அற்புதங்கள் நிறைந்தது அண்ணாமலை. சித்தபூமியான இங்கு வாழ்ந்த யோகியர் பலர். அவர்களுள் ஒருவர்- உலகெங்கும் அறியப்பட்டவர்தான் ரமண மகரிஷி. அவரது சரிதம் அமுதக்கடல். அதில் சிறிது அருந்து வோமா...
மதுரை அருகே சுந்தரர், மாணிக்கவாசக ரால் பாடல்பெற்ற திருச்சுழி எனும் சிவத் தலம் உள்ளது. சிவன்- திருமேனிநாதர்; அம்பாள்- துணைமாலை நாயகி. திருமால், சூரியன், பூதேவி, கௌதமர், அகல்யா, கண்வ முனிவர், அர்ஜுனன் உள்ளிட்டோர் வழி பட்ட தலம். சிவனை மணக்க பார்வதி தேவி தவமிருந்த தலம். ஒருசமயம் சிவபெருமான் பிரளயத்தை சுழித்து பூமிக்குள் புகச்செய்தார். அத்தலம் இதுவே. அதனால் இத்தலம் திருச்சுழியல் என பெயர்பெற்று, தற்போது திருச்சுழி என வழங்கப்பெறுகிறது.
அங்கு சுந்தரம் அய்யர்- அழகம்மை தம்பதிக்கு, மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் (30-12-1879) இரவு 1.00 மணிக்கு உதித்தவர் வெங்கடராமன். பார்வை யற்ற ஒரு மூதாட்டி அக்குழந்தையை ஜோதி மயமாக தரிசித்தார் என்றால், அவர் அருணா சல ஜோதியே என்பது சூசகம்போலும்.
அண்ணன்- தம்பிக்கு இடையே பிறந்தவர்.
முதலில் திருச்சுழியில் கல்வி கற்று, பின்னர் திண்டுக்கல்லில் பயின்றார். அதன்பின் மதுரை அமெரிக்கன் மிஷன் பள்ளியில் மேற்படிப்பு. விளையாட்டு, குத்துச்சண்டை போன்றவற்றில் ஆர்வம் அதிகம். இளம் வயதில் ஆன்மிக நாட்டம் இல்லை. அதிக நேரம் ஆழ்ந்து உறங்குவார். தனது பன்னிரண் டாம் வயதில் தந்தையை இழந்தார்.
1895, நவம்பர் மாதம் திருச்சுழியிலிருந்து ஒரு உறவினர் வந்தார். பேசிக்கொண்டிருந்த போது "அருணாசலம்' என்று சொல்லி, "நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலைதான் அருணாசலம்' என்றார். அது வெங்கடராமனின் மனதை ஏதோ செய்தது. "அருணாசலம்' என்னும் பெயரில் ஒரு ஆழ்ந்த ஈர்ப்பு உண்டாயிற்று. அதுவே ஆண்டவனின் அழைப்பு எனலாம். அவரது மனம் அப் பெயரில் ஆழ்ந்தது.
1896-ஆம் வருட இடைப்பகுதி. ஒருநாள் வீட்டு மாடியறையில் இருந்தார். தான் இறக்கப்போகி றோம் என்று புதிய உணர்வு தோன்றியது. அப்ப டியே இறந்தவர்போல படுத்துக்கிடக்க, "இந்த உடல் வேறு; ஆன்மா வேறு' என்று தோன்றியது. "உடல் மரணமடையும்; தீக்கிரையாகும். ஆன்மா மரணமடைவதில்லை. எனவே எனக்கு மரண மில்லை' என்னும் உணர்வு தோன்றியது. நிர்விகல்ப சமாதி போன்ற நிலை அடிக்கடி ஏற்பட்டது. மனம் தனிமையை நாடியது. விளையாட்டு ஆர்வம் அழிந்தது. பள்ளிப்படிப்பிலும் ஆர்வம் குறைந
அற்புதங்கள் நிறைந்தது அண்ணாமலை. சித்தபூமியான இங்கு வாழ்ந்த யோகியர் பலர். அவர்களுள் ஒருவர்- உலகெங்கும் அறியப்பட்டவர்தான் ரமண மகரிஷி. அவரது சரிதம் அமுதக்கடல். அதில் சிறிது அருந்து வோமா...
