62-ஆவது சர்க்கம்

சத்ருக்னனுக்கு ஆணை

லவணாசுரனின் கொடுமைகளைப் பற்றி முனிவர்கள் இராமனிடம் கூறியதும், அதைக்கேட்ட இராமபிரான் கரங்களைக் கூப்பியவண்ணம், "லவணன் எங்கே இருக்கிறான்? அவனது நடவடிக்கைகள் எத்தகையவை? எதனை அவன் உண்கிறான்?'' என்று கேட்டார். அதற்கு முனிவர்கள் அனைவரும் லவணன் முரட்டுத்தனமாக வளர்ந்த விவரத்தைக் கூறத் தொடங்கினர்.

Advertisment

"எல்லா உயிரினங்களும் அவனுடைய உணவே. குறிப்பாக தவசீலர்கள். அவனது நடவடிக்கைகள் பயங்கரமானவை. அவன் எப்போதும் மது வனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நாள்தோறும் அவன் ஆயிரங்கணக்கான சிங்கம், புலி, மான், யானை மற்றும் மனிதர்களைக் கொன்று தின்றுவருகிறான்.

ஊழிக்காலம் வந்ததும் வாயைப் பிளந்துகொண்டு அனைத்து உயிர்களையும் தன்னுள்ளே இழுத்து வதைக்கும் எமனைப் போல, பெரும் பலம்வாய்ந்த அவன் மற்ற உயிர்களை எளிதாக விழுங்கிவிடுகிறான்.''

இவ்வாறு முனிவர்கள் கூறியதைக்கேட்ட இராமன் அவர்களைப் பார்த்து, "அந்த அரக்கனை நான் அழிக்கிறேன்; நீங்கள் அஞ்சாமல் இருங்கள்'' என்றார்.

Advertisment

முனிவர்களுக்கு உறுதிமொழி கூறிவிட்டு தன் சகோதரர்களையும் மற்றவர்களையும் பார்த்து, "லவணனைக் கொல்வதற்கு தோள்வலிமை மிக்க பரதனை அனுப்பலாமா அல்லது அறிவிற் சிறந்த சத்ருக்னனை அனுப்பலாமா?'' என்று கேட்டார்.

இராமன் இவ்வாறு கூறியதும், "இவனை நானே கொல்கிறேன். என்னிடம் பொறுப் பைத் தாருங்கள்'' என்று பரதன் கூறினான்.

வீரத்தையும் மனவுறுதியையும் வெளிப் படுத்தும் பரதனுடைய சொற்களைக் கேட்ட சத்ருக்னன் தனது பொன்மயமான இருக்கையைவிட்டு எழுந்து நின்றான். அவன் மன்னரை வணங்கிவிட்டு, "பெருந்தோளரும் ரகுநந்தருமான சகோதரர் பரதன் தன் கடமையைச் செய்து முடித்துவிட்டார்.

Advertisment

முன்னர் தாங்கள் அயோத்தியை வெற்றிடமாக விட்டுவிட்டு கானகம் சென்றபோது, தாங்கள் திரும்பவரும் காலம்வரை துயரத்தை மனதில் வைத்துக்கொண்டு நாட்டைப் பரிபாலித்தார். அரசரே, அவர் பலவிதமான துன்பங்களை அனுபவித்துவிட்டார். முன்னர் நந்தி கிராமத்தில், உடலுக்கு வேதனைதரும் படுக்கையில் படுத்துக்கொண்டு இன்னலை அனுபவித்திருக்கிறார். கனி, கிழங்குகளை உண்டு, ஜடாமுடி தரித்து, மான்தோல் ஆடையணிந்து அவர் துக்கத்தை அனுபவித்திருக்கிறார். அரசரே, நான் இருக்கும்போது அவர் மீண்டும் இன்னல் களை அனுபவிக்க வேண்டுமா?'' என்று கூறி முடித்தான்.

