கடந்த இதழில், முதன்முதலாக நான் சபரிமலை சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன். மூன்றாவது ஆண்டு சென்றபோது நேரிட்ட வித்தியாசமான ஒரு சம்பவம்...
1970-களின் ஆரம்பத்தில், நான், இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளர் சித்ராலயா கோபு, கே. ராஜன், எனது உதவியாளர் பனசை மணியன் ஆகிய நால்வரும் சேர்ந்து சபரிமலை செல்ல முடிவு செய்தோம். நான்குபேரும் பணம்போட்டு ஒரு வாடகை காரை அமர்த்திக் கொண்டோம். அந்த கார் ஓட்டுநர் ஒரு கிறிஸ்துவர். அப்போதுதான் தவணை முறையில் காரை வாங்கியிருந்தார். இது முதல் பயணம். அவர் கேட்டுக்கொண்டபடி சற்று கூடுதலாகவே முன்பணம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டோம்.
பம்பையை அடைந்ததும் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு பம்பை நதியில் நீராடச் சென்றோம். பனித்துளிபோல மெலிதாக சாரல் மழை பொழிந்துகொண்டிருந்தது. குளித்துவிட்டு கார் நிறுத்தத்திற்கு வந்தோம். தரையெங்கும் லேசாக நீர் தேங்கியிருந்தது. எங்கள் இருமுடிகள் காரில் இருந்தன. அதை எடுத்துக்கொண்டு மலையேற வேண்டியதான். அப்போது கார் டிரைவர் தாஸ், ""சார்... எனக்கும் ஐயப்பனை தரிசிக்கணும்னு ஆவலா இருக்கு. நானும் வரட்டுமா?'' என்று கேட்டார்.
நான் சற்று யோசித்தேன். ஏனென்றால் சுவாமியை தரிசிக்க 48 நாட்கள் முறையாக விரதமிருக்க வேண்டும். அதிலும் பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பது மிக முக்கியமான ஒன்று. அந்த ஓட்டுநருக்கோ திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்தன. இதைச் சொல்லி "நீ வரவேண்டாம்' என்றால், கிறிஸ்துவர் என்பதால் வேண்டாம் என்கிறா ரென்று அவர் தவறாகவும் நினைக்கக்கூடும். பிறகு பக்குவமாக அவரிடம் விவரத்தைக் கூறினேன். அவரோ தான் பத்தியமாகவே இருப்பதாகச் சொன்னார். வேறுவழியின்றி அவரை பம்பையில் நீராடிவிட்டு வருமாறு சொல்லி அனுப்பினேன்.
இந்த நிலையில், காரிலிருந்த எங்கள் இருமுடிகளை எடுத்துக்கொண்டோம். சித்ராலயா கோபு சூடம் ஏற்றி ஆராதனைசெய்து அதை காருக்கு முன்னால் போட்டார். லேசாக தேங்கியிருந்த தண்ணீரில் அந்த சூடம் விழுந்த மறுநொடி அந்த விபரீதம் நிகழ்ந்தது. சட்டென்று அங்கு தீப்பற்றியது. எல்லாரும் ஒரு கனம் திகைத்துப்போனோம். காரில் தீ பரவ ஆரம்பிக்க, அங்கு பரபரப்பாகிவிட்டது. "ஐயப்பா! ஐயப்பா!' என்று கத்தியபடியே மண்ணை அள்ளிப்போட்டு தீயை அணைக்க முயன்றோம். இதைப்பார்த்து ஓடிவந்தார் ஓட்டுநர் தாஸ். தவணைமுறையில் புதிதாக வாங்கிய கார் எரிவதைப் பார்த்ததும் அவர் மனம் எப்படிப் பதறியிருக்கும்! ""அய்யப்பா...'' என்று கத்தினார் பாருங்கள்... நிச்சயம் அது மலையிலிருந்த அந்த அய்யப்பனுக்கே கேட்டிருக்கும்.
