வாழ்க்கையை போதிக்கும் வழிபாடு! கோபி சரபோஜி

8

"நான் தேர்வில் பாஸாக வேண்டும்; நான் முதல் ரேங்க் எடுக்கவேண்டும்; எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும்; எனக்கு நல்ல கணவர் மட்டு மல்ல- என் பேச்சைக் கேட்கின்ற மாமியாரும், நாத்தனாரும் வேண்டும்; எனக்குக் குழந்தை வேண்டும்- அது வும் ஆண் குழந்தை என்றால் நிரம்ப சந்தோஷம்' என தொடர்கதையாய் நீளும் இவையெல்லாம், ஆத்ம சுத்திக் காக ஆலயம் வரும் நாம் சுயநலத் தோடு இறைவனிடம் கேட்கும் சங்கதிகள்! ஆலயத்திற்கு வெளியில் அமர்ந்துகொண்டு நம்மிடம் தனக்காக உதவி கேட்பவர்களை "பிச்சைக்காரர் கள்' என ஏளனம் செய்கிறோம். அதே காரியத்தை ஆலயத்திற்குள் இருந்து கொண்டு செய்யும் நம்மை எப்படி அழைத்துக்கொள்வது?

கேட்பதையெல்லாம் உடனே நிறைவேற்றித் தரும் அலாவுதீனின் அற்புத விளக்காக இறைவனை நினைத்துக்கொண்டு, எழுதப்படாத ஒப்பந்தங்களை இறைவனிடம் செய்து கொள்ள முயல்கிறோம். பத்திரமில்லாத பங்குதாரராக்கிக் கொள்ளப் பார்க்கி றோம். தேவர்கள் விரும்பிக் கேட்ட போதும்கூட "மூன்றுக்குமேல் வேண்டாம்' எனச் சொன்ன விநாயக ருக்கு நூறு தோப்புக்கரணம் போடுவதாய் வேண்டிக்கொள்வதை என்னவென்பது? தன் பொருட்டு எவரும் துயரங்களை அனுபவிக்க வேண்டுமென இறைவன் விரும்பு வதில்லை. அப்படி இறைவன் விரும்பாத பல விஷயங்களையே நாம் இறைவன் பெயரில் செய்து கொண்டிருக்கிறோம்.

Advertisment

god

"தனக்கே வேண்டும்' என்ற வெறித்தனமான ஆசையாலும் சுயநலத்தாலும் இறைவழிபாட்டிற்கு ஒவ்வாத விஷயங்களுக்குள் சிக்கிக் கொள்கிறோம். இதனால் இறைவனையும் இறைவழிபாட்டின்மூலம் உணரவேண்டிய உன்னதங்களையும் இழந்து, பயத்தின் பெயரில் பக்தியைக் காசாக்கும் கூட்டங்களில் சிக்கிக்கொள்கிறோம். ஆன்மிகத்தின் அடிப்படையை அரைகுறையாய் அறிந்த சில மதகுருமார்களின் காலடியிலும், சமயத்தின்மூலம் வயிறுவளர்க்கும் சில குறிசொல்லிகள், பூசாரிகளின் காலடியிலும் இறைவனைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இறைவனின் பிரதிநிதிகளாக சொல்லிக்கொள்ளும் இவர்கள் தங்களின் சக்திக்கேற்ப பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும் விளம்பரங்களைத் தேடிக்கொள்கின் றனர். மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை அடைந்ததும், "நானே இறைவன்; கலியுக அவதாரம்' என்று அறிவித்துக் கொள்கின்றனர். இவர்களின் அறிவிப்புகளை அப்படியே நம்பும் நம் நம்பிக்கை அவர்களுக்கு பலம். நம் மதத்துக்கு பலவீனம். இறைவனுக்கு நாம் செய்யும் அவமானம்.

Advertisment

இறைவனிடம் சுயநல நோக்கோடு ஒப்பந்தங்களை நாமே செய்துகொள்வதும், இறைவனின் பிரதிநிதி என தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்டவர்களின் பின்னே ஓடுவதும் இறைவனை நெருங்கும் முறையல்ல. "என் பின்னால் வந்தால் இறைவனைக் காட்டுகி றேன்' என விளம்பரம் செய்துகொள்ளும் இவர்களால் இறைவனை மட்டுமல்ல; அவன் நிழலைக்கூட காட்ட முடியாது! அப்பேற்பட்ட ராமகிருஷ்ண பரமஹம்ச ராலேயே விவேகானந்தருக்கு இறைவனைக் காட்ட முடியவில்லை. உணரவைக்க மட்டுமே முடிந்தது என்றால் இவர்களெல்லாம் எம்மாத்திரம்? இறைவனைக் காட்ட முடியாது என்ற சத்தியத்தை மழுப்பாமல் உள்ள படியே உணர்த்தியதால் மட்டுமே, இராமகிருஷ்ண பரமஹம்சரை இறைவனைத் தேடியலைந்து கொண்டிருந்த விவேகானந்தர் குருவாக ஏற்றார்.