அதைக்கேட்ட இராமர், "சத்ருக்னா, நல்லது. நீ கூறியபடியே ஆகட்டும். என் கட்டளையை நீயே நிறைவேற்றுவாயாக. அழகான மது நகரத்தின் அரச பதவியை அளித்து உனக்கு முடி சூட்டுகிறேன். பரதனுக்கு சிரமம் கொடுக்கலாகாது என்று நீ கருதினால் அவன் இங்கேயே இருக்கட்டும். நீ பெரும் சூரன்; கல்வி கற்றவன். புதிய நகரை நிர்மாணிக்க உன்னால் முடியும்.

எவனொருவன் எதிரி மன்னனைத் தூக்கியெறிந்துவிட்டு அந்த இடத்தில் வேறொரு அரசனை நிலைநிறுத்தவில்லையோ அவன் நரகத்தை அடைகிறான். பாவச் செயல்களை செய்துவரும் மதுவின் மைந்தனான லவணனைக் கொன்று, அறநெறிப்படி அங்கு ஆட்சி செலுத்து வாயாக. என் சொற்படி நீ நடக்க விரும்பினா யானால், சூரனே, இடைமறித்துப் பேசாமல் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருப்பாய். இளையவர்கள் நிச்சயமாக மூத்தவர்களின் ஆணைப்படி நடக்கவேண்டும். எனது கட்டளைப் படி வசிஷ்டர் முதலிய வேத வித்தகர்கள் அறநூலின் முறைப்படி மந்திரங்கள் கூறி உனக்கு அபிஷேகம் செய்துவைப்பார்கள். அதை நீ ஏற்றுக் கொள்'' என்றார்.

63-ஆவது சர்க்கம் லவணனை வெல்லும் மார்க்கம் இராமன் இவ்வாறு கூறியதும் வீரம் பொருந்திய சத்ருக்னன் மனவேதனை கொண்டு தயங்கித் தயங்கி பதில் கூறலா னான்.

"அரசரே, எனக்கு முடிசூட்டுதல் என்னும் இந்த விஷயம் அறநெறி பிறழ்ந்த தென்று நான் எண்ணுகிறேன். மூத்தவர்கள் இருக்கும்போது இளையவனுக்குப் பட்டம் சூட்டுவதென்பது எப்படி நியாய மாகும்? புருஷோத்தமரே, தங்கள் கட்டளைக்குப் பணிந்து நடக்கவேண்டிய வன் நான்.

பெருந்தகை கொண்டவரே, தங்கள் ஆணையை எவராலும் மீறமுடியாது.

எனக்கு தாங்கள் நல்லுரை கூறியிருக்கிறீர் கள். வேதம், தர்ம சாஸ்திர நூல்களைக் கற்றறிந்திருக்கிறேன். நடு சகோதரரான பரதன் "லவணனை நானே அழிக்கிறேன்' என்று உறுதி யாகக் கூறியபிறகு நான் வாய்திறந்து பதில் கூறியிருக்கக் கூடாது. "நானே சென்று அவனைக் கொல்கிறேன்' என்னும் பதற்றமான சொற்கள் என் நாவிலிருந்து வெளிப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு அநாகரிகமாகக் கூறியதால்தான் இப்படிப்பட்ட பரிதாப நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

மூத்த சகோதரர் பரதன் கூறியபிறகு நான் அதை மறுத்து பதில் சொல்லியிருக்கக் கூடாதுதான். உங்களது ஆணைக்கு உட்படா விட்டால் அது அறம் தவறிய செயலாகும். ஆணையை ஏற்று நடந்தால், மூத்தவன் இருக்க இளையவன் பட்டம் சூட்டிக்கொண்ட குற்றமேற்பட்டு, உயர்ந்த பரவுலகை இழந்தவனா வேன். காகுத்தரே, பிறரை மதிப்பவரே, தங்கள் ஆணை எதுவோ அதன்படி நடப்பேனேதவிர அதற்கு மாறாக பதில் கூறமாட்டேன். அவ்வாறு மறுத்துரைத்தால் இன்னும் கடுமையான தண்டனை கிடைக்கக்கூடும். மன்னரே, புருஷோத்தமரே, தங்கள் விருப்பப்படியே நான் நடந்துகொள்வேன். அதனால் எனக்கேற்படும் பாவத்தைத் தாங்களே அழித்துவிடுங்கள்'' என்றான்.

