ணோ பெண்ணோ- வாழ்க்கையென்பதை மூன்றுவிதமாகச் சொல்லலாம். திருமணமாகி, அந்த துக்க- சுகங்களிலேயே உழன்று மடிவது. பிறந்தவர் யாவரும் ஏதோ ஒருநாள் மடியவேண்டியதே. அடுத்தது, இல்லற வாழ்விலிருந்தாலும் அதனில் பண்புடன் நடந்து பகவத் பக்தியில் ஈடுபடுவது. அதாவது ஆன்மிகத்திலும் அவ்வப்போது பற்றுதல் உண்டு. அவரவர் இஷ்ட தெய்வ வழிபாட்டில் முடிந்த அளவாவது ஈடுபடுவது! மூன்றாவது கிரஹஸ்தாஸ்ரமத்தில் (இல்லறம்) புகாமல், வானப்பிரஸ்தனா கவோ, சந்நியாசி யாகவோ ஆகி, ஆழ்ந்த பக்தி, விவேக வைராக்கியத்துடன் செயல்படுவது.

இந்த மூன்றாவது வழியிலும், "ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹரிதாய ச' என்று, தான் ஞானவழியில் ஆழ்ந்தாலும், "மானவஸேவையே மாதவ ஸேவை' என்று சமூக நலன்களுக்குக்காகப் பாடுபாடுவதும் மிகச்சிறந்ததே. ஆண்கள் வலிமை மிகுந்தவர்கள் என்பதால் இவற்றைக் கையாள்வது சிரமமில்லை. ஆனால் பெண்கள் சற்று பலவீனமானவர்கள். எங்குவேண்டுமானாலும் திரிவதும் உறங்குவதும் சாத்தியமில்லை. அவ்வாறு நடப்பவர்களும் உளரே; சிலரே! அத்த கைய பெண்மணிகளுள் ஒருவரே கௌரிமா!'

kannan

Advertisment

பிறப்பு

அம்பாளுக்கு "கௌரி' என்று பெயர். அதாவது தங்கநிறம் உடையவள். "என் தங்கமே' என்று குழந்தையைக் கூப்பிடுகிறோம் என்றால், நிறத் தைக் குறித்தல்ல; அன்பின் ஆழத்தைக் குறித்தது.

பார்வதிசரண் சட்டபோத்யாய- கிரிபாலாதேவி ஆகிய ஆன்மிகத்தில் ஆழ்ந்த தம்பதியருக்கு. ஏழு குழந்தைகள் பிறந்தன. அவர்களுள் நான்காவதாக 1857-ல் பிறந்த பெண் குழந்தையின் பெயர் ம்ருதானி. ருத்ராணி என்றும் கூறுவர்.

Advertisment

அவள் சந்நியாசம் ஏற்றபோது சூட்டப்பட்ட பெயர் கௌரி பூரி. ஸ்ரீ ராமகிருஷ்ணர் தொடர்பேற்பட்டபோது கௌர்தாஸி, கௌரிமா என்று அழைக்கப்பட்டார்.

கௌராங்கரின் (ராதா- கிருஷ்ணர் ஒன்றிய அவதாரம்) பக்தை என்பதால் பெயர் அவ்வாறாயிற்று!

இவரது தாயார் கிரிபாலாதேவி பக்தை. கவிகள், துதிகள், பாடல்கள் புனைபவர். "நாமா ஸாரா', "வைராக்ய ஸங்கீத மாலா' என்றெல்லாம் பதிப்பித்தனராம். தாயான கிரிபாலாவுக்குத் தன் தந்தையின் சொத்துகளும் வந்துசேர, பார்வதிசரண் நல்ல உயர்ந்த உத்தியோகம் பார்க்க, வசதியுடன், மகிழ்வுடன், ஆன்மிக நாட்டத்துடன் சாந்தமாக கொல்கத்தாவில் வாழ்ந்தனர்.