மதுரை அருகே சுந்தரர், மாணிக்கவாசக ரால் பாடல்பெற்ற திருச்சுழி எனும் சிவத் தலம் உள்ளது. சிவன்- திருமேனிநாதர்; அம்பாள்- துணைமாலை நாயகி. திருமால், சூரியன், பூதேவி, கௌதமர், அகல்யா, கண்வ முனிவர், அர்ஜுனன் உள்ளிட்டோர் வழி பட்ட தலம். சிவனை மணக்க பார்வதி தேவி தவமிருந்த தலம். ஒருசமயம் சிவபெருமான் பிரளயத்தை சுழித்து பூமிக்குள் புகச்செய்தார். அத்தலம் இதுவே. அதனால் இத்தலம் திருச்சுழியல் என பெயர்பெற்று, தற்போது திருச்சுழி என வழங்கப்பெறுகிறது.
அங்கு சுந்தரம் அய்யர்- அழகம்மை தம்பதிக்கு, மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் (30-12-1879) இரவு 1.00 மணிக்கு உதித்தவர் வெங்கடராமன். பார்வை யற்ற ஒரு மூதாட்டி அக்குழந்தையை ஜோதி மயமாக தரிசித்தார் என்றால், அவர் அருணா சல ஜோதியே என்பது சூசகம்போலும்.
அண்ணன்- தம்பிக்கு இடையே பிறந்தவர்.
முதலில் திருச்சுழியில் கல்வி கற்று, பின்னர் திண்டுக்கல்லில் பயின்றார். அதன்பின் மதுரை அமெரிக்கன் மிஷன் பள்ளியில் மேற்படிப்பு. விளையாட்டு, குத்துச்சண்டை போன்றவற்றில் ஆர்வம் அதிகம். இளம் வயதில் ஆன்மிக நாட்டம் இல்லை. அதிக நேரம் ஆழ்ந்து உறங்குவார். தனது பன்னிரண் டாம் வயதில் தந்தையை இழந்தார்.
1895, நவம்பர் மாதம் திருச்சுழியிலிருந்து ஒரு உறவினர் வந்தார். பேசிக்கொண்டிருந்த போது "அருணாசலம்' என்று சொல்லி, "நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலைதான் அருணாசலம்' என்றார். அது வெங்கடராமனின் மனதை ஏதோ செய்தது. "அருணாசலம்' என்னும் பெயரில் ஒரு ஆழ்ந்த ஈர்ப்பு உண்டாயிற்று. அதுவே ஆண்டவனின் அழைப்பு எனலாம். அவரது மனம் அப் பெயரில் ஆழ்ந்தது.
1896-ஆம் வருட இடைப்பகுதி. ஒருநாள் வீட்டு மாடியறையில் இருந்தார். தான் இறக்கப்போகி றோம் என்று புதிய உணர்வு தோன்றியது. அப்ப டியே இறந்தவர்போல படுத்துக்கிடக்க, "இந்த உடல் வேறு; ஆன்மா வேறு' என்று தோன்றியது. "உடல் மரணமடையும்; தீக்கிரையாகும். ஆன்மா மரணமடைவதில்லை. எனவே எனக்கு மரண மில்லை' என்னும் உணர்வு தோன்றியது. நிர்விகல்ப சமாதி போன்ற நிலை அடிக்கடி ஏற்பட்டது. மனம் தனிமையை நாடியது. விளையாட்டு ஆர்வம் அழிந்தது. பள்ளிப்படிப்பிலும் ஆர்வம் குறைந்தது.
ஒருநாள் பள்ளியில் ஆங்கில இலக்கணக் கேள்விக்கு அவரால் விடைசொல்ல முடிய வில்லை. அதனால் ஆசிரியர் பாடத்தைப் பலமுறை எழுதி வருமாறு (இம்போசிஷன்) கூறினார். வீட்டில் இரண்டுமுறை எழுதினார். அதற்குமேல் எழுதமுடியாமல் மனம் உள்முகப்பட்டது. அப் போது அவரது அண்ணன் நாகசாமி, ""படிக் காமல் இப்படி சோம்பேறியாக இருக்கிறாயே. இப்படி இருக்கும் உனக்கு இங்கென்ன வேலை'' என்று கடிந்துகொண்டார். அவ்வார்த்தைகளே அவருக்கு குரு உபதேசம் போலாகின.
பள்ளிக்கூடம் போக வேண்டியிருந்தது.
அப்போது அவர் அண்ணன், ""அப்படியே ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு என் கல்லூரிக் கட்டணத்தை செலுத்திவிட்டுப்போ'' என்றார். வெங்கடராமனின் மனம் வேறாக இருந்தது. வரைபடத்தை எடுத்து திருவண்ணாமலை எங்கிருக்கிறது என்று பார்த்தார். திண்டிவனம் அருகே உள்ளது தெரிந்தது. ரயில் கட்டணத்துக்காக மூன்று ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டார். ஒரு தாளை எடுத்து இவ்வாறு எழுதினார். (அந்த நாள் 29-8-1896).
