நடுநாட்டுப்பகுதியில், சோழவம்ச சிற்றரசன் சொல்லாடன் கெடிலம் நதிக்கு அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்தான். மக்கள்மீதும், படைவீரர்கள்மீதும் அன்பு செலுத்திய அரசன்மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். இளைஞர்களும் வீரர்களும் அரசனைத் தங்களின் தெய்வமாகவே கருதி னார்கள். மகிழ்ச்சியோடு இருந்த காலம். வளம் கொழிக்கும் செழிப்பான பூமிமீது மற்ற நாட்டு அரசர்களுக்கு அதை அபகரிக்கும் எண்ணம் வருமல்லவா? அப்படி வந்தது இன்னல்- சொல்லாடன் அரசுக்கு.
"சொல்லாடனின் குடும்பன் கோட்டையை அழித்தொழிக்க ஆழிநாட்டு சிற்றரசன் உதயவேந்தன் படைகளைப் பெருக்கி வருகிறான்; எந்த நேரத்திலும் அவன் படைகள் குடும்பன் கோட்டையைத் தாக்கலாம்' என்ற தகவல் ஒற்றர்கள்மூலம் சொல்லாடனுக்கு வந்துசேர்ந்தது. உடனே சொல்லாடன் தன் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு ஊருக்கும் ஓலை அனுப்பி னான்- இளைஞர்களான போர்வீரர்கள் படைக்குத் தயாராகிப் புறப்பட்டு வருமாறு. தங்கள் நடுநாட்டுக்கு ஆபத்து வரும் போது மண்ணுக்காகப் போர்புரிவதை குலத் தொழிலாகக் கொண்ட அனைவரும் தினவெடுத்த தோள்களோடு போர்க்கோலம் பூண்டு புறப்பட்டனர்.
கெடிலம் நதிக் கரையோரம் அமைந்த ஊர் நியாய பரிபாலன நல்லூர். இதற்கு "திருபுவன மாதேவிபிடாக சாத்திப்பட்டு' என்ற பெயரும் உண்டு. இப்போது சாத்திப்பட்டு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்த வீரர்களும் மன்னன் சொல்லாடனின் ஓலைச்செய்தி வந்தவுடனே தங்கள் குலதெய்வமான நங்கையம்மன்தாயாரின் கோவிலுக்குச் சென்று வேண்டுதல் செய்து சபதம் எடுத்துக்கொண்டு, அம்மனின் உத்தரவோடு போருக்குப் புறப் பட்டனர். சொல்லாடன் படைகள் கெடிலம், பெண்ணை என இரு ஆறுகளையும் கடந்து கஞ்சனூரில் முகாமிட்டது. இரவோடு இரவாகச் சென்று ஆழிநாட்டுப் படைகளுடன் மோதியது. அந்த வீராவேசமான தாக்குதலை சமாளிக்கமுடியாமல் ஆழிநாட்டுப் படைகள் சிதறியோடின. சொல்லாடன் படை வெற்றிபெற்றது. இப்படையில் ஏழு குழுவிற்குத் தலைமையேற்றுச் சென்று எதிரிப்படை வீரர்களின் தலையை உருளச்செய்த வீரன் சாத்திப்பட்டு வீரசோழன். பெயருக்கேற்ற வீரன். அழகும் துடிப்பம் மிக்க இளங்காளை. போர்க்களத்தில் இவனது வீரம் கண்டு வியந்தவர்கள், மன்னன் சொல்லாடன்வரை இவனது வீரச்செயலைக் கொண்டு சென்றனர்.
வெற்றி பெற்ற அரசன் சொல்லாடன் தனது அரண்மனையில் பெரிய வெற்றி விழாவைக் கொண்டாடியதோடு, தன் வீரர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கிக்கொண்டிருந்தான். அதே நாளில் நியாய பரிபால நல்லூரான சாத்திப்பட்டில், போருக்குச் சென்று வெற்றிபெற்ற வீரர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தினரோடு தங்கள் குலதெய்வமான நங்கையம்மனுக்கு விழா எடுத்தனர். நேர்த்திக்கடனைச் செய்ய ஊர்வலமாகச் சென்றனர்.
