புதிதாக விளைநிலம் அல்லது மாந் தோப்பு, தென்னந்தோப்பு வாங்கிப் பத்திரப் பதிவு முடிந்தாலும், அதை வாங்கியவரின் பாதங்கள் அந்த இடங்களில் நல்ல நாட்களில் பூமியில் படவேண்டும். அப்போதுதான் அது அவருக்கு நல்ல வருவாயையும் கவலையற்ற போக்கையும் தரும்.
பரணி, பூசம், மகம், உத்திரம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில், சூரிய உதயத்திற்குப்பின்பு பன்னீரால் முகத்தை அலம்பி, வலக்காலை பூமியில் பதிப்பது மிக நன்று.
திதிகளில் பிரதமை, துவிதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி ஆகியவை உத்தமம். தசமி திதி தவிர்க்கப்படவேண்டும். கிழமைகளில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகியவை மிக நன்று.
ஆங்கிலத் தேதிகளில் 3, 4, 5, 6, 7, 11, 12, 13, 14, 15, 19, 20, 24, 25, 26 ஆகிய வை உத்தமம். அறுவடைக்கு நவமி திதி ஆகாது. சதுர்த்தசி திதியும் தவிர்ப்பது நன்று.
பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளை பரணி, கிருத்திகை, மகம், விசாகம், மூலம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் நடவுசெய்தால் விளைச்சல் பெருகும்.
மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் பழம், பூஞ்செடிகளைப் பயிரிட்டால் நல்ல பலனைத் தரும்.
ஒருவர் பிறந்த ஜென்மநட்சத்திர நாளில் எந்தப் புது முயற்சிகளையும் செய்ய வேண்டாம். தவிர்த்தல் மிக நன்று. திங்கள், செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் கோழிப் பண்ணை, ஆட்டுப்பண்ணை ஆரம்பித்தால் விருத்தியாகும். ஆடு வாங்க வியாழக்கிழமை நல்ல நாள். ரோஜா, செம்பருத்தி போன்ற செந்நிறப் பூவகைகளை வளர்க்க ஏற்ற திசை வடகிழக்குப் பகுதியாகும்.
குழந்தைகளுக்கு எப்போது காது குத்தலாம்?
6, 7, 8 அல்லது பத்தாவது மாதம் உத்தமம்.
மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சித்திரை, திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் சிறந்தவை. திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் ஏற்றவை. சனி, ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளைத் தவிர்த்தல் நன்று. இரண்டு திதிகள் சேர்ந்துவரும் நாளும் கூடாது. திரிதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் உத்தமம்.
நண்பகல், மாலை நேரம் கூடாது. சுக்கிரன் ஆறில், எட்டில் இருப்பது, புதன் எட்டில் இருப்பது தவிர்த்தல் நன்று. குழந்தையை தெற்கு திசைநோக்கி அமரவைக்கக் கூடாது.
புத்தாடை அணிய
அஸ்வினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், உத்திராடம், ரேவதி ஆகிய நட்சத்திர நாட்கள் உத்தமம்.
நட்சத்திரப் பலன்கள்:
அஸ்வினியில் புத்தாடை அணிந்தால் ஆடம்பரம், புகழ் ஓங்கும்.
பரணியில் ஆண் உடுத்தினால் மனைவிக்கு ஆகாது.
கிருத்திகையில் கூடாது ; நெருப்பு பயம் உண்டாகும்.
ரோகிணியில் பணவரவு உண்டு. v மிருகசீரிடத்தில் உடுத்தினால் எலி அதனை சேதப்படுத்துமாம்.
புனர்பூசத்தில் உடுத்த மேன்மேலும் ஆடைகள் அதிகரிக்கும்.
பூசத்தில் உடுத்தினால் நன்மைகள் பெருக்கெடுக்கும்.
மகம்- கெடுதலை உருவாக்கும்.
பூராடம்- ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும்.
உத்திராடம்- பணவரவு, நல்ல மாற்றம் ஏற்படும்.
ஹஸ்தம்- ஆடம்பர வாழ்வு.
சித்திரை- பலவகை யோகம் தரும்.
சுவாதி- வரவேற்பு மிகும்.
விசாகம்- மனதில் புத்துணர்வு பிறக்கும்.
அனுஷம்- நல்லோர் சந்திப்பு நிகழும்.
கேட்டை- ஆடைகள் சிதையும்.
மூலம்- மனப்போராட்டம் தரும்.
பூராடம்- நோயை உருவாக்கும்.
உத்திராடம்- அதிக ஆடைகளைப் பெற்றுத்தரும்.
திருவோணம்- கண் நோய் உருவாகுமாம்.
சதயம்- தேவையற்ற மனபயம் ஏற்படும்.
பூரட்டாதி- கௌரவ பங்கம்.
உத்திரட்டாதி- ஆண் சந்ததி பெருகும்.
ரேவதி- ஆடை, ஆபரணங்கள் அதிகரிக் கும். பிற இரண்டு நட்சத்திர நாட்கள் கெடுதல் இல்லாதவை. சதுர்த்தி, நவமி, அமாவாசை தினங்களைத் தவிர்த்தல் நன்று.
மருத்துவரை நாட...
அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர் பூசம், பூசம், உத்திரம், உத்திரட்டாதி, ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திர நாட்கள் கெடுதலில் லாத நல்ல ஆரம்பத்தையும், விரைவான குணத்தையும் பெற்றுத்தரும். நோயின் வேகம் சுலபமாக விடைகொடுக்கும்.
விரதங்களும் வழிபாடுகளும்
'அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.'
