பிரபலங்கள் கண்ட அற்புதங்கள்!
கலைஞானம்
6
ஒவ்வொருவர் வாழ்க்கை அனுபவமும் நமக்கு படிப்பினையைத் தருகின்றன. அவற்றை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். பக்தி விஷயத்தில் பலருக்கு ஒரு சந்தேகம் உண்டு. "நல்லதே நினைத்து, நல்லதே செய்து, கடவுள் பக்தியோடு வாழ்பவருக்கும் பெரும் துன்பங்கள் வருகின்றதே... இது ஏன்' என்பதே அது.
கடந்த இதழில், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பின்னாட் களில் பெரும் செல்வந்தராக வாழ்ந்த கே.பி. சுந்தராம்பாள் பற்றி எழுதியிருந்தேன். கடைசிவரை அவர் வசதியோடுதான் வாழ்ந்தார். அனைவராலும் மதிக்கப்பட்டார். ஆனால் அவரது சொந்த வாழ்வு அவ்வளவு மகிழ்ச்சியானதா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் அவரது கணவர் ஏழிசை மன்னன் கிட்டப்பா இளம்வயதிலேயே இறந்துவிட்டார். ஒரே குழந்தை யும் இறந்துவிட்டது. அதன்பின் அவர் வெள்ளைப்புடவை அணிந்து, நெற்றி நிறைய திருநீறுபூசி, முருகனே கதியென்று நம்பி தனியாகவே வாழ்ந்தார். அந்த நம்பிக்கை அவருக்கு ஆறுதலும் தேறுதலும் தந்தது.
1980-ல் "எதிர்வீட்டு ஜன்னல்' படத்தை எழுதி தயாரித்து இயக்க முடிவு செய்தேன். தேனாம்பேட்டை யில் வீடும் அலுவலகமும் இருந்தன.
இட நெருக்கடி காரணமாக வேறு வீடு தேடினேன். ஆழ்வார் பேட்டையில் ஒரு வீடு இருப்ப தாக தரகர் சொன்னார். சென்று பார்த்தபோது வீட்டு உரிமையாள ரைக் கண்டு வியப்பின் எல்லைக்கே போய்விட்டேன். ஆம்; கே.பி. சுந்தராம்பாள்தான் அது. அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு கைகட்டி அமர்ந்தேன். தரைத்தளத்தில் அவர் குடியிருந்தார். மாடி காலியாக இருந்தது. பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்திலேயே என்னை அவருக்குப் பிடித்துவிட்டது.
""ஞானம்... நீ வார்த்தைக்கு வார்த்தை முடிக்கும்போது "முருகா'ன்னு சொல்றது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப்பா. மாடியில குடியேறிக்க. நானூறு ரூபாய் வாடகை தந்தா போதும். நீ என்னை "அம்மா'ன்னு கூப்பிட்ட மாதிரி நானும் உன்னை "மகனே'ன்னுதான் கூப்பிடப் போறேன். நீ எழுத்தாளரா, தயாரிப்பாளரா இருக்கறதோடு, இந்த அம்மா வுக்கு ஒரு பாதுகாவலனாவும் இருக்கணும்'' என்றார்.
"இவரை நான் பாதுகாக்க வேண்டுமா' என்று வியப்போடு அவரைப் பார்த்தேன்.
""ஆமாப்பா. நீ என்னைப் பாதுகாக்கணும். அதுக்குக் காரணம் இருக்கு. எனக்கும் என் உறவுக்காரங்களுக்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, யாரும் என் முகத்தில் விழிக்கவேணாம்னு சொல்லிட்டேன். அது கசப் பாயிடுச்சு. அதனால உறவுக் காரங்க கோபத்துல என்னென் னவோ பேசிக்கிட்டிருக்காங்க. என்னோட சொந்த ஊரான கொடுமுடியில இருந்து வந்த சிலர், "உங்களுக்கு எதிரா ஏதோ சதி நடக்கிற மாதிரி தெரியுது. ஜாக்கிரதையா இருங்க'ன்னு சொல்லிட்டுப்போனாங்க. இவ்வளவு பெரிய வீட்ல நான் மட்டும் தனியா இருக்கேன். ஏதாவது அசம்பாவிதம் நடந்தா என்ன செய்யறது...'' என்றார்.
