துங்கபத்ரா நதி! எந்நாளும் வற்றாத ஜீவநதி! கொல்லூருக்கு அருகே ஸய்யாத்ரி பர்வதத்தில் உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஒப்பற்ற நதி!
வராஹ ஸ்வாமியின் இரண்டு கோரைப் பற்களிலிருந்து "துங்கா'வாகவும் "பத்ரா'வாக வும் துவங்கி, வெவ்வேறு திசைகளில் ஓடி, கர்நாடகத்தில் கூட- எனுமிடத்தில் ஒன்று கூடி, "துங்கபத்ரா'வாக பிரவாகமெடுக்கும் நதி!
நவபிருந்தாவனம், பிக்ஷாலயா, மந்த்ராலயம் போன்ற புனிதத் தலங்கள் வழியே பயணித்து, கர்நூல் அருகே கிருஷ்ணா நதியில் சங்கமமாகும் சுவையான நதி! ஆம்! "கங்கா ஸ்நானம்; துங்கா பானம்' என்பது பிரசித்தியான வழக்கு.
இந்த துங்கபத்ரா நதி எல்லா காலங்களிலும் மிதமாக ஓடிக் கொண்டி ருந்தாலும், ஸ்ராவண (ஆவணி) மாதத்தில் நுங்கும் நுரையுமாகக் கரைபுரண்டோடும்.
நதியில் எவ்வாறு நீரால் வெள்ளமோ, அதேபோன்று துங்க பத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மாஞ்சா லம் என்னும் மந்த்ராலய க்ஷேத்திரத்தில் ஸ்ராவண மாதத்தில் மக்கள் வெள்ளமாக இருக்கும்.
ஏனெனில் ஸ்ரீ ஸ்ரீராக வேந்த்ர ஸ்வாமி களின் ஆராதனைத் திருவிழா இந்தக் காலகட்டத்தில்தான் வருகிறது. அந்த ஆராதனை கடந்த 13-08-2022 அன்று, ஸ்ரீ ராகவேந்திரரின் 351-ஆவது ஆராதனையாக வெகுவிமரிசையாக உலகமெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கி.பி. 1671-ல் ஜீவனோடு ஸ்ரீராகவேந்திரர் பிருந்தா வனப் பிரவேசம் செய்த நாள்தான் ஸ்ரீ ராகவேந்த்ர ஆராதனையாகக் கொண்டாடப்படுகிறது.
12-08-2022 பூர்வாராதனை, 13-08-2022 மத்யாராதனை, 14-08-2022 உத்ராராதனை என மூன்று தினங்கள் எல்லா இடங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மூல பிருந்தாவனம் உள்ள மந்த்ராலயத்தில் ஏழு நாட்கள் மிகுந்த எழுச்சியோடு இவ்விழா நடைபெற்றது. அதிலும் 14-08-2022 அன்று நடைபெற்ற தேர்த் திருவிழா, வீதியெங்கும் கரைபுரண்டோடிய லட்சக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தவாறு நடந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
விசேஷ அபிஷேகங்கள், ஆராதனை, நாட்டியம், நாடகம், உபந்நியாசம், விருது வழங்குதல் போன்றவை பிரம்மாண்டமான முறையில் அமைந்தன. மந்த்ராலய மடாதிபதிகள் ஸ்ரீ ஸ்ரீ ஸுபுதேந்த்ர தீர்த்த ஸ்ரீ பாதங்களின் அருளுரை பக்தர்களைப் பரவசப்படுத்தியது.
பிருந்தாவனப் பிரவேசம் செய்தபோது ஸ்ரீ ராகவேந்திரர், "தாம் இன்னும் 700 ஆண்டுகள் ஜீவனோடு இந்த பிருந்தாவனத்துள் இருந்துகொண்டு, தன்னை வேண்டும் பக்தர்களுக்கு அருள்புரிவேன்; அதன் அறிகுறியாக உலகெங்கும் 700 மிருத்திகா பிருந்தாவனங்கள் தோன்றும்' என்றருளினார்.
அதற்கேற்ப மிருத்திகா பிருந்தாவனங் களும், வழிபாட்டு மையங்களும், தியான மண்டபங்களும் அமைந்துவருவது கண் கூடு.
மந்த்ராலயத்திலிருந்து கொணரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும் புனித மண்தான் "மிருத்திகை' எனப்படுகிறது. இவ்வகையான மிருத்திகா பிருந்தாவனங்கள் பாரத தேசத்தில் அதிகமாக உள்ளன. அதிலும் ஸ்ரீராகவேந்திரர் அவதரித்து, கல்விகற்று, சந்நியாசம் ஏற்ற தமிழகத்திலும், அதிகமாக சஞ்சரித்த கர்நாடகத்திலும், பிருந்தாவனப் பிரவேசம் செய்த ஆந்திரத்திலும் அபரி மிதமாய் அமைந்துள்ளன.
எல்லா இடங்களிலுமே மிக நேர்த்தியாகக் கொண்டாடப்பட்ட விழா இது என்பதோடு, ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவனோடு 700 ஆண்டு கள் இருப்பேன் என்றதில் சரிபாதி நிறைவேறி, அடுத்த 350-ல் முதலாண்டு ஆராதனை இதுவென்பதும், அது உலகெங் கும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது என்பதுமே தனிச் சிறப்பு!
