மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுபவை நரசிம்மர், ராமர், கிருஷ்ண அவதாரங்கள்.
இந்த அவதாரங்களில் நரசிம்மாவ தாரமானது, பக்தன் பிரகலாதனுக்காக ஒரே நொடியில் எடுக்கப்பட்ட அவதாரம் என்னும் சிறப்பைப் பெறுகிறது.
நரசிம்மருக்கென்று புராண, இதிகாசத் தொடர்புடைய திருத்தலங்கள் இந்தியாவில் பல இடங்களில் உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் கரூர் அருகே தேவர்மலை என்ற இடத்தில் அமைந்துள்ள நரசிம்மர் ஆலயம் நான்கு யுகங்களைக் கண்டது என்று வரலாறு கூறுகிறது.
கிருதயுகத்தில் இரண்யனை வதம் செய்த பின்பு நரசிம்மரின் உக்கிரம் சிறிதுகூட குறைய வில்லை. அவரது கோபக்கனல் பூவுலகத்தை மிகவும் பாதித்தது. செழித்து வளமாக இருந்த பூமி கருக ஆரம்பித்தது. இதனால் பூலோகவாசிகள் மிகவும் துன்பப்படுவார்கள் என்பதை தேவர்கள் அறிந்து கவலைப் பட்டனர். நரசிம்மரின் கோபக்கனலைத் தணிக்க மகாலட்சுமியையும், பிரகலாதனையும் வரவழைத்தனர். அவர்களைப் பார்த்த நரசிம்மர் அமைதியாக இருந்தார். என்றாலும் சிவபெருமான் தன் பங்குக்காக சரபராகத் தோன்றி நரசிம்மரை ஆலிங்கனம் செய்து கொண்டார். இவர்களின்மீது கொண்ட அன்பினால், தன் கோபக்கனலைக் குறைத்துக் கொண்டார் நரசிம்மர். இருந்தாலும் அவர் சாந்தமடையாமல் ஒவ்வொரு இடமாகச் சுற்றிவந்தார். அந்த இடங்கள் பிற்காலத்தில் நரசிம்மரின் திருத்தலங்களாகப் போற்றப் பட்டன. அந்தவக
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுபவை நரசிம்மர், ராமர், கிருஷ்ண அவதாரங்கள்.
இந்த அவதாரங்களில் நரசிம்மாவ தாரமானது, பக்தன் பிரகலாதனுக்காக ஒரே நொடியில் எடுக்கப்பட்ட அவதாரம் என்னும் சிறப்பைப் பெறுகிறது.
நரசிம்மருக்கென்று புராண, இதிகாசத் தொடர்புடைய திருத்தலங்கள் இந்தியாவில் பல இடங்களில் உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் கரூர் அருகே தேவர்மலை என்ற இடத்தில் அமைந்துள்ள நரசிம்மர் ஆலயம் நான்கு யுகங்களைக் கண்டது என்று வரலாறு கூறுகிறது.
கிருதயுகத்தில் இரண்யனை வதம் செய்த பின்பு நரசிம்மரின் உக்கிரம் சிறிதுகூட குறைய வில்லை. அவரது கோபக்கனல் பூவுலகத்தை மிகவும் பாதித்தது. செழித்து வளமாக இருந்த பூமி கருக ஆரம்பித்தது. இதனால் பூலோகவாசிகள் மிகவும் துன்பப்படுவார்கள் என்பதை தேவர்கள் அறிந்து கவலைப் பட்டனர். நரசிம்மரின் கோபக்கனலைத் தணிக்க மகாலட்சுமியையும், பிரகலாதனையும் வரவழைத்தனர். அவர்களைப் பார்த்த நரசிம்மர் அமைதியாக இருந்தார். என்றாலும் சிவபெருமான் தன் பங்குக்காக சரபராகத் தோன்றி நரசிம்மரை ஆலிங்கனம் செய்து கொண்டார். இவர்களின்மீது கொண்ட அன்பினால், தன் கோபக்கனலைக் குறைத்துக் கொண்டார் நரசிம்மர். இருந்தாலும் அவர் சாந்தமடையாமல் ஒவ்வொரு இடமாகச் சுற்றிவந்தார். அந்த இடங்கள் பிற்காலத்தில் நரசிம்மரின் திருத்தலங்களாகப் போற்றப் பட்டன. அந்தவகையில் தமிழகத்தில் தேவர் மலையில் ஸ்ரீயோக நரசிம்மராய் எழுந்தருளி யுள்ளார். (மற்ற தலங்கள் சோளிங்கர் மற்றும் ஒத்தக்கடை ஆகும்.)