ருத்ராணி ஒரு அதிசயப் பிறவிபோலே திகழ்ந்தாள். சிறுவயதிலேயே கைரேகை பார்த்த ஒருவர், "இவள் சந்நியாசினியாவாள்' என்றாராம். சிறு வயதின் தாய்- தந்தை சொல்லிக்கொடுக்கும் துதிகளை ஆர்வ முடன் சொல்வாள். வீட்டிலுள்ள தெய்வீ கப் படங்கள், விக்ரகங் களை நன்கு அலங் கரிப்பாள்.

வங்காள பிராமணர்கள் மீன் (ஜல புஷ்பம் என்பார்கள்) சாப்பிடுவதுண்டு. ஆனால் அவள் உண்ணமாட்டாள். சைவ உணவே உண்பாள். (அசைவ உணவு உண்டால் நம் மனம் மிருகத்தன்மை பெறும் என்பர்.)

பெயரில் தங்கம் இருந்தாலும் அவள் தங்க நகைகளை விரும்புவில்லை. அதாவது அவளது இளகிய மனமே. "சந்நியாச மனமாக' இருந்தது எனலாம். ஆனால் திட, வைராக்கிய மானது. அவர்களது உறவினர் சண்டி என்பவர் பக்திக் கதைகள், திருத்தலங்கள் பற்றிக் கூறுவதில் அதிக ஆசையுற்றார். அத்தகைய தலங்களை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆர்வமும் துளிர்விட்டது.

கிறிஸ்துவப் பள்ளியில் சேர்ந்தனர்.

அவர்களின் கல்விமுறைகள் பிடிக்காததால், பின்பு இந்துப்பள்ளியில் படித்தாள். சமஸ்கிருதமும் படித்து, பகவத்கீதை, இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், துர்கா சப்தசதி போன்றவற்றிலும் அவ்வப்போது ஆழ்ந்தாள்.

ஆன்மிக தாகம்

ஒன்பது வயதிருக்கும். ஒருநாள் தன் தோழிகளுடன் விளையாடிக்கொண்டி ருந்தாள். அச்சமயம் அவ்வழியே ஒரு சாது சென்றுகொண்டிருந்தார். அவள் அவரிடம் சென்றாள். ""விளையாடாமல் ஏன் என்னிடம் வந்தாய்?'' என அவர் வினவ, ""உங்களைக் கண்டதும் அருகில் வந்து காணத்தோன்றியது! வந்தேன்'' என்றாள். அவர் அவளது தலையைத் தொட்டு, ""கிருஷ்ண பக்தி வளரட்டும்'' என்று ஆசீர்வதித்தார்.

ஒருநாள் அடுத்த வீட்டு வயதான பெண்மணி, ""நிம்டா என்ற இடத்தில் (அவள் வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தூரம்) ஒரு மடம் உள்ளது.

அங்கொரு சுவாமிகள் இருக்கிறார்'' என்று சிறுமியிடம் கூற, பெற்றோருக்குக் கூறாது, விசாரித்துக்கொண்டு நடந்தே சென்று மடத்தை அடைந்தாள்.

அந்த மடத்திலிருந்த சாது, அவளை இரவு தங்கவைத்து, காலையில் கங்கையில் நீராடியபின் அவளுக்கு கிருஷ்ண மந்திரம் உபதேசித்தார். அன்று ராஸலீலை நடந்த புண்ணிய தினம்.

வீட்டில் இவளைக் காணாது தேடியவர்கள், அடுத்த வீட்டுப் பெண்மணி கூறியது கேட்டு நிம்டா ஆசிரமம் போயிருப் பாளோ என்று... அவளது சகோதரர் வந்து பார்த்து அழைத்துச் சென்றார்.