மகாத்மாவும் மாவீரனுமான சத்ருக்னன் இவ்வாறு கூறியதும் மகிழ்ச்சியடைந்த இராமன் பரதன், லட்சுமணனைப் பார்த்து, "நீங்கள் அனைவரும் உடனேசென்று பட்டாபிஷேகத் திற்குத் தேவையான பொருட்களை கவனமாக சேகரித்துவாருங்கள். ரகுகுலத் தோன்றலும் ஆண்புலி நிகர்த்த வீரனுமான சத்ருக்னனுக்கு இப்போதே பட்டாபிஷேகம் செய்கிறேன். புரோகிதர்கள், வேத வித்தகர்கள், அமைச்சர் கள் ஆகிய அனைவரையும் என் கட்டளைப்படி அழைத்துவாருங்கள்'' என்றார்.

மகாரதர்களான பணியாளர்கள் மன்னரின் ஆணைப்படியே செய்தார்கள். புரோகிதரை முன்னிறுத்தி முடிசூட்டுவதற்கான பொருட் களை எடுத்துக்கொண்டு சிற்றரசர்களும் அந்த ணர்களும் அரச மாளிகைக்குள் நுழைந்தனர்.

பின்னர் திருவுடைநாயகன் இராமனுக்கும் நகரவாசிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் இனிதே நிறைவேறியது.

முன்னொரு காலத்தில் இந்திரனாலும், மருத் கணங்களாலும் தேவ சேனாதிபதியாக கந்தவேள் பட்டம் சூட்டப்பட்டதைப்போல, மிக அரிய செயலையும் எளிதில் முடிக்கவல்ல இராமனால் முடிசூட்டப்பட்ட சத்துருக்னன் சூரியனைப்போல சுடரொளி வீசினான். சத்ருக்னனுக்கு முடிசூட்டப்பட்டதைக் கண்டு நகரமக்களும் கல்விகற்ற அந்தணர்களும் மிக மகிழ்ச்சியடைந்தனர்.

அப்போது கௌசல்யா, சுமித்திரை, கைகேயி ஆகியோரும், அந்தப்புரத்தில் இருந்த மற்ற பெண்களும் சத்ருக்னனுக்கு மங்கள சடங்குகளைச் செய்தனர். யமுனைக் கரையில் வசிக்கும் முனிவர்கள் சத்ருக்னனுக்கு முடி சூட்டப்பட்டதும் "லவணன் ஒழிந்தேபோனான்' என்று உறுதியாக நம்பினார்கள்.

பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அவன் ஆன்மப் பொலிவை நிறைவு செய்யுமாறு சத்ருக்னனை மடியில் இருத்திக்கொண்டு இனிய சொற்களைக் கூறினார் இராமன்.

"எதிரியின் பட்டணத்தைக் காப்பாற்று பவனே, ரகுகுல மாணிக்கமே, இப்போது நான் உனக்குக் கொடுக்கும் அம்பு தெய்வீகமானது; வீண் போகாதது. இந்த அம்பினால் நீ லவணனைக் கொல்லப்போகிறாய். தான் தோன்றியும், எவராலும் வெல்லமுடியாதவரும், தேவர்களாலும் அசுரர்களாலும் காணமுடியாத வரும், பாற்கடலில் படுத்துக்கொண்டிருக்கும் தேவாதி தேவருமான மகாவிஷ்ணுவால் இந்த அம்பு உருவாக்கப்பட்டது.

மிகவும் மகிமை பொருந்திய இந்த அம்பு எந்த உயிரினங்களாலும் காணமுடியாதது. துராத்மாக்களிடம் கோபம்கொண்டு அவர் களை அழிப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. வீரனே, மகாவிஷ்ணுவானவர் மூன்று உலகங் களையும் படைக்க விரும்பினார். ஆனால் அப்போதிருந்த மது- கைடபர்கள் இடையூறு செய்ததால், போர்புரிந்து இந்த அம்பைக் கொண்டே அவர்களைக் கொன்றழித்தார். பேராற்றல் பொருந்திய இந்த அன்பினால் மதுவையும் கைடபனையும் கொன்று, ஜீவர் கள் தத்தம் தர்மவினைப் பயன்களை அனுபவிப் பதற்காக உலகங்களைப் படைத்தார்.