ஊரே மதித்துப் போற்றிய ஞானி ஒருவரை மட்டம்தட்ட நினைத்த ஒரு இளைஞன், ""இறைவனை எனக்குக் காட்ட முடியுமா?'' என அவரிடம் கேட்டான். அவனுடைய கேள்விக்கு ஞானி எந்த பதிலும் சொல்லவில்லை. இளைஞனும் விடுவதாய் இல்லை. தினமும் ஞானியைச் சந்தித்து அவன் இதே கேள்வியைக் கேட்பதும், அவர் பதில் சொல்லாமலிருப்பதும் தொடர்ந்தபடியே இருந்தது. இதைக்கண்ட ஞானியின் சீடர்கள், "எல்லாம் அறிந்த நம் குரு இந்த இளைஞனின் கேள்விக்கு மட்டும் ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார். ஒருவேளை இறைவனைக் காட்ட நம் குருவால் முடியாதோ?' என சந்தேகம் அடைந்தனர். வழக்கம்போலவே அன்றும் ஞானியைச் சந்தித்த அந்த இளைஞன், ""இறைவனைக் காட்ட முடியுமா?'' எனக் கேட்ட அடுத்த விநாடி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். அறை வாங்கிய இளைஞன் ஞானியை "அரைக்கிறுக்கன்' எனச் சொல்லிவிட்டு வந்தவழியே ஓடிப்போனான். ஏற்கெனவே சந்தேகத்திலிருந்த சீடர்கள் ஞானியின் இந்தச் செயலால் மேலும் குழம்பிப் போனார்கள். மற்ற சீடர்கள் எல்லாம் தயங்கி நிற்க, ஒரு சீடன் மட்டும் துணிச்சலாக, ""குருவே, எல்லாருடைய சந்தேகங்களையும் எளிதாய், எளிமையாய் தீர்த்து வைக்கின்ற நீங்கள் அந்த இளைஞனின் கேள்விக்கு மட்டும் ஏன் விடைசொல்லாமல் கன்னத்தில் அறைந் தீர்கள்?'' என்றான்.

ஞானி அமைதியாக, ""எனக்கு வேறுவழி தெரிய வில்லை. அவனையே அவனுக்குக் காட்டச்சொல்லி எத்தனை நாளைக்கு என்னிடம் கேட்பான். அதனால் அறைந்தேன்'' என்றார். சந்தேகம் நீங்கப்பெற்ற அவருடைய சீடர்கள் ஞானம் பெற்றனர். இறைவனிடம் இறுதியில் சென்று சேரக்கூடிய- இறைவனுக்குரிய ஆத்மா நமக்குள்ளேயே இருக்கிறது. அப்படியானால் இறைவன் நமக்குள்ளேயே இருக்கிறான். இதைத்தான் ஞானி தன் சீடர்களுக்கு உணர்த்தினார். இறைவனின் பிரதிநிதியாய் நீங்கள் நம்பும் எந்த மத குருவாவது, சாமியாராவது உங்களுக்குள் இறைவன் இருக்கிறான் என்ற உண்மையைச் சொல்லி உங்களை உணர வைத்தி ருக்கிறாரா? அப்படி யாரேனும் உங்களை உணர வைத்திருந்தால் அவரே மிகச்சரியான குரு, வழிகாட்டி!

அவர் பாதம் பணிந்து அவரின் சீடராகத் தொடருங்கள். உங்களுக்கும் ஒரு இராமகிருஷ்ண பரமஹம்சர் கிடைத்துவிட்டார் என பெருமிதம் கொள்ளுங்கள்.

இப்படிப்பட்ட குரு கிடைக்காவிட்டால் அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை. எங்கும் அவரைத் தேடி அலைய வேண்டியதில்லை. குருவைத் தேடித் திரியும் முயற்சிகளோடு, தனக்கென மட்டுமே என்ற நோக்கில் இறைவனிடம் வேண்டும் சுயநல எண்ணத்தையும் தூக்கி ஓரம் வைத்துவிட்டு, நீங்கள் நீங்களாக மட்டுமே ஆலயம் வாருங்கள்.

அங்கு இறைவனே குருவாய் மாறி அவனையறியும்- அடையும் வித்தைகளை- பக்தி செலுத்தும் வழிகளை வழிபாட்டின்மூலம் கற்றுத் தருவான். மாணவன் தயாராய் இருந்தால் குரு தானே தோன்றுவார் என்பது இந்த விஷயத்தில் முற்றிலும் உண்மை!

(அடுத்த இதழில் நிறைவுறும்)