அவர்கள் வீட்டிற்கு பிருந்தாவனத்திலிருந்து ஒரு சந்நியாசினி வந்தார். சில நாட்கள் தங்கினார். ருத்ராணி யின் நடவடிக்கைகளை கவனித்தார். அவர் அங்கிருந்து கிளம்பும்போது, தான் அன்புடன் பூஜித்த தாமோதரக் கண்ணன் சாளக்கிராமத் தைத் தந்து, ""கண்ணன் உன்னை விரும்புவதால் கொடுத்தேன். முடிந்த அளவு பூஜை, தியானம் செய்'' என்று சொல்லிச் சென்றார்.

ராஜஸ்தான் மீராபாய்க்கு, ராயிதாஸ் என்பவர் தான்வழிபட்ட ராதாகிருஷ்ண விக்ரகத்தை மீரா விரும்ப, ராதாகிருஷ்ணனும் விரும்ப ஈந்தார். மீரா அந்த கிருஷ்ணனைத் தனது கணவனாகவே நினைத்தாள்.

பாடினாள்; ஆடினாள். (அந்த விக்ரகம் இன்றும் உதய்பூர் அரண்மனை பூஜையறையில் உள்ளது). அதேபோன்று ருத்ராணி யும், அந்த கிருஷ்ணனை தனது கணவன் என்றே பாவித்து வணங்கினாள்.

ருத்ராணிக்கு பத்து வயதானதும் மணம்புரிவிக்க விரும்பினர் பெற்றோர்கள்.

அவளோ, ""நான் மரணமடையாதவ னையே மணப்பேன். என் கணவன் விஷ்ணுவே'' என்றாள். பெற்றோர் சின்னப் பெண்; என்ன செய்வதென வியந்தனர்.

அவளது ஆழ்ந்த மனதை அவர்கள் உணரவில்லை.

ஒருசமயம் ஒருவரனைப் பார்த்துப் பேசி, அவர்கள் பார்வதிசரண் வீட்டிற்குவந்து ருத்ராணி யைப் பார்க்க விரும்பினர்.

அவளோ, விஷயம் தெரிந்ததும், ஒரு அறையில் புகுந்து தாளிட்டுக் கொண்டாள். தாயார் கிரிபாலா, தற்கொலை செய்துகொண்டுவிட்டால் என்ன செய்வதென்று அஞ்சி, ""உன் விருப்பப் படியே இரு; கதைவைத் திற'' என்று சொல்ல, அவள் கதவைத் திறந் தாள். அடுத்த வீட்டுக்கு அவளைப் போகச்சொல்லிவிட்டு வந்திருந்தவர்களை சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தனர்.

புனித யாத்திரைகள்

1875-ல் தனது பதினெட்டாவது வயதில், உறவினர்களுடன் கங்காஸாகருக்கு புனித யாத்திரை சென்றாள். மூன்றாவது நாள், அவர்கள் திரும்பவேண்டிய சமயம், மற்ற யாத்திகர்களுடன் கலந்து மறைந்துவிட்டாள். உறவினர்கள் தேடித்தேடி காணாமுடியால் கொல்கத்தா திரும்பினர். கிரிபாலா மிகவும் துயரமடைந்தாள். அங்கு ருத்ராணி வேறு யாத்திரிகர்களுடன் இமாலயப் பிரதேசங்களுக்கு யாத்திரை செய்தாள். பிரம்மச்சாரிணிபோல் உடையணிந்தாள். கூந்தலையும் சிறிதாக்கினாள். ஹரித்வார், ரிஷிகேஷ் சென்று கங்கையில் நீராடினாள்.

பலவித சந்நியாசிகள் வாழும் மடங்கள் உள்ள தலங்களாயிற்றே! பின் தேவப்ரயாக், ருத்ரப்ரயாக், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற தலங்களை தரிசித்து, ஹரித்வார் வந்துசேர்ந்தாள். தங்குவது மடமோ, மர நிழலோ... உண்ண உணவு பிச்சை எடுத்தே! எவ்வளவு மனோதைரியம், விவேகம், வைராக்கியம் இருந்தால் 18-20 வயதுப் பெண் அவ்வாறு இருப்பாள் என்பதை நாம் உணரவேண்டும். பின் யமுனோத்ரி, கங்கோத்ரி, ஜ்வாலாமுகி, அமர்நாத்தும் தரிசித்தாள். யாதும் நடந்தே! ஒரு பையில் மாற்றுடை, தினசரி தேவைப்படும் பொருட்கள், காளி, கிருஷ்ண சைதன்யர் படம், சாளக்கிராம மூர்த்தி- அவ்வளவே!

