13
பிரபலங்கள் கண்ட அற்புதங்கள்!
கலைஞானம்
திரைப்படத்துக்காக நான் எழுதிய ஒரு அம்மன் கதையைக் கூறுகிறேன். ஒரு திருடன் சிறையிலிருந்து தப்பித்துக் காட்டிற்குள் ஓடுகிறான்.
அது ஒரு ஒற்றையடிப் பாதை.
போலீஸ் அவனைத் துரத்தி வருகிறது. ஒரு இடத்தில் அவன் கால் கல்லில்பட்டு இடறி விழுகி றான். விழுந்த இடத்திலிருந்த கல்லுக்கு அந்தப் பக்கம் ஒரு பள்ளம். அதில் மறைந்துகொள்கிறான்.
போலீஸ்காரர்கள் திருடன் எந்தப் பக்கம் போனான் என்பதை அறியாமல் திசை மாறிப் போய்விடுகிறார்கள். திருடன் எழுந்துவந்து, ""என்னை காப்பாற்றிய என் தெய்வமே... உன்னை என் ஆயுளுக்கும் மறக்க மாட்டேன்'' என்று அந்தக் கல்லைத் தொட்டுக் கும்பிட்டான். அதே ஒற்றையடிப் பாதையில் வந்த ஒருத்தி, ""இது என்ன சாமி, கும்புடுறீங்க?'' என்றாள்.
""இது சக்திவாய்ந்த தெய்வம்'' என்றான்.
""அப்படியா? தெய்வத்தோட பேர் என்ன?'' என்று கேட்டாள்.
""வனபத்ரகாளி.''
""வராத கடனை வசூலிக்க தான் போய்க்கிட்டிருக்கேன்.
அந்தப் பணம் ஆயிரம் ரூபாயும் எனக்கு கிடைச்சிட்டா, அதுல 250 ரூபாய் வனபத்ரகாளிக்குத் தருவேன். இது சத்தியம்!'' என்று சொல்லிச் சென்றாள். அது போலவே அவளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. அவள் திரும்பி வந்தபோது திருடன் காலில்பட்ட காயத்திற்கு பச்சிலை மருந்து போட்டுக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியோடு பணம் வாங்கிவந்த அவள் திருடன் தாடியும் மீசை யுமாக இருந்ததைப் பாôத்து, ""பூசாரி, இந்தா 250 ரூபாய்... எனக்கு ஆயிரம் ரூபா கிடைச்சிட் டது'' என்று அவனிடம் கொடுத்ததோடு, ""இது ஏன் இப்படி பொறம்போக்கு நிலத்தில இருக்கணும்? இதுக்கு ஒரு கோவில் கட்டுங்க. நானும் இது கண்கண்ட அம்மன்னு ஊர்ல சொல்றேன்'' என்று கூறிவிட்டுச் சென்றாள்.
இருநூற்று ஐம்பது ரூபாயை வாங்கின திருடன், "இந்த மாதிரி முட்டாள் ஜனங்க இருக்குறவரை நம்ம வாழ்க்கைக்கு வேறவழி தேவையில்லை...' என்று, வேப்பிலை சேலை கட்டி, இரு கைகளிலும் வேப்பிலை வைத்துக்கொண்டு அங்கேயே சாமியாராக உட்கார்ந்து விட்டான்.
வனபத்ரகாளிக்கு 250 ரூபாய் கொடுத்துச்சென்றவள் ஊரெல்லாம் பரப்பி விட்டாள்- கண்கண்ட தெய்வமென்று!
நொந்து நொடித்துப்போன மக்கள் வனபத்ரகாளியை வழிபட ஆரம்பித்தனர். ""எதுக்காக அம்மனுக்கு உருவம் சதுரமான கல்லா மட்டும் இருக்கு?'' என்று கேட்டதற்கு, ""சில கோவில்கள்ல உருவம் கிடையாது'' என்று விளக்கம் சொல்லி ஏமாற்றிவந்தான்.
சேர்ந்த பணத்தில் சிறு கோவில் ஒன்று கட்டினான். காலப்போக்கில் கோவில் பிரபல மாகி மக்கள் அலை அலையாக வந்தனர்.
அது ஒரு ஊராயிற்று. திருடனே தர்மகர்த்தா வானான். உண்டியலில் பணம் குவியக்குவிய திருடன் சும்மா இருப்பானா? அவன் வேலையை ஆரம்பித்தான். எப்படி? கொஞ்சம் பொறுத்திருங்க... இதன் மூலக்கதையைச் சொல்லிவிடுகிறேன்.
ஒரு சிற்பி அழகான அம்மன் சிலையைச் செதுக்கினான். ஒவ்வொரு ஜமீன்தார்களிட மும் சென்று, ""இந்த அம்மனுக்கு ஒரு கோவில் கட்டுங்க'' என்றான்.
