கீழ்த்திருப்பதி அருகே ஒரு குக்கிராமத்தில் முகாமிட்டிருந்த காஞ்சி மகாபெரியவரைக் காண இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், சுவாமிகளின் ஆத்மார்த்த பக்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். மகாபெரியவரிடம் ஆசிபெற்றுக்கொண்டோம். அப்போது, ஆதிசங்கரர் வரலாற்றை திரைப்படமாக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தை சுவாமிகளிடம் தெரிவித்தார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.
""பேஷா எடுங்கோ... நல்ல காரியம்தானே. சிரத்தையா எடுங்கோ. மனப்பூர்வமான ஆசிர்வாதம் உண்டு. ஆனா...'' என்றார் பெரியவர். நாங்கள் ஏதும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சுவாமிகளை நோக்கினோம்.
""உங்க முயற்சியை வரவேற்கிறேன். ஆனா பெரியவா ஆதிசங்கர பகவத் பாதாள் கூடுவிட்டுக் கூடுபாய்ஞ்சு இல்லற தர்மம் காணுற சம்பவங்களை ரொம்ப ஜாக்கிரதையா கையாளணும். முடிஞ்சா அதை தவிர்த்திடுங்கோ'' என்றார்.
""உங்க விருப்பப்படியே நடந்துக்கிறோம் சாமி'' என்று சம்மதித்து, மீண்டும் மகாபெரியவரை வணங்கி ஆசி பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
ஆதிசங்கரர் கதையைப் படமாக்குவதற்காக, "அபிதான சிந்தாமணி' உட்பட பல நூல்களைப் படித்திருந்தேன். அதில் மகாபெரியவர் குறிப்பிட்ட சம்பவமும் இருந்தது.
பாரத நாட்டில் பல இடங்களுக்கும் விஜயம் செய்து பலரையும் வாதத்தில் வென்று தன் அத்வைத கொள்கையை நிலைநாட்டி வந்தார் ஆதிசங்கரர். அவ்வாறு குமரிலபட்டர் என்பவரை வாதத்தில் வென்று, அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் மகிஷ்மதி நகரிலிருலிந்த மண்டனமிச்ரரிடம் வாதிடச்சென்றார்.
போட்டியில் மண்டனமிச்ரர் தோல்வி யடையும் நிலை ஏற்பட, அறிவிற் சிறந்த அவரது மனைவி உபயபாரதி (சரசவாணி) போட்டியிட முன்வந்தாள். அவளது அனைத்து கேள்விகளுக்கும் ஆதிசங்கரர் சரியான விடையளிக்க, இறுதியாக உபயபாரதி, கணவன்- மனைவி இல்வாழ்க்கை குறித்து வினா எழுப்பினாள். ஆதிசங்கரரோ துறவி. எனவே சிலநாள் அவ காசம் கேட்டுக்கொண்டு சீடர் களுடன் வெளியேறினார்.
அப்போது கானகத்தில் இறந்து கிடந்த ஒரு மன்னனின் உடலைக் கண்டு, கூடுவிட்டுக் கூடுபாய்ந்து மன்னன் உடலிலில் புகுந்து, அரண் மனை சென்று அரசியிடம் இல்லறம் தொடர்பானவற்றை அறிந்துகொண்டு, பின்னர் மீண்டும் தன்னுடலில் புகுந்து உபய பாரதியிடம் சென்று விளக்கம்கூறி வெற்றி கண்டார் என்பது அந்த நிகழ்வின் சுருக்கம்.
திரைப்படம் என்பது எளிதில் மக்களைச் சென்றடைவது. அதனால்தான் இதை கவனமா கக் கையாளவேண்டும் அல்லது தவிர்க்கவேண்டும் என்று மகா பெரியவர் கூறினார். இந்த உடலுக்கும் ஆத்மாவுக்கும் சம்பந்தம் உண்டா என்பதற்கான ஆழ்ந்த விளக்கம் இதிலிலுள்ளது அத்வைத சித்தாந்தத்துக்கு இதையொரு எடுத்துக்காட்டாகவும் கொள்ளலாம். மேலோட்டமாகப் பார்த்தால் பொருள் மாறிவிடும். கூடுவிட்டுக் கூடுபாயும் இந்த நிகழ்வு கத்திமேல் நடப்பது போன்றதென்பதால், "ஆதிசங்கரர்' கதையைப் படமாக்கும் எண்ணத் தையே கைவிட்டார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.