மூன்று வருடங்கள் இவ்வாறு தரிசித்து, கண்ணன்- கோபிகைகள் விளையாடிய பிருந்தாவனம் வந்தாள். அங்கு யாவருக்கும் ராதா- கிருஷ்ணர் நாமம் மட்டுமே! மதுராவில் வசித்த அவளது மாமா அவளை அடையாளம் கண்டுகொண்டு, தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவளது பெற்றோர்களுக்குத் தகவல் அனுப்பினார்.

இதனை சூசகமாக அறிந்த அவள், எவருக்கும் கூறாமல் ஜெயப்பூருக்குச் சென்றுவிட்டாள். அங்கு புஷ்கர் தரிசித்து, துவாரகா முதலிய தலங்களை தரிசித்தாள். ஸுதாமாபுரியில் காலரா பரவ, பலர் மடிய, கிராமத் தலைவர்களுடன் கலந்து பேசி, அதற்கானவர்களை வரவழைத்து சுகாதாரம், சிகிச்சை செய்யவைத்து, தானும் பணிகள் செய்தாள். அந்த நிலை குறைந்தது. இதன்மூலம் அவளது சமூகப்பணி நாட்டங் களையும் உணரலாம்!

துவாரகாவில் தியானத்தில் இருந்தபோது, கண்ணன் ஒரு சிறுவனாக தரிசனம் தந்து மறைந்தான். எனவே அவள் மீண்டும் பிருந்தாவனம் வந்துசேர்ந்தாள். அங்கு மீண்டும் அவளது மாமா கண்டு, தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அவளது தாயாரின் ஆழ்ந்த கவலைதோய்ந்த கடிதத்தைக் காண்பித்தார். அதைக்கண்ட அவள் கொல்கத்தாவிலிருந்த தன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். குடும்பத்தினரின் ஆனந் தத்திற்கு எல்லையுண்டோ! சிலமாதங்கள் அங்கு தங்கியிருந்தாள்.

ஒரு நாள் அவள் தாயிடம் சொல்லிவிட்டு, பூரி ஜகந்நாதரை சென்று தரிசித்தாள். மேலும், சாக்ஷி கோபால், அலால்நாத், புவனேஸ்வர், சில மடங்கள், சந்நியாசிகளை தரிசித்தாள். ஒடிஸ்ஸாவில் ராதாமோஹன் என்ற ஒரு பணக்கார கிருஷ்ண பக்தரையும் பார்த்தாள். அவர் கூற, அவரது மகன் பலராம் போஸ் என்பவரையும் பார்த்தாள்.

ராமகிருஷ்ண தரிசனம்

பலராம் போஸ் அவளது ஆன்மிக நிலையை உணர்ந்து, ""நீ அவசியம் ராம கிருஷ்ண பரமஹம்சரை தரிசிக்கவேண்டும்'' என்றார். அவளோ, ""நான் பல சாது சந்நியாசிகளை தரிசித்துள்ளேன். அவர் என்னை ஈர்க்கட்டும்'' என்றாள். ஆம்; காந்தம் இருப்புத்துகள்களை ஈர்க்குமே!

மறுநாள் அவள் வழக்கம்போல் நீராடி விட்டு தாமோதர சாளக்கிராமத்திற்கு அபிஷேகம் செய்தாள். அப்போது அவள் அங்கு இரு பாதங்களை மட்டுமே கண்டாள். எதுவும் புரியவில்லை. தியானத்தில் ஆழ்ந்து தன்னை மறந்தாள். மறுநாள் மதியம்வரை அந்த நிலை!

