வண்ணமும் மகிழ்ச்சியும் புதுப்பொலிவும் நிறைந்து, அனைவரும் ஆடிப்பாடி ஆனந்தமாகக் கொண்டாடும் விழா ஹோலிப் பண்டிகை.
வசந்த காலத்தை வரவேற்கும் விழாவான இது, வடமாநிலங்களில் பங்குனி மாதப் பௌர்ணமியன்று கொண்டாடப்படுகிறது.
ஹோலிப் பண்டிகையன்று வண்ணப்பொடிகளை நீரில் கரைத்து, அந்த நீரைக் குழல்மூலம் ஒருவர்மீது ஒருவர் பீய்ச்சியடித்துக்கொண்டு, வண்ணச்சாயங்களை ஒருவர் முகத்தில் இன்னொருவர் பூசிவிட்டு, வேடிக்கை பார்த்து அகம்மகிழ்வார்கள்.
குறிப்பாக பகை இருந்தால்- அதாவது ஏதோ காரணத்தால் இருவருக்கும் பகைமை ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் பேசாமல், பார்க்காமல் இருந்தால்கூட, இந்த ஹோலிப் பண்டிகையன்று அவர்களிருவரும் பகைமையை மறந்து, கட்டித்தழுவி கூடிப்பேசி மீண்டும் நட்பைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.
புராண காலத்தில், இரண்யகசிபு என்ற அசுரர் குல அரசன் கடுந்தவம் செய்து அதன்பயனாக பல அற்புத சக்திகளை பரமேஸ்வரனிடம் பெற்றுக்கொண்டான். ஏழுலகங்களுக்கும் அவனே தெய்வம் என்றும், அவன் பெயரைச்சொல்லியே வணங்க வேண்டு மென்றும் மக்களைத் துன்புறுத்தினான்.
அவன் கொட்டத்தை அடக்கவே அவனுக்கு மகனாகப் பிறந்தவன் பிரகலாதன். விஷ்ணுவை எதிர்ப்பவன் இரண்யகசிபு.
மாறாக விஷ்ணுவை ஆராதிப்பவன் பிரக லாதன். இதனால் இரண்யகசிபு, தனது மகன் பிரகலாதனைக் கொல்லப் பலவகையிலும் முயன்றான். ஆனால் பிரகலாதனை ஒன்றும்செய்ய முடியவில்லை.
இரண்யகசிபுவின் முழு அன்பையும் பெற்றவள் அவனுடைய தங்கையான ஹோலிகா. இவளுக்கு ஒரு அபூர்வ சக்தியுண்டு. அதாவது இவளை எரியும் நெருப்பில் போட்டாலும் சாம்பலாக மாட்டாள். மாறாக, அன்றலர்ந்த தாமரைப்பூவைப்போல மேலே எழுந்து வந்துவிடுவாள். எனவே இரண்யகசிபு, தன் மகன் பிரகலாதனை நெருப்பிற்குள் கொண்டுசென்று தீக்கிரையாக்கும்படி ஹோலிகாவைக் கேட்டுக்கொண்டான். நாராயண பக்தனான பிரகலாதனைக் கையில் ஏந்தியபடி கொழுந்துவிட்டெரியும் நெருப்புக்குள் இறங்கினாள் ஹோலிகா. பிரகலாதனோ ஹரிநாமத்தை ஜபித்தபடியே இருந்தான். சிறிது நேரமாயிற்று. அங்கே மாறுதல் ஏற்பட்டது. ஹோலிகாவை வெப்பம் தாக்கியது. அதைத் தாங்கமுடியாமல் அலறினாள். கொஞ்சம் கொஞ்சமாக அப்ப டியே கருகி சாம்பலாகிவிட்டாள். ஹோலிகா தான் எப்போதும் நெருப்பிலிருந்து தாமரை போல மேலெழுந்து வருவாள். மாறாக, இப்போது பிரகலாதன் தாமரை மலர்போல மேலெழுந்து வந்தான்.
