கிராம மக்களின் காவல் தெய்வம், கிராம தேவன், சாத்தன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார் அய்ய னார். ஊருக்கு ஊர் எல்லை தெய்வமாகவும் குலதெய்வமாவும் விளங்கிவரும் அய்யனாருக்கும் அதன் பரிவார தெய்வங்களுக்கும் வித்தியாசமான மெய்சிலிர்க்க வைக்கும் கதைகள் இருக்கும். மேலும், அய்யனார் கோவில்கள் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, ஸ்ரீலங்கா, அந்தமான் போன்ற அயல்நாடுகளிலும் கோவில்கள் கட்டப்பட்டு கோலோச்சி வருகிறார். அந்தக் காலத்தில் காடுகளை கடந்து வெளியூர் களுக்கு பிழைப்புத்தேடிச் சென்ற சாத்துக் கூட்டங்கள் (வணிகர் குழுக்கள்) அப்படிச் செல்லும்போது கள்வர்கள் தாக்கி அவர்களின் பொருட் களை களவாடிச் செல்வது அவ்வப்போது நடக்கும்.
அதனைத் தடுப்பதற்காக அந்தக் கூட்டங்களுடன் சிறு காவல்படையினர் உடன் செல்வார் கள். அவர்களுக்குப் பெயர் சாத்துக்கள்.
அதன் அடிப்படையில்தான் அய்யனாருக்கு சாத்தன், சாஸ்தா, என நூற்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன.
சுந்தரரும் சேரமான் பெருமானும் வெள்ளை யானைமீது ஏறி கைலாயம் சென்றார்கள். அங்கு சேரமான் இறைவனைக் கண்டு மகிழ்ந்து அவரைப் பற்றி பாடல்கள் பாடினார். அந்தப் பாடல்களை பூவுலகில் சென்று வெளியிடுமாறு சாஸ்தாவிடம் கொடுத்து வெள்ளைக் குதிரையில் ஏற்றி பூமிக்கு அனுப்பினாராம் இறைவன். அப்படி புறப்பட்டுவந்த சாஸ்தா திருப்பட்டூரில்தான் வந்து இறங்கியுள்ளார் என்றும் அதன்விளைவாக அங்கு இப்போதும் பெரியய்யா கோவில் எழுத்தச்சன் என்றெல்லாம் அழைக்கப்படும் கோவில்கள் உள்ளன. அப்படி பூமிக்கு வந்து சாஸ்தா வெளியிட்ட அந்த புராண நூல், அதை மெய்ப்பிக்கும்வகையில் அங்கே அய்யனார் கையில் ஏட்டு சுவடியுடன் உள்ளார். இது சேக்கிழாரின் பெரிய புராணத்தில் கூறும் தகவல்.
இப்படிப்பட்ட அய்யனார்களில் ஒருவர் தன் கிராம மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள் ளார். அப்படிப்பட்ட அய்யனார் இருக்கும் ஊரையும் அய்யனாரையும் நாம் தரிசிக்கவேண்டும் அல்லவா? கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது சாத்துக்கூடல். இந்த ஊர் அருகே ஓடும் சின்னோடை கரையில் பறந்து விரிந்த ஆலமரத்தடியில் கோவில் கொண்டுள்ளார் வெள்ளம் தாங்கி அய்யனார். பொதுவாக அய்யனார் கோவில்கள் திறந்தவெளியில் கண்மாய் கரை, ஓடைக்கரை, ஏரிக் கரை, பகுதிகளில் அமைந்திருக்கும். அங்கே அய்யனார் மூலவராக வீற்றிருப்பார். அவரைச் சுற்றிலும் கையில் துப்பாக்கியுடன் போலீஸ் சிப்பாய்கள், பூத கணங்கள், வெள்ளை குதிரை, யானை, நாய் போன்ற சிலைகள் கம்பீரமாக நிற்கும். அதே தோற்றத்தில்தான் சாத்துக் கூடலிலும் அய்யனார் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