நரசிம்மரின் ஆறாத கோபக்கனலைத் தணிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் அவரை ஓரிடத்தில் வழிமறித்து அமரச்செய்து சாந்தப்படுத்த முயற்சித்தார்கள். அந்த இடம்தான் தேவர் மலை என்கிறது புராண வரலாறு.
பிரம்மதேவன் அங்கே ஒரு தீர்த்தம் அமைத்து, அதிலிருந்து நீரெடுத்து நரசிம்மருக்குத் திருமஞ்சனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து தேவர்களும் மற்றவர் களும் பிரம்மன் அமைத்தத் தீர்த்தக்குளத் தில் நீரெடுத்து தொடர்ந்து அபிஷேகங்கள் செய்து, மணமிக்க மலர்களால் அலங் கரித்து வழிபடலாயினர். இதனால் சாந்த மடைந்த நரசிம்மர், யோக நிலையில் அமர்ந்தார். தேவர்கள் இங்கே நரசிம்மரை வழிமறித்து அபிஷேக ஆராதனைகள் செய்ததால் "தேவர்மறி' என்று அழைக்கப் பட்ட இந்த இடம், பிற்காலத்தில் மருவி தேவர் மலை ஆயிற்று என்று புராண வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் கிருதயுகத்தில் நடந்தன.
அடுத்து திரேதாயுகத்தில், ராமர் வனவாசத்தின்போது இலங்கை வேந்தன் சீதையைக் கடத்திச்சென்றதால், ராமர் இராவ ணனை வதம் செய்து சீதையை மீட்டார். பிறகு ராமர் சீதை, லட்சுமணன், அனுமன் மற்றும் பரிவாரங்களுடன் அயோத்திக்குத் திரும்பும் வழியில் தேவர்மலை வந்து, அங்கு எழுந்தருளியுள்ள நரசிம்மரை வழிபட்டார்கள். பிறகு, அங்கு பிரம்மதேவனால் ஏற்படுத்தப்பட்ட மோட்ச தீர்த்தத்தில் அனைவரும் நீராடினார்கள். இதனால் இராவணனையும் அவனது பரிவாரங்களையும் அழித்த பாவம் நீங்கியது. ஒருவர் செய்த பாவம் தேவர் மலையில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, அங்கு எழுந்தருளியுள்ள நரசிம்மரை வழிபட்டால் நீங்கும் என திரேதாயுகத்திலேயே ராமபிரான் உலகிற்கு உணர்த்தினார் என்று புராண வரலாறு கூறுகிறது. ராமபிரான், இங்கு வந்ததன் நினைவாக மோட்ச தீர்த்தக் குளத்தின் சுவரில் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் கைகூப்பிய அனுமன் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதனை இன்றும் காணலாம்.
