கிருஷ்ண ஜெயந்தி- 23-8-2019
கிருஷ்ண பகவான் அருள் புரியும் கோவில்களில் அவருக்குப் பிடித்தமான வெண்ணெய், அவல், வெல்லம், பால், தயிர், வாழைப்பழங்கள், நாவற்பழங்கள், கொய்யாப் பழங் கள், விளாம்பழம், சீடை, வெல்லச் சீடை, உப்புச்சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், தாம்பூலம் ஆகியவற்றை நிவேதனம் செய்வது வழக்கம்.
கண்ணன் துவாரகையில் எழுந்தருளி யிருக்கும் ஆலயத்தை ஜகத்மந்திர் என்பார்கள். இங்கு மூலஸ்தானத்தில் மேற்கு நோக்கி அருள்புரியும் பகவான், நான்கு திருக்கரங்களுடன் சுமார் மூன்றடி வெள்ளி மஞ்சத்தில், நின்ற திருக்கோலத்தில் அருள் கி றார். இங்கு பகவானுக்கு வேளைக்கொரு அலங்காரம், நேரத்திற்கொரு பலகாரம் மற்றும் அறுசுவை உணவுகளை சமர்ப் பணம் செய்து பூஜிப்பார்கள். இதில் ஜீரணமாவதற்காக லேகியம்கூட சமர்ப்பிப்பதுண்டு. மணிக்கொரு நிவேதனம் செய்வதை "போக்' என்று போற்றுவர்.
அதிகாலை ஐந்து மணிக்கு திருப்பள்ளி யெழுச்சி நடத்தி, பகவானுக்கு முகம் கழுவி, தங்கப்பல் குச்சியால் பல் துலக்கிவிட்டு, சந்தனமும் குங்குமமும் இட்டு அலங்கரிப்பார்கள். பிறகு, காலை 7.30 மணியளவில் லட்டு, ஜிலேபி சமர்ப்பிக்கப்படும். இதனை முதல் "போக்' என்பார்கள். பின் எட்டு மணிக்கு நெய், சர்க்கரை, பால், தயிர், வெண்ணெய் என சமர்ப்பணம் செய்வர். பகல் பன்னிரண்டு மணியளவில் "ராஜபோஜனம்'' என்ற பெயரில் பொங்கல் மற்றும் நெய்யினால் தயாரான அன்னம் படைக்கப்படும். பிறகு, ஐந்து மணி வரை பகவான் ஓய்வெடுப்பார். இரவில் கடைசி உணவாக பாதாம் பருப்பு வகைகளும் உலர் பழங்களும் லேகியமும் சமர்ப்பணம் செய்வது வழக்கம். தவிர, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அழகாக உடையலங்காரமும் நடைபெறும்.
இதேபோல் உடுப்பி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள கிருஷ்ணருக்கும் தினமும் பத்து வகையான பூஜைகள் நடைபெறுகின்றன. நிர்மால்ய விஸர்ஜன பூஜை, உஷத்கால பூஜை, அட்சயப்பாத்திரப் பூஜை, பஞ்சாமிர்த பூஜை, உத்வார்த்தன பூஜை, கலச பூஜை, தீர்த்த பூஜை, அலங்கார பூஜை, அவசர பூஜை, மகாபூஜை ஆகியவை தினமும் நடைபெறுகின்றன. மேலும், ஒரு நாளில் பாலே முகூர்த்தம், அக்னி முகூர்த்தம், கட்டிகே முகூர்த்தம், பக்தா முகூர்த்தம் ஆகிய நான்கு வகை வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெறும். மேலும், உடுப்பி கிருஷ்ணருக்கு நான்கு வகை உற்சவங்கள் நடைபெறுகின்றன. ரதோற்சவம், சுவர்ண பல்லக்கு உற்சவம், கருடோற்சவம், ரஜதோற்சவம் மற்றும் பிரம்மோற்சவம் ஆகியவை முக்கியமானவை.
ராஜஸ்தானில் அமைந்துள்ள ஸ்ரீநாத்ஜி எனும் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவிலில் ஏழு வயது சிறுவன் தோற்றத்தில் கண்ணன் எழுந்தருளியுள்ளார். இங்கு கண்ணனுக்கு தினமும் எட்டுவிதமான அலங்காரம் செய்து நிவேதனம் படைப்பார்கள். அதிகாலை ஐந்து மணிக்கு மங்களா, காலை ஏழரை மணிக்கு சிருங்காரா, எட்டரை மணிக்கு இடையர் போன்று கவால் அலங்காரம், பத்தரை மணிக்கு ராஜபோக், பிற்பகல் நான்கரை மணிக்கு உத்தர்பன், மாலை ஐந்து மணிக்கு போக், ஆறு மணிக்கு ஆரத்தி, ஏழு மணிக்கு சோபனம்- சயனம் என்று எல்லா பூஜைக் காலங்களிலும் அலங் காரம் செய்து, எட்டு விதமான இனிப்புகள் சமர்ப்பிக்கிறார் கள். கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தீபாவளியன்று சிறப்பலங்காரம் செய்து 58 வகையான இனிப்புகள் படைத்து பக்தர் களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.
மேற்கண்ட அலங்காரங்கள், நிவேதனங் கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்த கோவில்களில் நடைபெற்றாலும், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், திருவார்பு எனும் திருத்தலத்தில் அமைந் துள்ள கிருஷ்ணர் கோவில் மிகவும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது என்றால் மிகை யல்ல. இங்கு அருள்புரியும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். ஆகவே கோவில் இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டிருக்கும். அதாவது இரவு 11.58 மணிமுதல் 12.00 மணிவரை நடைசாற்றப் பட்டு அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடைதிறக் கப்படும். அப் பொழுது, நடைதிறக் கும் தந்திரியின் (குருக்கள்) கையில் ஒரு கோடரியும் கொடுக்கப்படுகிறது. ஏனெனில், அசந்தர்ப்ப வசமாக கோவில் கதவுகள் திறக்கப்படு வதற்கு தாமதம் ஏற்பட்டால், கோடரி உதவி யுடன் கதவைத் திறக்க (உடைக்க) அனுமதிக் கப்படுகிறது.
கோவில் திறந்ததும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் மூலவர் கிருஷ்ணரின் தலையை உலர்த்துவார்கள். உடனே நிவேதனம் படைக்கப்படும். அதன்பின்னர் தான் அவரது உடலை மென்மையான பட்டுத்துண்டினால் உலர்த்துவார்கள். இந்தக் கோவில் எந்தக் காரணத்திற்காகவும் வெகுநேரம் மூடப்படுவதில்லை. கிரகண காலகட்டத்தில்கூட பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியுடன் செல்லக் கூடாதென்ற கொள்கை உள்ளதால் அனைவருக்கும் திருப்தியாக பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.
ஆலயத்தை 11.58 மணிக்கு மூடுவதற்கு முன்பு, தந்திரி கையில் பிரசாதங்களை வைத்துக்கொண்டு "இங்கு யாராவது பசியுடன் இருக்கிறீர்களா' என்று சத்தமாக கூக்குரலிடுவார்.
இங்கு அளிக்கப்படும் பிரசாதத்தை உண்டால் வாழ்நாள் முழுவதும் பசியால் வாடமாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் உணவுப்பிரச்சினை இருக்காதாம். பசிப்பிணி போக்கும் பகவான் கிருஷ்ணனை கோவிலில் மட்டுமல்ல; வீட்டிலும் வழிபட சகல பாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.