சுமார் இருநூறு கார்கள் வரிசையாக நின்றிருந்த அந்த பார்க்கிங்கில் கடைசியாக தீயணைப்பு வாகனமும் இருந்தது. அவர்கள் உடனே விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
கார் சற்று சேதாரமானாலும், முழுதாய் எரிந்துவிடவில்லை. சில நிமிடங்களில் நடந்து முடிந்த சம்பவத்தால் நாங்கள் திகைத்துதான் போனோம். அப்போது எங்களிடம் வந்த தாஸ், ""சாமியப் பாக்கணும்ங்கற ஆர்வத்துல நான் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன். மனைவியோட நான் பத்தியமா இல்ல. என்னை மன்னிச்சிடுங்க. அந்த அய்யப்பசாமி என்னைக் காப்பாத்திட்டாரு'' என்று அழுதார்.
சரி; தீப்பிடித்தது எப்படி? எஞ்சினில் பெட்ரோல் கசிவு இருந்திருக்கிறது. நாங்கள் குளித்துவிட்டு வர முக்கால் மணி நேரம் ஆனதால், அதுவரையில் ஒரே இடத்தில் சொட்டிக்கொண்டிருந்த பெட்ரோல் அந்த மழைநீரில் தேங்கி நின்றிருக்கிறது. சித்ராலயா கோபு கற்பூரத்தைப் போட்டதும் சட்டென்று தீப்பிடித்துவிட்டது. இதனால் எஞ்சின் சேதமாகிவிட்டது. இப்போது உள்ளதுபோல தொலைத்தொடர்பு வசதி அப்போது இல்லை. பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மெக்கானிக் ஷெட் இருக்கிறது. அங்கு பேருந்தில் சென்று, அங்கிருந்து ஜீப் எடுத்துவந்து காரை ஷெட்டுக்கு எடுத்துச்செல்லுமாறு டிரைவரிடம் சொல்லி அனுப்பிவிட்டு, நாங்கள் சாமி தரிசனம் செய்யச்சென்றோம்.
வழிபாடு முடிந்து கார் ஷெட் இருக்கும் இடத்துக்கு வந்தோம். காரை பழுதுபார்க்க ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும் என்றனர். கைவசம் அவ்வளவு பணம் இல்லாததால், டிரைவரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, மெக்கானிக் ஷெட் முகவரியை வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தோம். பணத்தை ஏற்பாடு செய்து அஞ்சலகம் மூலமாக அனுப்பிவைத்தேன்.
பொதுவாக அய்யப்ப சாமிக்கு மாலை போட்டால் 48 நாட்கள் மிகத்தூய்மையாக விரதமிருப்பேன். அப்படியிருந்த என்னை அய்யப்பன் ஏன் ஐந்தாயிரம் ரூபாய் (சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு) அபராதம் கட்டச் செய்தான் என்பது புரியவில்லை. அது அவனுக்கே வெளிச்சம்!
இனி ஒரு திரைப்பட சம்பவம் பார்ப்போமா...
சாண்டோ சின்னப்பா தேவருடன் குற்றாலத் தில் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது தேவர், ""கலைஞானம், யானை, குதிரை, பசு, பாம்பு, நாய் இதெல்லாம் வச்சு படம் எடுத்திட்டோம். வேற எந்த மிருகத்தை வச்சு படம் எடுக்கலாம்?'' எனக் கேட்டார்.
அதற்கு நான், ""அண்ணே... தேனி, ஆண்டிப்பட்டி பக்கத்துல கன்னியப்ப பிள்ளைப்பட்டி கிராமத்தில, என்னோட தாய்வழி தாத்தா வெள்ளையன் என்பவர் இருந்தார். ஜல்லிக்கட்டு காளை வளர்த்து பல போட்டிகள்ல ஜெயிச்சு வந்தார். வல்லூறு வளர்த்து காடை பிடிக்கப் பயன்படுத்தினார்.
சண்டைச் சேவலும் வளர்த்தார். வேட்டை நாயும் வளர்த்தார். இதுல முக்கியமானது அவர் வளர்த்த ஆடு. அவரோட ஆடு பல ஊர்கள்ல நடந்த ஆட்டுக்கிடா முட்டுச் சண்டையில பரிசுகளை அள்ளிச்சு. அதுமட்டுமில்ல. தாத்தாவுக்கு ஒரு விசுவாசமான வேலையாளாவும் இருந்திச்சு. அவரோட தோட்டத்துல மிளகாப்பழம் போட்டிருந்தாங்க. ராத்திரி காவலுக்குப் போகும்போது, அந்த ஆடு அரிக்கேன் விளக்கை வாயில கவ்விக்கிட்டுப் போகும். அந்த வெளிச்சத்துலயே தாத்தா பின்னா டியே போவார். அந்த ஊர்ல பாம்புகள் நிறைய இருந்துச்சு. அரிக்கேன் லைட்டோட முன்ன போகும் ஆடு பாம்பைப் பார்த்திட்டா நின்னுடும். அதை வச்சு தாத்தா சுதாரிச்சுக்குவார். நெருப்பைத் தாண்டுற பயிற்சி, கிணத்துல குதிக்கிற பயிற்சினு கொடுத்து அந்த ஆட்டை ரொம்ப புத்திசாலியா வளர்த்தார்.