ஒரு கிராமம் என்றால் அங்கு கோவில்கள் அவசியம் இருக்கும்.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அப்படி பழம் பெருமைகொண்ட இந்த ஊரிலுள்ள கோவில்களையும் ஊர் மக்களையும் நம்பி பல்வேறு இன மக்கள் வாழ்ந்துள்ளனர். வண்ணார், வினைக் கலைஞர், செம்மான், குயவர், தச்சர், கொல்லர், கன்னார், தட்டார் செக்கார். கைக் கோளர், பூக்காரர், கிணையன், பாணன், கூத்தன், வள்ளுவர், மருத்துவர் இப்படி பல தொழிலாளர் களும் உழவு செய்யும் விவசாயி களுக்கும் தெய்வங்களுக்கு நடக்கும் திருவிழாக்களுக்கும் பக்கத் துணையாக இருந்து வாழ்ந்துள்ளனர். காலப்போக் கில் இப்படிப்பட்ட மக்களெல்லாம் புலம் பெயர்ந்து சென்றுவிட்டனர். ஒருசில கிராமங் களில் மட்டுமே இப்படிப்பட்ட குடும்பத்தினர் சிலர் இன்னும் வாழ்கிறார்கள். அப்படிப் பட்ட ஊர்களில் ஒன்றுதான் சாத்துக் கூடல். இந்த ஊரிலுள்ள ஆலமரத்தின் நிழலில் அய்யனார் கோவிலும், அதன் எதிரில் ஒரு புடைப்புச் சிற்பமும் உள்ளது. இந்த சிற்பம் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். பெரும்பாலும் அய்யனார் கிழக்கு முகமாக அமர்ந்திருப்பார். ஆனால் இவ்வூர் அய்யனார் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார். இதற்கு காரணம், இந்த ஊருக்கு மேற்கு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்கு பெய்யும் மழைநீர் சின்னோடை வழியாக சென்று மணி முத்தாற்றில் கலந்து வெள்ளாற்றுடன் இணைந்து கடலில் கலக்கிறது. மழைக்காலத்தில் அளவுக்கதிகமான மழைவெள்ளம் இந்த ஓடையில் பெருக்கெடுத்து வரும் பல சமயங்களில் ஊருக்குள் புகுந்துவிடுவதும் உண்டு. ஒரு முறை அளவுக்கு அதிகமான மழை பெய்து ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததுள்ளது. வெள்ளநீர் அய்யனார் கோவில் முன்பு கம்பீரமாக நிற்கும் அய்யனா ரின் குதிரை மூழ்கும் அளவிற்கு வந்துவிட்டது. தண்ணீர் குதிரையின் மூக்கு துவாரத் தில் புகுந்த நேரத்தில் குதிரை பலமாக கனைத் தது. குதிரை கனைக்கும் சத்தம் கேட்டதும் அய்யனார் என்னவென்று வெளியே வந்து பார்த்தார். வெள்ளம் குதிரையை மூழ்கடிக்க பார்த்ததைக் கண்டார். உடனே தன் பார்வையாலேயே தண்ணீரை தடுத்து திருப்பிவிட்டார். இதனால் அய்யனார் கோவில் அருகே ஓடும் சின்னோடை கோவில் அருகே சற்று வளைந்து செல்வதை பார்க்கலாம். அய்யனார் தன் வாகனமான குதிரையை மட்டும் காப்பாற்றவில்லை. வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்களையும் விவசாயத்தையும் சேதப்படுத்தாமல் தடுத்துக் காப்பாற்றியதால் இவருக்கு அப்போது முதல் வெள்ளம் தாங்கி அய்யனார் என்ற பெயர் நிலைத்து நிற்கிறது.
