மார்கழி மாதம் சிறப்பு வாய்ந்தது. எல்லா கோவில்களும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திறக்கப் பட்டு ஆராதனைகள் நடக்கும். ஆன்மிகர்கள் விடியலில் எழுந்து நீராடி வழிபாடுகள் செய்வர். நமது ஒரு வருட காலமே தேவர்களுக்கு ஒரு நாள். மார்கழியானது தேவ விடியற்காலை. எனவே, நமது விடியலும், தேவ விடியலும் ஒன்றுசேரும் மார்கழியின் அதிகாலைப் பொழுதில் வழிபாடு செய்தால் தெய்வீக அதிர்வுகள் உச்சநிலையை அடையும் என்பர்.
அத்தகைய மார்கழி மாத கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்தான் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார். அவரைப்பற்றி சற்று சந்திப்போம்.
திருவண்ணாமலையில் பெண்ணாசையில் உழன்று, இறுதியில் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்த அருணகிரிநாதரை முருகன் தடுத்தாண்டு கொண்டான். தலம் தலமாக ஏகி முருகன் புகழைப் பாடினார் அருணகிரி.
மது (கள்-குடி), மாது (பெண்ணாசை), மாமிசம் (எல்லாம் "6'-ல் ஆரம்பம்) ஆகியவற்றில் உழன்றவர்களின் மனமும் உடலும் குலையும். உடல், தனம் இடம்தராவிட்டாலும், மனம் அதனிலேயே உழலும்.
கேரளாவில் பில்வமங்கள் என்ற உயர்ந்த ஆன்மிகர் இருந்தார். யாதும் உணர்ந்தவர். அவர் சிந்தாமணி என்ற தாசி மோகத்தில் ஆழ்ந்தார். அவளுக்கு பணம் சம்பாதிக்க, வாழ அது ஒரு தொழில். அவளே, "இத்தகைய ஆழ்ந்த ஆன்மிகர் பெண் இச்சையில் உழல்கிறாரே' என்று நொந்து ஒருநாள், "என்மேல் வைக்கும் ஆசையை கண்ணன்மீது வைத்தால் உய்யலாமே' என்று சொல்ல, அதுவே குரு உபதேசம் என்றுணர்ந்து பிருந்தாவனம் சேர்ந்து, "சிந்தாமணிஜயதி' என்று ஆரம்பிக்கும் "ஸ்ரீகிருஷ்ண காணாம்ருதம்' எனும் 326 துதிகளால் துதித்து, "லீலாசுகர்' என்று பெயர் பெற்று சமாதி அடைந்தார்.
"ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே' என்பர். ஒரு பெண் நல்ல நடத்தையில் செல்கிறாளா, செல்ல வைக்கிறாளா என்பதைப் பொருத்தது அது.
தூய நடத்தை உள்ளவர்களையும் சில பெண்கள் காமவலையில் சிக்க வைப்பதையும் காண்கிறோம். அவ்வாறு ஆனவரே தொண்டரடிப் பொடியாழ்வார். அதுகண்டு மகாலட்சுமித் தாயாரே வருந்தி அரங்கனிடம் வேண்ட, அரங்கன் ஒரு நாடகமாடித் திருத்தினார்.
4,000 திவ்யப்பிரபந்தங்களில் பாதிக்கு மேல் பாடியவர்கள் நம்மாழ்வாரும் (1,296), திருமங்கை ஆழ்வாரும் (1,341). ரங்கனாதப்பெருமாளுக்குத் திருப்பள்ளி எழழுசி (10), திருமாலை (45) பாடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார். தினமும் காலையில் ஓதப்படுவது திருப்பள்ளி எழுச்சி!
அதுவும் பிரத்யேகமாக மார்கழி விடி யலில் நினைக்கப்படுவது தொண்டரடிப் பொடியாரின் திருப்பள்ளி எழுச்சி! இதை அனுசரித்தேதான் வேங்கடேச சுப்ரபாதம் வடமொழியில் செய்யப்பட்டது. மாணிக்க வாசகர் ஆவுடையார்கோவில்- திருப்பெருந்துறையில் பத்து பாக்களால் சிவனுக்கு திருப் பள்ளி எழுச்சி பாடியுள்ளார். சிவ பக்தர்களுக்குப் பொக்கி ஷம்.