பலராம் போஸ் வந்தார். அவர், ""ஸ்ரீராமகிருஷ்ணரை தரிசிக்கப் போகலாம்'' என்றார். அவள் மறுப்பு கூறாததால், ஒரு வண்டி ஏற்பாடுசெய்து, தன் மனைவி மற்றும் ருத்ராணியுடன் தட்சிணேஸ்வரம் வந்தார். அப்போது ராமகிருஷ்ணர் பாடிக்கொண்டிருந்தார். ருத்ராணி ராமகிருஷ்ணரின் பாதம் பணிந்தாள். நேற்று தன் சாளக்கிராமத்தில் பார்த்த அதே பாதங்கள்! மயிர்கூச்செறிந்தாள்.

ராமகிருஷ்ணரோ, ""மீண்டும் வா'' என்றார்.

மறுநாள் சென்று ராமகிருஷ்ணரை தரிசித்து, தன் சாளக்கிராமத்தைக் காண்பித்து, அதில் அவரது பாத தரிசனம் கண்டதைக் கூறினாள். அவரோ, ""நீ என்னை முன்பே பார்த்திருந்தால், அவ்வளவு சிரமப்பட்டு பல தலங்களுக்குச் சென்றிருக்க மாட்டாய்'' என்றார்.

பின்னர் அவர் அவளை அழைத்துக் கொண்டு நஹபாத் சென்று சாரதா தேவியிடம், ""உனக்குத் துணைவேண்டும் என்றாயே, இதோ. இவள் பிருந்தாவனத்தில் கண்ணனோடு இருந்த ஒரு கோபிகையின் அவதாரமே'' என்றார்.

தட்சிணேஸ்வரத்தில் சாரதா அம்மையார் தங்கும்போதெல்லாம் அங்கேயே தங்கினாள். அல்லது பலராம் வீட்டிலும் தங்குவாள். பாடுவாள். பரமஹம்சருக்கு உணவும் சமைத்துப் பரிமாறுவாள்.

அவள் ராமகிருஷ்ணரை ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராகவே தரிசனம் செய்தாள். ஆக, அவள் பெயரும் கௌர்தாஸி! கௌரிமா, ராமகிருஷ்ணர்- சாரதா அம்மையாரைத் தன் பெற்றோர் போன்றே நினைத்தாள்.

ஒருமுறை ராமகிருஷ்ணர் அவளிடம், ""பெண்களின் வாழ்க்கை முன்னேறவில்லை. எனவே நீ அவர்கள் முன்னேற்றத்துக்கு உழைக்கவேண்டும். உனது ஆன்மிக வழிபாட்டு முறைகள், ஸத்விஷயங்களை அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்'' என்றார். அவளோ, ""இந்த நகர வாழ்க்கை பிடித்தமில்லை. தாங்கள் சில பெண்களைத் தந்தால், இமாலயம்போய் அவர்களை ஆன்மிகத்தில் ஆழ்த்துவேன்'' என்றாள். அவரோ, ""இல்லை, நீ இங்குதான் செய்யவேண்டும்'' என்றார். ராமகிருஷ்ணருடனான அவளது தொடர்பு சுமார் ஐந்தாறு வருடங்களே இருந்திருக்கும்.

மீண்டும் தல தரிசனங்கள்

கௌரிமா தனியாக தலதரிசனம் செய்து ஆன்மிகத்தில் ஆழ வேண்டுமென்று பிருந்தாவனம் சென்றாள். பறவை ஓரிடத்தில் இருக்குமா! ஆகஸ்ட் 1886-ல், ராமகிருஷ்ணர் கூறினாராம்- "கௌரி, என்னை மீண்டும் தரிசிக்க மாட்டாய்' என்று! 16-8-1886-ல் பரமஹம்ஸர் சமாதியடைந்ôர்.