முன்னர் இராவணனைக் கொல்வதற்காக நான் போர் புரிந்தபோது, இந்த அம்பினு டைய மகா பயங்கர ஆற்றலைத் தெரிந்து கொண்டிருந்த நான் இதை அங்கு பிரயோகிக்க வில்லை.

தந்நிகரற்ற தெய்வமான பரமேஸ்வரனால் மகிமை பொருந்திய ஒரு சூலம் எதிரிகளை அழிப்பதற்காக மதுவுக்குக் கொடுக்கப்பட்டது. லவணன் அதனைத் தன் மாளிகையில் வைத்து சிறப்பாக வழிபட்டுவருகிறான். அந்த சூலம் இருக்கும் துணிச்சலால் அனைத்துப் பக்கங்களிலும் அவன் சுற்றித்திரிந்து தனக்குத் தேவையான அளவுக்கு மிகுந்த உணவை அடைந்துவிடுகிறான். எவரேனும் இந்த அரக்க னைப் போருக்கழைத்தால், சூலத்தைக் கையி லேந்திச் சென்று அவர்களை சாம்பலாக்கி விடுவான்.

வீரனே, அந்த சூலாயுதம் அவன் கையிலில் லாத நேரத்தில், அவன் நகரத்திற்குள் நுழைய முடியாத வேளையில், நகர வாயிலில் ஆயுதம் ஏந்தியவனாக நீ காத்துக்கொண்டிரு. அவன் தன் மாளிகைக்குள் செல்வதற்கு முன்பாக அவனைப் போருக்கழைப்பாய். அப்போது அவன் கையில் சூலமில்லாததால், நீ அந்த அரக்க னைக் கொன்றுவிடுவாய்.

ss

இவ்வாறல்லாமல், வேறுவழியில் அவனுடன் போர் புரிந்தால் அவன் வெல்லப்பட முடியாத வன். நான் சொன்னபடி செய்தால் அவன் அழிந்துவிடுவான். தேவாதி தேவனான மகா தேவரால் கொடுக்கப்பட்ட சூலத்தை எதிர்த்து யாராலும் நிற்கமுடியாது. இந்த விவரங்களை முழுமையாக உனக்குக் கூறிவிட்டேன்.''

64-ஆவது சர்க்கம்

சத்ருக்னன் புறப்பாடு

சத்ருக்னனுக்கு இத்தகைய செய்திகளை திட்டவட்டமாகக் கூறியபிறகும் இராமபிரான் மேலும் ஒரு செய்தியைக் கூறினார்.

"சத்ருக்னா, நான்காயிரம் குதிரைகள், இருபதாயிரம் தேர்கள், நூறு யானைகள் ஆகியவையும் மற்றும் செல்லும் வழியில் தேவைப்படும் பொருட்களை விற்பனை செய் யும் வியாபாரிகளும் உன்னுடன் வருவார்கள். மேலும் பொழுதுபோக்குக்காக நாட்டியமாடும் ஆண்களும் பெண்களுமான கலைஞர்களும் பின்தொடர்ந்து வருவார்கள்.

பத்து லட்சம் பொற்காசுகளை எடுத்துக் கொள். மேலும் தேவையான பிற பொருட்களை யும் வாகனங்களையும் உன்னுடன் கொண்டு செல். நம்முடைய படைவீரர்கள் நன்றாக போஷிக்கப்பட்டுள்ளனர். உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்தவர்கள். அவர்களுடன் இனிமையாகப் பேசியும், பொருள்கொடுத்தும் அவர்கள் எப்போதும் திருப்தியுடன் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

ரகுகுலத் தோன்றலே, நெருக்கடி ஏற்படும் காலத்தில் தலைவனைவிட்டு விலகாமல் மன நிறைவுடன் துணைநிற்கும் ஏவலாளர்களுக்கு இணையாக பொருள், மனைவி, உறவினர் கள் எவரையும் கூறமுடியாது. நிறைந்த மனதுடனிருக்கும் இந்த பெரும்படையை முன்னதாக மது வனத்திற்கு அனுப்பிவிட்டு, கையில் வில்லேந்திய தனி ஒருவனாக நீ பின்னே செல்லவேண்டும். மதுவினுடைய மைந்தன் லவணனுக்கு நீ போர்புரியும் விருப்பத்துடன் வருகிறாய் என்பது தெரியாதபடி செல்ல வேண்டும்.