""இருக்கிற கோவில்களையே பராமரிக்க முடியல... நீ வேற வந்துட்டே'' என்று சிற்பியை அவமதித்து அனுப்பவே, அவன் இதயம் நொந்து வெந்து, "இனிமேல் நான் சிலை வடிக்கவே மாட்டேன். இந்த தொழில் என்னோடு போகட்டும்' என்று ஒரு வண்டி யில் அம்மனை ஏற்றிட அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து, ""சிலையை பக்கத்து ஊருக்கு கொண்டு போறேன். ஆளுக் கொரு கை கொடுங்க'' என்றான். அனைவரும் கஷ்டப்பட்டு அம்மனை ஏற்றிவிட்டார்கள்.
சிற்பியே மாட்டு வண்டியை ஒட்டிக் கொண்டுவந்து, ஒரு காட்டிற்குள் இருந்த பள்ளத்தில் வண்டியை சாய்த்துவிட்டான். சிலை பள்ளத்தில் குப்புற விழுந்தது. மண்வெட்டி கொண்டுவந்து வாரிப் போட்டு மூடிவிட்டு வந்துவிட்டான். காலம் கடந்தோடியது. திருடனை கால் இடறச் செய்த சதுரக்கல்தான் அம்மன் சிலை. அது குப்புற மண்ணுக்குள் மறைந்திருக்கிறது.
இந்த ரகசியம் எப்போது வெளிப்படுகிறது?
முதலில் இந்தக் கதை சினிமாவாக எடுக்கப்பட்டது எப்படியென்று சொல்லிவிட்டு, அதன்பிறகு அம்மன் கதையைத் தொடர்கிறேன்.
அந்தக்காலத்தில் "தமிழ் சினிமா' என்று ஒரு பத்திரிகை இருந்தது. அதன் ஆசிரியர் கறீம் என்பவர். அதனால் அவரை "தமிழ் சினிமா கறீம்' என்றே அழைப்பார்கள்.
அவர் ஒருசமயம் எம்.ஜி.ஆர். அவர்களைத் தாக்கி ஏதோ எழுதிவிட்டார். கறீம் மதுரை சென்றிருந்தபோது, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவரைத் தாக்கிவிட்டார்கள். செய்தியை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள், மதுரை முத்து என்ற பிரபல தி.மு.க. முக்கியஸ்தரை போனில் தொடர்புகொண்டு, ""தமிழ் சினிமா கறீமை யாரும் கைநீட்டக்கூடாது. அவர்மீது தூசிகூடப் படாமல் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று சொல்லிவிட்டார்.
எம்.ஜி.ஆர். சொன்னதுபோல் தமிழ் சினிமா கறீமை அழைத்து வந்துவிட்டார்கள்.
அவரிடம் எம்.ஜி.ஆர்., ""எதிர்பாராத தவறு நடந்துவிட்டது. அதற்காக நான் உங்களிடம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று சொல்லியதுடன்- கறீம் குடும்ப ஆரோக்கியத்தையும் வசதி வாய்ப்புகளையும் கேட்டறிந்து, ""நீங்கள் ஒரு படம் ஆரம்பியுங்கள். நான் நடித்துக் கொடுக்கிறேன். என் சம்பளம் பற்றிக் கவலைப்படவேண்டாம்'' என்று தைரியம் சொல்லி அனுப்பிவைத்தார்.
கறீம் சினிமா எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுத்தும், கதைகள் கேட்டும், பைனான்சியர்கள் யாரெல்லாம் இருக்கிறார் களோ அங்கெல்லாம் அலைந்து திரிந்தும் செலவு செய்ததுதான் மிச்சம். அவரால் பெரிய அளவில் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. அவ்வளவே எனக்குத் தெரியும். கொஞ்ச நஷ்டத்தோடு பிலிம் ஏஜெண்ட் மற்றும் டிஸ்டிரிபியூட்டரான உடந்தை மணாளனிடம் சென்று தன் கஷ்டங்களைச் சொல்லி, ""எம்.ஜி.ஆர வச்சு என்னால படமெடுக்க முடியல. ஆனா ஒரு சிறிய படமாவது எடுக்கணும். அதுலதான் என் கஷ்டம் தீரும். நீங்கதான் உதவி செய்யணும்'' என்று சொன்னார்.