அறக்கடலாக விளங்கும் கடவுளைப் பொருந்தி நினைப் பவர்க்கு அல்லாமல் மற்றவர்களால் பொருள், இன்பமாகிய மற்ற கடல்களைக் கடக்கமுடியாது என்கிறார் திருவள்ளுவர். எனவே விரதங்களும் வழிபாடுகளும் மானிடர்க்கு இன்றியமையாதவை.
"பந்துராத்மாத்ம நஸ்தஸ்ய
யே நாத்மைவாத்மநா ஜித/
அநாத்மநஸ்து சத்ருத்வே
வர்தோத்மைவ சத்ருவத்//'
என்கிறது பகவத் கீதை. எந்த ஜீவாத்மாவி னால் மனம், புலன்களுடன்கூடிய உடல் அடக்கியாளப்படுகிறதோ அந்த ஜீவாத்மாவுக்கு தனக்குத்தானே (அவனே) நண்பன். ஆனால் மனம், புலன்களுடன்கூடிய உடலை அடக்கியாளாதவன் தனக்குத் தானே பகைவனாக செயல்படுவான் என்கிறது.
நவீன காலத்தில் விரதங்கள், வழிபாடுகள் பலகோணங்களில் விரிவடைந்துள்ளன. எனினும் அடிப்படை உண்மையறிந்து செயல்பட்டால் நன்மைகள் சுலபமாக நம்மை நாடிவரும்.
விரதங்களைக் கடைப்பிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து தம் கடமைகளை முடித்து, குரு, சுக்கிர உதயம், அஸ்தமனம் ஆகியவை அறிந்து, தீய நாட்களைத் தவிர்த்து சுப நாளில் விரதம் தொடங்கவேண்டும். சுமங்கலிப் பெண்கள் கணவனின் விதிப்படி விரதம் அனுஷ்டிக்கவேண்டும்.
விரதம் தொடங்கும் நாளுக்கு முதல் நாள் நீராடி, ஒருபொழுது விரதம் கடைப்பிடித்து, மறுநாள் நீராடிவிட்டு சங்கல்பம், ஜெபம் செய்து, பூஜைமுடித்து வேதியரை வணங்கி, தட்சணை கொடுத்துப் பூர்த்திசெய்யவேண்டும். விரதபங்கம் ஏற்படின் மூன்று நாட்கள் உணவின்றி இருந்தால் தீமைக்குப் பரிகாரமாக அமையுமாம்.
பலவகை விரதங்கள்
யாசிதம் என்பது பகலின் இருவேளை மட்டும் உணவுண்பது. பாதக்கிரிச்சனம்- நல்லுணவு கொண்டிருத்தல். பன்னகிரிச் சனம்- வில்வம், அரசு, அத்தியிலைத் தளிர்கள் ஆகியவற்றில் ஒன்றை நீரில் நனைத்து உட்கொண்டிருத்தல். சௌமிய கிரிச்சனம்- பகலில் ஒருவேளை மட்டும் பிண்ணாக்கு, பால், நீர், பொரிமாவு ஆகியவற்றில் ஒன்றை மட்டும் உட்கொள்ளுதல். அதிகிரிச்ச னம்- மூன்று நாட்கள் ஒவ்வொரு பிடி அன்னம் மட்டும் உண்டு அல்லது அதுவுமின்றி இருத்தல். கிரிச்சனரதி கிரிச்ச னம்- இருபத்தோரு நாட்கள் பாலை மட்டும் அருந்தியிருத்தல். பிரஜாபத்திய கிரிச்சனம்- மூன்று நாட்கள் காலை மட்டும் உணவு; மூன்று நாட்கள் இரவு மட்டும் உணவு; மூன்று நாட்கள் நண்பகல் உணவு; மூன்று நாட்கள் உண்ணாதிருத்தல்.
பார்க்கிரிச்சனம்- 12 நாட்கள் உணவின்றி இருத்தல். சாந்தனப்ப கிரீச்சனம்- ஒருநாள் பசுவின் கோமியம், ஒருநாள் பால், ஒருநாள் தர்ப்பை நீர், ஒருநாள் உணவின்றி இருத்தல். மகாசந்தபன கிரிச்சனம்- மேற்குறிப்பிட்ட ஒவ்வொன்றையும் அனுஷ்டித்தல். சாந்த்ராயனம்- வளர்பிறை நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்து, தேய்பிறை முதல்நாள் முதல் ஒவ்வொரு பிடி அன்னம் கூட்டி உண்டு, மூன்று வேளையும் நீராடுதல்.
மேற்சொன்னவை யாவும் அக்கால சாஸ்திர முன்னோடிகள் அறிவுறுத்தியவைதான். தற்காலத்தில் இவற்றைக் கடைப்பிடிப்பது மிக அரிது.
பெண்கள், சிவபெருமானிடம் இடபாகம் பெற்ற பார்வதிதேவியை வணங்குதல் நன்று. அந்தரி, அமலை, அம்பிகை, இமயவல்லி, உமை, உமையாள், ருத்திரை, கௌரி, சங்கரி, சக்தி, சாம்பவி, தேவி, பவானி, மரகதவல்லி, மலைமடந்தை, முக்கண்ணி என பல பெயர்கள் கொண்டவள் அவள். அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை நாட்களில்- குறிப்பாக 3, 6, 9, 12-ஆவது பிறை நாட்களில், மாலை வேளையில் சந்திரனை நோக்கி வணங்கி, அம்பிகையிடம் மனக்குறையை வெளிப்படுத்தினால் உடனடி நிவாரணமாக நற்பலன் ஏற்படும்.