வெள்ளம் தாங்கி அய்யனாரை தங்கள் குலதெய்வமாக வழிபடும் குடும்பத்தினர்கள் ஏராளம். முருகன் குடி, புதுச்சேரி, பெத்தா சமுத்திரம், அரியலூர் மயிலாடுதுறை, சேலம், சென்னை உட்பட பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களில் பலர் அய்யனாரை வந்து வழிபட்டு செல்கிறார்கள். ஊரில் விநாயகர், விஷ்ணுவானப் பெருமாள், சிவன் கைலாசநாதர், பாண்டவரின் பத்தினி துரோபதை, சிறுவடியம்மன், மாரியம்மன், செல்லியம்மன், சப்த கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி கோவில்கள் உள்ளன. இவையனைத்திற்கும் ஆடி மாதத்தில் ஒரே நாளில் காப்புக் கட்டி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அய்யனாருக்கு முதலில் காப்பு கட்டி அவர் கோவில்முன்பு இருந்துதான் கரகத்துடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாகச் சென்று மற்ற தெய்வங்களுக்கு காப்பு கட்டி திருவிழா நடத்தப்படுகிறது.
மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவலாக இருக்கக்கூடும்! வால்மீகி, தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, இராமாயணத் தகவல். தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில் கருப்பசாமி கோவில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு. நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்.... இப்படி பல்வேறு நிலைகளில் பல கோவில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம் தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோவில் கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம். கருப்பசாமி யின் மனைவி கருப்பழகி (கருப்பாயி); மகன்- கண்டன்; அண்ணன்- முத்தண்ண கருப்பசாமி; தம்பி- இளைய கருப்பு; தங்கை- ராக்காயி. ஐயப்பனுக்கும் கருப்பசாமிக்குமான தொடர்பை, ராங்கியம் கருப்பர் திருத் தாண்டகத்தின் முதல் பாடல் சொல்கிறது. "மலையாளத் துரையானை என்னுள்ளத்தில் வந்தானைக் கண்டடியேன் வணங்கி வேண்டினேனே!' என்கிறது அந்தப்பாடல் வரி. கத்தப்பட்டு சேவுகப்பெருமாள் ஐயனார் கோவில் தொட்டியத்து கருப்பையா போற்றிப் பாடலின் இரு வரிகள்.... மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி மக்கள் போற்றிடும் மன்னவா போற்றி.. எனப்போற்றுகின்றன! பெரும் பாலான ஐயப்ப பக்தர்கள் மெய்சிலிர்த் துப் பாடும் பாடல்களிலும் கருப்பசாமி வருவார்! பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் எனத் துவங்கி கருப்பரைப் போற்றுகிறது. கருப்பண்ண சுவாமி, பூதநாதனாகிய மகா சாஸ்தாவின் அன்புக்குரிய கணநாதன். சாஸ்தாவின் ஆணையை சிரமேற்கொண்டு, அவரது எண்ணங்களைப் பூர்த்தி செய்பவர் என்கிற தகவல்களும் உள்ளன. ஆனால் இங்குள்ள வெள்ளம் தாங்கி அய்யனாருக்கு கிழக்குப் பகுதியில் அவரது ஏவல் தெய்வமான கருப்புசாமி கழுத்தளவு சிலையாக உள்ளார். இவருக்கு மட்டுமே பலிபூசை நடத்தப்படுகிறது இப்படி தெய்வங்கள் வாழும் ஊருக்கு சாத்துக்கூடல் என்ற பெயர் எப்படி வந்தது. பெண்களை தாய், தெய்வமாக வழிபடுகிறோம்.
காரணம் தாய்மை குணங்களை ஒருசேர பெற்றவர்கள் பெண்கள். அந்த அடிப்படையில் பெண் தெய்வங்களை முதன்மைப்படுத்தி வணங்குகிறோம். சக்தியின் வடிவமாக பெண் தெய்வங்கள் கருதப்படுகிறது. ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானுக்கு தினசரி பூஜை செய்வதற்காக பூலோகத்திற்கு வந்து பூப்பறித்து சென்று கொடுப்பார்கள் ஏழு கன்னிமார்கள். அவர்களை வன தேவதைகள் என்றும் கூறுவது உண்டு.
