குருக்களுக்கெல்லாம் குருவாகத் திகழ்பவர் வியாசர். பிரம்மசூத்திரத்தை உலகிற்குத் தந்தவர். சிதறிக்கிடந்த வேதங் களை நான்காக வகுத்த மாமேதை.

வியாசரின் அன்னை சத்தியவதி ஒரு ராஜகுமாரி. விதிவசத்தால் மீனவக்குடும்பத்தில் வளர்ப்பு மகளானாள். அந்த மீனவர் தலைவன், தன் மகள் சத்தியவதிக்கு பரிசல் ஓட்டக் கற்றுக்கொடுத்தான். அவள் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு பரிசல் செலுத்தும் பணிசெய்தாள்.

ஒருநாள் பராசரமுனிவர் அந்தப் பரிசலில் பயணம் செய்ய நேர்ந்தது. மாலை நேரம். அந்தப் பரிசலில் அவர்களைத் தவிர வேறுயாமில்லை. வருங்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் திறன் கொண்ட பராசரர், ஸ்ரீமன்நாராயணரின் குரு பரம்பரையைச் சார்ந்தவர். ஸ்ரீமன் நாராயணரிடமிருந்து பிரம்மதேவன் தோன்றினார். அவரிடமிருந்து வசிஷ்டர் தோன்றினார். வசிஷ்டருடைய மகன் சக்தி. சக்தியின் மகனே பராசரர். அவர் பரிசலைச் செலுத்தும் சத்தியவதியைப் பார்த்தார். வருங்காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறப் போகும் உத்தமி இவளென்பதை அறிந்து கண் மூடி ஒரு நிமிடம் தியானத்தில் ஆழ்ந்தார்.

தியானத்திலிருந்து விடுபட்ட பராசரர், "பெண்ணே, ராஜகுமாரியாக அரண்மனை யில் வாழவேண்டிய நீ, விதிவசத்தால் மீனவத்தலைவனின் வளர்ப்பு மகளாக இருக்கிறாய். இந்த நேரம் ஒரு பொன்னான காலமாகும். இந்த வேளையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் தோன்றுபவன் மகாபுருஷனாகத் திகழ்வான். அவனை இந்த உலகம் என்றும் மறக்காமலிருக்கும். அவன் படைக்கப்போகும் காவியம் அனைவரின் மனதிலும் பதியும். அந்த சக்திமான் கருத்தரிக்க வேண்டிய முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாம் இந்த சுபவேளையில் ஒன்றுசேர்ந்தால் உலகம் போற்றும் மாமேதை அவதரிப்பான். உன் விருப்பம் என்ன? உன் கன்னித்தன்மை இதனால் பாதிக்காது. அவன் பிறந்தவுடனே நீ மீண்டும் கன்னித்தன்மை அடைவாய். பிறகு சில வருடங்கள் கழித்து நீ ஒரு மன்னனுக்கு மனைவியாவாய். நாட்டையாளும் திறமை உன்னைத் தேடிவரும்'' என்று அவள் வருங்காலத்தை விவரமாகக் கூறினார் பராசரர்.

Advertisment

gg

அவரின் வாக்கினை முழுமையாக நம்பிய சத்தியவதி அந்த ஆற்றின் நடுவிலுள்ள தீவுக்குப் பரிசலைச் செலுத்தினாள். சோலைவனம்போல் காட்சிதந்த அந்தப் பகுதிக்குள் இருவரும் சென்றனர். மங்களகரமான அந்தப் பகுதியை இருள்சூழ்ந்தது. இருமனமும் கூடியது. அவர்களுக்குப் பிறந்தவர்தான் கிருஷ்ணத்வைபாயனர் என்னும் வியாசர் என்கிறது புராணம்.

மீனவப் பெண்ணான சத்தியவதியிடம் வளர்ந்த வியாசர் தன் தந்தை பராசரரிடமும் மற்றும் பல ரிஷிகளிடமும் கல்வி கற்றுச் சிறந்து விளங்கினார். பின்னர் வியாசர் தன் தாயிடம், துறவறம் மேற்கொள்வதாகக் கூறினார். அவருக்கு ஆசி வழங்கும்போது, "மகனே, ஏதாவதொரு இக்கட்டான சூழ்நிலையில் நான் உன்னை நினைத்தால் நீ உடனே வரவேண்டும். என் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்'' என்று வாக்குறுதி பெற்றுக்கொண்டாள்.

