காளிதேவியின் பத்து வடிவங்களில் ஒரு உக்கிர வடிவம்தான் சின்னமஸ்தாதேவி. இந்த அன்னையின் ஆலயம் ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்திலி−ருக்கும் ராஜ்ரப்பா என்ற ஊரில் அமைந்துள்ளது. அந்த ஊரை தேசிய நெடுஞ்சாலை எண் 23 இணைக்கிறது.

இந்த ஆலயம் மலையுச்சியில் உள்ளது. அந்த பகுதியில்தான் தாமோதர் நதியும் பைரவி நதியும் இருக்கின்றன. பைரவி நதி மலை உச்சியி−ருந்து விழ, கீழே தாமோதர் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கு ராஜ்ரப்பா நீர்வீழ்ச்சியும் உள்ளது. பைரவி- பெண்ணையும், தாமோதர்- ஆணையும் குறியீடாகக் கொண்டிருக்கின்றன.

சின்னமஸ்தா அன்னைக்கு தலை இல்லை. துண்டிக்கப்பட்ட தலையை இடக்கை யிலும், வலக்கையில் தலையைத் துண்டித்த கத்தரிக்கோலையும் வைத்திருக்கிறாள். அவளின் கழுத்தில் நாகம் பூணூலாகக் காட்சியளிக்கிறது. கபால மாலையைக் கழுத்தில் அணிந்திருக்கிறாள். இந்த அன்னை யின் சரீரத்தில் ஆடைகளில்லை. பின்புலத்தில் சுடுகாடு காட்சியளிக்கிறது. "பிரசண்ட சண்டிகை' என்றும் இந்த தேவி அழைக்கப் படுகிறாள்.

துண்டிக்கப்பட்ட கழுத்துப் பகுதியிலிருந்து மூன்று ஊற்றுகளாக குருதி வெளிப்படுகிறது. ஒன்றி−ருந்து வரும் குருதியை சின்னமஸ்தாவும், மற்ற இரு குருதி ஊற்றுகளை அவளின் தோழிகளான இடாகினி, வாருணி இருவரும் பருகுவதாக வரலாறு குறிப்பிடுகிறது.

Advertisment

kk

தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே போர் நடைபெற்றபோது, அசுரர்களை ஆவேசத்துடன் அழித்த இந்த அன்னை, அதில் திருப்தியடையாமல் தன் தலையைத் தானே துண்டித்து, பீறிட்டுவந்த குருதியைப் பருகினாள் என்பது கதை. சின்னமஸ்தா விடமிருந்துதான் நரசிம்ம அவதாரம் உண்டான தாகவும் ஒரு கதையுள்ளது.

லட்சுமிங்கரை என்ற இளவரசி, அறுக்கப்பட்ட தலையுடன் நகரத்தில் உலா வந்ததாகவும், அவளே பின்னர் "சின்ன முண்டா வஜ்வராகி' என்ற பெயரைப் பெற்றதாகவும் ஒரு கதை இருக்கிறது.

சுயக்கட்டுப்பாடு, கலவியாற்றல், கலவி வேட்கை ஆகியவற்றுக்கு உருவகமாக சின்னமஸ்தா இருக்கிறாள்.

பௌத்த மதத்தைச் சேர்ந்த மேகலை, கங்கலை என்ற இரு சகோதரிகள் தங்கள் குருவுக்கு முன்னால் நடனமாடியதாகவும், அவர்களுடன் சேர்ந்து "வஜ்ரயோகினி' என்ற பெயரில் சின்னமஸ்தா நடனமாடியதாவும் கூறப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசத்திலிருக்கும் சிந்து பூர்ணியிலுள்ள சின்னமஸ்தா ஆலயம், சக்தி பீடங்களில் ஒன்று என்று குறிப்பிடப் படுகிறது.

