சக்கரத்தாழ்வார் ஜெயந்தி- 10-7-2019

காவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் முதன்மையானதும், சிறப்புப் பெற்றதுமாகத் திகழ்வது சக்கராயுதம். அந்த ஆயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் என்று போற்றப் படுகிறார். வைணவர்கள் சுதர்சனரை சக்கரத்தாழ்வார் என்று வழிபடுகிறார்கள்.

பரமம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை ஆகிய பெருமாளின் ஐந்து நிலை களில் சக்கரத்தாழ்வார் உடனிருக்கிறார்.

மகாவிஷ்ணு பூவுலகில் அவதரிக்கும் போதெல்லாம் சக்கரத்தாழ்வாரும் சில அவதாரங்களில் வெளிப்பட்டும், சில அவதாரங்களில் மறைந்தும் தன் பணியைச் செய்துள்ளார் என்கிறது புராணம்.

Advertisment

காக்கும் தெய்வம் மகாவிஷ்ணு.

அவர் தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

aa

Advertisment

சக்கராயுதம் என்பது மகாசக்கரம். நடுவில் "ஓம்' என்னும் தாரகத்தினையும், "ஷ்ரௌம்' என்னும் நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் "சகஸ்ராஹும்பட்' என்னும் சுதர்சன ஆறு அட்சரங்களையும், எட்டு இதழ்களில் "ஓம் நமோ நாராயணாய' என்னும் அஷ்டாட்சரங்களையும், பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன்கூடிய "அம்' தொடங்கி "அ' வரையிலான "மாத்ருகா' அட்சரங்களையும் கொண்டது. மேலும், நரசிம்ம அனுஷ்டுப் மந்திர ராஜத் தின் அட்சரங்களான உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம், ஸர்வதோமுகம், நரஸிம்மம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும் நமாம்யஹம்' என்னும் சுலோகம் முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டது.

பெருமாள் கோவில்களில் சுதர்சனர் என்று போற்றப்படும் சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சந்நிதி உண்டு. மேலும் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருமோகூர், திருவாங்கூர், கும்பகோணம், காஞ்சிபுரம், திருவில்லிபுத்தூர், நாங்குனேரி, திருவெள்ளறை, தஞ்சை கோதண்டராமர் ஆலயம் போன்ற வைணவக் கோவில்களில் சக்கரத்தாழ்வார் தனிச்சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

சக்கரத்தாழ்வாரை வழிபட நவகிரக தோஷங்கள் நீங்கும். இவர் சந்நிதியில் நெய்விளக்குகள் ஏற்றி வழிபட்டால், வீட்டில் செல்வவளம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.

சக்கரத்தாழ்வாரை வழிபடும்போது சொல்லவேண்டிய சுதர்சன காயத்ரி:

"ஓம் சுதர்சனாய வித்மஹே

ஹேதி ராஜாய தீமஹி

தந்நோ சக்ர: ப்ரசோதயாத்'

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும், திருமாலுடன் சக்கராயுதத்தையும் போற்றிப் பாடியுள்ளனர். இந்தச் சக்கராயுதம் திருமாலின் வலது திருக்கரத்தில் இடம்பெற்றுள்ளது. இதனைப் பொதுவாக சுதர்சனம் என்றழைப்பர். மேலும், சக்கரத்தாழ்வார், சக்கரராஜன், ஹேதிராஜன், யந்திரமூர்த்தி, மந்திரமூர்த்தி என்ற பல சிறப் புப் பெயர்களால் போற்றப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் ஆற்றும் முதல்வராக சுதர்சனர் திகழ்கிறார் என்று வைணவம் கூறுகிறது.

பக்தன் பிரகலாதன் கூறியதை நிறைவேற்ற, உடனே தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்ம அவதாரத்தில், இரணியனை வதம் செய்வதற்காக அவருக்கு நகங்களாக இருந்தவர் சுதர்சனர் என்கிறது புராணம். அதேபோல் திருமாலின் வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்கவந்த மகாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார். அவரின் எண்ணத்தை திசை திருப்பியதுடன், அவரது ஒரு கண் பழுதடைவதற்குக் காரணமாகத் திகழ்ந்தவர் சக்கரத்தாழ்வார். அதேபோல சிசுபாலனை சக்கரத்தாழ்வாரைக்கொண்டே அழித்தார் கிருஷ்ணர். கஜேந்திர மோட்சத்தில் சக்கரத்தாழ்வாரைக்கொண்டே முதலை யின் கழுத்தை அறுத்து கஜேந்திரனைக் காப்பாற்றினார்.

மகாபாரத யுத்தத்தில் எவராலும் மாய்க்க முடியாது போர்புரிந்த ஜயத் ரதனைக் கொல்ல உறுதுணையாய் இருந்ததும் சக்கரத்தாழ்வாரே. பேருருவும் வீரியமும் கொண்ட சூரியனை மறைத்து, குருக்ஷேத்திரத்தையே இருளச்செய்து ஜயத் ரதன் மாளக் காரணமாக அமைந்தார் சக்கரத்தாழ்வார்.

மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது கோரைப் பற்களாக அமைத்து, தீயவர்களைக் கிழித்து, அந்தக் கோரைப் பற்களால் பூமியை கடலுக்கடி யிலிருந்து தூக்கிவந்தார் சுதர்சன ஆழ்வார் என்கிறது புராணம். பரசுராம அவதாரத் தின்போது கோடரியாகக் காட்சிதந்தவரும் சக்கரத்தாழ்வாரே.

சுதர்சனருக்கு பதினாறு கைகளாக பதினாறு கலைகள் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கையிலும் ஒன்றாக சக்கரத் தாழ்வாருக்கு பதினாறு ஆயுதங்கள் உண்டு. மகாவிஷ்ணுவின் ராமாவதாரத்தின் போது பரதனாக அவதரித்தவர் சக்கரத் தாழ்வார்.

வியாழன், சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில் அமைந்துள்ள சக்கரத் தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட சகல பாக்கியங்களும் கிட்டும்.

ஆனி மாத சித்திரை நட்சத்திரம் சக்கரத் தாழ்வாரின் ஜெயந்தியாகும்.