காலம் சென்றது. தனிமையில் வாழ்ந்த சத்தியவதியை குரு வம்சத்து அரசன் சந்தனு சந்தித்தான். அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான். அவன் விருப்பம் நிறைவேறியது. சந்தனு மன்னனுக்கு ஏற்கெனவே பீஷ்மர் என்ற மகன் உண்டு.

பராசரர் அன்று சொன்னதுபோல் சத்தியவதி அரண்மனையில் பட்டத்தரசியாக வாழ்ந்தாள். சத்தியவதிக்கும் சந்தனுவுக்கும் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்னும் மகன்கள் பிறந் தார்கள்.

சந்தனு மன்னனின் காலம் முடிந்தது. சத்தியவதி நாட்டையாளும் அரசியானாள். இந்த நிலையில் பக்கத்து நாட்டுடன் போர் ஏற்பட்டது. அந்தப் போரில் சித்திராங்கதன் கொல்லப்பட்டான். அவன் சகோதரன் விசித்திரவீரியன் காசி மன்னனின் மகள்கள் அம்பை, அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை மணந்தான். அவனும் திருமணமாகி சில ஆண்டுகளில் மாண்டுபோனதால், பீஷ்மரை அரசுப் பொறுப்பேற்க சத்தியவதி அழைத்தாள். ஆனால் பீஷ்மர் துறவியாகவே இருக்க விருப்பப்பட்டார். இந்த நிலையில் சத்தியவதி தன் மகன் வியாசரை நினைக்க, தாயின் நிலையறிந்து அங்கு வந்தார் வியாசர்.

சத்தியவதி நாட்டின் நிலையையும், வாரிசுகள் இல்லாத குறையையும் கூறி, அதற்கு வேண்டியதைச் செய்யுமாறு கூறினாள். வியாசர் வாரிசுகளை உருவாக்குவதாக தன் அன்னைக்கு வாக்கு கொடுத்தார்.

இயற்கையிலேயே கருமை நிறம் கொண்ட வியாசரின் கண்கள் மிகவும் தீட்சண்யமானவை. அவர் பார்த்த மாத்திரத்திலேயே அவர் உச்சரிக்கும் மந்திரசக்தியின் உதவியால் வாரிசுகளை உருவாக்க திட்டமிட்டார்.

விசித்திரவீரியன் மனைவி அம்பிகா வும், அம்பாலிகாவும் தன் மாமியார் சத்தியவதிக்குக் கட்டுப்பட்டவர்களாகத் திகழ்ந்தார்கள். (அம்பையின் கதை வேறு).

அம்பிகா தன் மாமியார் சொல்படி வியாசர் முன்வந்து நின்றாள். கரிய நிறமுடைய வியாசர் அவளைப் பார்க்கும் பொழுது வெறுப்புடன் கண்களை மூடிக்கொண்டாள் அவள். அதன் விளைவால் பிறந்த திருதராஷ்டிரன் பார்வையில்லாதவனாகப் பிறந்தான்.

அம்பிகாவின் தங்கை அம்பாலிகா வியாசரின் முகத்தைப் பார்த்ததும் அவள் முகம் வெளுத்தது. அதன் காரணமாகப் பிறந்த மகன் வெளிறிக் காணப்பட்டான். அவன்தான் பாண்டு.

அம்பிகா பார்வையற்ற மகனைப் பெற்றதால், மீண்டும் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள சத்தியவதி நிர்பந்தித்தாள். விருப்பமில்லாத அம்பிகா, தன் பணிப்பெண்ணை தன்னைப்போல் அலங்கரித்து அனுப்பினாள். அவள் மகிழ்வுடன் வியாசரை நோக்கி வந்து அவரைப் பணிந்தாள். வியாசரும் அவளை அன்புடன் நோக்கினார். அதன் விளைவால் "விதுரன்' என்ற மகன் பிறந்தான். இதன்காரணமாக வியாசர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பாட்டனார் ஆகிறார்.