சைவமும் தமிழும் வளரவும், வேத, ஆகம, திருமுறைகள் வளரவும் தமிழகத்தில் தோன்றி, பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு ஆசானாகத் திகழ்ந்து, வட இந்தியாவில் சைவத் திருமடத்தை நிறுவி, தமிழ் மணம் வடதிசையிலும் வீசக் காரணமாக இருந்தவர் குமரகுருபர சுவாமிகள். (1625-1688). காசி விஸ்வநாதர் குடிகொண்ட கோவிலை முகலாய மன்னரிடமிருந்து காப்பாற்றிய பெருமை இவரையே சாரும்.
திருநெல்வே- மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரையில் ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் உள்ளது கயிலாசபுரம் எனும் சிறிய கிராமம். இங்கு சைவ வேளாளர் மரபில் வாழ்ந்தவர் சண்முக சிகாமணிக் கவிராயர்.
இவரது மனைவியின் பெயர் சிவகாமி. இந்தத் தம்பதியினருக்கு இறைவன் திருவருளால் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குமரகுருபரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். குழந்தை ஐந்து வயதுவரை பேசவில்லை. இதனால் தம்பதியினர் மிக வருந் தினர். ஊரில் இருப்பவர் கள் குழந்தை ஊமை எனச்சொல்லி கேலிசெய்து வந்ததால் தம்பதியினர் மேலும் வருந்தினர்.
திருச்செந்தூர் செந்திலாண்டவனை வழிபட்டால் நிச்சயம் பலன் கிட்டும் என சிலர் கூறியதால், தம்பதியினர் குழந்தையை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் சென்றனர். அங்கு சில நாட்கள் தங்கி தினமும் முருகனை வழிபட்டனர்.
ஒருநாள் அர்ச்சகர் உருவில்வந்த முருகப் பெருமான் குழந்தையைத் தட்டி, "குமர குருபரா, எழுந்திரு' எனக் கூறினார். குழந்தை யின் நாவில் சிறிய வேலால் ஆறெழுத்து மந்திரம் (சடாட்சரம்) எழுதிச் சென்றார். குழந்தை உடனே "அம்மா, அப்பா' என மழலைச் சொல்லில் பேச ஆரம்பித்தது. பெற்றோர் மிக மகிழ்ந்து மூலவர் சந்நிதிக்கு குழந்தையை அழைத்துச்சென்றனர். முருகப் பெருமான்மீது நீண்ட பாடலை குழந்தை பாடியது. இதைக்கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஞானக் குழந்தை முருகப் பெருமான்மீது-
"பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் ஆதிநாடு'
எனத்தொடங்கும் திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவைப் பாடியது. திருச்செந்தூ ரில் குடிகொண்ட முருகப்பெருமானின் பெருமைகளையும், சைவ சித்தாந்த நுட்பங்களையும் சொற்சுவை, பொருட்சுவையுடன் பாடியது. (இந்த பாடல்கள் பின்னாளில் அருணாசலம் என்பவரால் ஆங்கிலத்திலும், காசி இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயின் என்பவரால் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது.)
இத் தம்பதியினருக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறக்கவே அதற்கு குமாரகவி எனப் பெயரிட்டனர்.
குமரகுருபரருக்கு சிறுவயதுமுதல் இறைவன்மீது நாட்டம் மிகுந்திருந்தது. கூடவே நல்ல குருவை நாடி ஞானோபதேசம் பெறவேண்டும் என்னும் எண்ணமும் இருந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் குமரகுருபரர் புனித யாத்திரை செல்ல விரும்பினார். முதலில் சென்ற இடம் மதுரை மாநகர்.
அன்றைய காலகட்டத்தில் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சிபுரிந்து வந்தார். இம் மன்னர் 1634 முதல் மதுரையை தலைநகரமாகக்கொண்டு சிறப்புடன் ஆட்சி புரிந்தார். மதுரைக்குச் சென்ற குமரகுருபரர் மீனாட்சி சுந்தரரேசரைத் தொழுது, "மதுரைக் கலம்பகம்' மற்றும் "மீனாட்சியம்மை குறள்' என்னும் பெயரில் பாடல்களைப் பாடினார்.
