கடந்த இதழில் நான் எழுதியதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போலீஸ் துரத்தி வந்தபோது ஒரு திருடன் இடறி விழுந்த இடத்தில் ஒரு சதுரக்கல் இருந்தது. அதை அவன் ஒரு நன்றிக்காக கும்பிட, அதை ஒருத்தி நம்பி காணிக்கை கொடுத்தாள். அங்கே கோவில் கட்டி ஊரை நம்பவைத்தான் திருடன்.
ஒரு சிற்பி தான் செய்த அம்மன் சிலைக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் சிலையை ஒரு பள்ளத்தில் குப்புறத் தள்ளிப் புதைத்துவிட்டான். சிலை யின் அடிப்பாக சதுரக்கல் மட்டுமே மேலே தெரிந்தது. அதுதான் திருடனை இடறி விழச் செய்தது. அதன்பிறகு திருடன் கோவில் கட்டினான். மக்கள் கூட்டம் அலைமோதியது.
காணிக்கைகள் குவிந்தன. திருடன் தர்ம கர்த்தா ஆனான். உண்டியல் பணத்தை எப்படித் திருடுவது என்று திட்டமிட்டான்.
உண்டியலுக்கு மூன்று சாவிகள். அதில் ஒன்றை தர்மகர்த்தாவான திருடன் வைத்துக் கொண்டான். மற்ற இரண்டு சாவிகளை ஊர்ப் பெரிய மனிதர்கள் இரண்டுபேரிடம் ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிட்டான். இவர்கள் மூன்றுபேரும் சேர்ந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை, பௌர்ணமி நாளில் உண்டியலைத் திறந்து எண்ணி வங்கியில் போட்டுவைப்பார்கள். ஆனால் தர்மகர்த்தாவான திருடன், அந்த மூன்று சாவிகளுக்கும் "டூப்ளிகேட்' வைத்திருந்தான். உண்டியல் திறப்பதற்கு முதல் நாள் இரவே யாருக்கும் தெரியாமல் உண்டியலைத் திறந்து பணம், நகைகளில் ஒரு பகுதியை எடுத்து வந்து தான் வசிக்கும் இடத்தில் மறைத்து வைத்துக்கொள்வான்.
இப்படிப்பட்ட நேரத்தில், தர்ம கர்த்தாவால்தான் இந்தக் கோவில் பிரபல மானது என்றெண்ணிய பொதுமக்கள், ஒரு அம்மன் பக்தையை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.
இல்லற வாழ்க்கை இனிது வளர்ந்து வரும்போது ஒருநாள்...
நாளை பௌர்ணமி ஆயிற்றே என்ற பதட்டத்துடன், ஒரு தோல் பையுடன் வேகமாக வெளியே சென்றான் தர்மகர்த்தா.
இந்த நள்ளிரவு வேளையில் தன் கணவன் இவ்வளவு அவசரமாக எங்கே போகிறார் என்று ஜன்னல்வழியே பார்த்தாள் அவன் மனைவி மீனாட்சி. வேகமாகச் சென்ற தர்மகர்த்தா அங்குவந்த தன் நண்பனுடன் சேர்ந்துகொண்டான். இருவரும் நான்குபுறமும் நன்கு நோட்டமிட்டு, யாருமில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு கோவிலின் பூட்டைத் திறந்து உள்ளே சென்றனர். இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்தாள் மீனாட்சி.
உள்ளே சென்றவர்கள் உண்டியலைத் திறந்து எடுக்கவேண்டியதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து கோவிலைப் பூட்டினார்கள். நண்பன் சோமு ஒரு திசையில் செல்ல, தர்மகர்த்தா தன் வீட்டுக்கு வந்தான். இரும்பு பீரோவைத் திறந்து நகைகளையும் பணத்தையும் எடுத்துவைத்தபோது, பணம் கீழே விழுந்து சிதறியது. அதை அவன் வேகவேகமாகப் பொறுக்கியெடுக்க, எதிரே அவன் மனைவி மீனாட்சியும் சுறுசுறுப்பாக அவற்றை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவன் வியப்புடன் அவளைப் பார்த்துவிட்டு, பின் பீரோவில் பணத்தை வைத்துப் பூட்டினான்.