"நான் என் தந்தையைத் தேடி அவரது உத்தரவுப் படி புறப்பட்டுவிட்டேன். இது நல்ல காரியத்தில் முனைகிறது. எனவே ஒருவரும் விசனப்பட வேண்டாம். உன் கல்வி சம்பளம் செலுத்தவில்லை. இத்துடன் இரண்டு ரூபாய் உள்ளது.
-இப்படிக்கு...'
(பெயர்கூட எழுதவில்லை. உயர்ந்த நிலை! உடலுக்குதான் பெயர்; ஆன்மாவுக்கு இல்லையே!)
மதுரை ரயில்நிலையம் வந்தார். திண்டிவனத் துக்கு பயணச்சீட்டு வாங்கினார். மூன்றணா (18 காசு) மீதமிருந்தது. அவர் ரயிலில் ஏறி திண்டி வனம் இறங்கினார். பசியெடுக்க, ஒரு உணவு விடுதிக் காரர் சாப்பிடக்கொடுத்தார்; பணம் வாங்கவில்லை.
கையிலிருந்த காசுக்கு மாம்பழப்பட்டு வரை பயணச்சீட்டு வாங்கிச்சென்றார்.
அங்கு இறங்கி நடக்க ஆரம்பித்தார். அறையணிநல்லூர் கோவில் தலம் வந்தபோது, தான் ஒளிமயத்தில் ஆழ்வது போல உணர்ந்தார். அங்கு ஒருவர் வெங்கட ராமனை வீரட்டேஸ்வரர் ஆலயமுள்ள திருக்கோவலூருக்கு அழைத்துச்சென் றார். அங்கு அவருக்கு பசியெடுக்க, அர்ச்சக ரிடம் கேட்டபோது தர மறுத்துவிட்டார். மேளக்காரர் தன் பங்கு சாதத்தைத் தந்தார்.
அன்றிரவு அங்கேயே தங்கினார்.
மறுநாள்... திருக்கோவலூரிருந்து திருவண்ணாமலைக்கு 32 கிலோமீட்டர் தூரம். பயணச்சீட்டுக்கு பணம் வேண்டுமே என யோசித்தவர், அங்கிருந்த முத்துக் கிருஷ்ண பாகவதரிடம் தனது காது கடுக்கனை அடகுவைத்து நான்கு ரூபாய் பெற்றார். பாகவதரின் மனைவி வெங்கடராமனுக்கு உணவு தந்தார்.
அன்று கோகுலாஷ்டமி என்பதால், கண்ணனுக்குப் படைத்த பிரசாதங் களையும் தந்தார்.
அங்கிருந்து புறப்பட்ட வெங்கட ராமன் திருவண்ணாமலை சேர்ந்தார்.
அன்றைய நாள் 1-9-1896. நேரே அண்ணா மலையார் கோவிலுக்குச் சென்றவர், ""அப்பா... நீங்கள் அளித்த அழைப்பை ஏற்று வந்தேன். சரணடைந்தேன்'' என்றார். வெளியே வந்தபோது யாரோ ஒரு நாவிதர் வந்து அவருக்கு மொட்டையடித்தார். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. அதில் நனைந்தார்.
அதுவே நீராடலானது. சட்டை, வேட்டியைக் களைந்து கோவணம் மட்டும் அணிந்தார். கையிலிருந்த சில்லரைக் காசுகளை வீசியெறிந்தார். எத்தகைய விரக்தி! அடுத்தவேளை உணவு பற்றிக்கூட எண்ணவில்லையே! 16 வயதேயான வெங்கடராமன் தீட்சை பெறாமலே இவ்வாறு சந்நியாசம் ஏற்றார்.
கம்பத்து இளையனார்கோவில், பின் ஆயிரங்கால் மண்டபம் என தங்கினார்.
அவர் கோவணம் தரித்திருந்த தால் குறும்புக்கார சிறுவர்கள் அவரை சீண்டினர். எனவே பாதாள லிங்கக் குகையில் தங்கி தியானத்தில் மூழ்கினார். தன்னையே மறந்தார். புழுபூச்சிகள் அரித்தன. ரத்தம், சீழ் வடிந்தது. சிறுவர்கள் அவர் இருக்கும் இடமறிந்து கல், மண் வீசி துன்புறுத்தினர். இதையறிந்த காஞ்சி காமாட்சி அவதாரமான சேஷாத்ரி சுவாமிகள், சிலரைக் கொண்டு தவத்தில் மூழ்கி யிருந்த வெங்கடராமனை குகையைவிட்டு வெளிக் கொணர்ந்தார். ""இவன் என் மகன்'' என்றார். அதாவது முருகன்!
