ஜூன் 2018-ல் "ஓம் சரவணபவ' இதழ், வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 17-ஆம் ஆண்டு முடிந்து 18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு 18-ன் சிறப்புகள் பற்றிக் காண்போம்.
இது ஒரு தெய்வீக எண்ணாகும்.
பிரம்ம, பத்ம, விஷ்ணு, சிவ, பாகவத, நாரத, மார்க்கண்டேய, அக்னி, பவிஷ்ய, வைவர்த்த, லிங்க, வராக, ஸ்கந்த, வாமன, கூர்ம, மத்சய, கருட, பிரம்மாண்ட என்று 18 புராணங்கள் உள்ளன.
ராகு- கேது கிரகங்கள் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஒன்றரை வருடங்கள். அதாவது 18 மாதங்களாகும். ஜோதிடத்தில் ராகு மகாதசை 18 வருடம்.
கந்த பெருமானுக் கும் சூரபத்மனுக்கும் (தேவருக்கும் அசுரருக்கும்) 18 வருடங்கள் போர் நடைபெற்றது. ராமருக்கும் இராவணனுக்கும் நடந்த போர் (மனிதருக்கும் அசுரருக்கும்) 18 மாதங்கள் நடைபெற்றது. மகாபாரதத்தில் மனிதனுக்கும் மனிதனுக்கும் (பஞ்சபாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்) 18 நாட்கள் போர் நடைபெற்றது.
ஆடி மாதம் 18-ஆம் பெருக்கில், காவிரியில் 18 படிகள் தொடும் அளவுக்கு தண்ணீர் ஓடும்.
கீதையில் அத்தியாயம் 18. அவை: அர்ஜுனவிஷாத யோகம், சாங்கிய யோகம், கர்ம யோகம், ஞானகர்ம சந்நியாச யோகம், கர்மசந்நியாச யோகம், ஆத்ம சம்யா யோகம், ஞானவிஞ்ஞான யோகம், அக்ஷர ப்ரஹ்மயோகம், ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம், விபூதி யோகம், விச்வரூபதர்சன யோகம், பக்தி யோகம், க்ஷேத்திர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம், குணத்ரய விபாக யோகம், புருஷோத்தம யோகம், தைவாசுர சம்பத் விபாக யோகம், சிரத்தாத்ரய விபாக யோகம், மோட்ச சந்நியாச யோகம் என்பன.
ஸ்ரீமத் பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு 18 பெயர்கள் உள்ளன. அவை: ஹ்ருஷிகேசன்- இந்திரியங்களுக்கு ஈசன்;
அச்யுதன்- தன் நிலையினின்று வழுவாதவன்; கிருஷ்ணன்- கருப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன், மும்மூர்த்தி சொரூபம், பிரம்ம சொரூபம், அடியார் படும் துயரம் துடைப்பவன்; கேசவன்- அழகிய முடியுடையவன், மும்மூர்த்தி களை வசமாய் வைத்திருப்ப வன், கேசின் என்ற அசுரனைக் கொன்றவன்; கோவிந்தன்- ஜீவர்களை அழித்தவன்; மதுசூதனன்- மது என்ற அசுரனை அழித்தவன்; ஜனார்த்தனன்- மக்களால் துதிக்கப் படுபவன்; மாதவன்- திருமகளுக்குத் தலைவன்; வார்ஷணேயன்- வ்ருஷ்ணி குலத்தில் உதித்த வன்; அரிசூதனன்- எதிரிகளை அழிப்பவன்; கேசிநிஷூதனன்- கேசிகன் என்ற அசுரனை அழித்தவன்; வாசுதேவன்- வசுதேவன் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்; புருஷோத்தமன்- பரமபுருஷன்; பகவான்- ஷட்குண சம்பன்னன்; யோகேச்வரன்- யோகத்துக்குத் தலைவன்; விஷ்ணு- எங்கும் வியாபகமாயிருப்பவன்; ஜகத் நிவாசன்- உலகுக்கு இருப்பிடம்; யாதவன்- யதுகுலத்தில் தோன்றியவன்.
சிவவாக்கியர், திருமூலர், கோரக்கர், போகர், ஸ்ரீராமதேவர், தன்வந்திரி, குதம்பைச்சித்தர், கருவூரார், இடைக்காடர், வால்மீகர், பாம்பாட்டிச் சித்தர், கொங்கணர், சுந்தரானந்தர், மச்சமுனி, கமலமுனி, சட்டைநாதர், பதஞ்சலி, அகத்தியர் என சித்தர்கள் பதினெட்டு பேர்.
இவ்வாறு பதினெட்டின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். "ஓம்' இதழும் அவ்வாறு பெருமை பெறுக.