ஒரு போலிச்சிரிப்புடன் மனைவியை அழைத்துக்கொண்டு படுக்கையறைக்குச் சென்ற தர்மகர்த்தா, ""மீனாட்சி... நீ என்னைத் தப்பா நினைக்காதே. இது... இது...' என்று இழுத்தான்.
""எனக்கு எல்லாம் தெரியும். நீங்க யாரோ ஒருத்தரோட சேர்ந்து கோவிலைத் திறந்து உள்ளே போனது.... திரும்பி வந்தது எல்லாம் ஜன்னல்வழியே பார்த்துக்கிட்டுதான் இருந்தேன். தர்மகர்த்தாங்கற போலிப்பேர்ல இப்படி கொள்ளைக்காரரா வாழறது மன்னிக்கமுடியாத தப்புங்க. அம்பாள் உங்களை சும்மா விடமாட்டா. இதுக்கு ஒரு முடிவு கட்டியே தீருவா...'' என்று ஆவேசமாகப் பேசினாள்.
""நீ பேசுறதைப் பார்த்தா என்னை நீயே காட்டிக் கொடுக்கப்போற போலிருக்கே...'' என்றான்.
""நான் காட்டிக் கொடுக்க மாட் டேன். நீங்க என் னோட கணவர். மனைவிங்கிற தர்மத்திலிருந்து நான் மாறமாட்டேன். ஆனா அம்பாள் உங்களை வாழவிடமாட்டா'' என்றாள்.
""என்னை வாழவிட மாட் டாளா? அடிபோடி பைத்தியக் காரி. இந்த அம்பாளையே நான்தான் வாழவச்சிக் கிட்டிருக்கேன்றது உனக்கு தெரியவேண்டிய நாள் வரும். அப்போ சொல்றேன்...'' என்றதோடு ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டே தூங்காமல் படுத்துக்கிடந்தார்கள்.
காலம் கடந்தது. தர்மகர்த்தாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஊரிலுள்ள அனைவரும் வந்து பார்த்துச் சென்றனர். பெரியோர் ஆசிபல கூறி ஆனந்தப்பட்டனர்.
சில பெண்கள் குழந்தையின் முதுகில் மூன்று சூலாயுத நரம்புகள் இருப்பதைக் கண்டு வியந்து, ""நம்ம தர்மகர்த்தாவுக்கு அம்பாளே மகளா வந்து பிறந்திருக்கா. இதோ பாருங்க முதுகுல சூலாயுதம்'' என்றனர்.
இதுவரை மீனாட்சி அவற்றை நரம்புகள் என்றே நினைத்திருந்தாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தர்மகர்த்தா பின்னர் தன் நண்பனிடம், ""இது உண்மையா சோமு?'' என்று கேட்டான் கலவரத்துடன். அதற்கு சோமு, ""அட போப்பா... பைத்தியம்! முதுகுல குழந்தைங்க எல்லாருக்கும் பச்சை நரம்பு இருக்கிறது சகஜம். உன் குழந்தைக்கும் அப்படித்தான். ஆனா உன் குழந்தைக்கு மட்டும் மூன்று பச்சை நரம்பு சூலாயுதம் மாதிரி இருக்கிறது ஆச்சரியம்தான்!'' என்றான்.
ஒருநாள் குழந்தை நடந்து வரும்போது, பட்டுக்குஞ்ச நூலை எடுத்து கையில் வைத்து விளையாடிக்கொண்டு தந்தையைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தது. அந்த சிரிப்பு பயங்கரமாக இருந்தது. பட்டுக்குஞ்சம் பாம்பாக மாறி படமெடுத்து தர்மகர்த்தாவை பயமுறுத்த, அவன் "ஓ...'வென்று கதறிவிட்டான்.