மதுரையில் சிலநாட்கள் மன்னரின் விருப்பத்தின் பேரில் தங்கினார். "மீனாட்சி யம்மை பிள்ளத்தமிழ்' என்னும் அற்புதமான பாடலைப் பாடினார்.
குழந்தையின் ஒவ்வொரு பருவங்களையும் பாடுவதுதான் பிள்ளைத்தமிழ். இப்பாடலில் பத்துப் பருவங்களை, நூறு பாடல்களில் பாடியுள்ளார். மீனாட்சியம்மன் கோவிலில் ஆறுகால் பீடத்தில் குமரகுருபரர் இந்நூலை அரங்கேற்றிய சமயத்தில், மன்னர் திருமலை நாயக்கர் மடியில் கோவில் பட்டரின் மகள் ஓடிவந்து அமர்ந்து அரங்கேற்றத்தை ரசித்துக்கேட்டாள். "நறை பழுத்த துறை தீந்தமிழினருஞ் சுவையே' என்னும் வரிக்கு குமரகுருபரர் விளக்கமளிக்கும் சமயத்தில், "அற்புதமான பாடல்' எனக்கூறி அந்தப் பெண் குழந்தை மன்னரின் கழுத்திலிருந்த முத்துமணி மாலையை .குமரகுருபரருக்கு அணிவித்துவிட்டு மீனாட்சியம்மன் சந்நிதிக்கு ஓடிப்போனாள். அக்குழந்தையை எல்லாரும் தேட எங்கும் காணவில்லை. மீனாட்சியம் மனே பட்டரின் குழந்தை வடிவில் வந்து பாடலை ரசித்தது கண்டு அனைவரும் வியந்து மகிழ்ந்தனர்.
ஒருசமயம் மனக்குழப்பத்திலிருந்த திருமலை நாயக்க மன்னனுக்கு ஊக்கமளிக் கும் வண்ணம்,
"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது'
எனும் திருக்குறளை விளக்கினார் குமர குருபரர். அவரது விளக்கத்தால் மன்னர் தெளிவுபெற்றார். அவருடைய வேண்டு கோளை ஏற்று "நீதிநெறி விளக்கம்' எனும் பெயரில் 102 பாடல்களை, மனிதனுக்கான அறங்களையும், ஒழுக்கம், வீரம் போன்ற பண்புகளையும் விளக்கும் தன்மையில் அமைத்தார். இது மனித ஆளுமையை விளக்கும் அற்புதமான நூலாகும்.
ஞானநாட்டம் கொண்டிருந்த குமர குருபரர், குருவைத் தேடி பல இடங்களுக்கு யாத்திரை சென்றார். திருவாரூர் வந்த சமயத்தில், "திருவாரூர் நான்மணி மாலை' என்னும் போற்றிப் பாடலை திருவாரூர் சிவபெருமான்மீது பாடினார். இம்மாலை நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, அறுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் போன்ற யாப்புகளைக்கொண்ட 40 பாடல் களாகும். திருவாரூரிலிருந்து ஸ்ரீகுருஞான சம்பந்தர் தோற்றுவித்த தருமபுரம் ஆதீன மடத்திற்கு வந்தார். அந்த சமயத்தில் நான்காவது குருவான ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் மடத்தை அருளாட்சி செய்துவந்தார். அவரையே தனது ஞானகுருவாக ஏற்றார். இவரே குமரகுருபரருக்கு சமய தீட்சையளித்தார்.
குமரகுருபரர் புள்ளிருக்கு வேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்த சமயத்தில், அங்கிருந்த முருகப் பெருமான்மீது "முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' என்னும் பெயரில் பாடினார். பின் சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசனம் செய்து, அவரது பெருமையை உணர்ந்தும் வண்ணம் "சிதம்பர மும்மணிக்கோவை', "சிதம்பரச் செய்யுட் கோவை'யும், சிவகாமியம்மன் மீது "இரட்டை மணிமாலை' என்னும் செய்யுளையும் பாடினார்.
குருநாதரின் உத்தரவுப்படி காசி நகருக்கு குமரகுருபரர் கால்நடையாகச் சென்றார்.