சாண்டோ சின்னப்பா தேவர் "வெள்ளிக்கிழமை விரதம்' என்ற பெயரில் தயாரித்த தமிழ்ப்படம் நன்றாக ஓடியது. அதையே இந்தியில் தயாரித்து வெளி யிட்டார். அங்கே அது சரியாகப் போகவில்லை. தேவருக்கு அறுபதாம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயம். அன்று அவர் அலுவலகத் தில் இருந்தோம்.
அப்போது தேவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கொஞ்ச நேரம் பேசிவிட்டு ""காட் பிளஸ் முருகா... தேங்க் யூ'' என்று போனை வைத்தார்.
பிறகு என்னிடம், ""வெள்ளிக்கிழமை விரதம் படம் இந்தியில் ஏன் ஓடலன்னு பாம்பேக்காரன் கேக்கறான்.
அவன் எங்கிட்ட கேட்கக்கூடாது. அந்த முருகன் கிட்டதான் கேட்கணும். படத்துல லாபம் வந்தா முருகனுக்கு பங்கு தர்றேன். படம் ஓடலன்னா நான் ஏன் கவலைப்படணும்? வேலை வச்சுக்கிட்டு மூலையில உட்கார்ந்திருக்கட்டும் அந்த முருகப்பய. எப்பவும் வள்ளியோட மயில்ல ஏறி ஊரைச் சுத்தறதே அவன் பொழப்பா போச்சு. இருக்கட்டும். ஒருநாள் அவனை என்ன செய்றேன் பார்...'' என்றார்.
""ஏண்ணே காளமேகப் புலவர் மாதிரி பேசறிங்க?'' என்றேன் நான். அது ""யாரப்பா?'' என்றார்.
""ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்ல சாமிக்கான நெய்வேத்தியங்கள் சமைக்கிற சமையல்காரர் வரதன். பக்கத்திலுள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலில்ல மோகனாங்கி என்கிற தாசி இருந்தா. அவமேல வரதனுக்கு காதல் வந்திருச்சு.
அவளுக்கும் வரதன் மேல காதல்.
"நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னா நீ வைணவ சித்தாந்தத்தில இருந்து, சைவ சித்தாந்தத்திற்கு மாறணும்'னு சொன்னா.
அவள்மேல் உள்ள காதலால் சைவத்திற்கு மாறினார் வரதன். அகிலாண்டேஸ்வரி கோவில் லயே தங்கி வேலை செய்துக்கிட்டிருந்தார். ஒருநாள்... வைணவத்திலிலிருந்து சைவத் திற்கு மாறியதை நினைச்சு மன உளைச் சல்ல கோவிலுக்குள்ளேயே அசந்து தூங்கிட்டார் வரதன். அப்போ ஈஸ்வரி தோன்றி தன்னோட வாயிலிருந்த தாம்பூலத்தை வரதன் வாயில் திணிச்சிட்டு "இன்றுமுதல் உன்பேர் காளமேகம். எல்லா சிவ க்ஷேத்திரங்களுக்கும் போய் நீ பாடல்பாடி பெருமை பெற அருள் பாலிலிக்கிறேன்'னு சொல்லிலிட்டு ஈஸ்வரி மறைஞ்சிட்டா.
அதன்பிறகு அவரோட வாயிலிலிருந்து கவிதை மழை பொழிய ஆரம்பிச்சது. ஊர்தோறும் போய் சிவன் பெருமை பாடிய காளமேகம் ஒருமுறை முருகன் கோவில் பக்கம் போனார். அங்கே... வைரம் பதித்த தங்கக்கிரீடம், பத்து விரலில்ல வைர மோதிரம், மார்புல நவரத்தின மாலை, உடம்பு முழுக்க தங்கக் கவசம் அணிஞ்சு முருகன் தங்கத்தேரில் வீதியுலா வந்தார். அதைப்பார்த்த காளமேகம்... "அடே முருகா! உங்கப்பன் சிவன் பிச்சையெடுப்பவன். உன் அம்மா ஈஸ்வரி மலையில பிறந்த நீலிலி. உன் மாமன் கிருஷ்ணன் வெண்ணெய் திருடி.
உன் அண்ணன் கணேசனோ முக்குக்கு முக்கு உடகார்ந்திருக்கும் சப்பாணி. இப்படி ஒரு கேவலமான குடும்பத்தில் பிறந் தவன் நீ. உனக்கு ஏன் வீண்ஜம்பம், ஆடம்பரம். உனக்கு வெட்கமா இல்லையா? கீழே இறங்கி நடந்து போடா' என கவிதை பாடினார்.