அப்போது அவன் மனைவி, ""என்ன? எதுக்கு இப்படி அலர்றீங்க?'' என்றாள். ""குழந்தை பேய் மாதிரி என்னை மிரட்டுது... அது கையில நல்ல பாம்பு. படமெடுத்து எங்கிட்ட வந்தது'' என்றான் பயம் விலகாமல். மீனாட்சி குழந்தையைப் பார்த்தாள். அது மழலையாகப் பேசி ""என்னைத் தூக்கு'' என்று கைகளை நீட்டியது.
குழந்தையைத் தூக்கிக் கொண்ட மீனாட்சி, ""ஊர் ஜனங்க அம்பாளே பிறந்திருக்கான்னு சொன்னதுலயிருந்து உங்களுக்கு ஒரு கிலி ஏற்பட்டு ருச்சு. ஒருவேளை அம்பாள்தான் குழந்தை உருவுல உங்களை எச்சரிக்கிறாள்னு நினைக்கிறேன். நீங்க எடுத்து வச்சிருக்கிற நகை, பணத்தையெல்லாம் உண்டியல்ல போட்டுட்டு, மன்னிப்பு கேளுங்க... இல்லைன்னா இதுமாதிரி சோதனை உங்களை வாட்டி வதைக்கும்...'' என்றாள்.
தர்மகர்த்தா தன் நண்பன் சோமுவை சந்தித்து நடந்ததை எல்லாம் சொல்லிப் பதறினான். ""என்னால நிம்மதியா தூங்கவே முடியல. ஒரே குழப்பமா இருக்கு. பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு!'' என்றான். அதற்கு சோமு, ""அந்தக் குழந்தை உன் வீட்ல இருக்குறவரைக்கும் உனக்கு மட்டுமில்ல. எனக் கும் பயம்தான். நான் சொல்றதைக் கேளு... யாருக்கும் தெரியாம அந்தக் குழந்தையை காட்ல கொண்டுபோய் விட்டுடுறேன்...'' என்று சொல்லி, அதன்படி குழந்தையைக் காட்டில் விட்டுவிட்டான்.
தற்செயலாக அங்கே வரும் சிற்பி, குழந்தை அழும் சத்தம் கேட்டு... அங்கே விரைந்து வந்து, குழந்தையைத் தூக்கிச் சென்று வளர்த்து வந்தான். குழந்தை பெரியவளானது. அல்லும் பகலும் அம்பாளையே வழிபட்டு வந்தாள்.
அவள் பெயர் லலிதா.
அவள் தான் வேண்டிக்கொண்டபடி, தன் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச்சங்கிலியை அங்காள பரமேஸ்வரி கோவில் உண்டியலில் போடுவதற்கு சிற்பி சிவலிங்கத்துடன் சென்றாள்.
அம்மன் தரிசனம் முடிந்ததும் சங்கிலியை உண்டியலில் போட்டுவிட்டு மறுநாள் உண்ணா நோன்பிருந்து அவ்வூரில் தங்கியிருந்தாள். நோன்பு முடிந்து கோவிலுக்கு வந்தபோது உண்டியலைத் திறந்து பணம், நகைகளை எண்ணிக்கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த லலிதா தனது நகையைக் காணவில்லையே... முதல்நாள் தானே உண்டியலில் போட்டேன்.... என்று பதறி, ""நல்லாப் பாருங்க என் செயின் இருக்கும்'' என்றாள்.
அப்போது, ""நீ யாரு பைத்தியம் மாதிரி உளர்ற...'' என்றான் தர்மகர்த்தா. ""நான் ஒண்ணும் பைத்தியம் இல்ல. இந்த கோவில் உண்டியல்ல களவு நடக்குது...'' என்று உரக்க குரல் கொடுத்தாள். கூட்டம் கூடிவிட்டது. நடந்ததை மக்களிடம் சொன்னாள். ""இவளை வெளியே பிடிச்சுத் தள்ளுங்க'' என்றான் தர்மகர்த்தா. லலிதாவின் முறையீட்டுக்கு செவிசாய்த்த சிலர், ""இதில் ஏதோ திருட்டு நடந்திருக்கு'' என்று வாதாட, தர்மகர்த்தா பக்கம் சிலர், ""தர்மகர்த்தா நீதிமான்.
