ஐம்புலன்ஸ்ஸை அடக்கி வாழலேன்னா...
ஆம்புலன்ஸ்ல தான் போகவேண்டியிருக்கும்!'
-இது விளையாட்டாய் சொல்லியது என்றாலும், இந்த விளையாட்டுப் பேச்சில் விஷயம் இலாமலில்லை.
புலன் பொறிகள் ஐந்து வகை:
1. கண்
2. காது
3. மூக்கு
4. வாய்
5. மெய்
புனன் பொறிகளின் செயல்கள் ஐந்து வகை:
1. பார்த்தல்
2. கேட்டல்
3. நுகர்தல்
4. சுவைத்தல்
5. உணர்தல்
எதை பார்க்கிறோம்?
எதை கேட்கிறோம்?
எதை நுகர்கிறோம்?
எதை சுவைக்கிறோம்?
எதை உணர்கிறோம்?
இதைப் பொறுத்தே மனித நடத்தையில், குணாதிசயங்களில் தாக்கம் ஏற்படும்.
காமத்தின் உச்சம் வரை சென்று, அதனால் சலிப்புற்று, தற்கொலைக்கு முயன்ற அருணகிரி நாதரை காத்தருளி யவர் முருகப் பெருமான். ஆனால் தனது ஐம்புலன் பொறிகள் தன்னை முருகப் பெருமானின் மலரடி சேரவிடாமல் தடுப்பதாய் பாடுகிறார்.
ஓரவொட்டா ரொன்றை யுன்னவொட்டார் மலரிட் டுனதாள்
சேரவொட்டா ரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்: 4)
பாடல் சொல்லும் பொருள்:
"உன்னை உணர விடுவதில்லை; நினைக்கவிடு வதில்லை; மலர் களைத் தூவி, பாத தரிசனம் செய்து, உனது இரு மலர்ப் பாதங்களை அடையவும் விடுவதில்லை. தேவர்களை உய்விக்க கொடுமையும், கள்ளத்தனமும் நிறைந்த சூரபத்மனை கரிய அவனது உடலிருந்து உதிரம் வழியும்படி, கூர்மையாகிய வேலால் நொடியில் அழித்தவனே! புலன்களாகிய இந்த ஐவர் இப்படி உன்னைச் சேரவிடாமல் தடுக்கையில் நான் என்ன செய்யமுடியும்?' -இப்படிப் பாடிய அருணகிரியார் "என்னால் என் ஐம்புலன்களை எதுவும் செய்யமுடியவில்லை; என்பதை நேர் பொருளாய்ச் சொல்லிவிட்டு, "அந்த ஐந்தை நீயாவது ஏதேனும் செய்' என மறைபொருளாய் குமரனிடம் கோரிக்கை விடுக்கிறார்.
ஐம்புலன்கள் குறித்தும், புலனடக்கம் குறி
ஐம்புலன்ஸ்ஸை அடக்கி வாழலேன்னா...
ஆம்புலன்ஸ்ல தான் போகவேண்டியிருக்கும்!'
-இது விளையாட்டாய் சொல்லியது என்றாலும், இந்த விளையாட்டுப் பேச்சில் விஷயம் இலாமலில்லை.
புலன் பொறிகள் ஐந்து வகை:
1. கண்
2. காது
3. மூக்கு
4. வாய்
5. மெய்
புனன் பொறிகளின் செயல்கள் ஐந்து வகை:
1. பார்த்தல்
2. கேட்டல்
3. நுகர்தல்
4. சுவைத்தல்
5. உணர்தல்
எதை பார்க்கிறோம்?
எதை கேட்கிறோம்?
எதை நுகர்கிறோம்?
எதை சுவைக்கிறோம்?
எதை உணர்கிறோம்?
இதைப் பொறுத்தே மனித நடத்தையில், குணாதிசயங்களில் தாக்கம் ஏற்படும்.
காமத்தின் உச்சம் வரை சென்று, அதனால் சலிப்புற்று, தற்கொலைக்கு முயன்ற அருணகிரி நாதரை காத்தருளி யவர் முருகப் பெருமான். ஆனால் தனது ஐம்புலன் பொறிகள் தன்னை முருகப் பெருமானின் மலரடி சேரவிடாமல் தடுப்பதாய் பாடுகிறார்.
ஓரவொட்டா ரொன்றை யுன்னவொட்டார் மலரிட் டுனதாள்
சேரவொட்டா ரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்: 4)
பாடல் சொல்லும் பொருள்:
"உன்னை உணர விடுவதில்லை; நினைக்கவிடு வதில்லை; மலர் களைத் தூவி, பாத தரிசனம் செய்து, உனது இரு மலர்ப் பாதங்களை அடையவும் விடுவதில்லை. தேவர்களை உய்விக்க கொடுமையும், கள்ளத்தனமும் நிறைந்த சூரபத்மனை கரிய அவனது உடலிருந்து உதிரம் வழியும்படி, கூர்மையாகிய வேலால் நொடியில் அழித்தவனே! புலன்களாகிய இந்த ஐவர் இப்படி உன்னைச் சேரவிடாமல் தடுக்கையில் நான் என்ன செய்யமுடியும்?' -இப்படிப் பாடிய அருணகிரியார் "என்னால் என் ஐம்புலன்களை எதுவும் செய்யமுடியவில்லை; என்பதை நேர் பொருளாய்ச் சொல்லிவிட்டு, "அந்த ஐந்தை நீயாவது ஏதேனும் செய்' என மறைபொருளாய் குமரனிடம் கோரிக்கை விடுக்கிறார்.
