துறைமுகப் பட்டினத்திலிருந்து ஐந்து நாட்களுக்குமுன்பே, வேலவன் கோட்டத்தை நோக்கி புழுதிப்புயல் கிளம்ப தாங்கள் வாங்கிய குதிரைகளின்மீது பயணம்செய்து வருவார்கள் குதிரைவீரர்கள்.
அவர்கள் வரும் வழியில் இரவில் அவர்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் அரசால் ஏற்பாடு செய்யப்படும்.
அதனோடு, குதிரைகளுக்குத் தேவையான கொள்ளு மூட்டைகளும், தண்ணீரும் கொடுப்பதற்கான இடங்களான பாடகங்களை, பெருவழிப் பாதைகளில் ஏற்பாடு செய்திருப்பர். வணிகர்களைப் பாதுகாக்கும் எறிவீரர்கள்!
"நிகமம்' என்ற உள்நாட்டு வாணிகக்குழு, அரசுக்குத் தேவையான பெரும் பொருட்களை வாங்கி, நீண்டதூரப் பயணத்தைக் கடந்துவந்து, அரண் மனையில் கொண்டுவந்து சேர்க்கும். நான்கு திசை உள்நாட்டு வணிகர்களான இவர்களை, "நானா தேசிகர்' என்றும், ஆயிரம் திசைகளிலிருந்து வரும் ஐந்நூறு உறுப்பினர்களைக்கொண்ட குழுக்கள் என்பதால், "திசையாயிரத்து ஐந்நூற்றுவர்' என்றும் அழைத்தனர்.
இவர்கள் போக, "வளஞ்சியர்' எனப் படும் வணிகர்கள், அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த அழகுசாதனப் பொருட்களைத் துறைமுகங்களில் வாங்கி, அவற்றை அரச குடும்பத்தினர்களிடமும், பெருஞ் செல்வந்தர்களிடமும் விற்றுப் பலன் பெறுவர்.
பயணித்துவரும் பாதைகளில் இவர்களையும், துறைமுகங்களிலிருந்து இவர்கள் வாங்கிய விலையுயர்ந்த விற்பனைப் பொருட்களையும் பாதுகாப்பதற்கென, "எறிவீரர்கள்' என்ற சிறுபடைப்பிரிவு, சுற்றியிருந்து இவர்களைப் பாதுகாத்தபடி பயணிப்பார்கள். இவர்களும், இளவரசருக்கு முடிசூட்டும் நாளுக்கு முன்பாக, அரசவைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். சேரநாட்டு மேலைக்கடல் துறைமுகத்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்த வணிகர்கள், "ஐந்து வர்ணத்தார்கள்' எனப்பெயர் பெற்றனர் குலதெய்வ நன்றிக்கடன்!
மேற்சொன்ன வணிகர் குழுக்களுக்கு "சாத்தர்கள்' என்றும், இவர்கள் வழிபடும் பெண் தெய்வத்திற்கு "சாத்தாயி' என்றும், ஆண் தெய்வத்திற்கு "சாத்தப்பன்' என்றும் பெயர்கள் வழங்கலாயின. இந்த "சாத்தர் வழிபாடு' பழங்காலத் தமிழர்களிடம், குறிப்பாக வணிகர்களிடம் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஒரு மன்னவனின் பட்டம் சூட்டும் நாளுக்கு முதல் நாளில், இவ்வழிபாடு நடைபெறும். இவ்விழாவின்பொழுது, வணிகர்கள் வாழும் தெருவில் அவர்களுடைய மனைகளில் பெருவிழாவாகக் கொண்டாடுவர்.
வெளிநாடுகளுக்குக் கடல்கடந்து சென்று வாணிபம் செய்துவிட்டுத் திரும்பியவர்கள் தாங்கள் வாங்கிவந்த அரிய பொருட்களைத் தங்களது மனையில் வரிசையாக அடுக்கிவைப்பர். அதனைச் சுற்றிலும் விளக்கேற்றி மலர்ச்சென்டுகள் வைத்து, இவ்வளவு செல்வத்தைத் தமக்குப் பெற்றுத் தந்ததற்கு நன்றிக்கடனாக, தங்கள் குலதெய்வங்களாகக் கருதப்படும் சாத்தாயி அம்மனையும் சாத்தப்பனையும் வணங்கி, தாங்கள் சம்பாதித்த பொருட்களிலிருந்து, அவர்களுக்காக பத்து சதவிகிதத்தை எடுத்துவைப்பார்கள்.
