ருதமலை முருகன் கோவிலில் சின்னப்பா தேவரின் அறுபதாம் கல்யாண விழா நடந்தது. அன்றிரவு புலவர் கீரனின் சிறப்புரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் சொற்பொழிவாற்றும் போது திருவானைக்கா ஆலய வரலாறு பற்றிக் குறிப்பிட்டார்.

மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது சருகுகள் விழாமலிருக்க வலையமைத்து வழிபட்டுவந்தது சிலந்தி. சிவனை வழிபடவந்த யானை அதை குப்பையென்றெண்ணிக் கிழித்தெறிந்தது. தினமும் இப்படியே நடக்க, கோபம்கொண்ட சிலந்தி யானையின் துதிக்கையில் நுழைந்து கடிக்க, வலி பொறுக்காத யானை துதிக்கையை ஓங்கியடிக்க, இரண்டுமே இறந்தன. அவற்றின் பக்திக்கு மெச்சிய இறைவன் அவற்றுக்கு அருள்புரிந்தான். அந்த யானையின் பெயரால் தான் அந்தத் தலம் திருவானைக்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு இறைவன் மோட்சமருளினான்.

அந்த சிலந்தி என்னாயிற்று?

சோழ மன்னன் சுபதேவன்- கமலவதி தம்பதிக்கு நெடுநாட்களாக பிள்ளைப் பேறில்லை. சிதம்பரம் தலத்துக்கு வந்து மனமுருக வேண்ட, ஈசனின் அருளால், அந்த சிலந்தியின் ஆன்மாவே கமலவதியின் வயிற்றில் கருவுற்றது. வளர்பிறைபோல கரு வளர்ந்து ராணி நிறைமாத கர்ப்பிணி யானாள். மகப்பேறுக்கான நேரமும் நெருங்கியது. அது மன்னனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

அரசவையில் புலவர்களும் ஜோதிடர்களும் குழுமியிருந்தனர்.

அவர்களிடம் மன்னன் சுபதேவன், ""குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது. இது நல்ல நேரம்தானே?'' எனக் கேட்டான். அதற்கு அவர்கள், ""மன்னா, இன்னும் ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) கடக்க வேண்டும். அதற்குள் பிள்ளை பிறந்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் தீங்கு விளையும்'' என்றனர்.

அதைக்கேட்ட மன்னன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.

Advertisment

செய்தி ராணிக்குத் தெரிவிக்கப் பட்டது. அதைக்கேட்டு அவளும் அதிர்ந்தாள். ஆனால் பிரசவ வலி வந்தபின்னர் என்ன செய்வது! அதே சமயம் தன்னைவிட நாடும் நாட்டுமக்களுமே முக்கிய என்பதை அந்த வேதனையிலும் அவள் உணர்ந்தாள். அதற்காக தன்னையும் தன் குழந்தையையும் தியாகம் செய்யவும் துணிந்தாள். உடனே தாதியர்களை அழைத்த ராணி, ""என்னை கயிற்றால் கட்டி சுவரோரம் தலைகீழாக சாய்த்து வையுங்கள்'' என்றாள். பணிப்பெண்கள் தயங்கினாலும், அரசியின் கட்டளையென்பதால் அவ்வாறே செய்தனர். படுத்த நிலையிலிருந்தால் குழந்தை பிறந்துவிடும் என்பதால், அதைத் தடுக்க இந்த ஏற்பாடு. பிரசவ வேதனை உயிரை வதைத்தபோதும் அதை வைராக்கியத்தோடு தாங்கிக்கொண்டாள் அரசி. நேரம் ஆக ஆக ராணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

தலைப்பிரசவம் என்பது மறுபிறவிக்குச் சமம் என்ப தால், ஆங்காங்கே உள்ள கோவில்களில் மக்கள் ராணிக் காகவும் குழந்தைக்காகவும் கண்ணீருடன் பிரார்த்தித் தார்கள். மன்னன் சுபதேவன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மரம்போல் அமர்ந்துவிட்டான். ராணியின் நிலைமை மிகவும் மோசமாக, பணிப்பெண்கள் கதறியழுதனர். அரண்மனையே சூன்யமாகிப்போனது. வானமும் அழுவதுபோல இடியுடன் மழைபெய்யத் தொடங்கியது. அப்போது ஒரு நாழிகை கடந்துவிட்டதாக தகவல்வர, ராணி அப்படியே தரையில் சாய்ந்தாள். குழந்தை பிறந்து வீறிட்டு அழுதது.

ராணியின் உயிரும் பிரிந்தது! அவள் தலைகீழாக ஒரு நாழிகை இருந்த காரணத்தால் குழந்தையின் கண்கள் சிவந்தே இருந்தன.