திருப்பள்ளி எழுச்சியின் தத்துவம் என்ன? பகவான் தூங்குகிறான். எனவே அவனைப் பாடி நாம் எழுப்புவதா? அல்ல!
இந்த ஜீவன் மாயை, அஞ்ஞானத்தில் உழன்று மயங்கித் தூங்குகிறானே! சூரியன் ஒளி வந்தால் இருள் மறைவதுபோல, விடியலிலேயே துதித்தால் நமது அக்ஞானம் அழிந்து ஞானம் பெருகவேண்டும் என்ற வேண்டுகோள்; தூண்டுகோல்! அத்வைத தத்துவத்தில் நான் யார்? சிவோஹம், ப்ரம்மைவாஹம், தத் த்வம் அஸி, அஹம் ப்ரம்மாஸ்மி என்றெல்லாம் கூறுவது மெய்த்திடவே. அக்ஞான ஜீவனுக்கு ஞான ஒளி காட்டுவதே திருப்பள்ளி எழுச்சி. (சூப்ரபாதம்). இதை உணர்ந்து துதித்தால் நாம் மாயையிலிருந்து, அக்ஞானத்திலிருந்து அகன்று சிவஞான மயமாகுவோம்.
ஆழ்வார் சரிதத்திற்கு வருவோம்.
கும்பகோணம் அருகேயுள்ள திவ்யதேசம் திருப்புள்ளபூதங்குடி. திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்கள் பாடிய தலம். அதனருகே யுள்ள தலம் திருமண்டலங்குடி. அங்கு வேத சாஸ்திர, புராண இதிகாசம் யாவும் நன்குணர்ந்த சோழியர்- வேதியர் குடும்பத் தில், மார்கழி மாத கேட்டை நட்சத்திரத்தில் திருமாலின் திருமாலை (வைஜயந்தி) அம்ச மாக உதித்தவர் விப்ர நாராயணர். தந்தை யிடமே வேதபுராணங்கள் யாவும் ஓதி ஆழ்ந்த ஆன்மிகராகத் திகழ்ந்தார்.
ஸ்ரீரங்க ரங்கநாதரில் ஆழ்ந்து, திருமாலை அம்சமாக உதித்தவர் என்பதால், தோட்டம் அமைத்து பூஞ்செடிகள் வளர்த்து ரங்க நாதருக்கு திருமாலை கைங்கர்யம் செய்துவந்தார். பூ, மாலை, திருமால் இதுவே தம் பணியென்று சுகமாக நாளைக் கடத்தினார்.
பிரம்மச்சாரியாகவே திகழ்ந் தார். பெண்கள் முகத்தை ஏறிட்டும் பார்த்ததில்லை. திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் சிறிதுமில்லை.
எப்போதும் பெயருக் கேற்ப நாராயண ஸ்மரணம், தரிசனம் என்றே வாழ்ந்தார்.
அவ்வூரில் தேவதேவி என்னும் அழகுமிகுந்த விலைமாது இருந்தாள். அவள் அவருடைய கட்டுமஸ்தான உடலை, தேஜசைக் கண்டு வியந்தாள். ஒருநாள் அவரது பூந்தோட்டத்துக்குச் சென்றாள். அவரோ தன் வேலையுண்டு என்று இருந்தாரே ஒழிய, வந்தவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
நன்றாக அலங்கரித்து காண்போர் மயங்கும் படி சென்றாலும், தன்னை ஏறிட்டுக் கூட பார்க்கவில் லையே என்று வியந்தாள். அவள் தனது தோழியிடம் இந்த வினோத மனிதரைப் பற்றிப் பேச, ""அவரா! வைராக்கியசீலர்; கர்மயோகி. உன் னால் அவரை வசீகரிக்க முடியாது'' என்றாள். தேவதேவியோ, ""இன்னும் ஆறு மாதங்களுக்குள் அவரை என் வசமாக்குகிறேன் பார்'' என்றாள்.