பறை, உடுக்கை, பம்பை என வாத்திய ஒலிகள் காதைப்பிளக்க, கரகாட்டம், சிலம்பாட்டம் என ஆடிப்பாடியபடி கோவிலை நோக்கிச் சென்றனர். பெண்கள் தங்கள் வீரக்கணவர்களோடு பெருமை பொங்க நடந்தனர். அதில் வீரசோழனும், அவனது காதலியும் வருங்கால மனைவியுமான வள்ளிக்கொடியும் இருந்த னர். அழகு தேவதையான வள்ளிக்கொடிக்கும் வீரசோழனுக்கும் திருமணம் செய்ய உறவினர் கள் ஏற்கெனவே நிச்சயம் செய்திருந்த நிலையில்தான் திடீரென்று போருக்குச் செல்ல அழைப்பு வந்திருந்தது வீரசோழனுக்கு. போரில் வெற்றிபெற்று வந்த தனது வருங்காலக் கணவர், அம்மன் விழா முடிந்த அடுத்தநாளே தன் கழுத்தில் தாலிகட்டப் போகிறான் என்ற பூரிப்போடு, துள்ளல் நடைபோட்டு வீரசோழனை ஓரக் கண்ணால் பார்த்தபடியே கோவிலை நோக்கிச் சென்றாள் வள்ளிக் கொடி. ஊர்மக்களுக்கு போரில் தங்கள் அரசன் வெற்றிபெற்றது சந்தோஷம். தங்கள் ஊர் வீரசோழனின் போர்த்திறமையினால் தங்களுக்கு மட்டுமல்ல; ஊருக்கே பெருமை என்று பூரித்துப்போனார்கள்.
போரில் கலந்து கொண்ட வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய வாள், வேல், அம்பு போன்ற ஆயுதங்களை அம்மன் முன்பு வைத்த னர். பெண்கள் பொங்கலிட் டனர். ஆடு, கோழி பலியிட்டு சமைத்து அம்மனுக்குப் படையலிட் டனர். எல்லாரும் வழிபாடுகளைச் செய்து அம்மனுக்கு தீபாரதனை நடத்தினார்கள்.
அம்மன்மீதுள்ள பக்தி அங்கே ஒருவித அமைதியை ஏற்படுத்தியது. அப்போது வீரன் வீரசோழன் தன் வாளை அம்மன் காலடியில் வைத்தான். நெடுஞ்சாண் கிடையாக அம்மன் முன்பு விழுந்து வணங்கினான். எல்லார் கண்களும் வீரசோழனைப் பார்த்துக்கொண்டிருந்தன. தரையிலிருந்து எழுந்தவன் தன் வாளை எடுத்தான். தலைக்குமேல் ஒரு சுழற்று சுழற்றினான். போர்முறையின்படி கண்ணிமைக்கும் நேரத்தில் தன் வாளை தலைக்குக் கீழே இறக்கிய வீரசோழன் அந்த வாளால் தன் தலையைத் தானே வீசி எறிந்தான். மொத்தக்கூட்டமும் அதிர்ச்சியில் உறைந்துபோனது. காற்றில் அசையும் மரங்கள், வானத்தில் பறந்த பறவைகள்கூட அசைவற்று நின்றன. வள்ளிக்கொடியின் தாம்பூலத்தட்டில் போய்விழுந்தது வீரசோழனின் தலை. சில நொடிகளில் நடந்துவிட்ட இந்தக் காட்சியைக் கண்ட வள்ளிக்கொடி வெட்டிய வாழைமரம்போல சாய்ந்தாள்.
அப்போது கோவிலின் முன்பு புழுதிபறக்க குதிரைமீது பறந்துவந்து நின்றான் அரசன் அனுப்பிய ஒரு வீரன். நடந்துவிட்ட விபரீதத்தைக் கண்டவன் தலையில் அடித் துக்கொண்டு கதறினான். "இன்னும் சில நொடிகளுக்கு முன்பு நான் வந்திருந்தால் இவன் தலை தப்பியிருக்குமே. காற்றைவிட வேகமாகப் பறந்து வந்தும் வீரசோழனைக் காப்பாற்ற முடியவில்லையே' என்று கதறியழுதான். மொத்தக் கூட்டமும் கதறியது.