காமதேவனும் ரதிதேவியும் தாமரை மலரில் படுத்திருக்க, அவர்களின்மீது தன் கால்களை வைத்து சின்னமஸ்தா நின்று கொண்டிருப்பதுதான் ராஜ்ரப்பாவில் நாம் காணும் அன்னையின் தோற்றம்.

இந்த ஆலயத்திற்கு அருகில் பல ஆலயங்கள் இருக்கின்றன. தட்சிகை காளி, அஷ்ட மாத்ரிகா ஆகியோருக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. அஷ்ட மாத்ரிகா- தாரா, சோடஸி, புவனேஸ்வரி, பைரவி, பங்களா, கமலா, மாதங்கி, தூமாவதி ஆகிய எட்டுப் பெண் தெய்வங்களைக் குறிக்கின்றன.

மிகவும் பழமையான சின்னமஸ்தா ஆலயத்துக்கு அஸ்ஸாம், நேபாளம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களி−ருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

துர்க்கா சப்தசதியில் இந்த கோவில் கூறப் பட்டிருக்கிறது. மந்திர, தந்திர விஷயங்களுக்கு இந்த ஆலயம் புகழ்பெற்றது. அஸ்ஸாமிலுள்ள காமாக்யாவைப்போல, இதுவும் பிரசித்தி பெற்றது. பத்து மகாவித்யாக்களில் ஒன்று இதுவென்று நூல்களில் கூறப்படுகிறது.

செவ்வாய், சனிக்கிழமைகளில் காளிபூஜை நடக்கும். அப்போது அங்கு பலவகையான பலி தரப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்துகொள்கின்றனர். பௌர்ணமி காலத்தில் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

புதிதாகத் திருமணம் செய்துகொண்ட வர்கள், அன்னைக்கு தலைமுடியைக் காணிக்கை யளிப்பவர்கள் என ஏராள மாக வருகிறார்கள்.

சூனியத்தால் பாதிக்கப் பட்டவர்கள் இங்குவந்து வழிபட்டால் உடனடியாக விடுபடுவார்கள் என்பது ஆழமான நம்பிக்கை.

"சந்தால்' என்ற பழங்குடி மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து, இறந்தவர்களின் அஸ்தியை அங்கிருக்கும் தாமோதர் நதியில் கரைக்கிறார் கள். "கோபிகாட்' என்ற இடத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்.

கிழக்கு மற்றும் மேற்கு ஜார்கண்டில் சின்னமஸ்தாவை, "மனோ காமனா தேவி' என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு மனதில் நினைக்கும் காரியங்களை நிறைவேற்றித் தரும் அன்னை என்று பொருள்.

ஜனவரி மாதத்தில் வரும் மகர சங்கராந்தியின்போது, லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். விஜய தசமியின்போது, இந்த ஆலயம் பக்தர்களால் நிறைந்திருக்கும்... அங்கு வெந்நீர் ஊற்றும் உண்டு. ஆற்றில் படகில் பயணம் செய்யும் வசதியும் உள்ளது.

விஷ்ணு புராணம், பாகவத புராணம் ஆகியவற்றில் இந்த ஆலயம் பற்றி சிறப்பித்துக் கூறப்படுகிறது.

சின்னமஸ்தா ஆலயத்திற்கு ரயில்மூலம் செல்லவேண்டுமானால், சென்னையி−ருந்து ராஞ்சிக்குப் பயணிக்கவேண்டும். பயண தூரம் 1,595 கிலோமீட்டர். அங்கிருந்து ராஜ்ரப்பா விற்கு வாடகைக் கார் அல்லது பேருந்தில் பயணிக்கலாம்.

இவ்வாலயம் தவிர சின்னமஸ்தா தேவிக்கு காசிக்கு அருகிலிருக்கும் ராம்நகர், ஜார்கண்டிலிருக்கும் நந்தனா பர்வதமலை, மேற்கு வங்காளத்தில் உள்ள விஷ்ணுபூர், நேபாளத்தின் காட்மண்ட் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களிலும் ஆலயங்கள் இருக்கின்றன.