ஐயன்குளம் விநாயகருக்குப் பூஜை செய்துவந்த பழனிச்சாமி என்பவர் இவருக்குத் தொண்டு செய்ய முனைந்தார். திருவண்ணாமலை மக்கள் வந்து பணியத் தொடங்கினர். இவரோ பேசுவதில்லை. வெங்கடராமய்யர் என்னும் பக்தர், ""தாங்கள் யார்? எங்கிருந்து வந்துள்ளீர்கள்?'' என்று கேட்க, "வெங்கடராமன்- திருச்சுழியல்' என்று எழுதிக் காண்பித்தார். அப்போதுதான் இவர் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.
இவரை தரிசித்த அண்ணாமலைத் தம்பிரான் என்பவர் திருச்சுழி சென்றார். அவர்மூலம் விவரமறிந்த சுவாமிகளின் சித்தப்பாவான நெல்லையப்பர் திருவண்ணாமலை வந்தார். வெங்கடராமனிடம் பேசி திருச்சுழி அழைத்துச் செல்லலாம் என்பது அவரது எண்ணம். ஆனால் சுவாமிகளின் கோலத்தைக் கண்டு அதிர்ந்தார். பின் நெகிழ்ந்தார். "உறவுப் பேச்சு இவரிடம் உதவாது' என்றெண் ணிய அவர் திருச்சுழிக்குத் திரும்பச் சென்று, சுவாமிகளின் தாயார் அழகம்மையை அழைத்துவந்தார். அம்மையார் எவ்வளவோ கூறியும் சுவாமிகள் திருச்சுழி திரும்ப இசையவில்லை. தாயார் பெரிதும் துயரமுற, அருகிலிருந்த பச்சையப்பப் பிள்ளை என்பவர், ""அன்னைக்கு ஆறுதல் தரவேண்டியது கடமை'' என்றார்.
அப்போது சுவாமிகள் ஒரு தாளில் இவ்வாறு எழுதினார்.
"அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். எனவே மௌனமாய் இருப்பதே நன்று.'
வேறுவழியின்றி தாயார் திரும்பச் சென்றார். அவரது முதல் மகன் நாகசாமி இறக்க, அதன்பின் திருவண்ணாமலை வந்த சுவாமிகளின் தாயார் 1916 முதல் ரமணருடனேயே தங்கினார்.
ஆதிசங்கரரின் அத்வைதம்- "அஹம் பிரம்மாஸ்மி; சிவோஹம்; தத் த்வம் அஸி; ப்ரக்ஞானம் பிரம்ம; ப்ரம்ம ஏவ அஹம்' என்று சொல்லும். அதாவது "நாம் பிரம்மம்- கடவுள் என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் உணரலாம்' என்று கூறும்.
இவரது போதனை என்பது கேள்வி. "நான் யார்?' என்பதை ஆழ்ந்து ஆராய்ந்தால் மெய்ஞ்ஞான உணர்வுண்டாகும். "நான் நான்' என்றே பல செயல்களைச் செய்கி றோம். எல்லா இயல்புகளும் "நான்' என்பதுடன் ஒட்டியே வருகிறது. "நான் யார்?' என்னும் ஆராய்ச்சியே ஆத்ம விசாரம்.
அப்போது "ஆத்மாவே நான்' என்னும் விடை கிடைக்கும். எவ்விதமான சுகதுக்கங்களும் என்னை ஒன்றும் செய்வதில்லை என்னும் பாவம் வரும். ஆக, அது அத்வைத தத்துவமே.
காவ்ய கண்ட கணபதி என்னும் ஆழ்ந்த வேதாந்தி- சமஸ்கிருத பண்டிதர் உண்மையான ஞானானந்தம் பெற ஆவல்கொண்டு திருவண்ணாமலையை வலம்வந்தார். நிருதிலிங் கக் கோவிலில் தியானம் செய்தபோது, "பகவான் அழைக்கிறார்' என்னும் உள்ளொளி எழுந்தது. அச்சமயம் சுவாமிகள் விருபாக்ஷி குகையில் இருந்தார். அவரை அணுகி, ""வேத சாஸ்திரம் அனைத்தும் கற்றுள்ளேன். மந்திர ஜபங்களும் செய்துள்ளேன். ஆயினும் மனம் அடங்காமல் தவிக்கிறேன்'' என்று புலம்பினார்.