குழந்தை வளர்ந்தான். எல்லா தகுதிகளும் பெற்று சோழ தேசத்தின் மன்னனானான். கோ என்றால் அரசன். அவன் கண்கள் சிவந்த நிலையிலேயே இருந்ததால் புலவர்கள் அவனை "கோச் செங்கண் சோழன்' எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் செங்கண் சோழனுக்கு தனது முந்தைய சிலந்தி ஜென்மம் நினைவில் எட்டியது. திருவானைக்கா சென்று கோவிலை மேலும் சிறப்புடன் அமைத்து அழகாக்கி மகிழ்ந்தான். சோழநாட்டில் பல சிவஸ்தலங்களை உருவாக்கி னான். ஒரு கட்டத்தில் தான், தன் தாயின் வயிற்றில் கருவுற்றது தில்லைக்கூத்தரின் அருளால்தான் என்பதை உணர்ந்து, சிதம்பரம் கோவிலுக்கே வந்துவிட்டான். கோவிலைப் பராமரித்தும், அந்தணர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தும், அல்லும் பகலும் அறுபது நாழிகையும் இறைவனையே வழிபட்டு இறுதியில் இறைவனின் திருவடியில் சேர்ந்துவிட்டான் கோச்செங்கண் சோழன்.

""அந்த செங்கண் சோழனைப்போல நமது அய்யா தேவர் அவர்களும், முருகன் கோவில்களுக்குத் திருப்பணி செய்து வருகிறார். அந்திமக் காலத்தில் மருதமலை முருகனின் திருவடியில் சேர்ந்துவிடுவார். மறுபிறப்பே அவருக்கு இல்லை.''

-இப்படி புலவர் கீரன் சொல்லி முடித்ததும் தேவர் உணர்ச்சிவசப்பட்டு, அழுது... அழுகையை அடக்கமுடியாமல் ""முருகா... முருகா'' என கதறிவிட்டார். அவர் அழுவதைப் பார்த்து நாங்களும் கண்கலங்கிப் போனோம்.

புலவர் கீரன் சொன்னதுபோல, முருகப்பெருமானுக்கு உகந்த ஆவணி மாத சஷ்டி திதி, விசாக நட்சத்திர நாளில், மருதமலையான் கோவில் கொண்டுள்ள இடத்திற்கு அருகிலுள்ள கோயம்புத்தூரில் தேவரின் உயிர் முருகனின் திருவடியில் கலந்தது!

அடுத்து, காஞ்சி மகாபெரியவரை தரிசித்த அந்த அற்புத தருணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

godd

புராணப்படங்கள் குறைந்து சமூகப் படங்கள் அதிகரித்திருந்த காலகட்டம். என்றாலும் ஏ.பி. நாகராஜன், கே. சங்கர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றோர் சிறந்த பக்திப்படங்களை வெற்றிகரமாக இயக்கிவந்தனர். 1971-ல் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் "ஆதிபராசக்தி' வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. (அதில் நானும் பணியாற்றி இருந்தேன்.) அதே வேகத்தில் ஆதிசங்கரர் வரலாறைப் படமாக்க விரும்பினார் கோபாலகிருஷ்ணன். அது அவரது லட்சியமாகவும் இருந்தது. அதை அவர் என்னிடம் தெரிவிக்க, நாங்கள் இருவரும் அதற்கான நூல்களை, செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தோம்.

அந்த சமயத்தில், காஞ்சிப் பெரியவர் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் சிறந்த பக்தர்களுள் ஒருவரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை கே.எஸ். கோபால கிருஷ்ணனை சந்தித்தார்.

""ஆதிபராசக்தி படம் ரொம்ப அருமையா இருந்தது. படம் பத்தியும் உங்களைப் பத்தியும் பெரியவாகிட்ட சொன்னேன். "இந்தக் காலத்திலயும் இப்படி ஆன்மிகப் படமெல்லாம் தயாரிக்கறாளா'ன்னு ஆச்சரியப்பட்டார். "அவாளை' அழைச்சிட்டு வரவா'ன்னு கேட்டேன். "அழைச்சிண்டு வா'ன்னு பெரியவா சொன்னார்'' என்று மீனாட்சிசுந்தரம் சொல்ல, பூரித்துப்போனார் கோபாலகிருஷ்ணன்.

நாங்கள் மூவரும் காரில் புறப்பட்டோம். அப்போது மகாபெரியவரைப் பற்றி சில சம்பவங்களைச் சொன்னார் மீனாட்சி சுந்தரம்.

ஒரு ஊரில் ரெயில்வே காலனி பகுதியில் பெரியவரை வைத்து பாதபூஜை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பிட்ட இடத்திலிருந்து "தண்டியல்' எனப்படும் பல்லக்கில் பெரியவரை வைத்து ஆறு பிராமணர்கள் சுமந்து சென்றனர்.