மிளிரும் ஆடைகளைத் தவிர்த்து, சந்நியாசிபோல உடுத்து, துளசி மாலைகள் அணிந்து, சந்தனத் திலகமிட்டுக்கொண்டு விப்ர நாராயணரிடம் சென்ற தேவதேவி, ""தங்கள் பூந்தோட்டத்தில் நானும் கைங்கர்யம் செய்கிறேன். அனுமதி தாருங்கள்'' என்றாள்.
அவரோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை; ஏதும் பேசவுமில்லை.
எனவே, அவளே களையெடுப்பது, செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, பூக்க ளைப் பறிப்பது, தொடுப்பது போன்ற காரியங்களைச் செய்தாள். அவர் வேண்டா மென்று சொல்லவில்லை. ஆனால் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தோழி கூறியபடி இவரை வசீகரிக்க முடியவில்லையே என் றெண்ணினாள். நாட்கள் கடந்தன.
ஒருநாள் நல்ல மழை. நாராயணர் குடிசையில் இருந்தார். இதுதான் சமயமென்று அவள் மழையில் நனைந்தாள். குளிர் வேறு! நனைந்த உடையுடன் நடுங்கிக்கொண்டே குடிசைக்குள் வர, நாராயணர் தன் மேல் துணியை அணியக்கொடுத்தார். அவள் அதனால் உடல் துடைத்து, நனைந்த துணியைக் களைந்து அவர் தந்த பாதி ஈரத்துணியை அணிந்தாள். அவர் சிறிய சுள்ளிகளால் குளிர்காய, அவளும் குளிர் காய்ந்தாள். இதுதான் சமயமென்று அவள் அவரை ஈர்க்க முயல, பிரம்மச்சாரி முதன்முறையாக காமத்தீயில் வீழ்ந் தார். அவரிடமிருந்த பணம் யாவும் காமப் பசியில் தீர்ந்தது. பணமில்லாமல் அவளைநாட, முன் பெல்லாம் ஆனந்த மாகப் பேசிக் களித்த அவள், பணமில்லாமல் இங்கு வரவேண்டா மென்று விரட்டி னாள். அருணகிரி நாதர் நிலையை நாராயணர் அடைந்தார்.
தந்தையைவிட தாய்க்கு மனக்கனிவு அதிகம் என்பர். பக்த நாராயணன் இவ்வாறு அவஸ்தைப்படுவதை ரங்கநாயகித் தாயார் சகிப்பாளா? ரங்கநாதரிடம், ""நம் பக்தன் இவ்வாறு அலைவது உசிதமா? அவனை நல்வழிக்குத் திருத்த வேண்டாமா'' என்றாள்.
மறுநாள் ஒருவன் தேவதேவி வீட்டுக் கதவைத் தட்டினான். வெள்ளிப்பாத்திரம் ஒன்றைக் கொடுத்து, ""நான் விப்ர நாராயண ரின் வேலையாள். தங்களிடம் கொடுக்கச் சொன்னார். என் பெயர் அழகிய மணவாள தாசன்'' என்றான். ""சரி; அவரை இரவு வரச் சொல்'' என்றாள். அவன் நாராயணர் வீடு வந்து, ""தேவதேவி உம்மை வரச்சொன்னாள்'' என்றான். அவரும் இரவு அவள் வீடு செல்ல, இருவரும் இன்புற்றனர்.
மறுநாள் ரங்கநாதர் கோவிலில் வெள்ளி தீர்த்தவட்டில் காணவில்லையென்று சலசலப்பு. அரசனுக்கு அதைத் தெரிவிக்க, எல்லாரது வீட்டிலும் அரசுப் பணியாளர்கள் சோதனை இட்டனர். கடைசியில் அது தேவதேவியின் வீட்டிலிருக்க, தேவதேவி, நாராயணர் இருவரையும் கைதுசெய்து அரசன்முன் நிறுத்தினர். தேவதேவி, ""நான் திருடவில்லை; இவரது வேலையாள் அழகிய மணவாளதாசன் கொண்டு வந்து தந்தான்'' என்றாள். நாராயணரோ, ""எனக்கு வேலையாள் யாரும் கிடையாது. ஒருவர் தேவதேவி வரச்சொன்னதாகக் கூறினார்.
