-பிரபலங்கள் கண்ட அற்புதங்கள்!
2
திரைப்படத் துறையில் சாதிக்கவேண்டுமென்ற எனது பன்னிரண்டு ஆண்டுகாலப் போராட்டம் வீணானது. என் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு என் அண்ணன் ஊருக்குச் சென்றுவிட்டார். கடுமையான வேதனையுடன் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வாடகை வீட்டுக்குத் திரும்பிய நான் காலண்டரில் சிரித்துக் கொண்டிருந்த முருகனைப் பார்த்தேன். ஆற்றாமை தாங்காமல் "உன்னையே நம்பியிருந்த என்னை இப்படிப் பண்ணிட்டியே பாவி!' என்று முருகன் படத்தை ஓங்கி ஓங்கி அடித்தேன். அழுதேன். பசி மயக்கத்தில் அப்படியே சரிந்து படுத்தேன். எப்படி உறங்கினேன் என்று தெரியாது.
யாரோ அழைக்கும் குரல்கேட்டு கண்விழித்தேன். ஜன்னல் வழியே விடியலுக்கான வெளிச்சம். சுவரிலிருந்த காலண்டரில் முருகனின் சிரிப்பு. அழைத்தவர் எனது நண்பரான ஏ.எஸ். முத்து. "பாக்தாத் திருடன்', "மாய மனிதன்' படங்களின் வசனகர்த்தா அவர். சொந்தமாகப் படத் தயாரிப்பில் ஈடுபட்டு நொடித்துப் போனவர். "நானே டீ குடிக்கக்கூட காசில்லாத நிலையில் இருக்கிறேன். இவர் என் செலவில் டீ குடிக்கலாம் என்று வந்திருக்கிறாரோ' என சந்தேகமாக அவரைப் பார்த்தேன். என் எண்ணத்தைப் புரிந்துகொண்ட அவர், ""எங்கிட்ட காசிருக்கு'' என்றார்.
துள்ளி எழுந்தேன். இருவரும் கடைக்கு டீ குடிக்கச் சென்றோம்.
இந்த வாடகை வீட்டில் இன்னும் இரண்டும் வாரங்களே தங்கமுடியும். அதற்குள் நான் கதை சொன்ன இயக்குனர்கள் கிருஷ்ணன்- பஞ்சுவிடமிருந்து நல்ல பதில் வர வேண்டும். தயாரிப்பாளர் சம்மதிக்கவேண்டும். இன்னும் பத்துநாள் கழித்துதான் அவர் வருவார். அதற்கிடையே தினசரி வயிற்றுப்பாடி ருக்கிறது. எதிர்காலம் மிகப்பெரிய சவாலாக முன்நின்றது.
நண்பர் முத்து வாங்கிக்கொடுத்த டீ சற்று தெம்பைத் தந்தது. அவர் வந்த விஷயத்தை ஆரம்பித்தார்.
""சிட்டாடல் ஸ்டுடியோவுக்கு கதை தேவைப்படுதுன்னு கேள்விப் பட்டு போய் சொன்னேன். அவங்க ளுக்கு அது பிடிக்கல. நீதான் நல்லா கதை சொல்லுவியே. அதனால உன் பேரை அங்க சொல்லிலிவச்சிருக்கேன். போவோமா'' என்றார்.
சிட்டாடல் படத்தயாரிப்பு நிறுவனம் ஜோசப் தளியத் என்னும் கேரளக்காரருக்குச் சொந்தமானது. அந்த நிறுவனம் என் நண்பர் டி.என். பாலு கதையில், ஜெய்சங்கரை அறிமுகம் செய்து "இரவும் பகலும்' என்னும் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடியதால் உடனே அடுத்த படம் எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு பெரிய அளவில் ஆர்வம் உண்டாகவில்லை. பல இடங்களில் கதை சொல்லிலி, "நல்லா இருக்கு; சொல்லிஅனுப்பறோம்' என்னும் பதிலை கேட்டுக்கேட்டு சலிலித்துப்போனவன் நான். ""உடனே புறப்படுவோம்'' என்றார் முத்து.
பஸ்ஸில் ஏறி கெல்லீஸ் பகுதியிலிருந்த ஜோசப் தளியத் வீட்டுக்குச் சென்றோம். ஒரு ராணுவ வீரரைப்போல மிடுக்கானவர் ஜோசப். கண்டிப்பானவரும்கூட. பகலிலிலேயே அறையை இருட்டுபோல வைத்திருந்தார். நாங்கள் தரையில் அமர்ந்தோம். அவர் "ஹுக்கா' புகைத்த வண்ணம் "ம்...' என்றார்.
""கதை சொல்லச் சொல்றாரு. சீக்கிரமா சொல்லு'' என்றார் முத்து.