அந்த சமயத்தில் முகலாய மன்னரான ஔரங்கசீபின் அண்ணன் தாராஷுகோவின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஔரங்கசீப் தீவிர இஸ்லாமிய சிந்தனையுடைய மன்னன். காசியிலிருந்த காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டினான். கோவிலின் ஒரு பகுதி மட்டும் இடிக்கப்படாமல் அதே நிலையில் இருந்தது. அதேபோல் கங்கைக் கரையிலிருந்த கேதாரநாத் கோவிலையும் இடித்துவிட்டான். இதனால் அங்கு வாழ்ந்த இந்துக்கள் பெரும் மனக்கவலையுற்றனர்.
நித்திய பூஜைகள், உற்சவங்கள் எதுவும் நடக்கவில்லை. ஔரங்கசீப் ஆட்சிக்காலத்தில் ஷியா முஸ்லிம்களும், இந்துக்களும் அவரை வெறுத்தனர். இம்மன்னன் "தாரு- இல்- இஸ்லாம்' (இஸ்லாம் மயமாக்குதல்) கோட்பாட்டைத் தனது கொள்கையாகக் கொண்டவன்.
தாராஷிகோ, தன் தம்பி ஔரங்கசீபைப் போன்றில்லாமல், பிற சமயத்தினரை மதித்தான். இம் மன்னனின் அரசவைக்குச் சென்று, காசியில் ஒரு மடத்தைக் கட்ட உதவிபெறலாம் என குமரகுருபரர் எண்ணி னார். ஆனால் அவருக்கு மொழி ஒரு தடையாக இருந்தது. இந்திமொழி அவருக்கு சுத்தமாகத் தெரியாது. (அன்றைக்கும் இந்திமொழி ஒரு பிரச்சினையாக இருந்ததுபோலும்!) இதற்காக சரஸ்வதி தேவியை வேண்டி கட்டளைக் கலித்துறையில்-
"வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை யுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசகம் ஏழும்மளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாகஉண் டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே'
எனத் தொடங்கும் "சகலகலாவல்- மாலை' என்னும் பத்துப் பாடல்களைப் பாடினார்.
அதில் "வாக்கும் பெருகப் பணிந்து அருள்வாய்;
வடநூல் கடலும்' என மனமுருகப் பாடினார்.
அதாவது தமக்கு வடமொழியில் புலமை தரவேண்டும் என வேண்டினார். கலைமகளின் அருளை வேண்டும் இத்துதிப் பாடலின் பயனாக முகலாய மன்னனிடம் சரிசமமாக வட மொழியில் (ஹிந்துஸ்தானி) பேச முடிந்தது.
மன்னனைக் காண அரசவைக்கு குமர குருபரர் சென்றபோது, மன்னன் அவருடைய துறவி தோற்றத்தைக் கண்டும், தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் இந்து சமயத்தைச் சார்ந்தவர் என்பதாலும் ஏளனமாகப் பேசி, உட்கார ஆசனம் தராமல் அவமதித்தான். மடம்கட்ட இடம்கேட்ட கோரிக்கைக்கும் செவி சாய்க்கவில்லை.
இதனால் மனம் வருந்திய குமரகுருபரர் மறுநாள் வருவதாகக் கூறி, அடுத்த நாள் காளியன்னையை வேண்டி, தனது யோச சக்தியால் அம்மனின் வாகனமான சிங்கத்தின் மீது அமர்ந்து கம்பீரமாக அரசவைக்குச் சென்றார். நிஜ சிங்கத்தின்மீது குமரகுருபரர் வந்ததால் அரசவையிலிருந்த மன்னன் உட்பட அனைவரும் அஞ்சினர். தனது தவறை உணர்ந்த மன்னன், குமரகுருபரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். பின்னர் தாம் வந்த விஷயத்தை மன்னரிடம் தெரிவித்தார். காசியில் ஒரு சைவத் திருமடத்தைக் கட்ட இடமும், காசி விஸ்வநாதர் கோவிலையும், பிற இந்துக்கோவில்களையும் புதுபிக்கவேண்டும் என்னும் கோரிக்கையும் வைத்தார். இரண்டை யும் மன்னன் ஒப்புக்கொண்டு அதற்கான ஆணைகளையும் பிறப்பித்தான்.