போரில் வெற்றி பெற்ற வீரன் ஏன் தன் தலையை அறுத்து அம்மனுக்கு பலியிட்டான்? நேர்த்திக்கடனுக்காக! ஆம்; மன்னன் போருக்கு வருமாறு ஓலை அனுப்பியதும் அம்மனிடம் சென்று வணங்கிய வீரசோழன், "போரில் எங்கள் மன்னன் வெற்றிபெற வேண்டும்.
அவரது புகழ் பரவவேண்டும். நாங்கள் வெற்றி பெற்றால் உமக்கு என் தலையைக் காணிக்கையாகக்குகிறேன்' என்று துர்க்கையிடம் வேண்டிக் கொண்டான் வீரசோழன்.
ஆனால் இதை யாரிடமும் சொல்லவில்லை. போரின் இடையில் கிடைத்த ஓய்வின்போது தனது உயிர் நண்பனான வீரபத்திரனிடம் மட்டும் சொல்லியிருந்தான். போர் மும்முரத்தில் இருந்த வீரபத்திரன் இதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. போரில் வெற்றிபெற்ற பிறகு அரண்மனையில் வீரர்களுக்குப் பரிசளிப்பு விழா நடந்தது. அங்கே அரசனிடம் பரிசுபெற வரவேண்டிய நண்பன் வீரசோழனைக் காணவில்லை.
அப்போதுதான் வீரபத்திரனுக்கு வீரசோழன் அம்மனுக்கு தலையைக் காணிக்கையாக்குவதாக சொன்னது நினைவு வந்தது. உடனே மன்னனிடம் ஓடி விஷயத்தைச் சொல்ல, திகைத்துப்போன மன்னன் தனது படைத்தளபதிகளில் ஒருவனான கதிரமுத்துவிடம், ""உடனே செல். சாத்திப்பட்டில் உள்ள வீரசோழன் தலையைக் காணிக்கையாகச் செலுத்துவதற்குள் பறந்துபோய் தடுத்து நிறுத்து. நானும் பின்தொடர்கிறேன்'' என்று கட்டளையிட்டுவிட்டு, சபையிலிருந்த வேதவிற்பன்னர்களை அழைத்து, ""தலையைக் காணிக்கையாகச் செலுத்தும் நேர்த்திக்கடனுக்கு மாற்றுவழி ஏதேனும் சாஸ்திரங்களில் உண்டா?'' என்று கேட்டான்.
அப்போது விற்பன்னர்கள், ""வேண்டுதல் செய்துகொண்ட அம்மனுக்கு 100 ஆட்டுக்கிடாக் களையும், அந்த வீரன் போருக்குப் பயன்படுத்திய குதிரையையும் பலியிட்டால் போதும். அந்தப் பரிகாரத்தை அம்மன் ஏற்றுக் கொள்வாள். இதுபோல ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளது'' என்று சொல்ல, இந்த தகவலோடு மன்னனும் உடனே சாத்திப்பட்டு நோக்கிப் புறப்பட்டான். இதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
அரசுத் தூதுவன் கதிரமுத்து சொன்ன மேற்படி தகவலைக் கேட்டு ஊர்மக்கள் அழுது கதறினார்கள்.
அப்போது, ""மாவீரனை இழந்து விட்டோமே என்று யாரும் இனி அழுது புலம்ப வேண்டாம்'' என இடியோசையாகக் கேட்டது ஒரு குரல். எல்லாரும் திரும்பிப்பார்த் தனர். வீரசோழனின் தந்தை மாயவேலனின் குரல்தான் அது. ""நாம் எல்லாரும் ஒரு நாள் இறப்பவர்கள்தான். என் மகன் நாட்டுக்காக- நாட்டைக் காக்கும் வெற்றிக்காக தன் உயிரைத் துறந்துள்ளான். அவன் மறைந்தாலும் நம் நாடுள்ளவரை அவன் பெயர், புகழ் இருக்கும். ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த அவனை தெய்வமாக நினைத்து வணங்குவோம். அம்மனுக்கு படையல் பூசை தொடரட்டும்'' என்றார். அவரது சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டு பூஜை செய்தனர். அதேநேரம் அரசனும் அங்கு வந்துசேர்ந்தான். நடந்ததை அறிந்த அரசன் சொல்லாடன் வீரசோழனின் உடல் அருகே விழுந்து வணங்கினான். ""வீரசோழனின் உடலை தேரில் வைத்து அரண்மனைக்கு எடுத்துவாருங்கள். நாடே திரண்டுவந்து அஞ்சலி செலுத்தட்டும். நாளை கெடிலம் நதிக்கரையில் அரசு முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படும். நமக்குக் கிடைக்காத புகழ் வீரசோழனுக்கு கிடைத்துள்ளது. நாடு முழுக்க அவனது நினைவாக நடுகல் நிறுத்தப்படும். நாட்டுக்காக வீரன் தன் தலையைக் கொடுத்து நேர்த்திக்கடன் முடித்தான் என்று வரலாறு பேசட்டும். அவன் ஊரான நியாயபரிபாலன நல்லூரின் புகழ் பரவட்டும்'' என்றார் அரசன் சொல்லாடன்.