இந்த தெய்வ வழிபாட்டில் கலந்துகொள்வதற்கு, தம் நண்பர்களையும் சுற்றத்தாரையும், வீடுகளுக்கே சென்று அழைத்துவருவர். இது மிகப்பெரிய பண்டிகைத் திருவிழாவாகவும், ஒரு திருமண நிகழ்வுக்குச் சமமான அளவிலும் சிறப்பாக நடைபெறும். ஏனெனில், பொருள் வேண்டுமென்ற நோக்கத்தின் பேரில், தனது தலைவியைவிட்டுத் தலைவன் பிரிந்துசென்ற காலத்தில், இருவருக்கும் இருந்த பசலை நோய் தீரும் வண்ணம், மீண்டும் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து, பெருமிதத்தோடு தலைவியைச் சேர்ந்து மகிழ்வதைக் காட்டும் விதத்தில், உற்றாரும் சுற்றா ரும் சேர்ந்து கொண்டாடும் இத்திருவிழாவில், எளியோர்களுக்கான தானதர்மங்கள் நடைபெறும். அனைவருக்கும் அறுசுவை உணவுகளும் பரிமாறப்படும்.
அயல்நாடுகளில் தமிழி எழுத்துகள்!
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தெய்வத் திற்காக எடுத்து வைக்கப்பட்ட பொருட்கள், அத்தெருவில் அமைந்திருக்கும் அனைவருக்கும் பொதுவாக உள்ள சத்திர மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டு, அவை முடிசூட்டும் அரசருக்கு மறுநாள் அளிக்கவிருக்கும் அன்பு சீர்வரிசைகளென, பொதுமக்கள் காணும்படி அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மக்களுக்காக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவ்வாறு பாண்டியநாட்டு வணிகர்கள் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளதை, இன்றைய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
= ஆசிய நாட்டில் "செமிட்டிக்' கல்வெட்டுகளில், மதுரையை "கூடல்' என்றும், பாண்டியர்களை "படே' என்றும் பொறிக்கப்பட்ட, கி.மு.வைச் சேர்ந்த பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
= பாண்டியநாட்டு வணிகர்களிடம் கொண்டிருந்த வரவு- செலவு கணக்கீடுகள், "பாபிலோனிய' களிமண் ஏடுகளில் இருந்துள்ளன.
= எகிப்தில் "பேபிரஸ்' ஏடுகளில், தமிழக வணிகத்தொடர்பு செய்திகள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு எழுத்து வடிவில் கிடைத்துள்ளன.
= எகிப்து "அல்-க்வாதிம்' துறைமுகத்தில் கிடைத்த பானை ஓட்டில், கி.மு. முதல் நூற்றாண் டைச் சேர்ந்த "கணன்', "சாதன்' என்று எழுதப்பட்ட "தமிழி' எழுத்துகள் உள்ளன.
=அதே நாட்டில் "பெர்னிகா' துறைமுகத்தில் "குற்பூ மாந்தர்' என்ற பழைய தமிழ் சொற்சுடர் பானை ஓடு, தமிழியில் இருக்கிறது.
= "பனை ஒறி' என்ற தமிழி (எழுத்துகள்) "க்வாசிர்-அல்-க்வாதிம்' துறைமுகத்தில் உள்ளது.
= தாய்லாந்தில் "துறஒ' என்ற தமிழி, "பெரும்பதன்' என்ற தமிழ்ப் பெயர், பானையில் கிடைத்துள்ளது.
இவ்வாறு கடல்கடந்து கீழை நாடுகளிலும், மேலை நாடுகளிலும் வணிகம் செய்து மீண்டுவந்த தமிழர்களை, "கடலன் வழுதி' என்று அழைத்துக் கொண்டாடினர்.
= கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் ஆண்ட எகிப்திய இரண்டாம் டாலமி மன்னனின் பதக்கம், கரிவலம் வந்த நல்லூரில் கிடைத்துள்ளது.
ஆடற்கலைத் தலைவியின் பாடல்!