அப்படிப்பட்ட சப்த கன்னி மார்கள் ஒருமுறை சிவனின் பூஜைக்கு பூப்பறிக்க பூலோகத்திற்கு வந்தார்கள். இங்குள்ள நந்தவனத்தில் பூப்பறிக்கும்போது அந்த பூக்களின் நறுமணத்திலும் நந்தவனத்தின் அழகிலும் மதிமயங்கி போனார்கள். விடிவது தெரியாமல் இரவு முழுவதும் நந்தவனத் திலேயே கழித்தார்கள். பூக்களைப் பறித்துக் கொண்டு கைலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டபோது பொழுது விடிந்துவிட்டது. இனிமேல் பூக்களை சிவ பெருமான் பூஜைக்கு கொண்டு சென்றால் அவரது கோபத் திற்கு ஆளாக நேரிடுமே என்று பயந்துபோன ஏழு கன்னி தேவதைகளும் இங்கேயே சிலைகளாக சமைந்து போனார் கள். இவர்கள் நீண்ட நேரம் வராதது கண்ட சிவபெருமான், பார்வதி தேவியோடு பூலோகத்திற்கு வந்தார். சிவன் இங்கே சப்த கன்னியர்களின் நிலைமையை அறிந்தார். ஏழு கன்னிமார்களும் இந்த ஊரிலேயே தெய்வங்களாக இருந்து மக்களை காப்பாற்றுமாறு வரமளித்து சென்றனர்.
சப்த கன்னியர்கள் இங்கு ஒன்றுகூடி அமர்ந்த இடமென்பதால் சப்த கூடல் என்ற பெயர் உருவானது. காலப்போக்கில் அது மக்கள் பேச்சுவழக்கில் மருவி தற்போது சாத்துக்கூடல் என்று வழக்கத்தில் உள்ளது. ஆறுகள் ஓடைகள் ஒன்றுகூடும் இடங்களை புனிதமானவையாக கருதினார்கள். நம் முன்னோர்கள் அந்த இடங்களுக்கு கூடல் என்று அழைக்கப்பட்டது. உதாரணமாக தொண்டை நாட்டில் பாலாறு, சேயாறு, கம்பையாறு ஆகிய மூன்று ஆறுகள் சேரும் இடத்திற்கு முக்கூடல் என்ற பெயர் பெற்றுள்ளது. அதுபோல் சோழநாட்டு பகுதியிலுள்ள கெடிலமாறு, உப்பனாரு, பெண்ணையாறு இவை மூன்றும் கூடி கலக்கும் இடம் கூடலூர் என்றழைக்கப்பட்டு மக்கள் பேச்சுவழக்கில் மருவி தற்போது கடலூர் என்று அழைக்கப் படுகிறது. அதேபோல் வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய இரு ஆறுகள் கூடுமிடம் கூடலையாற்றுர் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் தேவாரப் பாடலில் இடம்பெற்றுள்ள சிவாலயம் அமைந்துள்ளது.
அதுபோன்று இதிகாச புராண காரணங்களின் அடிப்படையில் பெரும்பாலான ஊர்களுக்கு பெயர்கள் உருவாகியுள்ளன.
அந்த அடிப்படையில் சாத்துக் கூடலில் சப்த கன்னிமார்கள் கூடியதால் சாத்துக்கூடல் என்று பெயர் உருவானது. எங்கள் ஊர் தெய்வீக கிராமம் என்கிறார்கள் கிராம மக்கள். சப்த கன்னிகளான எழுவரும் ஊருக்கு மேற்குப் பகுதியில் தெய்வங்களாக அமர்ந்து மக்களைக் காத்துவருகிறார்கள். கோவில் திருவிழாக்களின்போது சப்த கன்னிமார்களுக்கும் சேர்த்து விழாக்களும், வழிபாடுகளும், சிறப்பாக நடத்திவருகிறோம் என்கிறார் கள் சாத்துக்கூடல் கிராமகோவில் தர்ம கர்த்தா செந்தில்நாதன் ஊர் முக்கிய ஸ்தர்களான கிருஷ்ணமூர்த்தி, சிவசக்தி, பிரகாஷ் ஆகியோர்.
தெய்வங்கள் நிறைந்துள்ள இந்த ஊருக்கு செல்ல, விருத்தாசலம் நகரத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சாத்துக்கூடல். அனைத்து போக்கு வரத்து வசதிகளும் உள்ளன.
தொடர்புக்கு: 99650 60506, 95859 07439.