நவராத்திரி 10-10-2018 முதல் 18-10-2018 வரை
ஆலயங்களில் எப்படி பகலில் பகவானுக் குப் பூஜைகள் நடைபெறுகின்றனவோ, அப்படி சில நாட்களில் இரவு நேரத்திலும் பூஜைகள் வருவதுண்டு. அந்த இரவு நேர பூஜையில் ஒன்று "சிவராத்திரி'. இது ஈசனை வணங்கும் பூஜையாகும். இன்னொன்று "நவராத்திரி'. இது முப்பெரும் தேவியர்களுக்குரிய ஒன்பது இரவுகளில் நடத்தப்படும் பூஜையாகும். இந்த ஒன்பது இரவுகளிலும் தேவிமார்களின் கணவர்கள் பூமிக்கு வருவதாகவும், அப்போது முப்பெரும் தேவியர்களும் அவரவர்களுடைய கணவர் களைப் பூஜைசெய்து அருள்பெறுகிறார்கள் என்றும் புராணம் கூறுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக் குரிய நாட்களாகக் கருதப்படுகின்றன. இதேபோல பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரி கள் உண்டு. இவற்றுள் முக்கியமானதாகக் கருதப் படுவது நான்கு நவராத்திரிகள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
அதாவது ஆனி மாத அமாவாசைக்கு அடுத்துவரும் பிரதமைமுதல் ஒன்பது நாட்கள் "வராஹி நவராத்திரி'யாகும். அதே போல புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்துவரும் பிரதமைமுதல் ஒன்பது நாட்கள் "சாரதா நவராத்திரி'யாகும். தை மாத அமாவாசைக்கு அடுத்துவரும் பிரதமைமுதல் ஒன்பது நாட்கள் "சியாமளா நவராத்திரி'யாகும். பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்துவரும் பிரதமைமுதல் ஒன்பது நாட்கள் "வசந்த நவராத்திரி'யாகும். நாம் இப்போது வருடாவருடம் கொலு வைத்துக் கொண்டாடும் நவராத்திரியிலேயே இந்த நான்கு ராத்திரிகளையும் சேர்த்து ஒரே நவராத்திரியாகக் கொண்டாடி விடுகிறோம்.
1. வராஹி நவராத்திரி
வராஹத்தின் முகம் எப்பொழுதும் கீழ்நோக்கியபடியே இருக்கும். ஆனால் வராகத்திற்கு பூமியை தனது மூக்கின் நுனியில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டு மென்பது ஆசை. கடலிலிருந்து பூமியைத் தனது கோரைப்பற்களால் தாங்கியபடி, பூமியானது மேல் நோக்கி இருக்க ஆசைப்பட்ட வராஹத்திற்கு உதவியவள் வராஹி. தனது குண்டலினி சக்தி மூலம் ஒரு உந்துதலைக் கொடுத்து, பூமியை வராஹத்தின் கோரைப் பற்களின்மேல் நிறுத்திய வராஹியானவள் "ஆக்ஞாசக்ரேஸ்வரி' எனப் போற்றப்படு கிறாள். தனது கையிலுள்ள தண்டத்தால் தட்டி உயர்த்தவே அதைக் கையில் ஏந்தியிருக்கிறாள். லலிதாம்பிகையின் பிருஷ்ட பாகத்திலிருந்து தோன்றியவள் வராஹி.அணையப்போகும் விளக்கில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, ஒரு தூண்டுகோலால் அதைத்தூண்டிவிட்டால் விளக்கு பிரகாசமாக எரியும். அதைப்போல எந்த செயலுக்கும் ஒரு உந்துதல், தூண்டிவிடுதல் அமைந்தால் அச்செயல் மேலும் உயர்ந்து முழுமைபெறும் என்பதை உணர்த்துவதே வராஹியின் அவதாரம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே நான்கு நவராத்திரியில் ஒன்றான "வராஹி நவராத்திரி'யை சிறப்பாகக் கொண்டாடி வழிபட்டால், நாம் எதைச் சொன்னாலும் அந்த வாக்கு பலிதமாகும். எதிரிகள் தொல்லை இருக்காது. நம்மை ஆட்டிப்படைக்கும் துர்தேவதைகள் அண்டாது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி மேல்நோக்கி மேலும் உயரும். வெளிநாடு சென்று கல்வி பயிலலாம்.
ஸ்ரீசாரதா நவராத்திரி
நவராத்திரியின் தத்துவமே முப்பெரும் தேவிகளின் முழு அருளைப் பெறுவதுதான். இதில் சாரதாம்பாளைத் துதித்து முழு அருளைப் பெறுவதே சாரதா நவராத்திரி.
ய சாரதாம் பேத்யபிதாம் வஹிந்தீ
க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி/
அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்தி
வித்யோத்தேண்பீஷ்டவரான் திசந்தி//
பக்தர்கள் பிரார்த் தனை செய்கின்ற அனைத்தையும் அவர்களுக்கு அனுக்கிரகிப் பவள் சாரதாம்பாள்; இவள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றக்கூடியவள் என்கிறது மேற்கண்ட ஸ்லோகம்.