அதற்கு சம்மதித்த நான் சில நாட் களிலேயே அவர் வீட்டு மாடியில் குடியேறினேன். சந்தேகப்படும்படி யாராவது சாலையில் தென்பட்டால் சுந்தராம்பாள் அம்மா மணி அடிப்பார். உடனே நான் சென்று யார் என்று பார்க்கவேண்டும். நான் இல்லாத சமயங்களில் என் மனைவியோ பிள்ளைகளோ பார்ப்பார்கள். அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அப்போது அவருக்கு 72 வயது. மதியம் ஒருவேளை மட்டுமே உண்பார். ஒரு சைவ ஓட்டலிலிருந்து சாப்பாடு வரும். அதையும் நிறுத்திவிட்டு என் வீட்டிலிருந்து கொடுக்க ஏற்பாடு செய்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் அவரது கதை முழுவதையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. "எதிர்வீட்டு ஜன்னல்' படத்தையும் அங்கிருந்தபடியே வெளியிட்டேன்.
மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த இந்த தருணத்தில் சுந்தராம்பாளின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மருத்துவர் வந்து பார்த்து மருந்து தந்துவிட்டுப் போனார்.
நானும் என் மனைவியும் படுக்கையில் இருந்த அம்மாவைத் தூக்கி உட்கார வைத்தோம். அவரால் நிமிர்ந்து உட்கார முடியவில்லை. அவரது முழங்கால் அருகே தலை வளைந்து நின்றது! "முருகா... முருகா...' என முணுமுணுத்தபடியே இருந்தார். வேறெதுவும் பேசவில்லை. அவரது நிலையைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது.
அப்போது சட்டென்று ஒரு விஷயம் என் நினைவுக்கு வந்தது. ""அம்மா... நிச்சயமா இது செய்வினைதான்'' என்றேன்.
அவர் குனிந்தபடியே என்னை ஓரக் கண்ணால் பார்த்தார்.
""ரெண்டு மாசத்துக்கு முன்ன நம்மவீட்டு வாசல்ல செய்வினை எடுத்தோமே... ஞாபகம் இருக்காம்மா?'' என்றேன்.
அப்படி நான் கேட்டதும் என்னையே பார்த்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அம்மா வுக்கு வேண்டிய ஒருவர், ஈரோட்டிலிருந்து ஒருவரை அழைத்துவந்தார். முருக பக்தரான அவர் செய்வினை முறிப்பதில் வல்லுநர் என்று சொன்னார். அந்த சாமியார் காவி உடைகளைக் களைந்துவிட்டு கோவணம் மட்டும் அணிந்துகொண்டார். கையில் ஒரு வேல் வைத்திருந்தார். ஏதேதோ மந்திரங் களை உச்சரித்தவர், வாசற்படி அருகே சென்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கு தோண்டச் சொன்னார்.
எனது நிறுவன தயாரிப்பு உதவியாளர்கள் இரண்டுபேர் அந்த இடத்தைத் தோண்டினர்.
இரண்டரை அடி ஆழம் தோண்டியதும் அங்கே ஒரு பொம்மை இருந்தது. சுமார் நான்கு அங்குல உயரம் கொண்ட அந்த பொம்மை கால்நீட்டி அமர்ந்தபடி இருந்தது. பொம்மையில் தலை முழங்காலில் படும்படி தலைமுடியால் கட்டப்பட்டிருந்தது. அதை வெளியே எடுத்த சாமியார், ""இது இருப்பது மாதிரியே நீங்களும் அவஸ்தைப்படணும்னு மலையாள மாந்ரீகரை வச்சி யாரோ செய்வினை செய்திருக்காங்க'' என்றவர், தன் கையிலிருந்த வேலால் தலையில் தட்டியபடி சிறிது நேரம் யோசித்தார்.