கௌரிமா மீண்டும், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வந்து கொல்கத்தாவில் பலராம் குடும்பத்தினருடன் தங்கினாள். சிலநாட்கள் காலராவில் அவஸ்தைப்பட்டாள். பின்னர் உடல் நலமாக, மீண்டும் தென்னிந்திய யாத்திரை- திருப்பதி, காஞ்சி, மதுரை, இராமேஸ்வரம், கன்னியாகுமரி தரிசனம் செய்து கொல்கத்தா திரும்பினாள்.

சாரதேஸ்வரி ஆசிரமம்

ராமகிருஷ்ணர் முன்பே கௌரிமா விடம், பெண்கள் முன்னேற்றத்திற்கு நீ பாடுபடவேண்டும். அவர்கள் கல்வி, ஆன்மிகம், தேகநலன் எல்லாவற்றிலும் முன்னேறவேண்டும்' என்று வற்புறித்தி யுள்ளார் என்பதை, சாரதாதேவியார் பிருந்தா வனத்தில் பார்த்தபோது நினைவூட்டினார். விவேகானந்தர் 1894-ல் சிகாகோ சர்வமத சபைக்குச் சென்று திரும்பியபின், பெண்கள் முன்னேற்றத்தை முன்னெடுக்க எண்ணி, ""கௌரிமா எங்கே? அவர்போல் தன்னலமற்றவர்கள் உழைக்கத் தேவை'' என்றார்.

கௌரிமாவும் தனது இருபது வருடத் தல யாத்திரைகளில் பெண்களின் நிலையை அறிந்ததால், பாரக்பூரில் கங்கை நதிக்கரையில் 1894-ல் சாரதேஸ்வரி ஆசிரமம் எனத் தொடங்கினார். குடிசைகள்தான் ஆசிரமம். மரத்தடியில் கல்வி. 25 பெண்டிர் சேர்ந்து, படிப்பு, ஆன்மிகம், உடல்நலம் ஆகியவற்றில் முன்னேறினர். பின்பு 1911-ல் சாரதா மடம் அருகே இடம் மாறினார். அங்கு 50 பெண்கள் ஆசிரமத்தில் சேர்ந்தனர்; 300 பெண்கள் கல்வி பெற்றனர்.

கொல்கத்தாவில் மஹாத்மா காந்தி, சித்ரஞ்சன் தாஸ் ஆகியோர் கௌரிமாவைச் சந்தித்து, அவரது பெண்கள் முன்னேற்றத் துக்கான உழைப்பைப் புகழ்ந்தனர்.

மறைவு

ஆசிரமம் நடந்தாலும், கௌரிமாவின் தல தரிசனங்கள் நிற்கவில்லை. பேளூர் மடம் வர, ஸ்வாமி ப்ரம்மானந்தர், மற்ற சந்நியாசிகள் வரவேற்றனர். ""இவ்வாறு தனியாக சந்நியாசிபோல் தலம் தலமாகச் சென்றால் கயவர்கள் தொந்தரவு இல்லையா?'' என்று கேட்டனர். அவரோ, ""பயமானது உடலுக்குத்தானே? கண்ணன் என்னுள் உறையும்போது பயம் ஏன்! கயவர்களிடம் கடுமையாகவும், பக்தர்கள், சாதுக்களுடன் அன்புடனும் பழகினேன்'' என்றார்.

வயதும் ஆக, உடல்நலமும் குறைந்தது.

தனது ஆப்த சாளக்கிராமத்தைத் தனது தோழி துர்க்காதேவியிடம் அளித்தார். 28-2-1938 சிவராத்திரியன்று தியானத்தில் ஆழ்ந்தார். 1-3-1938-ல், 81 வயதில் பூதவுடலை நீத்தார். காசிபூர் தோட்டத்தில், அவரது உடலை அக்னி பகவான் ஏற்றார். கண்ணபக வானில் கௌரிமாவின் ஆத்மா கலந்தது!