இப்படி கொண்டாடப் படும் விழாவில் இவ் வணிகர்கள் கோவில் திருப்பணி களுக்காக எவ்வளவு பணத்தை- என்னென்ன பொருட்களை- யார் யாரெல் லாம் தானமாக எந்தெந்தக் கோவில்களுக்கு அளிக்கவிருக்கிறார்கள் என்பதை, பொதுமக்கள் மத்தியில் கொட்டி மத்தளம் தட்டி முத்திரைச்சங்கு முழங்கி அறிவிப்பார்கள். இதைக்கேட்டு மக்கள் பெருமகிழ்ச்சி அடைவர். இதன்பின், மன்னவனுக்கு இன்னின்ன பரிசுகள் காணிக்கையாக்கப்படும் என்பதை, ஆடற்கலையில் சிறந்து விளங்கும் "தலைக் கோலி' எனப்பட்டம் பெற்ற ஆடற்கலைத் தலைவி, பாடலில் பாடி அறிவிப்பார்.
மலைகளைக் காக்கும் அணங்கு!
இங்ஙனம் பட்டினங்களில் விழா நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில், குறிஞ்சிமலைப் பகுதியில் "அணங்கு' வழிபாடு மிகச் சீரிய முறையில் தொடங்கும். மன்னவன் முடிசூட்டும் நன்னாளில், அவருக்கு எவ்வித நோய் நொடியும் ஏற்படாவண்ணம் ஆயுளோடு இருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டி, மலைநாட்டு மக்கள் அணங்கு எனும் பெண் தெய்வத்தை வணங்குவார்கள்.
"அணங்கு' என்றால் நீதிநெறியோடு மலைக்காடுகளை ஆளும் பெண் தெய்வம். இது தவறு செய்பவர்களை உடனுக்குடனே கொல்லுகின்ற தெய்வம் என, ஆதி மலைவாழ் தமிழர்கள் கருதினார்கள். இதற்கு கொல்லிமலையில் மலைமக்களால் வழிபடப்படும் கொல்லிப்பாவையே உதாரணம். இது ஆதி சித்தர்கள் முதற்கொண்டு, இன்றள வும் மக்களால் மதிக்கத்தக்க- அஞ்சத்தக்க தெய்வமாகும். தற்போது இத்தெய்வத்தை, "எட்டுக்கை அம்மன்' என்று அழைக்கின்றனர். இதன் வழிபாடு, சங்க இலக்கியங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எட்டுக் கைகளுடைய சிலையாக வைத்து வணங்கு கின்றனர். கொல்லிமலையில் இருக்கும் எந்தவொரு அரிய மூலிகையையும், இவ்வம்மன் அனுமதியின்றி எடுத்துச்செல்ல முடியாது.
சித்தர்களின் மகாசக்தியாக விளங்கும் இந்த அணங்கு தெய்வத்திற்கு பயந்தே எந்தவொரு மலைப்பொருளும் களவாடப்படாமல் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. இந்த கொல்லிமலைப் பாவை போன்றே, மதுரைக்கு அருகிலுள்ள சிறுமலை வனத்தைக் காத்தருள்வது "தடாதகை நாச்சியார்' என்ற அணங்கு தெய்வமாகும். இதுவும் இங்குள்ள மலைவாழ் மக்களை துடியான தெய்வமாகக் காத்து ரட்சிப்பதாகக் கருதப்படுகிறது.
இதுபோலவே பறம்புமலை- அதாவது பாரிவள்ளல் ஆண்ட மலைப்பிரதேசத்தில், அம்மலைவாழ் மக்களால் "பச்சையம்மன்' என்று அணங்கு அழைக்கப்படுகிறது. இது பாரிவள்ளலின் செல்லப் பிள்ளையாக அவனோடு இரண்டறக் கலந்ததாகப் போற்றப் பட்டுள்ளது. சதுரகிரி மலைப்பகுதியில் "வனப் பேய்ச்சி' என, அங்குள்ள பழங்குடியினரால் அஞ்சி வழிபடும் அணங்கு தெய்வம் அப் பிரதேசத்தை இயற்கை அழிவிலிருந்து பாதுகாப்பதாகக் கருதப்படுகிறது.
வரும் இதழில் ஆதி பழங்குடித் தமிழர்களின் துடியான அணங்கு தெய்வ வழிபாட்டு முறைகளை அதன் ஆதிமூலத்திலிருந்து அறிவோம்.
தொடர்புக்கு:
அலைபேசி: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்