மாவீரனே, நான் கூறிய உபாயத்தைத் தவிர அவன் மரணத்திற்கு வேறு வழியே இல்லை. கையில் சூலத்துடன் அவன் இருக்கும்போது அவனுடன் போரிட முயல்பவன் நிச்சயமாகக் கொல்லப்படுவான். தம்பி, கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வந்தவுடன் நீ லவண னைக் கொல்வாய். ஏனென்றால் அவனைக் கொல்வதற்கு ஏற்ற காலம் அதுதான்.

உன்னுடைய படைவீரர்கள், முனிவர்களை முன்னிருத்திக் கொண்டு பயணத்தைத தொடங் கட்டும். கோடைக்காலம் முடிவுக்குவரும் வேளையில் அவர்கள் கங்கையைக் கடந்து விடுவார்கள். கங்கைக் கரையில் படையை நிறுத்திவிட்டு பேராற்றல் பொருந்திய நீ மட்டும் கையில் வில்லேந்தியவனாக முன்னே செல்வாய்.'' இவ்வாறு இராமன் கூறி முடித்ததும் படைத்தலைவர்களையும் படை வீரர்களையும் அழைத்து சத்ருக்னன் கூறினான்.

"செல்லும் வழியில் படைவீரர்கள் தங்க வேண்டிய இடங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. நீங்கள் அங்கேதான் தங்கவேண்டும். யாருக்கும் துன்பம் நேராக வகையில், மனத் துன்பமில்லா மல் தங்கவேண்டும்.''

பின்னர் அந்த மாபெரும் படைக்கு அனுமதி கொடுத்து புறப்படச் செய்துவிட்டு, கௌசல்யா, சுமத்திரை, கைகேயிக்கு நமஸ்காரம் செய்தான் சத்ருக்னன்.

இராமனை வலம்வந்து தலைவணங்கி அவ ரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, எதிரிகளை வாட்டிவதைக்கும் சத்ருக்னன் லட்சுமணன், பரதனையும் கைகூப்பி வணங்கினான். புரோகி தர் வசிஷ்டரை வலம்வந்து வணங்கிவிட்டு புறப் பட்டுச் சென்றான்.

வீரம் மிகுந்த யானைகள், குதிரைகள் கொண்ட மாபெரும் படையை முன்னதாக அனுப்பிவைத்த சத்ருக்னன் இராமனுடன் ஒருமாத காலம் இருந்துவிட்டு பின்னர் புறப் பட்டுச் சென்றான்.

65-ஆவது சர்க்கம்

கல்மாஷபாதன் வரலாறு

சத்ருக்னன் தனது படையை முன்னதாகவே அனுப்பிவிட்டு, ஒரு மாதகாலம் அயோத்தியில் தங்கியிருந்துவிட்டு பின் தனியொருவனாக மதுவணம் நோக்கி விரைவாகச் சென்றான். ரகு குலத்தின் பெரும் தகைமை வாய்ந்த அவன் வழியில் இரண்டு இரவுகளைக் கழித்துவிட்டு மூன்றாவது நாளில் வால்மீகி மகரிஷியின் புனிதமான ஆசிரமத்தை அடைந்தான்.

ஆத்மானந்தம் தரும் சிறந்த முனிவரான வால்மீகியை வணங்கி இரு கரங்களையும் கூப்பியவண்ணம், "ஐயனே, என்னுடைய தமயனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகப் போய்க்கொண்டிருக்கிறேன். இன்றிரவு இங்கு தங்கிவிட்டு நாளை பொழுது விடிந்ததும் வருண பகவானின் திசையாகிய மேற்குச்நோக்கிச் செல்வேன்'' என்றான்.