நான் என்னை ஒருநிலைக்குக் கொண்டுவந்து, ஒருவித உத்வேகத்துடன் கதைசொல்ல ஆரம்பித்தேன். அது ஒரு நகைச்சுவைக் கதை. ஆரம்பத்தில் விரைப்பாக இருந்த தளியத் பத்து நிமிடங்கள் கடந்ததும் சிரிக்க ஆரம்பித்தார். ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வு தோன்றும் வகையில் ஐம்பது நிமிடங்களில் ஒரே மூச்சாகக் கதை சொல்லிலி முடித்தேன். என்ன சொல்லப்போகிறாரோ என்று அவரையே பார்த்தேன். ஓரிரு நிமிடங்கள் அமைதியாக இருந்தவர் எழுந்து நின்று கைகொடுத்தார்.
""சென்டிமென்ட் கதை இருக்கா?'' என்று கேட்டார்.
""இருக்கு சார்...'' என்று ஒரு உருக்கமான கதையைச் சொன்னேன்.
மறுபடியும் கைகொடுத்தவர், ""நீங்க ஸ்டுயோவுக்குப் போங்க'' என்றார். நானும் முத்துவும் வெளியே வந்தோம். ""சார்... கார்ல ஏறுங்க'' என்றார் டிரைவர். ஏறி அமர்ந்தோம். மனதுக்குள் புது உற்சாகம் பிறந்தது.
பக்கத்தில் இருந்த ஸ்டுடியோவுக்கு காரில் சென்று இறங்கினோம். ""சார், டிபன் சாப்பிட வாங்க'' என்று ஊழியர் ஒருவர் அழைத்தார். எனக்கு ஒரே வியப்பு. காலையில் டீ குடிக்கக்கூட காசில்லை. இப்போதோ...
உணவுக்கூடம் சென்று நன்றாக சாப்பிட்டோம். அதிபரின் அறையில் உட்கார வைத்தார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒருவித பதட்டத்தோடு உட்கார்ந்திருக்க, சற்று நேரத்தில் ஜோசப் தளியத் வந்து சேர்ந்தார். பின்னாலேயே பேங்க் மேனேஜர் உட்பட பெரும் பதவிகளிலுள்ள நான்கைந்து பேர் கார்களில் வந்திறங்கினர். அவர்களெல்லாம் ஜோசப்பின் மலையாள நண்பர்கள். இவர்கள் சொல்வதை வைத்துதான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்களிடம் கதை சொல்லச் சொன்னார் ஜோசப். சாப்பிட்ட தெம்பிருந்ததால் இரண்டு கதைகளையும் விரைவாகவும் உயிரோட்டத்துடனும் சொல்லிலி முடித்தேன்.
அவர்கள் எழுந்தார்கள். ""ரெண்டு கதை யையும் விட்டுடாதே ஜோசப்'' என்று சொல்லிலிவிட்டு உடனே காரில் ஏறிப் பறந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட நானும் பறக்கும் நிலையில்தான் இருந்தேன். கொஞ்ச நேரத்தில் சிட்டாடல் மேலாளர் வந்து ஒரு ஒப்பந்தத்தைக் கொடுத்துப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து போடச்சொன்னார். ஒப்பந்தத் தாளை வாங்கியதும் கைகள் நடுங்கின.
"ஒரு கதைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய். இரண்டு கதைகளுக்கும் ஐயாயிரம். முன்பணம் ஐந்நூறு ரூபாய்' என்றது ஒப்பந்தம்.
அப்போதெல்லாம் நூறு ரூபாய் நோட்டு மிகப் பெரிதாக இருக்கும். ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை என்னிடம் தந்தார்கள். இதுவரை நூறு ரூபாய் நோட்டை நான் தொட்டுக்கூட பார்த்ததில்லை. அரிதாக அடுத்தவர்கள் கையில்தான் பார்த்திருக்கிறேன். முதன்முதலாக என் கையில் ஐந்நூறு ரூபாய்! உடலிலில் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது கிட்டத்தட்ட எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது. அவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தாங்கமுடியவில்லை.
முத்துவும் நானும் வெளியே வந்தோம். வாசலிலில் கார் கதவைத் திறந்துவைத்துக் கொண்டு நின்றிருந்தார் டிரைவர். ""சார்... வண்டியில ஏறுங்க. வீட்ல கொண்டுவிடச் சொல்லிலியிருக்காரு முதலாளி'' என்றார்.