ஹோலிகா என்னும் தீயசக்தி நெருப்பில் எரிந்து சாம்பலான அந்த மகிழ்ச்சிமிக்க திருநாளையே வடநாட்டு மக்கள் ஹோலிப் பண்டிகை என்று குதூகலமாகக் கொண்டாடுகின்றனர். இந்த நாளன்று, பக்தர்கள் மரக்கட்டைகளைத் தீயிலிட்டு எரியவிடுகின்றனர். அதிலிருந்து கிட்டும் கரித் துண்டுகளை எடுத்து, அதற்கு சாம்பிராணிப் புகை அல்லது ஊதுபத்தி ஏற்றி அதன் புகையைக் காண்பித்துவிட்டு, அதை ஒரு துணியில் கட்டி வாசல் கதவின்மேல் தொங்கவிடுகின்றனர். அந்தக் கரித்துண்டுகள் எந்தக் கெடுதலையும் வீட்டுக்குள் அனுமதிக் காது என்றும், ஒரு தாயத்துப்போலிருந்து திருஷ்டி மற்றும் பில்லி, சூன்யங்களை வீட்டிற்குள் வராமல் தடுத்துவிடும் என்றும் ஒரு நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.
இந்தப் பண்டிகை நாளன்றுதான் சைதன்ய மகாபிரபு அவதரித்தார். எனவே, இந்த நாளே அவரது பிறந்த நாளாகக் கருதி, அவருடைய பக்தர்கள் இறை நாமகீர்த்தனமான "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே' என்று, அன்று பகல் மற்றும் இரவு முழுவதும் பஜனை செய்து, அந்த மகானை ஆராதித்து அருள்பெறுகிறார் கள். அன்பு, கருணை, இளகிய மனம்கொண்ட அந்த மகாபிரபுவின் கொள்கை களை அனைவரும் கடைப் பிடிக்க வேண்டு மென்பதே இதன் நோக்க மென்று, இந்த நாளில் அவர்கள் உறுதி எடுத்துக்கொள்கின்றனர்.
சிவபெருமான், அழகிற் சிறந்த மன்மதனை சுட்டெரித்த நாளாகவும் இந்த ஹோலி நாளைக் கொண்டாடுகின்றனர். மதுரா வில் ஸ்ரீகிருஷ்ணன் கோபியர்களுடன் சிருங்கார ரஸம் ததும்ப விளையாடிய நாளாகவும் கொண்டாடுகின்றனர்.
சிவபெருமான்- உமையவள் திருமணநாளாக வும், கிராமங்களில் இதைப் புத்தாண்டாகவும், அன்றைய தினம் புதுப்புது பயிர்களை நடும் நாளாகவும், அவரவர்களின் ஐதீகப்படி இவ்விழா பலவாறு கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இதேநாளில் இந்த விழா வடநாட்டவர்களால் கொண்டாடப் படுகிறது.
இவ்விழா நாளில் ஒருவர்மீது ஒருவர் பூசப்பட்ட வண்ணச்சாயம் படிந்த ஆடைகளைத் தொடர்ந்து அணியக்கூடாது என்பது சம்பிரதாயம் என்பதால், அவற்றை அன்று மாலையே மாற்றிவிட்டு வேறு ஆடை அணிந்துகொள்வார்கள். சாயம் பூசப்பட்ட ஆடைகளை ஏழைகளுக்கு தானமாகத் தந்துவிடுவார்கள்.
இந்தப் பண்டிகை நாளில் பலவித சிறப்பு இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பார்கள். நெய், வெல்லம், கோதுமை மாவு ஆகியவற்றில் பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பழம், கற்கண்டு, திராட்சை போன்றவற்றைக் கலந்து ருசியான குஜியா, பாப்ரி, வெல்ல போளி மற்றும் வேறுபல இனிப்புப் பண்டகளையும் தயாரிப்பார்கள். இவற்றை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அண்டை வீட்டுக்காரர்களுக்கும் கொடுத்து பகிர்ந்துண்பார்கள்.
இரவு இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு அவரவர் வீட்டுக்கு வந்து, தங்களது குலதெய்வம் எதுவோ, குலகுருமார்கள் எவரோ அவர்களுக்குப் பூஜைசெய்து, தங்கள் குடும்பம் இன்றுபோல என்றும் குதூகலமாக இருக்கவேண்டுமென பிரார்த்தனை செய்துகொண்டு, பண்டிகையை இனிதே முடித்துக்கொள்வார்கள்.
இயற்கையும், புராணமும், தெய்வ பக்தியும் கலந்து குதூகலமாகக் கொண்டாடும் ஒரு பக்தி நிறைந்த அற்புதமான இந்துப் பண்டிகை ஹோலி.