சத்ருக்னன் பேசியதைக்கேட்டு மெல்ல புன்னகைத்தவர், "உன் வரவு நல்வரவாகுக'' என்றார்.

"செல்வனே, இந்த ஆசிரமம் ரகு குலத்தினருக்கு சொந்த வீடு போன்றதலைவா? அதனால் சற்றும் தயங்காமல் ஆசனம், பாத்யம், அர்க்கியம் முதலிய உபசாரங்களை ஏற்றுக்கொள்'' என்றார்

பின்னர் முனிவர் அளித்த முறைப்படியான உபசாரங்களையும் கனி, கிழங்கு ஆகிய உணவை யும் ஏற்று சத்ருக்னன் மிகவும் திருப்தியடைந் தான்‌. கனி, கிழங்குகளைப் புசித்த பின்னர் முனிவரைப் பார்த்து, "முனிவரே, அருகிலேயே வேள்விகள் நடந்ததற்கான தடயங்கள் தென்படு கின்றனவே. எந்த மன்னர் இங்கு வேள்வி செய்தார்?'' என்று கேட்டான்.

அதற்கு வால்மீகி முனிவர், "சத்ருக்னா, முன்னர் இந்த இடம் யாருடைய வசிப்பிடமாக இருந்தது என்பதைக் கேள். உங்களது முன்னோர் களில் சுதாஸன் என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவருடைய மகனின் பெயர் வீர சகன்.

அவன் வீரம் மிக்கவனாகவும் அறச்செயல் களைப் புரிபவனாகவும் இருந்தான். சுதாஸனின் மகன் இளம்வயதில் வேட்டையாடுவதற்காக காட்டுக்குச் சென்றான். அங்கு இரண்டு அரக்கர் கள் சுற்றித் திரிந்துகொண்டிருப்பதைக் கண்டான். அந்த அரக்கர்கள் பயங்கரமான புலியின் உருவத்தை ஏற்று, ஆயிரங்கணக்கான விலங்குகளைப் பிடித்துப் புசித்து, பின்னரும் பசியடங்காது, மனம் திருப்தியடையாமல் இருந்தார்கள்.

காட்டில் விலங்குகளே இல்லாமல் செய்து விட்ட அவர்களைக் கண்ட சுதாஸனின் மகன் மிகவும் கோபம்கொண்டு, வலிமைமிக்க ஓர் அம்பினால் அவர்கள் இருவரில் ஒருவனைக் கொன்றான். வீர சகன் ஒருவனை வீழ்த்திவிட்டு மனக்கலக்கம் நீங்கி கோபம் தணிந்து, வீழ்ந்துகிடந்த அரக்கனைப் பார்த்தான். மாய்க்கப்பட்ட அரக்கனின் தோழன் இறந்து கிடந்த தன் நண்பனின் சடலத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சுதாஸ மகனிடம் பெரும் கோபம்கொண்டு, "மகா பாவியே, எந்த குற்றமும் செய்யாத என் நண்பனைக் கொன்றுவிட்டாய். அதற்காக உன்னை நான் பழிதீர்ப்பேன்'' என்றான்.

இவ்வாறு கூறிவிட்டு அந்த அரக்கன் அப்போதே மறைந்துபோனான்.

வெகுகாலத்திற்குப் பின்னர் மித்ர சகன் அரச பதவியை அடைந்தான். இந்த ஆசிரமத்தின் அருகில் மித்ரசகன் வேள்விகள் செய்துவந்தான்.

ஒருசமயம் வசிஷ்டர் தலைமையில் அஸ்வ மேத யாகம் செய்தான். அந்த வேள்வி பல ஆண்டுகளாக நடைபெற்றது. தேவர்கள் வேள்வி செய்வதைப்போல மிக கோலாகலமாக வும் செல்வச் செழிப்புடனும் நடைபெற்றது.

தன்னை மறைத்துக்கொண்ட அந்த அரக்கன் பழைய பகைமையை நினைவில்கொண்டு, வேள்வி நிறைவடையும் வேளையில் வசிஷ்டரைப்போல் உருவமேற்று, மன்னனிடம் வந்து, "மன்னனே, இப்போது இந்த வேள்வி நிறைவேறப் போகிறது. எனக்கு புலால் உணவை உடனே அளிப்பாயாக. இதுபற்றி ஆலோசனை செய்யத் தேவையில்லை'' என்றான்.

