எந்தவொன்றும் இலவசமாகக் கிடைத்துவிட்டால் அதன்மீது நமக்கொரு அலட்சியம் ஏற்பட்டுவிடும். அதன் அருமை தெரியாது.
ஒரு நண்பர் தனது நண்பருக்கு அருமையான புத்தகத்தைப் படித்துப் பார்க்கக் கொடுத்தார். அதை அவர் இலவசமாகப் பெற்றுக்கொண்டார். அதனால் அதன்மீது அவருக்கு ஒரு அலட்சியம். ஆகவே, அதைத் தூக்கிப் போட்டுவிட்டார். அதேசமயம் அவர் தினமும் நாளிதழை காசு கொடுத்து வாங்குகிறார். அதை ஒரு வரிவிடாமல் படிக்கிறார். பிறகு அதை பத்திரப்படுத்தி எடைக்குப் போட்டு காசு வாங்குகிறார். இவலசமாகக் கிடைத்த அந்த புத்தகத்தையும் எடைக்குப் போட்டு பணம் பார்த்தார். அந்த கருத்து நிறைந்த புத்தகம் சும்மாதானே கிடைத்தது.
அதனால் அதன்மீது அலட்சியம்.
இந்தக் கருத்துதான் இந்த மானிடப் பிறவிக்கும் ஒத்துப்போகிறது. உயிர் என்ற இந்த மானிடப் பிறவியை இறைவன் ஒருவருக்கு சும்மாதானே கொடுத்திருக் கிறார்.
இந்த மானிடப் பிறவியை- அதாவது உயிரைப் பெறுவதற்கு அவர் ஏதாவது சிரமப்பட்டாரா? ஒருவர் படித்துப் பட்டம் பெற்றால், "நான் கஷ்டப்பட்டுப் படித்தேன்' என்கிறார். ஒருவர் வீட்டை வாங்கினால், "நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து இந்த வீட்டை வாங்கினேன்' என்கிறார். இதேபோல வேறெந்த பொருளை வாங்கினாலும் "கஷ்டப்பட்டு வாங்கினேன்' என்பார். ஆனால் யாராவது இந்த உயிரை- இந்த மானிடப் பிறவியை கஷ்டப்பட்டுப் பெற்றேன் என்று சொல்கிறாரா? முடியாது.
ஏனென்றால் இந்தப் பிறவி இறைவனால் கொடுக்கப்பட்ட வரம்.
இலவசமாகக் கிடைத்ததுதானே என்று பிறவியை அலட்சியப் படுத்தக்கூடாது. பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பிறவியில் தெய்வத்திற்கு நன்றிகடன் செலுத்தவேண்டும். தெய்வ வழிபாட்டை தவறாமல் செய்யவேண்டும். நல்ல செயல்களைச் செய்யவேண்டும். ஒழுக்கமாய் இருக்கவேண்டும்.
இறைவன் நல்ல உடலமைப்போடு நம்மைப் பிறக்க வைத்திருக்கிறான். கைகளால் அவனை வணங்கவேண்டும். கால்களால் அவன் ஆலயங்களுக்கு நடந்து செல்லவேண்டும். வாயால் இறைவனின் திருப்பெயரை உச்சரிக்கவேண்டும். உடலால் இறைத் தொண்டு செய்யவேண்டும்.
அரிதினும் அரிதான இந்த மானிடப்பிறவி மறுபடியும் கிடைக்குமா என்பது தெரியாது. இப்போது கிடைத்துள்ளது. இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வது நம் கடமை. முன்னோர்கள் பாடிய கீர்த்தனைகள், பாடல்களைப் பாடி மனமார பூஜை செய்யவேண்டும்.
மனிதப்பிறவி ஒன்றில்தான் இறைவனை வழிபடமுடியும். வேறு உயிரினங்களாகப் பிறந்திருந்தால் இறைவனை நினைத்துத் துதிக்கும் வாய்ப்பு கிடைக்காது.
மனதார ஒரு மலரையோ, துளசி இலையையோ பறித்துவந்து பகவானின் பாதங்களில் இடுங்கள். இந்த உடம்பு இருப்பது இறைவனைத் தொழுவதற்கே. கிடைத்தற்கரிய இறைத்தொண்டை வேறொருவர் தலையில் கட்டிவிட்டு நழுவக்கூடாது. ஒரு வாய் சோறு உண்ணும்போது, "இறைவா நீ கொடுத்த உணவு' என்று இறைவனை நினைத்து அவனுக்கு முதலில் நிவேதனம் செய்துவிட்டு நாம் உண்ணப் பழகவேண்டும்.
நாம் இறைவனை மறந்தாலும், அவன் நம்மைப் படைத்ததனால்- நம்மைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பிருப்பதால் நம்மிடம் பக்தியை எதிர்பார்க்கிறான். பாலுடன் கலந்த தண்ணீரைப்போல நமது பக்தி இறைவனிடம் கலந்துவிட்டால், அவன் நாம் அழைக்கும்போது வருவான். கோரிக்கையை ஏற்பான். அருள்புரிவான். இந்தப் பிறவியில் எப்படியெல்லாம் இறைவனை நினைத்து உருகுகிறோமோ, அதைப் பொருத்து அடுத்த பிறவி எப்படி என்பதையும் அல்லது மோட்சம் என்ற பிறவாமையையும் அவன் நிர்ணயிப்பான்.
அழைத்தால் வருபவன் பரந்தாமன்; நினைத்தால் வருபவன் பரமேஸ்வரன்!