ஒருமுறை முட்டுக்கிடா போட்டியில ஆட்டோட தலையில பலமா அடிபட்டது.
அதுக்குப்பிறகு அது போட்டிகளுக்குப் போகல. வீட்லயே இருந்து வயதாகி இறந்து போச்சு. அந்த ஆட்டுக்காக ஊரே துக்கப் பட்டது. தன்னோட தோட்டத்துல அந்த ஆட்டுக்கு சமாதி வச்சார் தாத்தா. அதுபோல ஒரு ஆட்டை வச்சு படம் எடுக்கலாம்ணே...'' என்றேன்.
அந்த யோசனை அவருக்கு மிகவும் பிடித்துப் போக, மிகவும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.
மறுநாள்...
கதை விவாதத்திற்காக அமர்ந்தோம். ஆனால் கதைக் கான அடிப்படைச் சம்பவம் எதுவுமே சிக்கவில்லை.
""அண்ணே... ஆடு அசைய மாட்டேங்குது. பூனையை வச்சு பண்ணலாமா?'' என தூயவன் கேட்க, நான் பார்த்த ஒரு குறும்படம் எனக்கு நினைவுக்கு வந்தது. அதை தேவரிடம் சொன்னேன்.
ஒரு தம்பதி. அவர்களுக்கு பத்து வயது மகன். வீட்டில் அழகுக்காக ஒரு தொட்டி யில் ஒற்றை மீன் வளர்ப்பார்கள். மீன் தொட்டிக்குமேலே ஒரு கூண்டில் கிளி வளர்ப்பார்கள். மீன் தொட்டியிலிருந்து துள்ளி விளையாட, குஷியான கிளி கூச்சலிட்டு மகிழும். அவை இரண்டுக்கும் இடையே நல்ல நட்பு. ஒருநாள் வீட்டிலுள்ள அனைவரும் வெளியே போயிருந்த நேரம்... கிளியை மகிழ்விக்க மீன் மிக உயரமாக எம்பிக் குதிக்கையில், தொட்டிக்கு வெளியே மேஜைமீது விழுந்துவிடும். இதைப் பார்த்து கிளி பதறும். அந்த நேரம், பார்க்கவே அச்ச மூட்டும் தோற்றத்தில் ஒரு கருப்புநிறப் பூனை மாடிப்படியிலிருந்து இறங்கி மேஜையருகே வரும். பூனையால் மீன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எண்ணி அச்சத்தில் உறைந்துபோகும் கிளி. மேஜைமீது ஏறிய பூனை துடிக்கும் மீனை வாயால் கவ்வும். ஆனால் மீன் சிக்காமல் நழுவும். இப்படிப் பலமுறை நழுவும் மீனை ஒருவழியாக வாயில் கவ்வும் பூனை, அப்படியே கிளியைப் பார்க்கும். கிளி அதிர்ச்சியுடன் பூனையைப் பார்க்கும். தொட்டி அருகே வந்த பூனை தன் வாயிலிருந்த மீனைத் தொட்டிக்குள் போட்டுவிட்டுப் போகும். மறுபடி மீனும் கிளியும் மகிழ்ச்சியுடன் குதியாட்டம் போடும். இதுதான் அந்தக் குறும்படக் கதை!
""பூனைக் கதையும் நல்லாத்தான் இருக்கு. நாளைக்கு முடிவெடுப்போம்'' என்றார் தேவர்.
மறுநாள்...
""பூனைக் கதையை அடுத்து யோசிப்போம். இப்போ ஆட்டுக்கிடா கதையைப் பேசிப் பார்க்கலாம்'' என்றார் தேவர்.
