மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருதல் இயற்கையே!
இதில் இன்பம் வரும்போது மகிழ்ச்சி யடையும் அதே மனம் துன்பம் ஏற்படும் போது, "கடவுளுக்கு கண் இல்லையா?', "எல்லாம் என் தலைவிதி', "என்ன பாவம் செய்தேனோ?' என பலவாறு புலம்புவ துண்டு. தர்மசாஸ்திர நியதிப்படி நாம் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியம் செய்தால் அதற்குத் தக்க பலனுண்டு. அதே போல் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கும் தக்க பலனுண்டு. கர்ம வினைக்கேற்ப பலன் நிச்சயம் உண்டு. இந்த நியதியானது அரசன்முதல் ஆண்டிவரை அனவைருக்கும் பொருந்தும்.
"நானிலத்தோர் தந்தாய்' (பூமியிலுள்ள எல்லாருக்கும் தந்தைபோன்று இருப்ப வனே) என "திருவடிக்கட்டு' படலத்தில் இராமன் தன் தந்தையான தசரதன் (தயரதன்) பற்றி பெருமிதத்துடன் கூறியுள்ளார். அப்பேற்பட்ட தசரத மகாசக்கரவர்த்தி இளைஞனாக இருந்தபோது செய்த பாவச்செயலுக்காக பின்னாளில் அயோத்தி யின் அரசனாக இருந்தபோது அந்த கர்ம வினையின் பலனை அனுபவிக்க வேண்டிய தாயிற்று. "புத்திர சோகம்' என்னும் கொடுமையை அனுபவித்து, அந்தத் துயரம் தாங்காமல் இறந்தார் என்பதை இராமாயணத்தின் அயோத்தியா காண்டம் மூலம் அறியலாம். ஆக விதியென்பது எல்லாருக்கும் பொதுவானது.
துவாபரயுகத்தில் இக்ஷவாகு குலத்தில் பிறந்த தசரத மகாசக்கரவர்த்தி, பிள்ளை வரம் வேண்டி ரிஷ்யசிருங்க மகரிஷி (கலைக் கோட்டு முனிவர்) மூலம் அசுவமேத யாகம் நடத்தி, அதன் பயனாக பிள்ளைகளை அடைந்தார். முதல் மகனான இராமன் பிறந்ததைப் பற்றி வால்மீகி இராமாயணத் தில்-
"ததோ யக்ஞே ஸமாப்தே து
ருதூநாம் ஷட் ஸமத்யயு:/
ததஸ்ச த்வாதஸே மாஸே
சைத்ரே நாவமிகே திதௌ//
நக்ஷத்ரேதி திதைவத்யே
ஸவோச்சஸம்ஸ்தேஷு பஞ்சஸு/
க்ரஹேஷு கர்கடே லக்நே
வாக்பதாவிந்துநா ஸஹ//
ப்ரோத்யமாநே ஜகந்நாதம்
ஸர்வலோக நமஸ்க்ருதம்/
கௌஸல்யாஜநயத் ராமம்
ஸர்வலக்ஷண ஸம்யுதம்//'
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பங்குனி மாதம், நவமி திதி, புனர்வசு நட்சத்திரம்கூடிய நல்லநாளில், ஐந்து கோள்களும் உச்சநிலையில் இருக்கும் நல்ல நேரத்தில், கர்க்கடக லக்னத்தில் தசரத மகா சக்கரவர்த்திக்கும், கௌசல்யா தேவிக்கும் (கோசலை) மகனாய்ப் பிறந்தார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இராமபிரான் மகா விஷ்ணுவின் அவதாரமாகத் திகழ்வதால் திருப்பதி திருமலையில் பெருமாளுக்கு தினமும் அதிகாலை மூன்று மணிக்குச் சொல்லப்படும் "ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்' என்னும் திருப்பள்ளியெழுச்சியின் முதல் வரியிலேயே-
"கௌசல்யா ஸுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே'
எனச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது "கௌசல்யையின் திருமகனாக வந்துதித்த ஸ்ரீராமனே எழுந்தருள்வாய்' எனத் தெரிவிக் கிறது. இப்படி தவமிருந்து பெற்ற அவதார புருஷனான இராமனை, தசரத மகாசக்கரவர்த்தி கைகேயிக் குத் தந்த வரத்தின் பலனாகப் பிரிய நேர்ந்தது. பட்டாபிஷேகம் நடந்து, அயோத்தியின் அரசனாக இருக்க வேண்டிய தருணத்தில், மரவுரி தரித்து பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இராமன் காட்டிற்குச் சென்ற ஆறாம் நாள் இரவு... துயரம் தாங்க முடியாத தசரதர் தன் மனைவி கௌசல்யை யிடம் புலம்பினார். இந்த புத்திர சோகம் ஏன் தனக்கு ஏற்பட்டது என்பதை யோசித்தபோது, இளம்வயதில் தான்செய்த தவறான செயலால் ஒரு வாலிபத் தவசியின் பார்வையற்ற தந்தையின் சாபம் நினைவுக்கு வந்தது. அதை கௌசல்யை யிடம் விவரித்தார்.