உடந்தை மணாளன் என்னுடைய நண்பர். எனது "பைரவி' படத்தை சில ஏரியாக்கள் விற்றுக்கொடுத்தவர். அவரிடம் "பைரவி' படம் ரிலீஸ் ஆனபிறகு ஒரு அம் மன் கதையைச் சொன்னேன். அந்தக் கதை பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டி னார். அதை "தமிழ் சினிமா' கறீமிடம் சொல்லி, ""முதல்ல கலைஞானம் சாரை சந்திச்சு அந்தக் கதை வேணும்னு ஒரு அட்வான்ஸ் கொடுத்துடுங்க'' என்று சொல்லிவிட்டு, ""அதே அம்மன் கதையை வாங்கச்சொல்லி கலைப்புலி எஸ். தாணுகிட்ட இன்னைக்கு காலைலதான் சொன்னேன். அவரு கலை ஞானத்தை சந்திக்கறதுக்கு முன்னால நீங்க முந்திக்கங்க'' என்று சொல்லியிருக்கிறார்.
உடனே கறீம் என்னை வந்து சந்தித்து, ""நீங்க உடந்தை மணாளனுக்கு சொன்ன கதையை எனக்கு கொடுக்கணும். இது ஒரு எழுத்தாளனுக்கு செய்யிற உதவி'' என்று 501 ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்தார். எனக்கு கறீமை ஏற்கெனவே தெரியும். மேலும் அவர் ஒரு எழுத்தாளர். எந்த விலையும் பேசாமல் அட்வான்ஸைப் பெற்றுக்கொண்டு, ""முதல்ல இந்தக் கதையை டைரக்ஷன் பண்ண கே.எஸ். கோபாலகிருஷ்ணனை ஏற்பாடு செய்றேன்'' என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார்.
இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனை சந்தித்து கதையைச் சொன்னேன். அவர், ""கதை நல்லா இருக்கு'' என்று சொல்லிவிட்டு என்னையே கூர்ந்து பார்த்தார். "கதையில ஏதோ தவறு இருக்கும்போல...' என்று நானும் அவரையே கூர்ந்து பார்த்தேன்.
அவர் கண்களை மூடித் திறந்ததும்...
""கலைஞானம்... நீ இப்ப எந்த தயாரிப்பாளருக்கு இந்த கதையைச் சொல்லியிருக்கிறே?'' என்றார்.
""தமிழ் சினிமா கறீமுக்கு'' என்றேன்.
அப்படியானா நீ எனக்கொரு உதவி செய்... படப்பையில ஒரு நிலம் விலைக்கு வருது... ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய்க்கு ரெண்டு ஏக்கர் அருமையான நிலம். அதுக்கு 40 ஆயிரம் அட்வான்ஸ் கேட்கிறாங்க. நீ கறீமிடம் சொல்லி அதை வாங்கிக்கொடு. அப்புறம் சம்பளம் நீ சொல்றபடி நான் வாங்கிக்கிறேன்'' என்றார்.
நான் கறீமிடம் சொன்னேன். அதற்கு அவர், ""கே.எஸ். கோபாலகிருஷ்ணனிடம் டைரக்ஷன் செய்ய ஒப்புக்கிட்டதா ஒரு கடிதம் வாங்கிக்கொடுங்க... அதைக் காட்டிப் பணம் வாங்கிக்கொடுக்கிறேன்'' என்றார்.
கறீம் கேட்டபடி கடிதம் வாங்கிக் கொடுத்து விட்டேன். கறீம் கடிதத்தை பைனான்சியரி டம் காட்டி பணம் வாங்கிவந்து கோபால கிருஷ்ணனுக்குக் கொடுத்துவிட்டார்.
"அம்மன்' என்ற தலைப்பை மாற்றி "ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி' என்று பெயர் வைத்தோம்.
ஆரம்பத்தில் நான் எழுதியதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
போலீஸ் துரத்தி வந்தபோது ஒரு திருடன் இடறி விழுந்த இடத்தில் ஒரு சதுரக்கல் இருந்தது. அதை அவன் ஒரு நன்றிக்காக கும்பிட, அதை ஒருத்தி நம்பி காணிக்கை கொடுத்தாள். அங்கே கோவில் கட்டி ஊரை நம்பவைத்தான் திருடன்.
ஒரு சிற்பி தான் செய்த அம்மன் சிலைக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் சிலையை ஒரு பள்ளத்தில் குப்புறத் தள்ளிப் புதைத்துவிட்டான். சிலையின் அடிப்பாக சதுரக்கல் மட்டுமே மேலே தெரிந்தது. அதுதான் திருடனை இடறி விழச் செய்தது. அதன்பிறகு திருடன் கோவில் கட்டினான். மக்கள் கூட்டம் அலைமோதியது. காணிக்கைகள் குவிந்தன. திருடன் தர்மகர்த்தா ஆனான். உண்டியல் பணத்தை எப்படித் திருடுவது என்று திட்டமிட்டான்.
(தொடரும்)