ஒருசமயம் ஆச்சார்ய சங்கரர் வாதத்தில் வென்று வாகைசூட "மண்டன மிச்ரர்' என்றவரைத் தேடிச்சென்றபொழுது, "பெண் கிளிகள் எந்த வீட்டில் தர்க்க சாஸ்திரம் பேசுகின்றனவோ அந்த வீடுதான் மண்டனமிச்ரர் இல்லம்' என்று கூற, ஆச்சார்யார் அங்கு சென்று மண்டனமிச்ரரை வாதத்தில் வென்று வாகை சூடினார்.
அதேபோல் ஆச்சார்யாரை கலைமகளின் அவதாரமான அம்பிகை ஒருசமயம் அவர் பின்னாலே தொடர்ந்து சென்று, சிருங்கேரியில் தாம் கோவில் கொண்டு அருள்பாலிக்க எழுந்தருளியதும் அபூர்வ வரலாறு.
சிருங்கேரியில் பத்மாசனத்தின்மீது அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறாள் ஸ்ரீசாரதாம்பாள். நான்கு திருக்கரங்கள். சின்முத்திரை, ஜெபமாலையுடன் காட்சி தருகிறாள். தேவியின் கரங்களில் ஏடுகள் காணப்படுகின்றன. இந்த ஏடுகள் ஞானத்தை அளிக்கவல்லன. மனித வாழ்க்கையில் நாம் கொண்டுள்ள ஆசை, பேராசை அனைத்தையும் ஒழித்துக்கட்டிவிட்டு, மனஆறுதலுடன் தெய்வீகத்தைப்பெற ஸ்ரீசாரதா தேவியை வழிபட்டு, ஞானத்தைப் பெற்று அனைத்து ஐஸ்வரியத்ûயும் பெறக் கொண்டாடுவதே சாரதா நவராத்திரி எனப்படுகிறது.
சியாமளா நவராத்திரி
ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளாதேவி. இவள் அறிவு என்கின்ற தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். நமது உள்மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகையிடம் ஒன்றுசேர்ப்பவள் சியாமளா தேவியாவாள். இந்த சியாமளா தேவி எப்போதும் அம்பிகையின் வலப்புறத் திலேயே வீற்றிருப்பாள். இவள் மனதில் இருக்கக்கூடிய இருளைப்போக்கி ஞானத்தை தரக்கூடியவள். தேவியின் பத்து வடிவங்களில் ஒன்பதாவது தேவியாக விளங்குபவள். மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தவள்.
இந்த தேவியை உபாசிப்பவர்களுக்கு இசை ஞானம், கல்வியில் நல்ல தேர்ச்சி, மேடைப்பேச்சு, எழுத்தாற்றல் போன்றவை உண்டாகும். இது மட்டுமல்லாமல் குபேரன் இவர்களுக்கு அனைத்து செல்வங்களையும் வாரி வழங்குகிறான்.
இவள் எட்டுக் கைகளை உடையவள். இந்த கைகள் உலகியல் இன்பம், கலையார்வம், ஈர்ப்பு சக்தி, அடக்கி யாளும் திறன், உலக ஞானம், ஆத்மஞானம், இசையில் ஈடுபாடு போன்றவற்றை வழங்குகின்றன. இந்த தேவியை காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் காணலாம். மதுரை மீனாட்சியம்மனே சியாமளா தேவியாக விளங்குகிறாள். எனவே மதுரை மீனாட்சியம்மனை வணங்கினாலே சியாமளா தேவியை வணங்கியது போலாகும்.
வசந்த நவராத்திரி
பூமியில் மனிதனாக அவதரித்து கடைசிவரையிலும் மனிதனாகவே வாழ்ந்து காட்டிய அவதாரம் ஸ்ரீராம அவதாரம். என்னதான் அரச பதவி, ராஜபோகம் இருந் தாலும், அவற்றையெல்லாம் துறந்துவிட்டு, பதினான்கு ஆண்டுகள் வனவாசம் என்பது ஸ்ரீராமபிரானுக்கு அமைந்த துன்பம் நிறைந்த காலமாகும். வனவாசம் மட்டுமல்ல; கட்டிய மனைவியையும் பிரிந்து வாழ்ந்த வேதனை நிறைந்த காலமாகும். இதுதான் காலம்- கர்மா- விதி என்பது.
பிரிந்த மனைவியோ இலங்கையில் இராவணேஸ்வரனால் அபகரிக்கப்பட்டு அசோகவனத்தில் சோகமாக வாழ்கிறாள். இராவணன்மீது போர் தொடுத்து, அவனை வென்று, தனது மனைவியை அழைத்து வரவேண்டும். இது ராமபிரானுக்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டது.