""நான் இளைஞனாக இருந்தபோது வேட்டையாடு வதில் விருப்பமுள்ளவனாக இருந்தேன். அதிலும் குறிப்பாக இரவில் மறைந்திருந்து, மிருகங்களின் சப்தம்வரும் திசையை நோக்கி கூரிய அம்பால் குறிவைத்துக் கொல் லும் "சப்த தேவனம்' என்னும் அம்பு வித்தையில் அதிகம் பயிற்சி பெற்றிருந்தேன். ஒருநாள் மிருகங்களை வேட்டையாட சரயுநதியின் கரையில் இருக்கும் காட்டிற்கு மழைக்கால இரவு நேரத்தில் சென்றேன். நீண்ட நேரம் காட்டில் காத்திருந்த போது நதியில் ஏதோ ஒரு காட்டெருமையோ, யானையோ நீர் அருந்துவது போன்ற சப்தம்கேட்டு அந்த திசையை நோக்கி குறிவைத்து அம்பைச் செலுத்தினேன். அடுத்த வினாடி "ஐயோ!' என்கிற மனித அபயக் குரல் கேட்டது. தவறான கணிப் பில் ஒரு மனிதனைக் கொன்று விட்டோமே எனப் பதறி அந்த இடத்திற்குச் சென்றேன். குறுகிய வாயையுடைய குடத்தில் நீரை எடுக்கும்போது ஏற்படும் சப்தம் எனக்கு ஒரு யானை நீரருந்தும்பொழுது ஏற்படும் சப்தமாகத் தெரிந்ததால், அறியாமல் அவசரத் தில் ஒரு வாலிப மனிதனைக் கொன்றுவிட்டேன். ஒரு பாவமும், தவறும் செய்யாத அந்த வாலிபன் பெயர் சிரவணன். (சிரவணகுமார்). தவ வாழ்க்கையு டன் பார்வை யற்ற தன் வயதான பெற்றோரை, தராசு போன்று கூடையில் இருபுறம் உட்காரவைத்து தோளில் சுமந்து வருபவன் என்பதை அறிந்தேன். பெற் றோர் தாகமாக இருக்கிறது எனக் கூறியதால் தண்ணீர் எடுக்கவந்த செய்தி யைத் தெரிவித்து விட்டு, அவர்கள் தாகமாக இருப்ப தால் உடனே தண்ணீர்கொண்டு தருமாறு கூறினான். தவறான கணிப்பில் அம்பெய்ததற்கு அவனிடம் மன்னிப்புக் கேட்டேன்.
இறக்கும் தறுவாயிலும் தான் இறப்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல், இனி தன் பெற்றோரை யார் பாதுகாப்பார்கள் என்பதில் அந்த வாலிப தவசிக்கு அக்கறை இருந்ததைக் கண்டேன். அவனுடைய பெற்றோரை நாள் கவனமாகப் பார்த்துக் கொள்வேன் எனச் சொல்லி அவனின் தலையைக் கண்ணீருடன் தடவிக்கொடுத்தேன்.
ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சிறிது நேரத்தில் உயிர் பிரிந்துவிட்டது. அந்த வாலிப தவசி சொன்னதுபோல் அவனது பெற்றோர் கள் இருந்த இடத்தைக் கலக்கத்துடன் அடைந்தேன். அந்த முதியவரின் பெயர் சலபோசனன். இறைவழிபாட்டையே முக்கியப் பணியாகக்கொண்டு பல இடங் களுக்குச் சென்று வருபவர்கள். தண்ணீர் எடுக்கச்சென்ற தங்களின் மகன் நீண்டநேரமாக வரவில்லையென்கிற தவிப்பு அவர்களிடம் இருந்ததை அறியமுடிந்தது. புதிய நபர் தண்ணீர் கொண்டுவந்ததால் யார் என வினவினார்கள்.
