இயற்கை.... இயற்கை

அதுவே, இறைவனின் "கை' அண்ட பேரண்டத்தில் இயற்கையாகவும், இயற்கையின் இயக்கத்திற்கு தலைவனாக இருக்கும் பிரபஞ்ச பேரொருள் சிவபெருமானே, இறையெனும் இயற்கையாகும். இயற்கை எனும் பஞ்சபூத சக்திகளை நாம் மதிக்காமலும், போற்றாமலும், வணங்காமலும் ஆறறிவு படைத்த மனித இனம் பூஜை, புனஸ்காரம், பரிகாரம் என்று தன் நலம் மட்டும் பெரிது என்று கருதி, தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நினைத்தால், சிவப் பரம்பொருள் நொடியில் அனைத்தையும் சம்காரம் செய்துவிடும். இங்கு நீ பெரியவன், நான் பெரியவன், என்னுடையது பெரியது, இது எனது எல்லை, அது உனது எல்லை என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. ஏனென்றால், சிவப்பரம்பொருளின் "அன்புக்கு எல்லையே இல்லை.' அனைவரும் ஆறறிவு படைத்த மனித இனமே. இந்த இனம் இயங்க மிக முக்கிய காரணி, பஞ்சபூத சக்திகளில் ஒன்றான பிராணன் எனும் உயிர் காற்றாகும்.

Advertisment

gd

பிரபஞ்ச உயிர்களின் சகோதர தத்துவத்தையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், கூடி வாழ்தலையும் மறந் தால்! இயற்கை எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல், பாகுபாடு பார்க்காமல் நொடியில் இயற்கையை தவிர்த்து மற்ற அனைத்தையும் புரட்டி போட்டுவிடும். கூடி வாழ்வது எப்படி யென்று பஞ்சபூத சக்தி களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்பிரபஞ்சத்தில் இந்த ஐந்தும் கூட்டுக் குடும்பமாக இயங்குவதால்தான், இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். ஆறறிவு படைத்த மனித சமூகமே! அன்பு செலுத்துவதில் விழித்துக் கொள். சக உயிர்களிடம் பாகுபாடு காட்டாதே. இறைவனின் "மூன்றாவது கண்' உன்னை கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. சினத்தையும், வெறுப்பையும், பாகுபாட்டையும், வேறுபாட்டையும் மனித மனமானது ஒழித்துக் கட்டிவிட்டு சகோதர தத்துவத்தையும், சமத்துவத்தையும், அன்பால் அரவணைப்பதையும், பிற உயிர்களின் பசிப்பிணியை போக்குவது, பாதுகாப்பது என்பதுதான் தலைசிறந்த பக்தி. அதனால் தான் அன்பை "சிவம்' என்கிறோம். "அன்பே சிவம்' என்கிறோம். அன்பின் அடையாளத் தைப் பற்றி திருமந்திர சிற்பி திருமூலர் கூறுவதைப் பார்க்கலாம்.

"அன்பின் உள்ளான் புறத்தான் உடலாயுள்ளான்

முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிராணவன்

அன்பின் உள்ளாகி அமரும் அரும்பொருள்

அன்பின் உள்ளார்க்கே அணை துணையாமே'.

பிரபஞ்ச பேராற்றலான சிவப்பரம் பொருளை எண்ணி அன்பு செய்யும் அன்பர் களின் உள்ளம் ஆகிய கோவி-ல் அவன் சிவன் குடிகொண்டு இருக்கிறான். அண்ட பேரண்டம் முழுக்க நிரம்பி இருக்கிறான்.

Advertisment

உலக ஆன்மாக்களின் உடலாகவும் உள்ளவனும் அவனே. உலகத் தோற்றத்திற்கு முன்பு இருந்தவனும் அவனே, பின்பு இருப்ப வனும் அவனே.

முனிவர்களுக்கும், ஞானிகளுக்கும், சித்தர்களுக்கும், மகான்களுக்கும் அவனே தலைவன். அன்புடையவர்களுக்கு என்றும் நீங்காத பெரும் துணையாக நின்று அருள் பவனும் அப்பரம் பொருளாகிய சிவமே ஆகும்.

அன்பைப் பற்றி வாழ்வியல் ஞானி திருவள்ளுவர் கூறுவதைப் பார்க்கலாம்.

"அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று.'

அன்புடன்கூடிய நல்ல இதயம் இல்லாத உயிர் வாழ்க்கை என்பது நீர்த்தன்மை இல்லாத வறண்ட பாலை நிலத்தில் முளைத்த மரம் தளிர்த்தலும், செழித்தலும் இல்லாமல் வற்றி காய்ந்துபோகும். அதுபோல மனிதனின் உள்ளத்தில் உண்மை அன்பு இல்லையென்றால், அவனது வாழ்க்கை சிறப்படையாது. அவன் உயிரோடு இருந்தாலும், அவனது வாழ்க்கையானது பயனற்றதாகவே இருக்கும்.