துவாபரயுகத்தில், பாண்டவர்களுக்கும் துரியோதனர்கள் கூட்டத்திற்கும் யுத்தம் என்பது தவிர்க்க முடியாததாக அமைந்தது. அப்போது கண்ணபிரான் பாண்டவர் களுக்கு உறுதுணையாக இருந்தார். குருக்ஷேத்திரத்தில் போர் நடப்பதாக இருந்த நிலையில், இதனைத்தவிர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்த கண்ணபிரான், தன் குருநாதர் சந்தீப்பாணியை அணுகி ஆலோசனை கேட்டார். கண்ணனின் குருநாதர், ""போர் நடப்பதைத் தவிர்க்க முடியாது. அந்த நிலையில் போர்க்களத்தில் பல வீரர்கள் மாண்டுபோவது உறுதி. எனவே, அவர்கள் வீரமரணமடைந்து சொர்க்கம் செல்ல, மோட்ச தீர்த்தம் என்று இந்த பூமியில் ஒரு பகுதியில் உள்ளது. அது பிரம்மனால் கிருத யுகத்தில் ஏற்படுத்தப்பட்டது. அந்தத் தீர்த்தத்தை எடுத்துவந்து, போருக்கு முன்பு போர்க்களம் முழுவதும் புரோக்ஷணம் (தெளித்தல்) செய்யுங்கள்'' என்று பணித்தார். உடனே கண்ணனும் குருவிடம் ஆசிபெற்று, மோட்ச தீர்த்தம் எங்கே இருக்கிறது என்பதையறிந்து, தேவர்மலைவந்து, அங்கு எழுந்தருளியுள்ள நரசிம்மரை வழிபட்டு, மோட்ச தீர்த்தத்தில் நீராடி செய்யவேண்டிய கடமைகளைச் செய்ததுடன், கண்ணன் குருக்ஷேத்திரப் போருக்கு ஆயத்தமானார் என்று புராணம் கூறுகிறது. (குருக்ஷேத்திரத்தில் நடந்த போரின் விளைவு யாவரும் அறிந்ததே).
கலியுகத்தில், தற்பொழுது கதிர்நரசிம்மப் பெருமாள் என்று போற்றப்படும் இங்குள்ள நரசிம்மர், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
கரூர் தேவர்மலையில் எழுந்தருளியிருக்கும் நரசிம்மரின் வசீகரமுகம், மணிமகுடம், கருணை ததும்பும் கண்கள், சிங்க முகத்தில் பிடரி மயிர், அவர் அமர்ந்திருக்கும் கோலம் ஆகியவை மேன்மேலும் அழகூட்டுகிறது.
மூலவர் இடதுகாலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டு வீராசனத்தில் அமர்ந்துள்ளார். நான்கு கரங்கள் கொண்ட நரசிம்மரின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கி, கீழ் இடதுகையில் யோக முத்திரை காட்டி, கீழ் வலக்கரத்தால் சரணடையும் பக்தர்களுக்கு அபயமுத்திரை காட்டி அருள்பாலிக்கிறார்.
கதிர்நரசிம்மர் உக்கிரமூர்த்தியானாலும், யோகத்தில் இருப்பவர். கோவில் அமைதி யான சூழ்நிலையில் ஊரைவிட்டு சற்று ஒதுங்கியே உள்ளது. மேலும் இத்திருக் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிய உற்சவர் "பக்தோசிதன்' சேவை சாதிக்கி றார். தாயாரின் நாமம் கமலவல்லி. தாயார் தன்னைச் சரணடையும் பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் அளிக்கும்விதத்தில் அபயவரத ஹஸ்தம் காட்டி அருள்புரிகிறார்.
மேலும் இத்திருக்கோவிலின் வடகிழக்கு மூலையில் பைரவர் சந்நிதி உள்ளது. இத்தகைய அமைப்பை தாடிக்கொம்பு மற்றும் திருக்குறுங்குடி தலங்களில் மட்டுமே காணலாம். இங்கு ஸ்ரீசுவர்ணாகர்ஷண பைரவரும் எழுந்தருளியுள்ளார். வைணமும் சைவமும் இணைந்த இத்திருத்தலத்தின் தலமரம் "வில்வம்' என்பது குறிப்பிடத் தக்கது.
இங்குள்ள புனிதமான பிரம்ம தீர்த்தக் கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாடுகள் செய்தால் மிகக்கொடிய சாபங்களும் நீங்கும் என்பதால் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் பித்ருபூஜைகள் நடைபெறுகின்றன.
கரூரிலிருந்து குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல் செல்லும் பாதையிலுள்ள பாளையத்தில் இறங்கி, சுமார் ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். திருச்சி- மணப்பாறை வழியாகச் செல்லும் பேருந்து கள் தேவர்மலை வழியாகவும் செல்கின்றன.
யுகம்யுகமாய் அருள்பாலித்துவரும் தேவர்மலை நரசிம்மரை வழிபட, வேண்டி யது கிட்டும்; வளமான வாழ்வு நிறைந்தி ருக்கும் என்பது ஐதீகம்.