சென்றேன். இந்த வெள்ளிப்பாத்திரம் நான் அளிக்கவில்லை'' என்றார். இருவரும் சிறையில் அடைபட்டனர்.
அன்றிரவு அரசன் கனவில் ரங்கநாதர் தோன்றி, ""அழகிய மணவாளதாசனாக நான் செய்த காரியமே இது. பக்த நாராயணனை பெண்ணாசையிலிருந்து விடுபடச் செய்ய இவ்வாறு நாடகமாடினோம்'' என்றார். காலை இருவரும் விடுபட்டனர். தேவதேவி தன் செயலுக்கு மன்னிப்பு வேண்டினாள். மனம் திருந்தி பக்தையானாள்.
நாராயணர் தன் இழிசெயலில் மனம் நொந்தார். இதற்குப் பரிகாரம் என்னவென்று வேண்ட, ""அடியார்கள் பாதத்தூள் தரிப்பதே'' என்றனர். அவர் அவ்வாறே செய்தார். அதனால் அவர் பெயரும் "விப்ர நாராயணர்' என்பது "தொண்டரடிப்பொடி' என்றானது. வடமொழியில் "பக்தாங்த்ரி ரேணு!'
பாதத்தூளியின் (பாதம்பட்ட மண்- தூசி) மகிமை பற்றி இரு சம்பவங்கள் காண்போம்.
✷ முனிவர் சாபத்தால் கல்லாகிக் கிடந்தாள் அகலிகை. அவ்வழியே ராமபிரான் நடந்துவரும்போது, அவரது பாதத்தூளி பட்டு உயிர்பெற்றெழுந்தாள் அகலிகை. ✷ துவாரகையில் கண்ணன் தலைவலியால் அவதிப்பட்டான். அனைவரும் கவலை யுடன் இதற்கு என்ன செய்வதென்று கண்ணனி டமே கேட்டனர். ""ஆழ்ந்த பக்தரின் பாதத் தூளியை என் தலையில் தடவினால் வலி தீரும்'' என்றான். ருக்மிணி முதலான எட்டு தேவியரும் தயங்கினர். வலி தாங்க முடியவில்லையென்று சொல்லி நாரதரை அழைத்த கண்ணன் அவரது பாதத்தூளியைக் கேட்க, நாரதரும் தயங்கினார். ""வலி பொறுக்க முடியவில்லையே'' என்று துடித்தான் கண்ணன்.
""அந்த ஆழ்ந்த பக்தர் யாரென்பதை நீங்களே சொல்லவேண்டும். நான் சென்று அழைத்து வருகிறேன்'' என்றார் நாரதர். ""பிருந்தாவனம் சென்று கோபியரிடம் சொல்'' என்றான் கண்ணன். உடனே நாரதர் பிருந்தாவனம் சென்று விவரம் சொன்னார்.
""ஆ! கண்ணனுக்குத் தலைவலியா!'' என்ற கோபியர் ஒரு புடவையை விரித்து அதில் நடந்தனர். அதில் சேர்ந்த தங்கள் பாதத்தூளியை சேகரித்து முடிச்சிட்டு நாரதரிடம் தந்து, ""நாங்கள் பிருந்தாவனத்தை விட்டு வரஇயலாது. எனவே இதை உடனே எடுத்துச் செல்லுங்கள்'' என்றனர்.
""உங்களுக்கு ஆழ்ந்த பக்தி இல்லையெனில் உங்கள் தலை வெடித்துவிடும்'' என்றார் நாரதர். ""எங்களுக்கு பக்தி உள்ளதா என்பது தெரியாது. கண்ணன் தலைவலி தீர்ந்தால் போதும். எங்கள் தலைவெடித்தாலும் பரவாயில்லை'' என்றனர். நாரதர் துவாரகை சேர்ந்து பாதத்தூளியை கண்ணனின் தலையில் தடவ, உடனே வலி தீர்ந்தது.
அடியார்களைப்போல அவர்களது பாதத் தூளியும் பெருமை வாய்ந்ததே!