Advertisment

பஞ்சபூத சக்திகளில் ஒன்றான நீர் இருந்தால்தான் பூமிப் பந்திலுள்ள பல்லுயிர்களும் செழிக்கும் வளரும். மனித இனமும் வாழும். "நீரின்றி அமையாது உலகு' என்பது திருவள்ளுவர் வாக்கு. மழை இல்லாத சமயத்தில் மழையே இல்ல, பூமி எல்லாம் காஞ்சி போய் வறண்டு கிடக்கு. வெயி-ன் கொடுமை தாங்கமுடியல அப்படின்னு புலம்பி ஆறறிவு படைத்த மனித இனம் வெயிலை (நெருப்பு சக்தி) குறை சொல்கிறது. அதற்கடுத்து கடுமையான புயல் வீசி மரங்கள் எல்லாம் விழுந்துவிட்டது. வீடுகள் இடிந்துவிட்டது என்று காற்றைப் (உயிர் சக்தி) பற்றி குறைக்கூறுகிறது.

அதோடு மட்டும் நின்றுவிடாமல், மழை வரும்போது வெள்ளம் வந்து எங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டது, இயல்பு வாழ்க்கை பாதித்துவிட்டது என்று நீரையும் குறைக்கூறுகிறது. ஒண்ணுமே விளையமாட்டேங்குதுன்னு சொல்- நிலத்தையும் (பூமிப்பந்து) குறைக்கூறுகிறது. வெயிலே அடிக்கல, வானம் (ஆகாயம்) மூடிக்கிட்டிருக்கு என்று ஆகாயத்தையும் குறைக்கூறுகிறது. பஞ்சபூத சக்தியாக இருப்பவனே பரமசிவன் எனும் சிவப்பரம் பொருளாகும். திருமந்திர சிற்பி திருமூலர் கூறுவதைப் பார்க்கலாம்.

"தானே இரு நிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்

தானே சுடும்அங்கி ஞாயிறு திங்களும்

தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்

தானே தடவரை தண்கடல் ஆமே.'

இறைவன் இவனே, விரிந்தகன்ற மண் ணாகவும் (பூமி), உயர்ந்து பறந்த வானகமாகவும் (ஆகாயம்) இருக்கின்றான். சுட்டெரிக்கும் அக்னியாக திகழும் இவனே சூரியனாகவும் (நெருப்பு) குளிர்ச்சி பொருந் திய சந்திரனாகவும் உள்ளான். மழையைப் பொழிந்து உலகின் வாட்டத்தை போக்கும் தாயாக இருந்து தன்னருள் புரிகின்றான். இவனே மலையாகவும், மாகடலாகவும், காற்றாகவும் எங்கும் கலந்து உள்ளான். "பஞ்சபூத சக்தியே பரம்பொருள்' என்பதே இதன் உட்கருத்தாகும்.

மேலும் திருமந்திர சிற்பி கூறுவதைப் பார்க்கலாம்.

"ஒன்றவன் தானே இரண்டவன்

இன் அருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ்உம்பர்ச்

சென்றனன் தான்இருந்தான் உணர்ந்து எட்டே.'

ஒன்றென (ஏகன்) இருப்பவன். அவனே,

சிவனும் சக்தியுமாக இரண்டாகவும் இருக்கி றான். சக்தியும் சிவனும் என இரண்டாக இருப்பவன், பலவாகவும் (அனேகன்) இருந்து படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் எனும் ஐந்து தொழிலுக்கும் அவனே தலைவனாகவும் இருக்கிறான். நான்கு மறைகளுக்கும் (வேதங்கள்) அவனே அறிவு வடிவானவன், சைவம், வைணவ சாக்தம், காணபத்யம், சௌரம், கௌமாரம் என்ற ஆறு சமயப் பிரிவுகளாகவும் இருந்து அதற்கு தலைவனாக இருப்பவனும் சிவப்பரம் பொருளே. முருகனாக இருப்பவனும் அவனே. முருகன் எனும் ஆறுமுகச் சிவனாக அருள்பா-ப்பவனும் அவனே. அதனால் அவனே "ஏகன் அனேகன்' என்று எங்கும் வியாபித்து இருக்கின்றான். அதனால்தான் அவனை "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று வணங்குகிறோம்.

இப்படி இருக்கும் பிரபஞ்ச பேரருளை தனக்கு சாதகமாக இருக்கும்பொழுது (இயற்கை= இறைவன்) போற்றுவதும், தனக்கு சாதகமாக இல்லாதபொழுது இயற்கையையும், இறைவனையும் தூற்றுவதையும் இந்த ஆறறிவு படைத்த மனித இனம் சாதாரணமாக குறைக் கூறிவிடுகிறது. ஆனால் ஆறறிவுக்கும் குறைவான விலங்கினங்களோ, பறவை யினங்களோ, செடி, கொடிகளோ, மரங்களோ, புல் பூண்டுகளோ எதுவும் குறைக்கூறாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அது இயற்கையாகவே இருந்துகொண்டிருக்கிறது; வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனித இனம் மட்டுமே தனக்கு பிரச்சினை (பாதகமாக) வரும்போது மட்டும் பக்தி செய்ய கோவில் கோவிலாக ஏறி- இறங்குகிறது. சாதகமாக இருக்கும்பொழுது இறைவனையும் மறந்து விடுகிறது. இயற்கையும் மறந்துவிடுகிறது. இயற்கை சக்தியை எதிர்த்து நான் பெரிது என்று நினைத்து உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. இயற்கை எனும் இறைவனின் குணத்தை நீ கணிக்கமுடியாது. இயற்கையை மதிக்காமல் இருப்பது என்பது ஒரு இழிவான குணம். எந்த ஒரு உயிரையும் குறைக் கூறக்கூடாது என்பதை பற்றி மருத்துவ மேதை திருவள்ளுவர் கூறிய கருத்தினை பார்ப்போம்.

"ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.'

அண்ணன் சரியில்லை, மாமா சரியில்லை, அத்தை சரியில்லை, தங்கை சரியில்லை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சரியில்லை என்று பலவாறு பிறர்மீது குற்றம் கண்டுபிடிப்பதையும், குற்றம் சுமத்துவதையும் விட்டு ஒழித்துவிட்டு, நாம் சரியாக இருக்கிறோமா? என்று சற்று யோசித்து உணர்வோமானால், இப்பூவுலகிலுள்ள எந்த ஒரு உயிரினத் திற்கும் தீங்கு என்பதே ஏற்படாது.

ஒரு மனிதனின் குணம் எவ்வாறு பரந்து, சிறந்து இருக்கவேண்டும் என்பதற்கு யோகி விவேகானந்தர் சொல்லும் ஒரு சிறு கதையை பார்ப்போம். ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. நீண்டகாலமாக அங்கு வசித்து வந்தது. அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்த அந்த தவளை உருவத்தில் சின்னம் சிறியது. அது கண்களை இழந்துவிட்டதா, இல்லையா? என்று சொல்வதற்கு நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக அதற்கு கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்ளலாம். அந்த தவளை நாள்தோறும் நீரி-ருந்து புழு பூச்சிகள், கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றி சுத்தப்படுத்தியது. அந்த சுறுசுறுப்பு நம் தற்கால கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்கு பெருமைதரும் விஷயமாகும். இப்படியே வாழ்ந்ததால் அந்த தவளை சிறிது பெருத்து பெரிதாகிவிட்டது.

ஒருநாள் கட-ல் வாழ்ந்துவந்த தவளை ஒன்று அங்கேவந்து அந்த கிணற்றில் விழுந்தது. கிணற்றுத் தவளை அந்தத் தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்கிறது. அந்தத் தவளை நான் கட-ல் இருந்துவருகிறேன் என்று கூறுகிறது. கடலா! அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றைவிடப் பெரியதாக இருக்குமா என்று கூறி ஒரு பக்கத்தில் இருந்து எதிர்பக்கத்திற்கு தாவி குதித்தது கிணற்றுத் தவளை. நண்பா, இந்த சின்ன கிணற்றோடு எப்படி கடலை ஒப்பிடமுடியும் என்று கேட்டது கடல் தவளை. கிணற்றுத்தவளை மறுபடியும் ஒரு குதி குதித்தது. உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா என்று மீண்டும் கேட்டது? சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா? நீ என்ன சொன்னாலும் சரி- என் கிணற்றைவிட எதுவும் பெரிதாக இருக்கமுடியாது. கண்டிப்பாக இதைவிட பெரியதாக எதுவும் இருக்கமுடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள் என்று கத்தியது கிணற்றுத் தவளை. காலங்காலமாக இருந்துவருகின்ற கஷ்டம் இதுதான். இந்த கதையின்மூலம் விவேகானந்தர் கூறும் கருத்து.

நான் இந்து, நான் என் சிறிய கிணற்றுக்குள் இருந்துகொண்டு என் சிறு கிணறுதான் முழு உலகம் என்று நினைக் கிறேன். ஒரு கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றுக்குள் அமர்ந்துகொண்டு தன் கிணறுதான் முழு உலகம் என்று நினைக் கிறான். அதைப்போலவே முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்துகொண்டு அதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.

இது எவ்வளவு பெரிய அபத்தமான விஷயம்.

நமது இந்த "சிறிய உலகின் எல்லைகளை தகர்த்தெறிய, இறைவன் அருள்புரிவான்' என்று நம்புகிறேன் என்று கூறுகிறார்.

ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த உலகில் எதுவும் பெரியது இல்லை. எதுவும் நிரந்தரமில்லை. "இறைவனே நிரந்தரம்'... "இறைவனே மிகப்பெரியவன்', சிவப்பரம் பொருளே அதற்கு உரியவன். பாகுபாடு, பிரிவினை, பொறாமை, வேற்றுமை சினம், தீண்டாமை இவற்றையெல்லாம் விட்டொழித்துவிட்டு, நான் எனது என்ற எண்ணங்களைத் தவிர்த்து விட்டு, சமத்துவம், சமூகநீதி, சகோதர தத்துவம் என்றிருந்தால் பிரபஞ்ச பேரருளான "சதாசிவத்தின்' சம்காரத்தி-ருந்து தப்பிவிடலாம். ஆகவே அன்பு செய்வோம். பிரபஞ்ச பேரருளின் அருளாற்றலைப் பெறுவோம். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'.