என்ன பேசிப் பார்த்தும் காட்சி அமைய வில்லை. மாலை ஆகிவிட்டது. ""முருகா! ஏன் இப்படி சோதிக்கிற? ஆடு உன்னோட ஒரு வாகனம்தானே... அதை வச்சி படம் எடுக்க ஒரு கதையைத் தரக்கூடாதா?'' என்று நொந்துகொண்டார். அப்போது தேவரின் தூரத்து உறவினர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
""வணக்கம் தேவரய்யா! காலைலயே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு இருந்தேன். ஆனா, கோர்ட்ல ஒரு வேலையாகிப் போச்சு... அதான் இப்ப வந்தேன்'' என்றார்.
""கோர்ட்ல என்னப்பா?'' என தேவர் கேட்டார்.
""எங்க ஊரு ராணி, தன்னோட ஜமீந்தார் கணவன்மேல கேஸ் போட்டாங்க. அது ராணிக்கு சாதகமா தீர்ப்பாகியிருக்கு. நீதிபதியே அசந்து போயிட்டாரு. அப்படி ஒரு புதுமையான வழக்கு!''
""அப்படி என்ன புதுமை?'' என தேவர் கேட்க... நாங்களும் வந்தவரின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தோம்.
""எங்க ராணியம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. இருந்தாலும் ஜமீனுக்கு என்னவோ ஒரு மோசமான நடத்தைகொண்ட பொண்ணோட தொடர்பாகிப் போச்சு. ராணியம்மா எவ்வளவு கெஞ்சியும் ஜமீன் திருந்தல. நகை, பணம்னு அந்தப் பெண்ணுக்கு அள்ளிக்குடுத்துக்கிட்டு இருந்தாரு. உடனே தன் கணவர்மேல ராணியம்மா, "எங்க கல்யாணத்தின்போது நான் எங்க வீட்ல இருந்து சீதனமா கொண்டுவந்த பொருட்களைத் திரும்பத் தரணும். அவர் பேர்ல இருக்க சொத்துலயும் சரிபாதியை எனக் குத் தரணும்'னு வழக்கு போட்டாங்க.
ஜட்ஜய்யா, "இதென்ன புதுசா இருக்கு? இப்படி கேட்கிறீங்களேம்மா?'னு கேட்டாரு. அதுக்கு ராணியம்மா, "அய்யா, தப்பான பொண்ணோட சகவாசம் வச்சிருக்க என்னோட கணவர் நிச்சயம் ஒரு நாள் தெருவுக்கு வந்தே ஆவார். அப்படி ஒரு இக்கட்டு அவருக்கு வரும் போது அவரை நான்தானே காப்பாத்தணும்? அதுக்காகத்தான் அவரோட சொத்துல பாதி கேட்கிறேன்' என ராணி சொன்னாங்க.
ராணியம்மாவின் புத்திசாலித்தனமான நியாயத்தை உணர்ந்த ஜட்ஜய்யா, எங்க ராணியம்மாவுக்கு சாதகமான தீர்ப்பைத் தந்தார். தீர்ப்பு என்னானு தெரிஞ்சுக்க ஊரே ஆர்வமா இருந்திச்சு'' என்றார். தொடர்ந்து தேவரும் அவரும் வேறு விஷயங்களைப் பேசினார்கள். சிறிது நேரத்திற்குப்பின் அவர் கிளம்பிப் போய்விட்டார்.
தேவர் என்னைப் பார்த்து, ""கதை கிடைச் சிடுச்சா?'' என்றார் உற்சாகமாக!
""அருமையான கதை. படத்தோட க்ளைமாக்ஸ்... கோர்ட் சீன்தான்'' என்றேன்.
""அப்புறமென்ன? மிச்சத்த ஊர்ல வச்சு பேசி... ஷூட்டிங்கை ஆரம்பிச்சுக்கலாம். கிளம்புங்க சென்னைக்கு'' என்றார்.
சென்னை வந்ததும் போட்டி போட்டுக்கொண்டு காட்சிகள் யோசித்து "ஆட்டுக்கார அலமேலு' முழுக்கதையையும் எழுதி முடித்தோம்.
1977-ல் அப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது. தேவரின் முருக பக்திக்கும், "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்னும் பொன்மொழிக்கும் இந்த சம்பவம் மிகச்சிறந்த உதாரணம்.
(தொடரும்)