சிறிது தூரம் சென்றதும் கீழே வைத்து இளைப்பாறி... மீண்டும் சுமந்து... சிறிது தூரம் சென்றதும் கீழே இறக்கி... இப்படி பலமுறை இறக்கி இறக்கி தூக்கிச் செல்ல... இதைப் பார்த்த நான்கு விவசாயக் கூலித் தொழிலாளர்கள், ""பெரிய சாமிய ரயில்வே காலனிக்குத்தானே கொண்டு போறீங்க?'' எனக் கேட்க... பிராமண இளைஞர்கள் ""ஆமாம்'' என்றனர்.

""நாங்க வேணா சாமிய சுமந்திட்டு வரவா?''

பிராமணர்கள் மௌனமாக பெரியவ ரைப் பார்க்க, பெரியவரோ "ஆகட்டும்' என்பதுபோல் சைகை செய்ய... சிறிது நேரத்தில் அலுங்காமல் குலுங்காமல் பெரியவரைக் கொண்டுபோய் பாதபூஜை நடக்கும் இடத்தில் இறக்கிவிட்டு "வர்றோம் சாமீ' என பெரியவரிடம் சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார்கள்.

பாதபூஜை முடிந்தபிறகு... அந்த ஆறு பிராமண இளைஞர்களும் பெரியவரிடம் வந்து, ""நாங்க ஆறுபேர் உங்களைச் சுமந்தோம். பாரமா இருந்தது. ஆனா அவா நாலுபேர் சிட்டாட்டம் உங்களைக் கொண்டு வந்து சேர்த்திட்டாளே... எப்படி?'' எனக் கேட்டனர்.

சற்றும் யோசிக்காமல் பெரியவர் சொன்னார்.

""பாதபூஜை செஞ்சு ஏதோ பலனை அடைய ணும்னு நீங்க என்னை சுமந்தீங்க. அதான் பாரம். அவா பலனை எதிர்பார்க்கலை.

அதான் பாரமில்லை.''

அப்போது கீழ்த்திருப்பதி அருகே ஒரு குக்கிராமத்தில் காஞ்சிப்பெரியவர் தங்கியிருந்தார். கே.எஸ். கோபாலகிருஷ்ணன், நான் மற்றும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகிய மூவரும் சென்னையிலிருந்து காரில் சென்றபோது பெரியவர் பற்றி மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொல்லியபடியே வந்த தகவல்கள் "இப்படியும் ஒரு மகானா?'' என்கிற வியப்பை எங்களுக்குள் ஏற்படுத்தியது.

கைவசம் ஒரு மாற்றுத் துணி மட்டுமே வைத்திருப்பார். ஒரு கைப்பிடி அரிசி யைத் தானே சமைத்து, அதில் சரி பாதியை காக்கைக்கு வைத்துவிட்டு ஒரு குழந்தையைவிட குறைவாகவே உண்ணு வாராம் பெரியவர்.

தலையில் முக்காடு அணிந்து தண்டம் என்கிற குச்சியை கையில் பிடித்தபடி இருக்கும் சரஸ்வதி கோலத்தில்தான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் பெரியவர். சாதாரண கோலத்தில் பக்தர்களை சந்திக்கமாட்டார். அதற்குக் காரணம்... "சாமீ... நீங்களே சமைச்சு கஷ்டப்படுறீங்களே, நாங்க உதவி செய்றோம்' என பக்தர்கள் அன்புத்தொல்லை செய்வதை பெரியவர் விரும்பாததுதான்.

மெயின் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு ஒரு கிலோமீட்டர் தூரம் வயல்வழியாக சேறும் சகதியுமான பாதையில் நடந்தோம். தூரத்தில் சிதிலமடைந்த நிலையில் ஒரு பெருமாள் கோவிலில் பெரியவர் உணவு தயாரித்துக்கொண்டிருந்தார். அதனால் காத்திருந்தோம்.

பெரியவர் உணவருந்தியதும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலில் சென்று விஷயத்தைச் சொல்ல... வரச்சொல்லிவிட்டு சரஸ்வதி கோலம் பூண்டபடி நின்றார் பெரியவர். கோபாலகிருஷ்ணனும் நானும், பெரியவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம்.

""ஆதிபராசக்தி படம் நீங்கதான் எடுத்தேளா? நன்னா இருக்கறதா சொன்னா.

ஆன்மிக கருத்துள்ள படங்களா எடுங்க ளேன். மக்களுக்கு நீங்க செய்யற சேவையா இருக்கும். அதுக்கு என்னோட ஆசிர்வாதம்'' என்று ஆசிர்வதித்தார்.

""ஆதிசங்கரர் கதையை சினிமாவா எடுக்க உங்கள் அனுமதி வேணும்'' என கேட்டார் கோபாலகிருஷ்ணன்.

""பேஷா எடுங்கோ. நல்ல காரியம்தானே. சிரத்தையா எடுங்கோ. மனப்பூர்வமான ஆசிர்வாதம் உண்டு. ஆனா...'' என்றார்.

நாங்கள் ஏதும் புரியாமல் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டோம்.

(தொடரும்)