பிறகு, ""இதேபோல செய்வினை உங்க கொடுமுடி வீட்லயும் வச்சிருக்காங்க. அதையும் எடுத்தாதான் பாதிப்புகள்ளயிருந்து நீங்க முழுமையா விடுபடமுடியும். எனக்கு பணமெல்லாம் வேணாம். உங்களுக்கு தேவைப்படுறப்ப கூப்பிடுங்க. நான் வந்து செய்வினையை எடுக்கறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனார். அப்போது அதை அம்மாவோ நாங்களோ பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால் அடுத்த இரண்டு மாதத்தி லேயே அந்த பொம்மை இருந்ததைப்போல அம்மாவின் நிலை ஆகிவிட்டதைக் கண்டு பயந்தோம்.
""அம்மா... அன்னைக்கு அந்த பொம்மையைப் பார்த் தீங்கள்ல? அதுமாதிரியே இருக்கீங்க. கார்லயே கொடுமுடிக்குப் போலாம்மா... அந்த சாமியாரையே வரவழைச்சு செய்வினையை எடுத்துறலாம். அப்ப தாம்மா உங்களுக்கு குண மாகும்'' என்றேன்.
"வேண்டாம்' என்று கையால் சைகை செய்தார். அம்மாவுக்கு ஏதாவது விபரீதமாகிவிட்டால் என்ன செய்வதென்று நினைத்து உடனடியாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தேன். பெரும்பாலானவர்கள் வந்துவிட்டனர்.
"முருகா... முருகா...' என்னும் முனகலைத் தவிர அம்மாவால் இப்போது வேறெதுவும் பேசமுடியவில்லை. உறவினர்கள் தங்களுக்குத் தெரிந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சையளித்தனர்.
படுத்த படுக்கையாகிவிட்ட அம்மா ""பித்து... முருகு... தாஸு'' என்று குழறினார். அதைப் புரிந்துகொண்டு, முருக பக்தரும் பக்திப் பாடகருமான பித்துக்குளி முருகதாஸுக்கு தகவல் தந்தனர். தன் மனைவியுடன் வந்தார் முருகதாஸ். ஒரு நாள் முழுக்க அம்மா அருகிலேயே இருந்து இருவரும் பக்திப் பாடல்களைப் பாடினர். அதன்பின் தான் பாடிய பக்திப்பாடல்கள் அடங்கிய கேசட்டை டேப்ரெக்கார்டரில் ஒலிக்கச் செய்துவிட்டு, மறுநாள் வருவதாக சொல்லிச் சென்றனர்.
அந்தப் பாடல்களைக் கேட்டபடியே படுத் திருந்தார் அம்மா. கொஞ்ச நேரம் கடந்ததும் ""முருகா...'' என்றார். அவரது உயிர் முருகனிடம் அமைதிகொண்டது.
அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சிறப்பு அனுமதி கொடுக்க, அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பிறப்பு- இறப்பு- மீண்டும் பிறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுபட்டு, மீண்டும் பிறவா நிலையை அடைய கர்மவினைக் கணக்கை நேர்செய்ய வேண்டும். அதற்கா கவே நல்லவர்களுக்கும் தூய பக்தி கொண்டோ ருக்கும் துன்பங்கள் வருகின்றன. கே.பி. சுந்தராம்பாள் அம்மையாருக்கு ஏற்பட்ட துன்பங்களும் அதுபோன்றவையே.
தினமும் காலையில் காபி அருந்தி முடித்த தும் தனது தெய்வீகக் குரலில் முருகன் பாடல்களைப் பாட ஆரம்பிப்பார் அம்மா.
"திருவிளையாடல்' படத்தில் தான் பாடிய "பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா' பாடலை அடிக்கடி பாடுவார். இறுதியாக அவர் கேட்டதும் முருகன் பாட்டு. இறைவன் புகழையே கேட்டுக்கொண்டு உயிர் துறக்கும் பாக்கியம் இவரைப்போல எவ்வளவு பேருக் குக் கிட்டும்! அதைத் தந்து தன் திருவடியில் அவரை சேர்த்துக்கொண்டவன் முருகனே என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
(தொடரும்)