ஐம்புலன்கள் குறித்தும், புலனடக்கம் குறித்தும் இங்கே நாம் சில உதாரணங்களைப் பார்ப்போம்....
கீதையில் கிருஷ்ணன்:
பகவத் கீதையில் அர்ஜுனனுக்கான உபதேசத்தில் அத்தியாயம் இரண்டில் சில பாடல்களில் புலனடக்கம் பற்றி கிருஷ்ணர் உரைக்கிறார்.
"சலனமடைந்துள்ள உனது புத்தி, பரமாத்மாவிடம் எப்போது நிலையாக நிற்கிறதோ அப்போது நீ பரமாத்வுடன் நிரந்தமாக ஒன்றிவிடுவாய்' எனச் சொல்லும் கிருஷ்ணர்;
ஒருவனுடைய புத்தி எப்போது ஒருநிலைப் படும் என்பதையும் சொல்கிறார்....
"வெளித் தெரியும் எல்லா உடல் உறுப்பு களையும் ஆமை தன் ஓட்டுக்குள் உள்ளிழுத் துக் கொள்ளுவதுபோல, எப்போது ஒருவன் புலன்களால் நுகரப்படும் பொருட்களிலிருந்து புலன்களை விடுவித்துக்கொள்கி றானோ, அப்போது அவனுடைய புத்தி நிலை யானது என்றாகும்' என்கிறார் கிருஷ்ணர்.
குறளில் வள்ளுவர்:
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.'
(குறள்- 126)
தனக்கு ஆபத்து உண்டாகும்போது ஆமை தன்னுடைய நான்கு கால்கள் மற்றும் தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் தனது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வதுபோல, ஒருவன் தன்னை தீமை ஈர்க்கும்போதோ- தீமை வரலாம் எனும்போதோ தனது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன் பொறிகளையும் அடக்கவேண்டும். அப்படி அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் கொண்டிருந்தால் அவனுக்கு அடுத்தடுத்த பிறவிகள் இருக்கும் பட்சத்தில் இப்பிறவின் புலனடக்கம் ஏழு பிறவிகளிலும் அரணாக இருந்து காக்கும்.
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.'
(குறள்- 6)
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன் பொறிகளின்மூலம் உண்டாகும் தீய ஆசைகளை அழித்த இறைவனின் பொய்மை இல்லாத ஒழுக்க நெறியைக் கடைப்பிடிப்பவன் நீண்டகாலம் நன்கு வாழ்வான்.
"சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.'
(குறள்: 27)
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் உணர்ச்சிகளையும், அதன் நன்மை- தீமைகளையும் அறிந்து, புலன்களை தன் வசத்தில் வைத்திருக்கும் பெரியோர் களையே இந்த உலகம் போற்றும்.
-இவ்வாறு குறள்கள்மூலம் புலனடக்கம் குறித்து சொல்லியுள்ளார் திருவள்ளுவர்.
கோவில் திருஅகவல்-2-ல் பட்டினத்தார்:
"காதள வோடிய கலகப் பாதகக்
கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்
காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள்
பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்
சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து
அங்கொடு இங்கொடு அலமரும் கள்வர்
ஐவர் கலகமிட்டு அழைக்கும் கானகம்....'
-எனக் குறிப்பிட்டுள்ளார்.
"காதுவரை நீண்ட சபலமெனும் கலக மூட்டும்- பெண்களின் புண்களாகிய கண்களுடன் காமமுற்று, காதலுற்று, உன் மலர்ப் பாதங்களை என் தலையால் தாங்குகிற பாக்கியம் எனக்கில்லை. அதுதான் எனகுச் சங்கடம். அங்கும் இங்கும் அலையும் திருடர்போல ஐம்புலன்கள் இந்த கெட்ட உடம்பை அழைக்கிறது காட்டுக்கு வா என்கிறது. நான் என்ன செய்வது?' எனக் கேள்வி எழுப்புகிறார் பட்டினத்தார்.
ஐம்புலன்களை அடக்குவது அத்தனை எளிதல்லதான். அதனால்தான் திருவள்ளுவர் "ஒரு ஆணுக்கு அவன் துணையால் உண்டாகும் இன்பம்' பற்றியும் சொல்லியிருக்கிறார்...
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.'
(குறள்: 1101)
கண்களால் பார்த்து, காதால் காதல் கேட்டு, வாயால் பேசிலி அருந்தி, நாசியால் நுகர்ந்து, உடம்பால் தீண்டி அறிகிற ஐந்து புலன்களும், ஒரே நேரத்தில் அந்தந்த புலன் பொறி, அததற்குரிய இன்பத்தை அனுபவிப்பது; ஒளிவீசும் வளையல் அணிந்த பெண்ணுடன் (மனைவியுடன்) உடலுறவு கொள்ளும்போது மட்டுமே உண்டாகும்.