இப்படியுமா ஒரு மனிதனின் வாழ்க்கை மாறும்! நேற்றிரவு மனைவியையும் குழந்தை களையும் ஊருக்கு அனுப்பிவிட்டு, எழும்பூரிலிருந்து மயிலாப்பூரில் வானொலிலி நிலையம் அருகிலிருக்கும் வீடுவரை நடந்தே சென்றது நினைவுக்கு வந்தது. காரில் ஏறி அமர்ந்தோம். அந்தப் பயணம் உண்மையாகவே ஒரு பறக் கும் அனுபவத்தைத் தந்தது.
இதில் நண்பர் முத்துவுக்கு மகிழ்ச்சி என்றாலும் சற்று வருத்தமும் இருந்தது. காரணம், நான் சொன்ன கதை ஏற்கப்படும் பட்சத்தில் அவருக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிட்டுமென எதிர்பார்த்திருந்தார். அவர்கள் என்னையே எழுதச் சொல்லிவிட்டதால் முத்துவின் ஆசை நிறைவேறவில்லை. வழியில் இறங்கிக்கொண்ட அவர் மேற்படி விஷயத்தைச் சொல்லிலி, ""ஒரு நூறு ரூபாய் கொடு'' என்றார். அப்போது நூறு ரூபாய் என்பது தருவதற்கு மிக யோசிக்க வைக்கும் பெரிய தொகைதான். என்றாலும் மனப்பூர்வமாகக் கொடுத்தேன். (அன்று முதல் முப்பதாண்டு காலம் அவருக்கு என் நன்றிக் கடனைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன்.) பிறகு போஸ்ட் ஆபிஸ் சென்று ஊருக்கு நூறு ரூபாய் மணியார்டர் செய்தேன். காரில் வீடு சென்று இறங்கினேன்.
கதவு திறந்து உள்ளே சென்றேன். காலண்டர் முருகன் என்னைப் பார்த்து சிரித்தான். "நேற்றிரவு என்னை அடித்தாயல்லவா? பாவி என்றெல்லாம் திட்டினாயல்லவா? இப்போது என்ன சொல்கிறாய்? என்னை நம்பிக் கெட்டவர்கள் யார்?' என்ற கேள்விகள் அந்த சிரிப்பிலிருந்தன.
நேற்றிரவு அவனை நான் அடித்தபோது பன்னிரண்டு மணி. இப்போது பகல் பன்னிரண்டு மணிகூட ஆகவில்லை. அதற்குள் என் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிய அந்த முருகனைப் பார்க்கப் பார்க்க என்னால் தாங்கமுடியவில்லை. கதறி அழுது அவன் காலடியில் விழுந்தேன். 1965-ஆம் ஆண்டு, எனது 35-ஆம் வயதில் நடந்த நிகழ்விது. இப்போதும் அந்த முருகன் என் வீட்டில் சிரித்துக்கொண்டிருக்கிறான்.
சாண்டோ எம்.ஏ. சின்னப்பா தேவர். தமிழ்த் திரையுலகில் மாபெரும் ஆளுமை அவர். அவரது முருக பக்தி அனைவரும் அறிந்த ஒன்று. தமிழகத்தில் அவர் தரிசிக்காத முருகன் கோவில்கள் இல்லையென்றே சொல்லலாம். பல ஆலயத் திருப்பணிகளுக்கு அள்ளித் தந்திருக்கிறார். வாயைத் திறந்தால் "முருகா' என்னும் சொல்தான் வரும். எம்.ஜி.ஆரை "முருகா' என்றே அழைப்பார். "தேவர் பிலிம்ஸ்' சார்பாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்து செல்வாக்குடன் இருந்த நேரம். அவருக்கும் முருகனால் ஒரு சோதனை வந்தது- தேவரின் மனைவிமூலம்! ஒருநாள் தேவரின் பங்குதாரரான பொன்னுசாமித் தேவர், கோவில் விஷயமாக ஒரு பெரிய தொகையை தேவரிடம் வாங்கிச் சென்றார். நாங்கள் "எதற்காக இவ்வளவு பணம் கொடுத்தீர்கள்' என கேட்டபோது தேவர் சொன்ன பதில்:
""திருச்செந்தூர் முருகன் கோவில் சுற்றுப்பிரகாரம் ஒரு கிலோமீட்டருக்கு மேல இருக்கும். கல்லும் கரடுமா இருக்குற அந்தப் பிரகாரத்தைச் சுத்தி பெண்களும் குழந்தைங்களும் வெயில்ல தவிக்கிறதைப் பார்த்தேன். "முருகா, உன் கோயிலுக்கு நான் வெயில்படாத சுற்றுப் பிரகாரம் கட்டித் தரேன்'னு வேண்டிக்கிட்டேன். அந்த வேலை முடியாம இழுக்குது... அதுக்குதான் வட்டிக்கு வாங்கிக் கொடுத்தேன்'' என்றார்.
மறுநாள்...