(இதைக் கம்பன்-
"ஐயா யானோ ரரசன்
அயோத்தி நகரத் துள்ளேன்
மையார் களபந் துருவி
மறைந்தே வதிந்தே னிருள்வாய்ப்
பொய்யா வாய்மைப் புதல்வன்
புனன்மொ ண்டிடுமோ தையின்மேல்
கையார் கணைசென் றதலாற்
கண்ணிற் றெரியக் காணேன்' (1774)
என்று விளக்குகிறார்.)
என்னை யார் என்பதை அவர்களிடம் சொல்லிவிட்டு, அறியாமையால் ஏற்பட்ட தவறை அவர்களிடம் கண்ணீர் மல்க விவரித் தேன். கேட்டவுடன் இருவரும் தரையில் புரண்டு அழுதனர்.
தங்களுக்கு கண் போன்று இருந்த ஒரே மகனும் இறந்துவிட்டதால் எப்படி இனி உயிர்வாழ்வதென்று புலம்பினார்கள். மீதியிருக்கும் தங்களின் வாழ்க்கையை எப்படிக் கழிப்பது? யார் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்னும் கவலை இருவரையும் வாட்டியது. அயோத்தியின் அரசனான நான் அவர்களிடம், "எதற்கும் கவலைப்பட வேண்டாம். தங்களின் மகன் எப்படிப் பார்த்துக்கொள்வானோ அப்படி நான் தங்களுக்குப் பணிவிடை செய்வேன்' என உறுதியளித்தேன். இருப்பினும் அவர்கள் இருவரும் சமாதானமடையாமல் அழுதனர். தவயோகியான சலபோசனன் வருத்தத்தின் காரணமாக என்மீது கோபப்பட்டார். இறந்த மகனின் இடத்திற்கு அழைத்துப்போகுமாறு கூறவே, நான் கைத்தாங்கலாக அவர்களை அழைத்துச்சென்றேன். உயிரற்ற மகனின் உடலைத் தடவிப்பார்த்து மேலும் புலம்பினார் கள்.
சலபோசனன் மகன் இறந்த சோகத்தில் என்னை நோக்கி, "கண்ணின் கருமணி போன்ற மகனை உன்னால் இழந்து தவிக்கிறோம். இதேபோன்று நீயும் ஒருநாள் உன் மகனைப் பிரிந்து, அந்த வருத்தத்தில் இறப்பாய்!' என சாபம் கொடுத்தார். தன் மகனுக்கு ஈமச்சடங்கு செய்வதற்காக ஏற்படுத்திய தீயில் இருவரும் என் கண்முன்பே குதித்து தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டனர். நான் எவ்வளவு தடுத்தும் அவர்கள் அதை ஏற்கவில்லை. என்னால் ஒரு உயிர் தேவையில்லாமல் போயிற்றே என்கிற கவலையும், இதனால் தவயோகி கொடுத்த சாபத்தையும் நினைத்து நினைத்து மனம் வருந்தினேன். அன்று நான்செய்த கர்மவினையின் பயனும், சாபத்தின் கொடுமையும்தான் இன்று இராமனைப் பிரியவேண்டியதாயிற்று'' என முன்பு நடந்த நிகழ்வை கௌசல்யையிடம் தசரதர் கூறினார்.
சிறிது நேரத்தில் சோகம் தாங்காமல் இராமனை இனி எப்பொழுது பார்ப்பேன் எனப் புலம்பியவாறு உயிரைவிட்டார்.
ஊழ்வினையால் ஏற்படும் பாவ- புண்ணியங்களைப் பற்றி திருவள்ளுவர்-
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்' (380)
என்று கூறுகிறார். நல்லது செய்தால் அதற்கேற்ப புண்ணியப் பலனும், தீமை செய்தால் அதற்கேற்ப தண்டனை, பாவம், பழிச்சொல் வாழ்வில் கஷ்டம் போன்ற தீமைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
விதியின் வினையென்பது எல்லாருக்கும் ஒன்றே. அந்த வினையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஆகவே வாழும் நாட்களில் தர்மநெறிக்கு உட்பட்டு, புண்ணிய காரியங் களைச் செய்து நற்கதி அடைய முயற்சிப்போம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-12/rajeshwar-t.jpg)