அவர் நிர்வாகத்துலதான் கோவில் சிறப்பா செயல்பட்டுவருது'' என்றனர்.
இரண்டு கோஷ்டிகள் மோதிக் கொண்டதில், லலிதா தலையில் அடிபட்டு மயங்கிக்கிடந்தாள்.
சிற்பி லலிதாவைத் தூக்கிவைத்து, அவள் முகத்தில் நீர் தெளித்து மயக்கம் தெளிவித்தபிறகு, ஒரு மேடைமீது நின்று, ""பக்தர்களே... இங்கே நான் ஒரு உண்மையைச் சொல்றேன். முப்பது வருஷங்களுக்கு முன்ன...'' என்று நடந்ததைச் சொன் னார். ""நீங்க என்னை நம்பணும்னா குப்புறப் புதைந்துகிடக்கும் அம்மன் சிலையோட மேல்பகுதியிலுள்ள சதுரக்கல்லுல-
அதாவது நீங்க உருவமில்லாம வணங்கிவர்ற மேல்பகுதியில், என் பெயர் சிற்பி சிவலிங்கம்ங்கறதைச் சுருக்கி சி.சி.ன்னு இரண்டு எழுத்து இருக்கும். பாருங்க'' என்றார்.
ஒருசிலர் உள்ளே சென்று ஆராய்ந்து பார்த்தபோது... அது உண்மையென்று தெரியவந்தது.
அப்படியானால் அம்மன் உருவம் உள்ளே தான் புதைந்துகிடக்கிறதென்று, பொது மக்கள் தோண்டிப் பார்த்தபோது... அம்மன் இருப்பதை அறிந்து சிலையைக் கயிறு கட்டி நிமிர்த்திய பக்தர்கள், "தாயே! தாயே!' என்று கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.
இங்கே தர்மகர்த்தாதான் உண்டியலை மூன்று திருட்டுச்சாவி கொண்டு திருடி வந்திருக்கிறான் என்பதும், இவன் போலீஸாரால் தேடப்படும் திருடன் என்பதும் தெரியவருகிறது. தன் குற்றத்தை உணர்ந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறான்.
லலிதாதான் திருடன் மகள் என்பதும், அம்மனே மகள் உருவில் வந்து காட்டிக் கொடுத்திருக்கிறாள் என்பதையும் இறுதிக் காட்சிகளில் அமைத்தேன். இது கதைச் சுருக்கம்.
தர்மகர்த்தாவாக தேங்காய் சீனிவாசனும், அவர் மனைவி லலிதாவாக கே.ஆர். விஜயாவும், தர்மகர்த்தாவின் நண்பனாக எம்.ஆர்.ஆர். வாசுவும், தர்மகர்த்தா மகளாக சுஜாதாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
ஐந்து நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஆறாவது நாள் படப்பிடிப்பைத் தொடரமுடியாத சூழல் உண்டானது. இயக்குநர், தயாரிப்பாளருக்குள் மனஸ்தாபம். படம் கைவிடப்பட்டது.
பொதுவாக, பக்திப்படங்களை எடுக்கிறபோது எந்தத் தவறும் நேர்ந்துவிடாமல் கவனமாகப் பணியாற்றுவோம். அசைவம் உண்ணமாட்டோம். அப்படியிருந்தும் படப்பிடிப்பு நின்றுவிட்டதென்றால், எங்கோ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது. இவ்வளவு உழைப்புக்கு எனக்குக் கிடைத்தது ஆரம்பத்தில் அட்வான்ஸாகக் கொடுக்கப் பட்ட 501 ரூபாய் மட்டுமே. இது எனக்குப் பழகிப்போன விஷயம். படம் நின்ற காரணத் துக்கான பிரச்சினையை அந்த அங்காள பரமேஸ்வரியிடமே விட்டுவிட்டேன்!
(தொடரும்)