உதாரணத்திற்கு, தமிழகத்தில் திருவள்ளூர் அருகே, பூண்டி நீர்த்தேக்கத்தின் கீழே, நெய்வேலி கிராமம் க்ரந்தாலயபுரத்தில் அமைந்துள்ள "ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயா' என்னும் "ப்ரதிரூப மந்த்ராலய'த்திலும் ஸ்ரீராகவேந்திர ஆராதனை சாஸ்த்ரோக்தமாகக் கொண் டாடப்பட்டது.
கிருஷ்ணா நதியில் கலக்கும் துங்கபத்ரா, "தெலுகு கங்கா' வாகப் பிரவகித்து வந்துசேரும் இடம்தான் பூண்டி ஏரி. அதன்கீழே அமைந்துள்ள "க்ரந்தாலயா' மந்த்ராலயத்தைப் போன்றே வடிவிலும், வழிபாட்டு நிகழ்வு களிலும் அமைந்துள்ளதாலும், ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தங்களில், ஸ்ரீராகவேந்திரரைப் பற்றிய முக்கியமான மூல க்ரந்தங்களில் உள்ள வற்றை அடிப்படையாக வைத்து நிர்மாணிக்கப் பட்டுள்ளதாலும் இது "ப்ரதிரூப மந்த்ராலயம்' என்றழைக்கப்படுகிறது. இயற்கை எழில் சூழ, அந்தக் காலத்து மந்த்ராலயம்போல் விளங்கு வதுதான் ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயா.
சென்னை, திருவரங்கம், நாகர்கோவில், ஆஸ்ராமத்திலுள்ள குமரி மந்த்ராலயம், பெங்களூரு, மைசூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளத்தில் திரிசூர், எர்ணாகுளம் போன்ற பெரு நகரங்களிலும், கிராமங்களிலும் உத்வேகத்துடன் இந்த ஆராதனை கொண்டாடப்பட்டது.
இந்தியாவுக்கு வெளியே மலேஷியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரே லியா, துபாய், லண்டன் போன்ற பிற நாடு களிலும் அதியற்புதமாய் ஆராதனை அனுஷ் டிக்கப்பட்டது.
அதிலும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகமான இடங்களில் ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனங்கள், வழிபாட்டு மையங்கள் அமைந்துள்ள மலேஷிய நாட்டில் கொண் டாடப்பட்ட விதம் மிக அழகு! கோலாலம் பூர், தாமன் சந்தோசா, ஈபோ, பட்டர் வொர்த், பினாங்குத் தீவு, சுங்கை பட்டாணி, ஜோகூரிலுள்ள ஸ்ரீ ராகவேந்திர மடாலயம், புக்கிட் புருந்தோங் போன்ற பல இடங்களில் பக்தர்களால் உற்சாகமாகக் கொண்டாடப் பட்டது.
குறிப்பாக, கோலாலம்பூர் செராஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராக வேந்திர பிருந்தாவனத்திலும், கிள்ளான் தாமன் சந்தோசாவிலும் நடைபெற்ற ரத ஊர்வலம் மிகச் சிறப்பாக இருந்தது. கோலாலம்பூர் செராஸில் உள்ள ராயர், புன்னகை சிந்தியவாறு பக்தர்களுக்கு அருளும் கோலம் நாளெல்லாம் காணக்கூடியது.
பொதுவாகவே ஆராதனைக் காலங்களில் மகான்கள் உள்ளிருந்து வெளிவந்து பக்தர் களுக்குக் காட்சிதருவதாகச் சொல்வார்கள். அந்த அனுபவத்தைக் கோலாலம்பூர் ராக வேந்திரர் நமக்குத் தந்துவருவதை நேரில் உணரலாம்.
மந்த்ராலயத்தில் துவங்கி உலகெங்கும் உள்ள ஸ்ரீராகவேந்திரர் வழிபாட்டுத் தலங்களில் மட்டுமல்லாது அவரவர் இல்லங் களிலும் பலராலும் ஆராதனை செய்யப் பட்டது.
"ஸ்ரீ ராமன் இருக்குமிடம் அயோத்தி' என்பதுபோல, "எல்லி நின்ன பக்தரோ அல்லே மந்த்ராலயா'- அதாவது 'எங்கு உனது பக்தர்கள் இருக்கிறார்களோ அதுவே மந்த்ராலயம்' என்பதற்கேற்ப உலகின் எந்த மூலையிலிருந்து வழிபட்டாலும் அவர் களுக்கு அனுக்ரகிக்க ஓடோடி வருபவர்தான் நம் குருராஜர். அந்த குருராஜரை ஆராதனை காலத்தில் வழிபடுவதுபோல அனுதினமும் வழிபட்டு அனைத்தையும் பெறுவோம்!
"பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச!
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே.'
அதாவது, "பூஜிக்கத்தக்க ஸ்ரீராகவேந்திரர் சத்தியதர்மத்தில் நிலைபெற்றவர்! பஜிப் பவர்க்குக் கல்பவிருட்சம்; நமஸ்கரிப்பவர்க்குக் காமதேனு!' என்பது அவரை வழிபடும் துதியின் பொருள்! அப்படிப்பட்ட ஸ்ரீ ராக வேந்திரரை வழிபடுவோம்! காமதேனுவாய், கல்ப விருட்சமாய் அருள்பெறுவோம்!