கங்கை நதிக்கரையில் கேதார கட்டத்தின் அருகே மன்னன் கொடுத்த இடத்தில் "குமாரசாமி மடம்' எனும் பெயரில் சைவத் திருமடம் கட்டப்பட்டது. அன்றிலிருந்து இன்றளவும் தென்னாட்டிலிருந்து காசிக்குப் புனிதப் பயணம் செல்பவர்களுக்கு தங்க இடமும், தென்னிந்திய உணவும் குமாரசுவாமி மடத்தில் செவ்வனே செய்துகொடுக்கப்படுகிறது.
மன்னன் தாராஷிகோ மத நல்லிக்கணத் தைப் போற்றும் வண்ணம் சர்வ சமய மாநாட்டை காசியில் நடத்தினான். இதில் சைவ சித்தாந்தத்தைப் பற்றி குமரகுருபரர் பேசினார். மெய்கண்டார் உபதேசித்த "வினைப்பயனை அனுபவித்தே தீரவேண்டும்' என்ற தத்துவத்தை விளக்கமாக மாநாட்டில் எடுத்துரைத்தார். இந்த வாக்கியம் மன்னனுக்குப் பிடித்துப் போயிற்று.
குமரகுருபரர் தம்முடைய குருநாதரின் கட்டளையை சிரமேற்கொண்டு காசியிலிருந்து சைவப் பணியையும் தமிழ்ப் பணியையும் மேற்கொண்டார். தமிழ்ப்பணியில் முக்கியமான ஒன்றாக, கம்ப இராமாயணத்தை இந்தியில் தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தியதைக் கூறலாம். கம்ப இராமாயணத்தின் கவிச் சுவையை வடநாட்டவரும் அறியச் செய்தவர். இவர் சொற்பொழிவாற்றியதை துளசிதாசர் கேட்டு மகிழ்ந்து, பின்னாளில் இந்தி மொழியில் இராமாயணத்தை எழுதினார். இந்த இராமாயணத்திற்கு "ராம சரித மானஸ்' என்னும் பெயரும் உண்டு. காசி மாநகரின் பெருமையை உணர்த்தும் வண்ணம் "காசிக் கலம்பகம்' என்னும் நூலை குமரகுருபர சுவாமிகள் இயற்றினார்.
குமரகுருபர சுவாமிகள் காசியில் கட்டிய மடத்தில் தினமும் சொக்கலிங்கப் பெருமானையும் பூஜித்துவந்தார். காசி குமாரசாமி மடத்திற்கு காசியிலும், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளிலும் தனித்தனி மடங்கள் காலப்போக்கில் உருவாகின. நேபாளத்தில் மோரங்கி (முகரங்கி) எனும் இடத்தில் இம்மடத்தின் கிளைமடம் ஒன்றுள்ளது. திருப்பனந்தாள் மடம்தான் தலைமை மடமாக தற்சமயம் செயல்பட்டுவருகிறது. இம்மடத்தின் மடாதிபதிகளை ஸ்ரீகாசிவாசி சுவாமிகள் என அழைப்பார்கள். தற்சமயம் மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளார். இவருக்கு இணை அதிபராக (வாரிசு) தருமபுரம் ஆதீனத் தம்பிரான் திருக்கூட்டத்திலிருந்து திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் நியமிக்கப் பட்டுள்ளார்.
முதுமை காரணமாக குமரகுருபர சுவாமிகள் 1688-ஆம் ஆண்டு, வைகாசி மாத தேய்பிறை திரிதியை திதியில் பூரணமானார்.
இவரது பூதவுடலை கங்கை நீரில் முறைப்படி சேர்ப்பித்தார்கள். இவருக்குப் பின்பு சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மடாதிபதியானார். வழிவழியாக மடாதிபதிகள் இம்மடத்தை வழிநடத்தி வருகிறார்கள்.
17-ஆம் நூற்றாண்டில் செயற்கரிய செயல்களை ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் செய்ததால், தமிழ்மொழியும் சைவ நெறியும் புத்துணர்ச்சி பெற்றது.