யானைத் தலையைக் கொண்டிருந்தான் கஜன் என்ற மன்னன். இவன், சிவபெருமான் தன் வயிற்றினுள் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டுமென்று ஈசனிடம் வரம்பெற்றான்.
இதையறிந்து கலங்கிய பார்வதி தேவி தன் அண்ணன் விஷ்ணுவிடம் முறையிட்டாள். உடனே, விஷ்ணு, நந்தி இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள்போல் வேடம் பூண்டு, கஜாசுரனின் அரண்மனைக்குள் சென்றனர். அங்கு நந்தியின் நடனத்தின்பால் ஈர்க்கப் பெற்றான் கஜாசுரன். இதனால், நந்தி விரும்பு வதைத் தருவதாகக் கூறினான்.
அதற்கு நந்தி சிவபெருமானை விடுவிக்க வேண்டினார். அதை ஏற்றுக் கொண்ட கஜாசுரன், ஈசனிடம் தன் நினைவு பிரபஞ்சம் முழுவதும் அழியாமல் நிலைத்தி ருக்க வேண்டுமென்று கோரினான்.
அதற்கு, செவிமடுத்த ஈசன், கஜா சுரனை பிறப்பு, இறப்பு அற்றவனாக்கினார். அவனுடைய யானைத் தோலை அணிந்து கயிலாயம் விரைந்தார்.
பதி வருவதையறிந்து வரவேற்க ஆயத்தமானாள் பார்வதி.
அப்போது குளிக்கச் செல்லும் முன் மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனை உருவாக்கி அவனுக்கு உயிர்கொடுத்து, தான் குளித்துவிட்டு வரும்வரை யாரையும் உள்ளே அனுமதிக்கவேண்டாம் என்று கூறிச்சென்றாள். அச்சமயம் அங்கு ஈசனார் வர, அவரைத் தடுத்தான் சிறுவன். இதனால் கோபம் கொண்ட ஈசன் திரிசூலத்தால் அவன் தலையைக் கொய்தார். அப்போது அங்குவந்த பார்வதி நடந்ததையறிந்து, பிரபஞ்சத்தை அழிக்க முயன்றாள். அவளைத் தடுத்தார் பிரம்மன். உடனே, பிரம்மனிடம் சிறுவனை உயிர்ப் பிக்க வேண்டுமென்றும், அவனையே முழுமுதற் கடவுளாக வழிபட வேண்டுமென்றும் கூறினாள்.
கஜாசுரனின் ஆசையை நிறைவேற்ற இதுதான் தக்கசமயம் என்றெண்ணிய ஈசன், இறந்து விட்டிருந்த கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்துவர பூத கணங்களுக்கு உத்தரவிட்டார். பூதகணங்கள் அதன்படியே செய்து யானைத் தலையைக் கொண்டுவந்து பிரம்மனிடம் தந்தன. பிரம்மா அதனை சிறுவனின் உடலில் பொருத்தினார். பின்பு, ஈசன் அச்சிறுவனுக்கு உயிர்கொடுத்து கணங்களுக்கு அதிபதியாக்கினார். அவரே கணபதி, விநாயகர்.
யானையின் பிளிறல் உலகில் மற்ற ஒலிகளைக்காட்டிலும் ஓங்காரப் பிரணவ ஒலியை நன்கு ஒலிப்பதால், விநாயகருக்கு யானை முகம் அமைக்கப்பட்டதாக ஆறுமுக நாவலர் கூறுவார்.
இந்திரன் சபையிலிருந்த வாமதேவ முனிவரின் காலை, அங்கிருந்த க்ரோஞ்சனா என்ற உபதேவதை மிதித்துவிட்டாள். உடனே, முனிவரின் சாபத்தால் எலியாக மாறி பரசர மகரிஷி ஆசிரமத்தில் விழுந்தாள். சாபம் போக்க வேண்டினாள் உபதேவதை. இதைத் தொடர்ந்து, அங்குவந்த விநாயகப் பெருமான் எலியாக இருந்த க்ரோஞ்சனா வைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அனைவரும் வழிபடும்படிச் செய்தார். எலி பேராசை மிகுந்தது. ஆசையை அடக்கினால் ஆளுமை செய்யலாம் என்பதே எலிமீது விநாயகர் அமர்ந்திருக்கும் தத்துவமாக உள்ளது.
ஆடிப்பெருக்கு அன்று ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள மணல் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். இதனால், ஆற்றில் நீர் தேங்காது. நிலத்தடி நீர் குறையும். இக்குறையை சரிசெய்யவே களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை ஆற்று நீரில் கரைக்கும் வழக்கம் வந்தது. களிமண் உள்ள இடத்தில் நீர் பூமியினுள் இறங்கிவிடும். எனவேதான், விநாயகர் சதுர்த்தியன்று களிமண் சிலையைச் செய்து வழிபட்டுப் பின்னர் ஆற்றில் கரைக்கிறார் கள். ஈரக்களிமண் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். உலர்ந்த களிமண் அதே இடத்தில் படிந்துவிடும். இதனால் ஆற்றில் நீர் தேங்கி பூமியினுள் இறங்கி நிலத்தடி நீர் உயர்ந்துவிடும்.
ஒருமுறை விநாயகரைப் பூஜித்துக் கொண்டிருந்தார் ஔவையார். அப்போது அங்கு வந்த விநாயகர் தன்னைப் பற்றி பாடக் கூறினார். உடனே, சீதக்களபம் எனத் தொடங்கும் அகவலைப் பாடினார். சட்டென தம் தந்தத்தால் ஔவையாரைத் தூக்கி கயிலாயத்துக்கு அழைத்துச் சென்றார் விநாயகர்.
தஞ்சாவூர், பேராவூரணி அருகே ஏந்தல் பகுதியில் குளக்கரையில் நீலகண்ட விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள குளத்தில் நீராடி இந்த விநாயகரை வழிபட்டால் நீரிழிவு நீங்கும் என்பது ஐதீகம்.
தன் இல்லத்துக்கு வந்த விநாயகரை மோதகம் கொடுத்து வரவேற்றாராம் அருந்ததி. இதனால் மகிழ்ந்த விநாயகர் அருந்ததி தம்பதிக்கு நல்லாசிகள் வழங்கி னாராம்.
திருநெல்வேலி அருகே மதுரை செல்லும் வழியில் மணிமூர்த்தீஸ்வரம் எனும் பகுதியில் விநாயகர் மூலவராக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். ஆசியாவிலேயே விநாயகருக்கென்று விமானம், இராஜகோ புரத்துடன் உள்ள கோவில் இது ஒன்றே என்கிறார்கள். மேலும், இங்கு ஷோடச விநாயகரும் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஷோடச விநாயகர் தனிக் கோவிலும் உள்ளது.
சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், கடம்பத்தூரை அடுத்துள்ள திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவிலினுள்ளே விநாயகர் சபை உள்ளது. இந்த விநாயக சபையை வழிபட்டபிறகே வேங்கடாசலபதி தம் திருமணத்துக்காக குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்கும் வழிபிறந்த்தாம்.
ஜப்பானில் விநாயக்ஷா எனும் பெயரில் புத்த மதக் கடவுளாக விநாயகர் வழிபடப் படுகிறார்.
மியான்மரில் புத்த மடங்களில் விநாயகர் சிலை உள்ளது.
இந்தோனேஷிய நாட்டின் பணமான ரூபியா தாளில் விநாயகரின் உருவம் அச்சிடப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க நிறைந்துள்ள ஆதி நாயகனாம் விநாயகனை வணங்கி அருள் பெறுவோம்.