இந்தக் கவிதைக்குப் பெயர் நிந்தாஸ்துதி. அதாவது இகழ்வதுபோல புகழும் வஞ்சப்புகழ்ச்சி அணி. இந்தக் கதை 1940-ல் எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் பாரதிதாசனின் வசனம், பாடல்களில் நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை நடிக்க, "காளமேகம்' என்ற பெயரில் படமா வந்தது. அந்த காளமேகப்புலவர்போல நீங்க முருகனைத் திட்டிக்கிட்டே இருக்கீங்களேண்ணே.''
""நான் அவ்வளவு மோசமாவா திட்றேன்? அந்த முருகனவிட்டா எனக்கு வேறு கதி யார் இருக் காங்க...'' என்று கண்கலங் கினார் தேவர்.
இந்த இடத்தில் அன்னை அகிலாண் டேஸ்வரி அருள்பெற்ற காளமேகப் புலவரின் கவித்திறமையையும் சற்றுப் பார்த்து விடுவோமே...
தமிழ்ப் புலவர்கள் வரிசையில் காளமேகம் குறிப்பிடத்தக்கவர். நொடிப்பொழுதில் பாடும் ஆற்றல்கொண்ட ஆசுகவி, ஒரு பாடலில் இருபொருள் கூறும் சிலேடைக்கவி, இகழ் வதுபோல புகழும் நிந்தாஸ்துதி கவி போன்றவற்றில் வல்லவர். திருவானைக்கா உலா, மூவர் அம்மானை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக் கம் போன்ற பாடல் தொகுப் புகளை எழுதியவர்.
"க' என்ற எழுத்தை மட்டும் அடிப்படை யாகக்கொண்டு பாடல் எழுத முடியுமா என்று இவரிடம் கேட்டனர்.
"காக்கைக்கா காகூகை கூகைக்கா
காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக்
கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்கு கைக்கைக்கா கா'
என்று உடனே பாடினார்.
கூகை என்பது ஆந்தை. காக்கையானது பகலில்
ஆந்தையை வெல்லும். ஆந்தை இரவில்
காக்கையை வெல்லும். அதுபோல "கோ'
என்னும் அரசன் பகைவரிட மிருந்து தம்
நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும்,
பகலிலில் காக்கையைப் போலவும் காக்க
வேண்டும். கொக்கு காத்திருப்பதுபோல
இருந்து தக்க சமயத்தில் எதிரியைத் தாக்க
வேண்டும். தகுதியான அரசனென்றாலும்
தகுதியற்ற காலமென்றால் கையாலாததா
கிவிடும். என்பது இப்பாடலின்பொருள்.
எல்லாம் அந்த அம்பாளின் அருள்!
இன்னொரு பாடலையும் பார்த்து விடுவோம்.
காளமேகத்திடம் ஒரு புலவர், ""ஐயா நீர் பெரிய புலவர் என்கிறார்களே, உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?' என்று கேட்டார்.
""முருகன் அருளால் முடியும். வேலிலில் தொடங்கவா? மயிலிலில் தொடங்கவா?'' என்று கேட்டார் காளமேகப் புலவர்.
""அதெல்லாம் வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்'' என்று கூறினார் அவர்.
முத்தமிழுக்கே தலைவன் முருகன். அவனையே இவ்வாறு பாடச் சொல்கிறாரே என்று காளமேகம் கலங்கவில்லை. நிந்தாஸ்துதி அவருக்கு கைவந்த கலையாயிற்றே! உடனே பாடத் தொடங்கினார்.
"செருப்புக்கு வீரர்களைச் சென்றழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல்
வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே.'
"செரு' என்றால் போர்க்களம். "செருப்
புக்கு' போர்க்களம் புகுதல் என்று பொருள். அவ்வாறு போர்க்களத்தில் புகுந்த வீரர் களை வெற்றிகொள்ளும் முருகனை அணைத்துக்கொள்ளத் துடிக்கிறது நெஞ்சம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக் குமாறு உன்னைக் கேட்கிறேன் என்னும் பொருளில் அமைந்துள்ளது இப்பாடல்.
முருகனை எப்படிப் பாடினாலும் அழகுதான்!
(தொடரும்)