ஸ்ரீராமன் இறைவனாக இருந்தாலும், மனித வடிவிலான அவதாரம் என்பதால், அசுரனை வெல்ல வலிமை வேண்டுமே! அதற்காக தனது குருவான வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டபோது அவர், "லங்கனா தேவியை வழிபடு. உனக்கு வீரம், தைரியம் பிறக்கும். தோல்வி கிடையாது; வெற்றி கிட்டும்' என்று ஆலோசனை கூறுகிறார். குருவின் ஆலோசனைப்படியே ஸ்ரீராமர் தென்முனை கடற்பரப்பில், இலங்கையை நோக்கி லங்கனா தேவியைப் பூஜிக்கிறார். இந்த பூஜை முடிந்து இராவணன்மீது போர் தொடுத்து வெற்றி வாகை சூடி, தனது மனைவியான சீதையை மீட்டுவந்து, அயோத்தியில் பட்டாபிஷேகம் செய்து அரசாண்டார் ஸ்ரீராமன். ராமனைப் பிரிந்து மனம் வருந்திய அயோத்தி மக்களின் இருண்டகாலம் போய், மீண்டும் பொற்காலமான வசந்தகாலம் வந்து அனைவரும் மகிழ்ச்சியுடன் கூடிய காலமே வசந்த நவராத்திரியாகும்.
வாழ்க்கையில் பிரிவு, துன்பம், வேதனை, மனவலிமையற்ற நிலைமை போன்றவை ஏற்பட்டால், இந்த வசந்த நவராத்திரியில் அம்பிகையை வழிபட்டால் வறுமைக்காலம் போய் வசந்தகாலம் வரும்.இந்த நான்கு நவராத்திரிகளையும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் நவராத்திரியே நாம் இப்போது கொண்டாடும் நவராத்திரி. இந்நாளில் தேவியரை நம் வீட்டிற்கு அழைத்து அர்ச்சனை மூலம் ஆராதனைசெய்து, அவர்களின் அருட் கடாட்சத்தைப் பெறுவதற்கு வழிபடுகிறோம். படிப்படியாக வாழ்வில் உயர்ந்து கடைசியில் இறைவனோடு கலப்பதே கொலுவில் அமைக் கப்படும் ஒன்பது படிகளின் தத்துவம்.
முதல்படியில் ஓரறிவு கொண்ட மரம், புல், செடி, கொடி போன்ற பொம்மைகள் இருக்கவேண்டும். இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளும்; மூன்றாவது படிக்கட்டில் மூன்றறிவு கொண்ட கரையான், எறும்பு போன்ற ஊர்வன பொம்மைகளும்; நான்காவது படிக்கட்டில் நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு போன்ற பறக்கும் பிராணிகளும்; ஐந்தாவது படிக்கட்டில் ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்குகளும்; ஆறாவது படிக்கட்டில் ஆறறிவு படைத்த உயர்ந்த தத்துவ ஞானிகள், தேசத்தலைவர்கள் பொம்மைகளும்; ஏழாவது படியில் மனித நிலையிலிருந்து உயர்ந்த சித்தர்கள், ரிஷிகளின் பொம்மைகளும்; எட்டாவது படியில் தேவர்கள், நவகிரகங்கள் பஞ்சபூதங்கள், அஷ்டதிக் பாலகர்கள் பொம்மைகளும்; ஒன்பதாவது படிக்கட்டில் பிரம்மா, விஷ்ணு, சிவன், மூன்று தேவிகள் பொம்மைகளும் வைக்கவேண்டும். ஆதிபராசக்தி மையமாக இருக்க வேண்டும்.
ஒன்பது ராத்திரியிலும் ஒவ்வொரு அம்பிகைக்கும் உகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.
முதல் நாள்: வெண்தாமரை, செந்தாமரை.
2-ஆம் நாள்: மல்லிகை மலர்.
3-ஆம் நாள்: மரிக்கொழுந்து, சம்பங்கி.
4-ஆம் நாள்: ஜாதி மல்லி, இதர மணமுள்ள மலர்கள்.
5-ஆம் நாள்: முல்லை மலர்.
6-ஆம் நாள்: சிவந்த நிறமுள்ள மலர்கள்.
7-ஆம் நாள்: மல்லிகை, முல்லை.
8-ஆம் நாள்: ரோஜா போன்ற சுகந்த மலர்கள்.
9-ஆம் நாள்: மீண்டும் செந்தாமரை, வெண்தாமரை.
இப்படிச் செய்தால் வளம் பெருகும். செல்வம் சேரும்.
இந்த நவராத்திரியில் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் அளித்து, ரவிக்கைத்துணி, புடவை தானம் செய்தால் புண்ணியம் கிட்டும்.
பத்தாம் நாள் விஜயதசமியன்று ஏழைப் பெண்களுக்குப் பட்டுப்புடவை தானம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்று கல்வி, கலைகளைப் பயிலத் தொடங்கினால் அவற்றில் சிறந்து விளங்கலாம்.