அந்தன வடிவிலிருந்த அரக்கனின் சொற்களைக் கேட்ட மன்னன், தலைசிறந்த சமையல் கலைஞரிடம், "சுவை மிகுந்த புலால் உணவை உடனே பக்குவம் செய்யுங்கள். ருசியான அந்த உணவைப் புசித்து என் ஆச்சாரியார் மனம் மகிழவேண்டும்'' என்றான். மன்னனுடைய கட்டளையைக் கேட்டு சமையல்காரர்கள் மிகவும் குழப்ப மடைந்தார்கள். அந்த அரக்கன் தானே சமையல்காரனாகவும் உருமாற்றம் செய்து கொண்டான். அவன் மனித மாமிசம் கலந்த உணவை எடுத்துவந்து மன்னரிடம், "சுவையான புலால் உணவு கொண்டுவந்திருக்கிறேன்'' என்றான்.

மனைவியான மதயந்தியுடன் வந்த மன்னன், அரக்கன் கொண்டுவந்த புலால் உணவை வசிஷ்டர் எதிரில் வைத்தான்.

தட்டில் மனித மாமிசம் கலந்த உணவு வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்ட அந்தனர் அளவுகடந்த கோபத்துடன், "மன்னனே, இந்த உணவை நான் உண்பதற்காகக் கொடுத்திருக்கிறாயல்லவா? எனவே இதுவே உன் உணவாகப் போகிறது. இது நிச்சயம்'' என்றார்.

அப்போது கோபம்கொண்ட ஸௌதாஸன் கையில் தண்ணீர் எடுத்துக் கொண்டான். உடனே அவன் மனைவி அவனைத் தடுத்தாள். "மன்னரே, வசிஷ்ட பகவான் மாமுனிவர். நம்முடைய ஆச்சாரியார். தேவதைகளுக்கு நிகரான புரோகிதர். தங்களால் அவருக்கு எதிர்சாபம் அளிக்க முடியாது'' என்றாள்.

பின்னர் சினத்தின் காரணமாகக் கையில் ஏந்தப்பட்டதும், ஆன்மபலம் நிறைந்ததுமான அந்த நீரைத் தரையில் கொட்டி கால்களை நனைத்தான்.

அதனால் அந்த மன்னனுடைய கால்கள் நிறம் மாறிவிட்டன. அதனால் அவன் கல்மாஷ பாதன் என்று அழைக்கப்பட்டான்.

மன்னன் தன் மனைவியுடன் அவர் பாதங் களில் பலமுறை விழுந்து வணங்கி, அந்தன வடிவத்தில் வந்தவனால் சொல்லப்பட்டதை வசிஷ்டரிடம் தெரிவித்தான். அவ்வாறு செய்யப்பட்டதைக் கேட்ட வசிஷ்டர் மன்னரிடம், "கோபத்துடன் நான் சொன்ன வார்த்தைகள் வீணாக்கப்பட முடியாதவை. ஆனால் ஒரு வரம் தருகிறேன். அரசனே, இந்த சாபம் பன்னிரண்டு ஆண்டு காலத்துடன் முடிவுக்கு வரும். பிறகு என்னருளால் இப்போது நடந்துள்ள இந்த நிகழ்ச்சிகள் உன் நினைவில் தங்கமாட்டாது'' என்றார்.

இவ்வாறு அந்த மன்னன் சாபத்தின் விளைவை அனுபவித்துவிட்டு பின்னர் நாட்டை அடைந்து குடிமக்களைக் காப்பாற்றி வந்தார். அந்த கல்மாஷ பாதருடைய மங்கலமான வேள்விச்சாலை இந்த ஆசிரமத்தின் அருகில்தான் இருக்கிறது.'' பெருமைவாய்ந்த மாமன்னரின் உடலை உறையவைக்கும் கதையைக் கேட்டு மாமுனிவரை வணங்கியபின் சத்ருக்னன் குடிலுக்குள் நுழைந்தான்.

(தொடரும்)