-இப்படிச் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.
திருமந்திரத்தில் திருமூலர்:
"அஞ்சும் அடக்குஅடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.'
(திருமந்திரம் பாடல்: 2033)
ஐம்புலன்களை அடக்கு என்பவர்கள் அறிவில்லாதவர்கள்; ஐம்புலன்களையும் அடக்கியவர்கள் தேவலோகத்திலும் இல்லை. ஐம்புலன்களை அடக்குவது அறிவற்ற செயல் என்பதால் ஐம்புலன்களை ஆளும் உண்மையை உணர்ந்து கொண்டேனே!
-இப்படியாக திருமூலர் சொல்லியுள்ளார்.
புதிய ஆத்திச் சூடியில் பாரதி:
மகாகவி பாரதியாரின் "புதிய ஆத்திச் சூடி' என்பது வீறு கொள்ளச் செய்யும் வாசகங்கள் கொண்டது. இதில் "ஐம்பொறி ஆட்சிகொள்' எனச் சொல்லியுள்ளார்.
ஐம்புலன்களின் பொறிகளான கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகியவற்றிற்கு நீ அடிமையாகாமல், ஐம்பொறிகளின் செயல்களான "பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவைகளை உன் சொற்படி கேட்கச் செய்' என்கிறார் பாரதி.
வள்ளுவரும் "ஐம்புலன்களை தன் வயப்படுத்தியவருக்கே உலகில் மதிப்பு' என்கிறார். திருமூலரும் "ஐம்புலன்களை ஆளும் அறிவை அறிந்தேன்' என்கிறார். பாரதியும் "ஐம்புலன்களை ஆட்சிசெய்' என்கிறார்.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர்:
"பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண்
என்ரறிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன்
கண்டாய் வருக என்றருள் புரியாயே.'
(திருவாசகம்: 452 / வாழாப்பத்து: 5)
"இனிய இசைப் பாடலின் மொழிக்கு நிகரான வாய்மொழி பேசுபவளாகிய உமையவளுக்கு உரியவனே! உன்மீதான பற்றைத் தவிர; பற்றுவதற்கு உன்னைத் தவிர வேறு ஏதுமற்றவன் நான். என்னை நேரிலேயே ஆட்கொண்டு அருள்புரிகிற சிவபுரத்து அரசனே! திருப்பெருந்துறையில் அருளாளும் சிவனே. உன் மலரடி காண எனது ஐம்புலன்களாகிய உடல், வாய், மூகு, செவி, கண் ஆகியவை எனக்குத் தீதே செய்வதால், இந்த மண்ணில் உன்னையே நினைத்து வாழும் பேறு எனக்கு வாய்க்க வில்லை; நான் இங்கு வாழவுமில்லை என்பதை நீயும் அறிவாய். அதனால் "வருக' என என்னை உன்னிடம் அழைத்துக் கொள்ள அருள்புரி'
-இவ்வாறு தன் சிவசிந்தனையை உருக்கத் துடன் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.
"எனது ஐம்புலன்களும் எனக்கு உதவ வில்லை; தீயதையே செய்கிறது' என மாணிக்கவாசகர் சொல்ல...
"உன் மலரடியைச் சேரவிடாமல்;
நினைக்கவிடாமல் செய்கிறது ஐம்புலன்
களும்' என்று அருணகிரிநாதர் சொல்கிறார்.
கமல்ஹாசன் நடிப்பில் சந்தானபாரதி இயக்கத்தில், இளையராஜா இசையில் வந்த படம் "குணா'. படத்தில் டைட்டில் காட்சியில் வாலி எழுதிய பாடலை இளையராஜா பாடியிருப்பார். கே.பாலசந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனந்து இந்தப் பாடல் காட்சிக்கு நடித்திருப்பார்.
"அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
என பல்லவி தொடங்கும்.
பாடலின் இரண்டாம் சரணத்தில்...
கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனதாரடா
தட்டு கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
கட்டுப்படக் கூடும்எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு'
-என எழுதியிருப்பார் வாலி.
மனசுக்கு மெய்ஞான விலங்கு போட்டுக் கொண்டால் ஐம்புலன்கள் நமக்குக் கட்டுப் படும் என்பதே இந்தப் பாடல் வலியுறுத்து வது. கைக்கு விலங்குபோடலாம்? மனசுக்கு எப்படி? சுயநலம் இருக்கிறது;
சுயமரியாதை இருக்கிறது;
சுயஒழுக்கம் இருக்கிறது;
சுயபக்தி ஏன் இருக்கக்கூடாது?
நீங்களே உங்களைக் கடவுளாக நினைத் துக்கொள்ளுங்கள்.
உங்களை நீங்களே பூசித்துக் கொள்ளுங்கள்.
கடவுளாகிய உங்களுக்குக் கட்டுப் படாதா உங்கள் புலன்கள்?