அவருக்கு நயன தீட்சையளித்த சுவாமிகள், ""நான் என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ அதனில் ஆழ்ந்தால் மனம் அங்கே லயமாகும். மந்திரம் எங்கிருந்து புறப்படுகிறதென்று கவனித்தால் மனம் அங்கே லயமாகும். இதுவே தவம்'' என்றார்.
பேசா அனுபூதியை கணபதி முனி பெற்றார். ஸ்வாமிகளை கந்த அவதாரம் என்றுணர்ந்து, "நமோ மனுஷ்யாய குரவே தாரகாயே' என்றெல் லாம் துதித்தார். சுவாமிகளுக்கு "பகவான் ரமண மகரிஷி' என்று பெயர் சூட்டினார்.
பால் ப்ரன்டன் (டஹன்ப் இழ்ன்ய்ற்ர்ய்) என்னும் வெளிநாட்டவர், இந்தியா வந்து பல சாது சந்நியாசிகளை தரிசித்தார். எனினும் தான் விரும்பிய மனஅமைதி, சாந்தி கிட்ட வில்லையென்று வருந்தினர். அப்போது எவரோ சொல்ல, காஞ்சி காமகோடி பீடம் வந்து, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசித்தார். ""என் மனம் சாந்தியடைய தாங்கள் எனக்கு குருவாக இருக்கவேண்டும்'' என வேண்டினார். ஆசார்யரோ, ""என்னை "ஜகத் குரு' என்பர். உமக்கு தனிப்பட்ட குருவாக இருக்க இயலாது. திருவண்ணாமலை ரமண மகரிஷியை நாடுக'' என்றார்.
பால் ப்ரன்டனுக்கோ அதில் உடன் பாடில்லை. அன்றிரவு அவர் விடுதி அறையொன்றில் தங்கியிருந்தார். நள்ளிரவு நேரம். கனவா நனவா என்று தெரியவில்லை.
அங்கே காஞ்சிப்பெரியவர் தோன்றி, "ரமண மகரிஷியை தரிசிக்காமல் செல்லவேண்டாம்' என்றார். வியப்படைந்த பால் ப்ரன்டன் மறுநாள் திருவண்ணாமலை சென்றார். ரமணரை தரிசித்தார். இருவர் கண்களும் கலந்தன. அதிக நேரம் அவரால் மகரிஷியைப் பார்க்க இயலவில்லை. கண்களை மூடினார். தன் மனதில் ஏராளமான கேள்விகளைச் சுமந்து வந்தார். சூரியன் உதித்ததும் இரவுப்பொழுது மறைவதுபோல, அவரது சந்தேகங்கள் யாவும் மறைந்தன. மனம் தெளிந்து சாந்தமடைந்தது. மகரிஷிகளிடம் தான் பெற்ற அனுபவத்தை "எ சர்ச் இன் சீக்ரெட் இந்தியா' என்னும் பெயரில் அவர் நூலாக எழுதி வெளியிட, ரமணரின் புகழ் உலகமெங்கும் பரவியது. பல வெளிநாட்டவரும் வந்து தரிசித்து ஆனந்தம் பெற்றனர்.
மகரிஷியின் அன்னை 19-5-1922-ல் உயிர் நீத்தார். அவரது மார்பில் தன் வலக்கையையும், தலையில் இடக்கையையும் வைத்தவாறு மகரிஷி அமர்ந்திருக்க, அன்னையின் ஆத்மா சாந்தியடைந்தது. பாலி தீர்த்தக்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு மாத்ருபூதேஸ்வரர் என்னும் பெயரில் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பெற்றது. அவ்விடம் பிரார்த்தனைத் தலமானது. அதுவே ரமணாஸ்ரமம் ஆனது.
மகரிஷியின் இடது முழங்கைக்கு மேலே ஒரு புண் தோன்றியது. இரண்டுமுறை அறுவை சிகிச்சை செய்தும் குணமாகவில்லை. ஹோமியோபதி, ஆயுர்வேத சிகிச்சைகளும் பயனளிக்கவில்லை. 14-4-1950 அன்று இரவு 8.47 மணிக்கு அவர் உயிர் வானில் ஜோதிமயமாகச் சென்றதை பலரும் கண்டனர். மறுநாள் அவரது உடல் சமாதி வைக்கப்பட்டது.
அவரது சமாதி இன்றும் பக்தர்களுக்கு ஞானவொளி வீசுகிறது. ஞான தபோபூமியான அதை தரிசித்து மனோலயம், அனுபூதி பெறலாமே! இன, மொழி, மத, நாடு என்ற எந்த பேதமும் அங்கில்லை.