசித்த தேவர், மலைக்கு மின் இணைப்பு தருவது சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.

Advertisment

அதற்கு அவர்கள், "பக்கத்து ஊரிலிருந்து இணைப்பு கொடுக்கலாம். ஆனால் அங்கிருந்து மலை உச்சிவரை மின்கம்பி கொண்டு செல்ல கம்பங்கள் அமைக்க வேண்டும். இதற்கெல்லாம் லட்சக்கணக்கில் செலவாகும். இந்த பணத்தை நீங்கள் டெபாசிட் செய்தால் வேலையை ஆரம்பிக்கலாம்' என்றனர். அதற்கு சம்மதித்து தேவர் பணம் தர, மின் இணைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

1962-ல் பணிகள் நிறைவடைந்தன. முதன் முதலாக மின்விளக்கை யார் கையால் ஏற்றலாம் என்று யோசித்தார் தேவர். அதற்கு முழுத் தகுதியுடையவர் எம்.ஜி.ஆர்தான் என்று பளிச்சென்று அவர் மனதில் தோன்றியது. உடனே எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் தேவர். விவரத்தைச் சொல்லி மருதமலைக்கு வருமாறு அழைக்க, எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார்.

நெருங்கிய நண்பரான தேவர் அழைத்தும் எம்.ஜி.ஆர் மறுத்ததற்கான காரணம் என்னவென்றால் அப்போது எம்.ஜி.ஆர் தி.மு.கழகத்தில், முக்கியமானவராக இருந்தார். அந்தக் கட்சிப் பிரமுகர்கள் யாரும் கோவிலுக்குச் செல்லமாட்டார்கள். சென்றால் அது சர்ச்சையாகிவிடும். ஆனால் தேவர் விடவில்லை. கண்கள் பனிக்க எம்.ஜி.ஆரை நோக்கி கை கூப்பினார். அதைக்கண்டு நெகிழ்ந்து போன எம்.ஜி.ஆர் கூப்பிய அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, "அண்ணே... என்ன விமர்சனம் வந்தாலும் சரி. கண்டிப்பா நான் வரேன்...' என்று உறுதி தந்தார்.

அதன்படியே குறிப்பிட்ட நாளில் எம்.ஜி.ஆர் மருதமலை வர, செய்தியறிந்து ஏராளமான மக்கள் கூட்டம். விளக்கேற்றும் இடத்துக்கு எம்.ஜி.ஆர் செல்ல தேவர் கருவறைக்குள் சென்று நின்றுகொண்டார். எம்.ஜி.ஆர் விளக்கேற்றியதும் ஆலயமெங்கும் பிரகாசம். தேவர் பூரிப்புடன் முருகனைப் பார்த்தார். அவன் முகத்தில் சிரிப்பு. "இருட்டிலிருந்த எனக்கு வெளிச்சம் தந்த நீ நன்றாக இரு' என்று முருகன் வாழ்த்துவதுபோல உணர்ந்த அவர், அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டார். எவ்வளவு நேரமென்று தெரியாது. தேவரைக் காணாமல் தேடிய எம்.ஜி.ஆர், பின்னர் அவரைக்கண்டு அழைத்துச்சென்று ஆசுவாசப்படுத்தினார். (இவையெல்லாம் தேவரே சொன்னவை தான்.)

அதன்பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து 1967-ல் தமிழகத்தையே உலுக்கிய அந்த சம்பவம் நிகழ்ந்தது. பொதுத்தேர்தல் சமயம் அது. சென்னை பரங்கிமலைத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். பெயரை அறிவித்திருந்தார் அண்ணா. அந்த சமயத்தில் தான் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டார் எம்.ஜி.ஆர். இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் எம்.ஜி.ஆர். அவரது தொண்டையில் பாய்ந்து சிதறியிருந்த குண்டுகளை மருத்துவர்களால் முழுமையாக அகற்ற முடியவில்லை. உயிருக்கு ஆபத்து நேரும் என்பதால் அப்படியே விட்டுவிட்டனர். உயிர் பிழைத்த எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபடியே பரங்கி மலைத் தொகுதியில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றி அண்ணா முதல்வரானார்.

எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் அவர் தொண்டையிலிருந்த குண்டின் உறுத்தலால் மூச்சுப் பிரச்சினை இருந்தது.

தேவருக்கு மனம் பொறுக்கவில்லை.

"அடேய் மருதமலை முருகா... உன் கோவிலுக்கு விளக்கேற்றியவரோட வாழ்க்கை வெளிச்சமில்லாம இருக்கேடா... இது நியாயமாடா' என்று முறையிட்டார்.

அடுத்து நேரே எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்றார். கழுத்துப்பட்டை அணிந்து ஓய்வில் இருந்தார் எம்.ஜி.ஆர். அவரைப் பார்த்த தேவர் கண்கலங்கி, ""முருகா, நீங்க என்னோட மருதமலைக்கு வரணும்'' என்றார். தேர்தலில் கழகம் வென்றிருக்கும் சமயம். இப்போது எம்.ஜி.ஆர் கோவிலுக்குப் போவது தெரிந்தால் அது மிகப்பெரிய பிரச் சினையாகும். எனவே எம்.ஜி.ஆர் பிடிவாதமாக மறுத்தார். ஆனால் தேவர் விடவில்லை. ""என்னோட மனத்திருப்திக்காக நீங்க வந்தே ஆகணும் முருகா. அந்த மருதமலையானைப் பாத்து ரெண்டுல ஒண்ணு கேக்கணும்'' என்று மிகவும் வற்புறுத்தி சம்மதம் பெற்றார்.

வெகு ரகசியமாக தேவரும் எம்.ஜி.ஆரும் மருதமலை சென்றனர். முருகன் முன் எம்.ஜி.ஆரை நிறுத்திய தேவர், ""டேய் முருகா... உனக்கு நன்றி விசுவாசம்ங்கறது இல்லையா? உங்களை மாதிரி கடவுளுங்களுக்கெல்லாம் நல்லவங்க கெட்டவங்க தெரியாதாடா? இதுகூட தெரியாத அளவுக்கு அப்படியென்ன சொகுசான வாழ்க்கை உங்களுக்கு? ஒண்ணு ரெண்டு மாசத்துல இந்த முருகனை நீ பூரணமா குணப்படுத்தலேன்னா, உன்னையும் உன் கோவிலையும் ரெண்டுல ஒண்ணு பார்த்திடுவேன்'' என்று சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆரை அழைத்துக்கொண்டு வந்து விட்டார் தேவர்.

இரண்டு மாதம் கழிந்த நிலையில் ஒருநாள் எம்.ஜி.ஆருக்கு தும்மல் வந்தது. பலமாக மூன்றுமுறை தும்மினார். மூன்றாவது தும்மலின்போது அவரை சிரமப்படுத்திக்கொண்டி ருந்த குண்டு வெளியே வந்து விழுந்தது!

இந்த சம்பவத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்ட தேவர், ""எப்படிடா அந்த மருதமலை முருகனோட கருணை! என்னோட வேண்டுதல் பலிச்சிடுச்சிடா'' என்று நெகிழ்ந்தார். அதே மருதமலையில்தான் தேவரின் அறுபதாம் கல்யாணமும் நடந்தது. அப்போது அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து ஜன்னல்வழியாக, மின்விளக்கொளியில் ஜொலித்துக்கொண்டி ருந்த கோவிலைப் பார்த்த தேவர், பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து, முருகனின் கருணையை எண்ணி நெக்குருகினார்.

இன்றளவும் தன்னை நாடிவருவோரின் குறைகளைத் தீர்த்து வாழ வைக்கிறான் முருகன். ஆண்டவன் பெருமை சொல்ல இன்னும் நிறைய செய்திகள் உள்ளன. ஆச்சரியமூட்டும் அந்தத் தகவல்கள்...

(தொடரும்)