தேவரின் மனைவி பெயர் மாரிமுத்து. நன்கு படித்தவர். அத்தை மகன் என்ற முறையில் தேவரை மணந்துகொண்டவர். தானுண்டு; தன் வேலையுண்டு என்றிருப்பவர். தினமும் தேவர் காலையில் தன் அலுவலகத்துக்குப் புறப்படும்போது தன் மனைவியை அழைத்து, ஒரு குழந்தையிடம் பேசுவதுபோல கேட்பார்.
""மாரிமுத்து... எதுவும் வேணுமா...''
""இல்லை... வேணாங்க...''
""சரி ஆபிஸ் போய்ட்டுவரேன்...''
இது தினமும் நடக்கும் உரையாடல்.
அன்றும் அதுபோலவே கேட்டார்.
""மாரிமுத்து... எதுவும் வேணுமா?''
எப்போதும் "வேணாங்க' என்று சொல்லும் மாரிமுத்து அன்று சொன்ன பதில் வேறு.
""கோயில் கோயில்னு செலவு பண்றீங்களே. குடும்பத்துக்குன்னு (எனக்கென்று) எதனா செஞ்சிருக்கீங்களா?''
அந்தக் கேள்வியில் அப்படியே திகைத்து நின்றுவிட்டார் தேவர். பல இடங்களில் அவருக்கு சொத்துகள் இருந்தன. அவை அவரது மனைவிக்கும் உரிமையுடையவை தான். ஆனால் தன் பெயரில் இல்லை யென்பதை சுட்டிக்காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொண்டார் தேவர். விறுவிறுவென்று அலுவலகம் வந்தார்.
அப்போது நான் அவரது கதை இலாகாவில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். எங்களை அழைத்த தேவர் நடந்த விஷயத்தைச் சொல்லி, ""உடனே ஒரு கதை தயார் செய்யுங்கப்பா.
அதுல வர்ற பணத்தை என் மனைவி பேர்ல டெபாசிட் செய்யணும்'' என்றார்.
""என்ன கதை'' என்று கேட்டோம்.
""முருகன் கதைதான்...'' என்றார் உடனே. கேரள மாநிலம், காலடியில் வாழ்ந்த ஆரியாம்பாள்- சிவகுரு தம்பதிக்கு வெகுநாட்களாக குழந்தைப் பேறில்லை. அவர்கள் திருச்சூர் சிவன் கோவிலிலில் வேண்டிக்கொண்டு உறங்கியபோது கனவில் வந்த சிவன், "நூறாண்டு ஆயுளுள்ள மூட மகன் வேண்டுமா? பதினாறு ஆண்டு ஆயுளுள்ள மிக அறிவுடைய மகன் வேண்டுமா?' என்று கேட்டு மறைந்தார். திடுக்கிட்டெழுந்த தம்பதிகள் தங்களுக்குள் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து "அறிவாளி மகனே வேண்டும்' என சிவனிடம் இறைஞ் சினர். அதன்படி பிறந்தவரே ஆதிசங்கரர்.
(அவர் ஆயுள் பதினாறுதான். வியாச தரிசனத்தால் முப்பத்திரண்டு ஆனதாகச் சொல்வர்.)
மேற்சொன்ன நிகழ்வை அடிப்படையாக வைத்து ஒரு கதையை உருவாக்கினோம்.
அதுதான் "முருகன் அடிமை.' முத்துராமன், கே.ஆர். விஜயா நடிக்க, ஆர். தியாகராஜன் இயக்கினார். தேவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அந்தப் படத்தை கூடுதல் விலைகொடுத்து வாங்கி 25-3-1977-ல் வெளியிட்டனர் வினியோகஸ்தர்கள். அவ்வாறு கூடுதலாகப் பெற்ற பத்து லட்ச ரூபாயை தேவர் தன் மனைவி பெயரில் டெபாசிட் செய்தார்.
ஆனால் படம் சுமாராகத்தான் ஓடியது. அதாவது தேவர் வினியோகஸ்தர்களிடம் கூடுதலாகப் பெற்ற பணம் அவர்களுக்கு வசூலாகவில்லை. இது தேவருக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது. அடுத்த படத்தை குறைந்த விலைக்குக் கொடுத்து அவர்களின் நஷ்டத்தை ஈடு செய்ய நேர்ந்தது.
"முருகா என்று அவனையே சரணடைந்த போது எல்லாம் நன்றாகவே நடந்தது. என் குடும்பத்துக்காக- என் மனைவிக்காக என நினைத்துப் படமெடுத்த காசு வராமலே போய்விட்டது' என்று வருத்தப்பட்டார் தேவர்.
ஆனால் அவர் கூப்பிட்ட குரலுக்கு முருகன் வந்தான். எப்படி?
(தொடரும்)