ன்ம பலமும், ஆரோக்கிய வாழ்வும் தந்தருளும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குபவர் அஞ்சனையின் மைந்தன் அனுமன் ஆவார்.

ஸ்ரீராமஜெயம் சொன்னாலே போதும்; அதனால் அகம் மகிழ்ந்து அருளும் கடவுள் ஆஞ்சனேயர். அவரது பரிபூரண அருளைப் பெறுவதற்கு சில எளிய வழிபாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

வெண்ணெய்க் காப்பு இராமாயணப் போரில் இராவணன் இறந்தபோதிலும் இரண்டு அசுரர்கள் தப்பிவிட்டனர். தப்பிய அவர்கள் அரிய தவங்கள் புரிந்து பெரிய சக்திகளைப் பெற்று தேவர்களைத் தொந்தரவு செய்து வந்தார்கள். இந்த அசுரர்களின் தொல்லைகளைப் பொறுக்காத தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

hanumanஅவர்களை வதம்செய்வதற்காக அனுமனை அனுப்பினார் பகவான். அனுமன் புறப்படும் போது கிருஷ்ண பகவான் அனுமனிடம் வெண்ணெய்யைத் தந்து, ""இந்த வெண்ணெய் உருகுவதற்குள் அந்த அசுரர்களை வதம் செய்வாயாக'' என்று கூறியருளினார்.

Advertisment

அனுமனும் அந்த கால அவகாசத்துக்குள் அசுரர்களை வதம்செய்து வாகைசூடினார். ஆகவே ஆஞ்சனேயருக்கு வெண்ணெய்க் காப்புசாற்றி வழிபட்டால், அந்த வெண்ணெய் உருகுவதற்குள் நமது துன்பங்கள் நம்மைவிட்டு உருகி ஓடிவிடும் என்பது ஆழமான நம்பிக்கையாகும்.

வெற்றிலை மாலை

அசோக வனத்தில் இருந்த சீதாப்பிராட்டி யாரை ஸ்ரீராம தூதனாக ஆஞ்சனேயர் சென்று சந்தித்தபோது, ஒரு வெற்றிலையை எடுத்து அனுமனின் தலை உச்சியில் வைத்து, ""நீ என்றும் சிரஞ்சீவியாக வாழ்வாயாக'' என்று சீதாப்பிராட்டியார் ஆசிர்வாதம் செய்தாராம். இதனால் உச்சிகுளிர்ந்து மகிழ்ந்தாராம் ஆஞ்சனேயர். சீதாப்பிராட்டியார் ஆசிர்வதித்த வெற்றிலையை மாலையாகத் தொடுத்து அவருக்கு சாற்றி வழிபாடு செய்தால், ஆஞ்சனேயர் உச்சிகுளிர்ந்து நமக்கு அருள்புரிவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே வெற்றிலை மாலை சாற்றி அவரை வணங்கி அருள்பெறுவோம்.

Advertisment

வடைமாலை

ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களில் உளுந்தும் ஒன்று. ஸ்ரீராமபிரானோடு இணைந்து ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த தனது மகன் அனுமன் உடல் என்றும் களைப்பு அடையாதிருக்கும் வகையில் தாயார் அஞ்சனாதேவி தினமும் பெரிய உளுந்துவடை செய்து தருவாராம். ஒரு வடை சாப்பிட்டால் அன்று முழுவதும் ஆஞ்சனேயர் உடல் களைப்பின்றி உற்சாகமாக இருப்பாராம். எனவே ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் வாழ்வில் சோர்வின்றி இருக்கலாம் என்பது ஐதீகம்.

அனுமனின் வால் வழிபாடு

பகவான் மகாவிஷ்ணு ஸ்ரீராமனாக அவதரிக்க முடிவு செய்தபோது, ஸ்ரீராமனுக்கு தானும் கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்டாராம் சிவபெருமான். அதனால் தாமே வானர உருவில் ஆஞ்சனேயராக மாறினாராம். அப்போது பார்வதி தேவி தானும் கூட இருக்க வேண்டுமென ஆசைப்பட்டாராம். உடனே சிவபெருமான் உமாதேவியாரை வால் ரூபமாக்கினாராம்.

அனுமனின் வாலாக பார்வதிதேவி உருப்பெற்ற காரணத்தால் வாலானது சக்தியின் ரூபமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அனுமனின் வாலை வணங்கினால் பராசக்தியின் அருளை எளிதில்பெற முடியும். அதனால்தான் ஆஞ்சனேயர் உருவப் படத்தில் வால் பகுதியில் மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து வணங்குகிறோம்.

செந்தூரக் காப்பு

அசோக வனத்தில் மிகவும் சோகத்துடனும் முகவாட்டத்துடனும் இருந்த சீதாப்பிராட்டி யாரை அனுமன் சந்தித்தார். அப்போது அவர் சீதாப்பிராட்டியாரிடம் ஸ்ரீராம பிரான் நலமாக இருப்பதாகவும், சீதாப்பி ராட்டியாரின் நினைவாகவே இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்த சீதாப்பிராட்டியார், அதன் வெளிப்பாடாக செந்தூரப்பொடியை அள்ளியெடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார். சீதாப்பிராட்டியாரின் மகிழ்ச்சி யான முகத்தைக்கண்டு ஆனந்தம் மிக அடைந்த ஆஞ்சனேயரும் அங்கிருந்த செந்தூரப் பொடியைத் தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டு மகிழ்ச்சியில் துள்ளினாராம்.

எனவே செந்தூரக்காப்பு சாற்றி அனுமனை வழிபட்டால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அருளுவாராம்.

துளசிமாலை

துளசி இலை திருமாலுக்கு மிகவும் உகந்ததாகும். திருமால் எடுத்ததுதானே ஸ்ரீராமாவதாரம். எனவே ஸ்ரீராம பக்த அனுமனுக்கு துளசி இலையும் மிகவும் பிடித்த ஒன்றானது. துளசிமாலை சாற்றி அனுமனை வழிபட்டால் உடல் பிணிகள் அகன்று ஆரோக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

பழமாலை

பெரும்பாலும் வானரங்களுக்கு பழங்கள் என்றால் பிடிக்கும். வானர ரூபமான ஆஞ்சனேயருக்கும் பழங்கள் மிகவும் பிடித்த ஒன்று. எனவே பழங்களால் மாலை செய்து அனுமனுக்கு சாற்றி வணங்கினாலும் அவரது திருவருளை எளிதாகப் பெறமுடியும்!