""அப்படிப்பட்ட மாவீரனைப் பெற்ற எங்கள் ஊரில் வீரசோழனை சிலையாக வைத்து தெய்வமாக வழிபட்டு வருகிறோம்.
எங்கள் ஊர் அருகே ஓடும் கெடிலம் நதிக்கரையின் தென்பகுதியில் உள்ளது இக்கோவில். நங்கையம்மன், துர்க்கையம்மன் சிலைகள் இங்குள்ளன. பராந்தகச் சோழனின் காலத்தில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டு ஆய்வுகள் கூறுகின்றன. சோழமன்னனின் கல்வெட்டில் "கலியபுரத்து அழகாதபூமியூர்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
இக்கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் ஆய்வுசெய்து சொல்லியுள்ளார். இக்கோவிலைச் சுற்றியுள்ள மேட்டுக்குப்பம் துண்டுவெளி, வடக்குசாத்திப்பட்டு, பெலாப்பட்டு, நெல்லித்தோப்பு, மாளிகம்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,000 குடும்பங்கள் பொங்கலன்று ஒரே நாளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். மீண்டும் அதுபோன்று பூஜைகள் நடைபெறவேண்டுமென்று அம்மனிடம் வேண்டியுள்ளோம்'' என்கிறார்கள் அம்மனை குலதெய்வமாக வழிபடும் குடும்பத்தைச் சேர்ந்த ஜோதி, மணிவேல் ஆகியோர்.
""இங்குள்ள அம்மனை வேண்டுவோர்க்கு வெற்றி நிச்சயம். மகப்பேறு கிட்டும். திருமணத்தடை அகலும். நோய் வாய்ப்பட்டவர்கள் பூரணகுணம் பெறுவர். பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குலதெய்வமாகவும், வேண்டுதலுக்காகவும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். வீரசோழனின் பழைய சிலை கோவிலுக்கு முன்பு கழுத்தறுகே கத்தி வைத்துள்ள நிலையில் உள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலையை அம்மனுக்கு வலப்புறத்தில் அலங்காரத் தோற்றத்தில் தெய்வமாக வைத்து வழிபடுகிறோம்.
துர்க்கையம்மன், கங்கையம்மன், நங்கையம்மன் என்ற பெயர்களில் காளிதேவியின் அம்சமாக வழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்களின் இன்னல்களை நீக்கி நன்மைகளை அளிக்கிறார்கள் எங்கள் நங்கையம்மன், வீரசோழன் ஆகியோர்'' என்கிறார்கள் இக்கோவிலைப் பராமரித்து பூஜை செய்துவரும் ஆர். சுப்பிரமணியன், கே. சுப்பிரமணியன் ஆகியோர். பார்ப் போரையும் படிப்போரையும் மெய்சிலிர்க் கச் செய்யும் வரலாற்றுடன் பின்னிப் பிணைந் துள்ளது துர்க்கையம்மன், வீரசோழன் கோவில்.
அமைவிடம்: விக்கிரவாண்டி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், பண்ருட்டியிலிருந்து தெற்கே நான்கு கிலோமீட்டரில் உள்ளது சாத்திப்பட்டு பேருந்து நிலையம். அங்கிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டரில் கெடிலம் நதியின் தென்கரையில் உள்ளது ஊரும் கோவிலும். தொடர்புக்கு: அலைபேசி: 84895 66151.